காட்சிப் பிழை

மறுபடியும் மாடி ஜன்னல் வழி எட்டிப்பார்த்தபோது அந்த இளைஞன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.
காட்சிப் பிழை

மறுபடியும் மாடி ஜன்னல் வழி எட்டிப்பார்த்தபோது அந்த இளைஞன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். அவனை முன்னே பின்னே இதற்குமுன் சபாபதி பார்த்ததில்லை. தூங்கி எழுந்த கையோடு ஜன்னல் திண்டிலிருந்த செடிக்கு தண்ணீர் விடுகையில் 
தற்செயலாக அவனைப் பார்க்க நேர்ந்தபோது பெரிதாக எதுவும் தோன்றவில்லை. அந்த வேப்ப மர நிழலில் இரு சக்கர வாகனங்கள் இருப்பதோ.. அவற்றின் மீது சாய்ந்தவாறே இளைஞர்கள் நிற்பதோ புதிய காட்சி இல்லை. ஆனால் இன்னமும் அங்கேயே நிற்கும் இவன்? 
காலை உணவை மென்றவாறே மறுபடி ஜன்னலோரம் வந்தபோதும்.. அவனைக் காண முடிந்ததில்... மனசுள் ஏதோ பொறி தட்ட, குழப்பத்தோடே சாய்வு நாற்காலி பக்கம் திரும்பினார்.
""அங்கே ஜன்னல் பக்கம் என்ன தேடிட்டு நிக்குறீங்க?''
""ரொம்ப நேரமா ஒருத்தன் நம்ம வீட்டையே பார்க்குறானோன்னு சந்தேகமா இருக்கு ராஜி''
""நிஜமாவா? ஹும் என்னால இந்த ஈசிசேரை விட்டு எங்கே எழுந்திருக்க முடியுது? இந்த ஆஸ்துமா படுத்தற பாட்டிலே இப்படி படுத்து படுத்து இந்த சேர்லேயே உசுரை விட்டுருவன் போல இருக்கு''
""ப்ச்சு... வாழ்க்கையிலே சலிப்பு மட்டும் கூடவே கூடாது. அப்புறம் சக மனுஷங்களை நேசிக்கவோ அவங்களுக்கு உதவவோ தோணாது. இந்த உலகத்துல எத்தனையோ ஜனங்க வேரும் இல்லாம வேரடி மண்ணும் இல்லாம வீடு, நாடு, சொந்த பந்தமெல்லாம் பிரிஞ்சு தவிக்கிறாங்களே.. அதைவிடவா உன்னோட ஆஸ்துமாவும் நம்ம பொண்ணோட பிரிவும் தீரா வேதனை தந்துரப்போகுது?''
""உண்மைதாங்க. அது சரி இன்னும் அந்த ஆள் அங்கேயே நிக்குறாரா பாருங்க. நிக்கிறது மட்டுமில்லே நம்ம வீட்டையேதான் உத்துப் பார்க்குறான்
ஒருவேளை.. ஒரு வேளை அது நம்ம பொண்ணோட புருஷனா இருக்குமோ?''
""ஆமாமா ராஜி.. எனக்கும் அப்படி தோணாம இல்லை''
""உங்க கூட முப்பத்தஞ்சு வருஷம் வாழ்ந்திருக்கேன். எனக்குத் தெரியாதா? உங்களுக்கு ஒண்ணு தோணுனா அது கரெக்டாத்தான் இருக்கும். உடனே கீழே போய் பாருங்க.. பேசுங்க.''
""எப்பிடிம்மா? என்னன்னு பேசறது? மாப்பிள்ளை பேர் கூட தெரியாதே!''
""அது உங்க குத்தம் இல்லைங்க. சுஜி காதலை மட்டுமா மறைச்சா? கல்யாணத்தையும்தானே? அதிலேயும் நீங்க அவளை எப்படி பார்த்துக்கிட்டீங்க.. உங்கட்ட கூடவா சொல்லிக்காம ஓடிப்போகணும்?'' 
""வேணாம் ராஜி. குழந்தையைக் குத்தம் சொல்லாதே..''
""குழந்தை! ஒண்ணு ரெண்டு வருஷமா? பதிமூணு வருஷம் தவம் இருந்து பெத்த பொண்ணு. பெத்தது மட்டும்தான் நான்.. மீதி எல்லாமே நீங்கதானே? இந்த மூச்சிழுப்பு நோயால நான் சரியா பால் கூட ஊட்டலையே ! நீங்கதானே புட்டிப்பால் குடுத்து, குளிப்பாட்டி துணி மாத்தி தொட்டில்ல போடுறதோட அவ மோண்டும் பேண்டும் வைக்கிற பீத்துணியையும் கழுவுனீங்க''
""நீ என்னை அப்பாவாக்கினே.. அவ என்னை அம்மாவாகவே ஆக்கிட்டா.. ஒரு ஜென்மத்திலேயே ரெண்டு பிறவி எத்தனை பேருக்கு வாய்க்கும்.''
""இப்படி உருகுகிற உங்களை இந்த ஒருவருஷமா அவ திரும்பிக் கூட பார்க்கலையே.''
""போதும் ராஜி இன்னைக்கு ரொம்ப பேசியாச்சு.. இதுக்கும் மேலே பேசுனா கண்டிப்பா இருமல் வரும். பழசை விடு. இப்ப என்ன, அந்த பையனைப் பார்த்து பேசணும்.. அவ்வளவுதானே.. இதோ போறேன்.. ஆமா ட்ரெஸ் இது போதுமா? மாத்தணுமா?'' 
""ஸ்போர்ட்ஸ் பேண்டும் டி ஷர்ட்டுமா இருக்கிற உங்களுக்கு அறுபது வயசுன்னு யாரும் சொல்ல முடியாது. கூடவே அந்த மூக்கு கண்ணாடியை கழட்டிட்டு தலைக்கு கருப்பு சாயமும் பூசிட்டீங்கன்னா முப்பதே வயசுதான்''
ஆனாலும் ராஜேஸ்வரி கிழவிக்கு ரொம்பத்தான் பேராசை
சாலையைக் கடந்து வேப்பமரத்தை நெருங்குகையில் அவன் சுதாரித்து நிமிர்ந்தான்.
""தம்பி ரொம்ப நேரமா நிக்குறீங்களே.. யாரை பார்க்கணும் இல்லே யார் வீட்டுக்கு போவணும்?''
""உங்களைப் பார்க்க உங்க வீட்டுக்கு வரத்தான் நிக்கிறேன்''
""அப்புறம் ஏன் இங்கே நிக்கிறீங்க? மேலேதான் என் வீடுன்னு தெரியாதா? வாங்க''
சாலையைக் கடக்க அவர் திரும்புமுன் அவனது தயக்கம் கவனித்து புருவம் சுருக்கினார்.
""நான் யார்னு தெரியுதா மாமா?''
அவனையே கூர்ந்து பார்த்தார். கலைந்திருந்த கேசமும்.. சிலநாள் தாடியுமாக ஆள் களைத்துக் காணப்பட்டாலும்.. வசீகர வதனமும் தீர்க்கமான பார்வையுமாக தனித்துவமாகவே தெரிந்தான்.
""ம்'' - எனப் புன்னகைத்தார். 
""நான் ஜெயகர். சுஜாவோட ஹஸ்பெண்ட். என்னை நீங்க இதுவரை பார்த்தது இல்லேதானே''
""பார்த்தது இல்ல.. ஆனா பார்த்ததும் புரிஞ்சுகிட்டேன்''
""நிஜமாவா? எப்படி?''
""பிரபஞ்சத்தை ஆளுறது உருவங்க இல்லை தம்பி... உணர்வுகள்தான்'' 
""உங்களைப் பத்தி சுஜா சொன்னது சரியாத்தான் இருக்கு.''
""வாங்க மேலே போகலாம்''
""அதுக்கு முன்னால சுஜா எப்படி இருக்காள்னு கேக்கமாட்டீங்களா?'' 
""எதுக்கு கேட்கணும்? எங்களுக்கு சுஜியா
இருந்தவளை நீங்க ஸ்பெஷலா சுஜா சுஜான்னு கூப்பிடற அழகுலேயே தெரியுதே.. எம் பொண்ணை நீங்க நல்லாத்தான் வச்சிருக்கீங்கன்னு''
சட்டென நெகிழ்ந்துபோய் சபாவின் கையைப் பற்றி, ""எனக்கு பயம்மா இருக்கு'' மாமா. சுஜா இப்ப கர்ப்பமா ""இருக்கா. நிறைமாசம்'' என உணர்ச்சி வசப்பட்டான். 
""நிஜமாவா மாப்பிள்ளை? இந்த நல்ல விஷயத்தை சொல்லவா இவ்வளவு தயக்கம்?''
""டாக்டர் சொன்ன தேதில்லாம் முடிஞ்சு மூணு நாள் ஆகிடுச்சு. இன்னும் பிரசவ வலி வரலை. காலையிலே சுஜாவை லேபர் ரூமுக்கு கொண்டு போய்ட்டாங்க. மத்யானம் பார்த்துட்டு மூணு மணிக்கெல்லாம் சிசேரியன் பண்ணிடணும்னு சொல்லியிருக்காங்க. என்னால அங்க தனியா நிக்க முடியலை. மனசுக்குள்ளே ஏதேதோ பயம்.''
""சேச்சே நல்லவிஷயம் நடக்கறப்போ பயப்படலாமா? வாங்க வீட்டை பூட்டிட்டு கிளம்புவோம்''
சாலையைக் கடக்கையில்...
""நம்பினா நம்புங்க.. குழந்தை பிறந்த உடனே உங்களைப் பார்த்து தகவல் சொல்லிட்டு அப்பறம்தான் திருச்சிக்குப் போய் அப்பா அம்மாவை பார்க்க நினைச்சிருந்தேன்''
மாடிப்படிகளில் ஏறுகையில்....
""எங்க காதலை நீங்க மறுக்க மாட்டீங்கன்னு சுஜா ரொம்பவும் நம்பிக்கையாவே சொன்னா. ஒரு தடவை ஒரே ஒரு தடவை உங்களை நேர்ல சந்திச்சு சம்மதம் கேட்கச் சொல்லி என்கிட்டே கெஞ்சவே செய்தா. நான்தான் மறுத்திட்டேன். ஏன்னா எங்க வீட்டுல கொஞ்சம்கூட சம்மதிக்கலை. ஆசிர்வதிச்சா ரெண்டு பேர் பெத்தவங்களும் ஆசிர்வதிக்கட்டும் இல்லேன்னா யாருமே இல்லாம தனியாவே வாழ்வோம்னு நான்தான் பிடிவாதமா இருந்துட்டேன்'' 
சாத்தியிருந்த கதவைத் திறந்த சபாபதி, ""உள்ளே போங்க மாப்பிள்ளை'' என ஜெயகரை முன்னே போகச் செய்துவிட்டு ""டிரஸ் மாத்திட்டு வாறேன்''-என அறைக்குள் புகுந்தார். 
360 டிகிரிக்கு பார்வையைச் சுழற்றி மொத்த வீட்டையும் ஆழமாகப் பார்த்து நின்றான் ஜெயகர். 
படு நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தகங்கள், குட்டி குட்டி செடிகள், துணி போர்த்திய கீ போர்ட்.. என ஒவ்வொன்றாக கடந்து வந்த பார்வை கடைசியாக சாய்வு நாற்காலி மீது வந்து நின்றது. உள் அறையிலிருந்து சபாபதி வெளியே வந்ததும் தயக்கமான குரலில் கேட்டான்.
""இப்பவும் இந்த நாற்காலியோட பேசுறீங்களா மாமா?''

மருத்துவமனை. பிரசவ அறை முன்னர் மிகுந்த பரபரப்புடன் நின்றிருந்த ஜெயகரை சமாதானப்
படுத்திக் கொண்டிருந்தார் சபாபதி. 
""இவ்வளவு பெரிய டென்ஷனை மனசுல வச்சுக்கிட்டா அவ்வளவு நேரம் வேப்ப மரத்தடியிலே நின்னுட்டிருந்தீங்க? கவலைப்படாதீங்க மாப்பிள்ளை. சுஜிக்கு சுகப்பிரசவமே ஆகும் பாருங்க.''
பிரசவஅறை கதவைத்திறந்த நர்ஸ், ""சுஜாதா கணவர் யாரு?'' என வினவ ஜெயகர் பரபரத்தான்.
""உங்க மனைவிக்கு குழந்தை பொறந்திடுச்சு ஆண் குழந்தை''
"தந்தையாக்கி தாயாக்கி இப்போது தாத்தாவும் ஆக்கிவிட்டாயா... நன்றி இறைவா!'-நெகிழ்ச்சியோடு கண் மூடி கடவுளுக்கு நன்றி சொன்னார் சபாபதி.
நான்கு மணியளவில் தாயும் சேயும் அறைக்கு கொண்டு வரப்பட்டனர். சுஜி இன்னமும் கண் மூடித்தான் இருந்தாள். மயக்கமா? தூக்கமா?- அனுமானிக்க முடியவில்லை. 
கூடவே வந்த தலைமை நர்ஸ் ""அவங்களா விழிக்கிற மட்டும் தொந்திரவு பண்ண வேண்டாம். கண் திறந்ததும் குழந்தைக்குப் பால்குடுக்கச் சொல்லுங்க. இடையிலே குழந்தை அழுதா நர்ஸýங்க கிட்ட சொல்லுங்க. ஃபார்முலா குடுப்பாங்க'' எனச் சொல்லிப்போக, இன்னொரு நர்ஸ், ""பெண்களுக்கான நாப்கின் பொதியோடு வந்து ராத்திரி பேஷண்டோட இருக்கப்போறது யார்? ராத்திரி கண்டிப்பா லேடீஸ் யாராவது துணைக்கு இருக்கணும்'' - எனச் சொன்னாள்.
""நா நான் என் அம்மாவை கூட்டிட்டு வர்றேன். இப்பவே திருச்சிக்குப் போறேன். காலையிலேல்லாம் வந்து சேர்ந்துருவேன்''
""அப்போ இன்னைக்கு யாருமில்லையா?''
""ப்ளீஸ் இன்னைக்கு ஒரு நாளைக்கு நீங்க உதவ
முடியாதா?'' 
""பேஷண்டோட நாங்க தங்கக் கூடாது. யாராவது ஆயாம்மாவைக் கேட்டுப் பார்க்கிறேன்'' 
சொல்லிப்போனவள் கையோடே கூட்டிவந்தாள் நாற்பது, நாற்பத்தைந்து வயது பெண்மணியை! 
""தம்பி.. நான் வூடு போய் பசங்களுக்கு ஆக்கிப்போட்டுட்டு உடனே அடுத்த பஸ் பிடிச்சு வந்துர்றேன்''- என உறுதி கொடுத்துக் கிளம்பிப் போனாள், அந்த ஆயாம்மா!
""மாமா நான் ஊருக்கு கிளம்பறேன். ஆயா வந்த பிறகு நீங்க வீட்டுக்குப் போங்க'' என பரபரத்த ஜெயகர், மறக்காமல் செல்போனில் குழந்தையைப் படம் பிடித்துக் கொண்டான்.
""இவனைப் பார்த்தா அப்பா அம்மா கோபம்லாம் பறந்திடும். குடும்பத்துல இவந்தான் முதல் பேரன்'' 
மணி ஒன்பது தாண்டியும் ஆயாம்மா வரவில்லை. சுஜியும் கண் திறக்கவில்லை. பரிசோதிக்க வந்த இரவு டாக்டர், ""ஹலோ சுஜாதா.. சுஜாதா எழுந்திரு. குழந்தைக்கு பால் குடுக்க வேணாமா? நீயும் சாப்பிடணும்ல?'' எனத் தொடர்ந்து தோள் தட்டிய பின்பே, சுஜி கண் திறந்தாள்.
""குட்.. ஏதாவது குடிக்கறதுக்கு குடுங்க'' என சபாவிடம் சொல்லிச் சென்றாள்.
""அப்பா அப்பா எப்பப்பா வந்தீங்க?'' 
""பிரசவத்துக்கு முன்னாலேயே வந்துட்டேன். மாப்பிள்ளைதான் கூட்டிட்டு வந்தார். இப்ப அவங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வர திருச்சி போய் இருக்கார். நீ இந்த சூப்பைக் குடிச்சுட்டு குழந்தைக்கு பால் குடும்மா. சீம்பால் குழந்தைக்கு ரொம்ப முக்கியம்''
""லேபர் ரூம்லேயே குடுத்தேன். அப்பறம் ஏதோ இஞ்சக்ஷன் போட்டதுல தூக்கமா வந்தது''
படாரெனக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள் நர்ஸ் கலா.
""கடைசியிலே அந்த சகுந்தலா காலை வாரி விட்டுட்டா சார். அம்பத்தூர்ல செம மழையாம். வீடு போய்ச் சேரவே எட்டு மணி தாண்டிடுச்சாம்..அதனால இன்னைக்கு வரமுடியாதாம்''
""பரவாயில்லை. என் பொண்ணை நான் பார்த்துக்கறேன்''
""உங்களால முடியுமா?''
""ஏன் முடியாது? இவ பொறந்தப்ப இவளையும் இவ அம்மாவையும் நான்தானே கவனிச்சேன்''
""நிஜமாவா? பொதுவா பிரசவம்னாலே ஆம்பளைங்க பயப்படுவாங்க அல்லது அருவருப்பா எடுத்துப்பாங்க. சார் பரவாயில்லையே'' எனச் சிரிக்கையில்.. சுஜி சொன்னாள். 
""அவர் எனக்கு அப்பா மட்டும் இல்லை அம்மாவும்தான்''
பதினோரு மணி! கண்ணைத் திறக்காமலே குழந்தைச் சிணுங்கியது.. 
""டாய்லட் போய்ட்டு வந்து பால் குடுக்கிறேன்ப்பா. நர்ûஸக் கொஞ்சம் கூப்பிடுங்களேன்''
வெளியே விரைந்தவர், ""திரும்பி வந்து ஒரு பேஷண்ட் சீரியஸா இருக்காராம். அதனால வர லேட்டாகுமாம்'' எனச் சொல்ல, ""அதுவரை தாங்காதுப்பா என எழமுயன்ற மகளின் முதுகில் வாகாக கைகொடுத்து கீழிறக்கி கழிப்பறைக்கு அழைத்துச் சென்றார். 
""நான் போய்க்கிறேம்பா'' 
""நீ தள்ளாடுறதுலேயே எவ்வளவு பலஹீனமா இருக்கேன்னு தெரியுது. உன்னை உட்கார வச்சுட்டு அப்பா வெளியே வாறேன்''
க்ளோசட்டில் உட்கார வைத்துவிட்டு ""அம்மாடி நாப்கின் மாத்திக்கிறியா.. மூணு செட் குடுத்துட்டு போயிருக்காங்க'' எனக் கேட்க "சரி' என தலையாட்டவே நாப்கின் கொடுத்து வெளியே நின்றார். 
முடித்துவிட்டு மகள் அழைத்ததும்.. 
உள்ளே சென்று கூட்டி வருகையில் சுஜி கண் கலங்கினாள். 
""எதுக்கு கண் கலங்குறே? எனக்கு சிரிப்புத்தான் வருது. நீயே ஒரு குழந்தை இன்னைக்கு உனக்கு ஒரு குழந்தையா?'' -செல்லமாய் கன்னம் தட்டிவிட்டு குழந்தையை எடுத்து கையில் தந்தார். 
""குழந்தைக்கு பால் குடும்மா'' என்றவர் வாசல் போய் ஸ்டூலில் திரும்பி உட்கார்ந்தார்.
""அப்பா''
""என்னம்மா?''
""இப்பவும் அம்மா கிட்டே பேசுறீங்களா?'' 
""....''
""அம்மா கிட்டே பேசுறதா நம்பி.. இன்னும் அந்த சாய்வு நாற்காலியோடப் பேசுறதை நினைச்சா மனசு வலிக்குதுப்பா.. அதை விட்டுருங்க''
""ஏம்மா?''
""நாலு வருஷம் முன்னால செத்துப்போன அம்மாவை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நினைச்சுட்டு இருப்பீங்க? மறக்க வேணாமா?''
""கெட்டதைத்தானே மறக்கணும். மனசுக்குப் பிடிச்ச நல்லதுகளை எதுக்கும்மா மறக்கணும்?''
""அதுக்காக நாற்காலிப் பார்த்து பேசணுமா?''
""ஏன் உன் கணவர் இல்லாதப்போ நீ போட்டோ பார்த்து பேசுனது இல்லியா?''
""அவர் உயிரோட இருக்காருப்பா. ஆஃபிஸ் முடிஞ்சு வந்தா போட்டோவைப் பார்த்து பேசுனதை நேர்லேயே பேசுவேன். ஆனா அம்மாதான் செத்துப்போயிட்டாங்களே.''
""அது உங்களுக்கு. எனக்கு அவ இன்னும் சாகலைம்மா. சாகவும் கூடாது. அவ செத்துட்டாள்னு நினைச்சாத்தான் வலிக்கும். அப்புறம் அதை மறக்க நான் அழணும்.. குடிக்கணும்.. பைத்தியம்போல திரியணும். அதுல எனக்கு உடன்பாடு இல்லம்மா''
""இப்படி சொன்னா நான் என்னப்பா சொல்ல முடியும்?'' 
""அது மட்டுமில்லேம்மா.. என் தனிமையை போக்கிக்க வேறு என்ன வழி இருக்கு. சொல்லு''
""இருக்குப்பா. நீங்க மட்டும் மாறுறேன்னு சொல்லுங்க. இந்த குழந்தையை வச்சு உங்க தனிமையைப் போக்குறேன்''
""என்னை உங்க கூட வந்து இருக்க சொல்றியா? அதெல்லாம் சரிவராதும்மா''
""நீங்க மாடியிலேயும் நாங்க கீழேயுமா குடி இருந்தா சரி வரும்தானே?''
""நிஜமாவா சொல்றே?'' - சபாவின் கண்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன.
""ஜெயகர் ரொம்ப நல்லவர்ப்பா அவரை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்க முதல்ல சத்தியம் பண்ணுங்க''
""சத்தியம்லாம் வேணாம் என் பேரனுக்காக இதை கூட செய்ய மாட்டேனா? சரி இப்ப மணி என்ன தெரியுமா? ஒண்ணரை ... தூங்குற வழியைப் பார்''
விடிவதற்குள் மூன்று முறை குழந்தைக்குப் பாலூட்டச் செய்ததோடு இருமுறை மகளை கழிப்பறைக்கும் அழைத்துச் சென்றிருந்தார். 

அதிகாலை ஐந்தரை மணி! மூன்றாவது முறையாக உள்ளே இருத்தி விட்டு கழிப்பறைக் கதவைச் சாத்துகையில்.. வாசல் கதவு தட்டப்படும் சத்தம். 
ஜெயகர் களைத்துப்போனவனாக உள்ளே வந்தவன். கட்டிலைப் பார்த்துவிட்டு ""சுஜா எங்கே?'' எனப் பதட்டமானான்.
""டாய்லெட் போயிருக்கா..''
ஆசுவாச மூச்சுவிட்டவாறே பெஞ்சில் உட்கார்ந்தான்.
""அப்பா அம்மா நல்லா இருக்காங்களா மாப்பிள்ளை?''
""அவங்களைப் பத்தி பேசாதீங்க. மனுஷங்களா அவங்க.? மனசுல பாசமோ நெஞ்சுல ஈரமோ இல்லாதவங்க. அவங்க பார்த்த பொண்ணை நான் கட்டாத கோபம் இன்னும் அடங்கலை. அந்த வெறுப்பிலே குழந்தை போட்டோவைக் கூட பார்க்க மறுத்து...'' சலிப்போடு சொல்லி வந்தவன் சட்டென துணுக்குற்று, ""நீங்க வீட்டுக்குப் போகலையா? அந்த ஆயாம்மா எங்கே? சுஜா கூட டாய்லட் உள்ளே இருக்காங்களா?'' என புருவம் சுருக்கிக் கேட்டான்.
""அந்த ஆயாம்மா வரவே இல்லை.. அவங்க வீட்டுப்பக்கம் ரொம்ப மழையாம்''
உட்கார்ந்திருந்தவன் சட்டென எழுந்து ""அப்போ வேற யார் வந்தாங்க? எப்படி சமாளிச்சீங்க?'' எனப் பதட்டமாகக் கேட்கையில், கலா உள்ளே நுழைந்தாள்.
""அட வந்துட்டீங்களா சார்? கடைசியிலே உங்க மாமாதான் உங்களுக்கு உதவி இருக்கார். மனுஷர் ராத்திரி ஒரு பொட்டு தூங்கலைன்னு நினைக்கிறேன். நான் எட்டிப் பார்க்குறப்போல்லாம் ஒண்ணு குழந்தையை தூங்கப்பண்ணிட்டு இருப்பார்.. இல்லேன்னா பால் குடிக்க வச்சிட்டிருப்பார்.. அதுவும் இல்லேண்ணா உங்க வைஃபை டாய்லெட்டுக்குக் கூட்டிட்டு போயிருப்பார். தாயுமானவர்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்போ நேர்லேயே பார்த்துட்டேன்'' என வாய் கொள்ளா சிரிப்புடன் ஜெயகரிடம் சொன்னவள், சபாபதியை நோக்கி ""ஆறுமணியோட என் டூட்டி முடியுது.. இந்த லிஸ்ட்ல இருக்கிறதை பார்மசியிலேர்ந்து வாங்கி தந்தீங்கன்னா செக் பண்ணி எண்ட்ரி போட்டுட்டு நான் கிளம்பிடுவேன்'' என்று துண்டு காகிதம் ஒன்றைத் தந்து விட்டு வெளியேறினாள். ஜெயகரின் திடீர் முக மாற்றத்திற்கு காரணம் விளங்காமலே சபாபதி கிளம்பினார்.
அந்த அகால நேரத்தில் மருந்தகம் நெரிசலின்றி இருக்கவே சீக்கிரமே வேலை முடிந்தது. அறை முன்பாக வந்தபோது கதவு சாத்தியிருக்கவே இலேசாக தட்டுவதற்காக விரலை வளைக்கையில் உள்ளிருந்து கசிந்தவை செவிகளில் தெளிவாக விழுந்தன.
""எங்க அப்பா... அம்மா இனி நம்மளைத் தேடி வந்தாலும் அவங்க வேணாம் சுஜா. உங்க அப்பா ஒருத்தர் போதும் நமக்கு. இவ்வளவு நாளா அவர் அருமை தெரியாமல் போச்சு எனக்கு.''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com