மலர்களை அணைத்து...

மன்மதி காலையில் ஆபீசுக்கு பத்து நிமிடம் லேட். லிஃப்ட் கதவைத் திறந்து வைத்து, ஸ்டூலில் ஆபரேட்டர் சித்திரக் கதை படித்தான்.
மலர்களை அணைத்து...

மன்மதி காலையில் ஆபீசுக்கு பத்து நிமிடம் லேட். லிஃப்ட் கதவைத் திறந்து வைத்து, ஸ்டூலில் ஆபரேட்டர் சித்திரக் கதை படித்தான். அவள் லிஃப்டினுள் நுழைந்து "5' என ஒரு கதவு மூடி, இன்னொன்றும் மூட இருந்தது. வியூ
ஃபைண்டரில் பார்த்து, கதவுகளைத் திறந்து ஓர் ஆளை அனுமதித்தான் ஆபரேட்டர்.
வந்த ஆள் "3' என்றான். லிஃப்ட் ஏறியது.
அவனின் இடதுகை சரியாகத் தொங்கவில்லை என்பதை மன்மதி கவனித்தாள். புஜம் அருகிலேயே விரல்கள் முளைத்திருந்தன.
அவன் மன்மதியைப் பார்த்து, ""எக்ஸ்கியூஸ் மி'' என்றான். ஒரு கடிதம் தந்தான். அதற்குள் லிஃப்ட் மூன்றாவது மாடியில் பொருந்தி நின்றது. "" ஸீ யூ'' என்று அவன் புன்னகையுடன் வெளிச் சென்றான்.
யார் இவன்? என்ன கடிதம்? குழம்பி ஐந்தாவது மாடியில் தன் இருக்கையை அடைந்தாள். 
"நேத்தே போயிருக்கணும். இன்னிக்கு லஞ்சுக்குள்ளயாவது ஸ்டேட்மெண்டை என் மேசை மேல எதிர்பார்க்கலாமா?' என்று செக்ஷன் ஹெட் பூர்ணிமா கேட்க மன்மதி வேலையிலேயே மூழ்கினாள்.
பிற்பகலில் ஸ்டேட்மெண்ட் முடிந்தது. பின் அடிக்க ஸ்டாப்ளர் தேடினாள். அது எங்கோ மேசை ட்ராயரில் பதுங்கிக் கிடந்தது. ட்ராயரை முழுவதும் இழுத்துக் குடைந்ததில்...
"இது என்ன நான்காக மடித்த காகிதம்?'
ஓ, காலையில் லிஃப்டில் அந்த விசித்திரக் கையன் கொடுத்தது! என்னவாக இருக்கும் என்று ஆவல் கிண்டினாலும், லஞ்சுக்குப் பிறகு படிப்போம் என்று கைப்பையில் போட்டாள்.
பதினைந்து நிமிடங்கள் சென்று ஆபீஸ் முன் காம்பவுண்டு உட்புறப் புல்வெளியில் அமர்ந்து அதைப் படித்ததும், "அடிசக்கை! மன்மதி, உனக்கும் இப்படி ஒரு கடிதமா?' என்று மெல்ல வாய்விட்டே சிரித்து விட்டாள் அவள்.

மிஸ் மன்மதி,
இரண்டு வருடங்களாக உங்களைப் பார்த்து வருகிறேன். அடக்கமான சுபாவத்தால் மிகவும் வசீகரித்து விட்டீர்கள். உங்களை வாழ்க்கைத் துணையாக அடைய விரும்பும் ஒருவனை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். அவசரமில்லை. உங்கள் அபிப்ராயத்தை சாவகாசமாய் தெரிவியுங்கள்.
"ஹூம், யாருக்குத்தான் காதல் கடிதம் எழுதுவது என்கிற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.' என்று அதைக் கசக்கிச் சுருட்டி எறிந்தாள். பிறகு அது யார் கண்ணிலாவது பட்டுத் தொலையும் என்று திரும்ப எடுத்து துண்டுகளாகக் கிழித்துப் போட்டாள்.
அன்று காலை அவள் ஆபீசுக்குப் புறப்பட்டபோது தபாலில் ஒரு திருமணப் பத்திரிகை வந்தது. யாருக்குக் கல்யாணம் என்று பார்த்தபோது மன்மதிக்கு ஆச்சர்யம். இவள் பதின்மூன்று வயது சிறுமியாக இருந்தபோது நெல்லிக்குப்பத்தில் சக குடித்தனக்காரருக்கு ஒரு பெண் பிறந்தது.
இருபத்திரண்டு வயதில் அவளுக்குத் திருமணம். முப்பத்தைந்து வயதாகியும் நான்? கண்
களில் நீர் மல்கியது. கண்ணாடியில் அவளின் நரை ஓடத் துவங்கிய உச்சி தெரிந்தது.
ஒரு தங்கை காலேஜ் படிப்பு முடியும் முன்பே காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டாள். கல்லூரிப் படிப்பு முடிந்து வேலைக்குப் போன தம்பி இரண்டு மாதத்திலேயே வேறுஜாதிப் பெண்ணை மணந்து, சண்டை பூசல்களுடன் தனியே போனான். அப்பாவின் பென்ஷன் எதற்கு ஆகும்? இவளின் சம்பளம் தான் முழுக்க, முழுக்க குடும்பத்தையே தாங்குகிறது. இவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து அனுப்பிவிட அப்பாவுக்குப் பைத்தியமா? ஏதோ ஜாதகம் பார்ப்பதாக அவரும் பேர் பண்ணினார்.
காலையில் பஸ்சில் வந்தபோது அவள் மனதில் வேதனை. தன்னைவிட சின்னப் பெண்கள் காலில் மெட்டியும், வாயில் வெற்றிலையுமாக உலவி வருகையில், தான் மட்டும் இன்னும் வேளை வரவில்லை என்று அப்பா சொல்வதையே நம்பி - பஸ்சிலும் பையன்கள் அவளை உரசி திருட்டுத்தனம் செய்வதில், "ஆமா, இதிலே இருங்கடா..கௌரவமாய் ஒரு பயலும் கல்யாணம் பண்ணிக் கொள்ளாதீர்கள்' என்று அவளுக்குக் கத்த வேண்டும் போலிருந்தது.
அதிக நேரம் புல்வெளியில் தனியே உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் எழுந்தாள். லிஃப்டை அணுகியபோது, அந்த புஜ விரலானும் எங்கிருந்தோ வந்து சேர்ந்து கொண்டான். புன்னகைத்தான். கஷ்டகாலமே! இதுவரை இவனைக் கவனித்தது இல்லை. இனி இது ஒரு தர்ம சங்கடம். 
அவளின் அப்பா பெயர் பரசுராமன் என்பதே மறந்து போயிற்று. மொக்கையன் என்றுதான் உறவினர்கள், தெரிந்தவர்கள் சொல்வார்கள். பல்லி வால் துண்டான மாதிரி, முழங்கை, மணிக்கட்டு இல்லாமல் முக்கால் கையாக நிற்கும். எப்போதோ மரத்திலிருந்து விழுந்து, கவனிக்காமல் விட்டு செப்டிக் ஆகி, ஆபரேஷனில் கொண்டு விட்டது. அப்பா இந்தக் கையோடேயே எல்லார் வீட்டு வைபவங்களுக்கும் முன்னதாக ஆஜராகி விடுவார்.
""கைதான் இப்படி இருக்கே, அங்கவஸ்திரத்தால் மூடிக்கோயேன், முழுக்கை சட்டையாகப் போட்டுத் தொலையேன்'' என்றாலும் சண்டைக்கு வருவார். தன் அழகுக் கை திவ்யத்தை ஊரெல்லாம் பார்க்க அரைக்கை சட்டையில்தான் திரிவார்.
""எந்த மன்மதி? அதான், கை இல்லாதவன் பொண்ணு...'' எங்காவது இவளை அடையாளம் காட்ட நடக்கும் பேச்சு இவள் நெஞ்சைக் குத்திக் கிளறும்.
மன்மதியின் அக்காவுக்கு, சரியான ஒரு முசுடு கணவனாக வாய்த்தான், ""அறைஞ்சேன்னா பாரு, பல் அத்தனையும் கொட்டிடும்'' என்று அடிக்கடி வலது கையைத் தூக்குவான். அந்தக் கையில் சின்ன தேமல் மாதிரி வந்தது. இன்று, நெருப்பில் வாட்டிய மாதிரி, கை முழுவதும் "கரேல்' என்று ஆகிவிட்டது. ஏதேதோ தைலத்தைத் தடவிக் கொண்டு குளிக்கப் போகும்போது நிற்பான், அரைமணி.
இப்போது மன்மதிக்கும் இப்படி ஒரு மணாளன்! "சிரிக்க மாட்டார்களோ உறவினர்கள், அந்தக் குடும்பத்திற்குக் கை ராசியே கிடையாது என்று...?' குமட்டிக் கொண்டு வந்தது.
அடுத்த முறை அவனைப் பார்த்தால், ""உன் கை இருக்கும் அழகிற்கு உனக்குக் காதல்தான் குறைச்சல் போ'' என்று கேட்டுவிட வேண்டும். சே, பாவம்! அவன் கண்டானா மன்மதி வீட்டுக் கதையை...?

அன்று மதியம் மூன்று மணிக்கு அவள் கேன்டீனுக்குச் சென்றபோது, அந்த வினோதக் கையனும் வந்தான். டோக்கன் வாங்க கியூவில் நிற்காமல் நேரே காப்பி வாங்கச் சென்றான். யாரோ கேட்க, ""ஒரு நாள் முழுவதற்குமான டோக்கன்களைக் காலையிலேயே வாங்கி வைத்துக் கொள்வேன்'' என்றான். வாழ்க்கையில் எல்லாவற்றையும் முன்னதாக திட்டமிடுபவனாம் அவன். பிற்காலத்தில் வரப்போகும் குழந்தைகளுக்காகக் கூட மாதாமாதம் பாங்கில் பணம் போட்டு வருகிறானாம். ஒன்றுமில்லை, இப்போ லிஃப்ட் மேலே 
போயிருக்கு, திரும்பி வர இரண்டு நிமிஷம் ஆகும். அதுக்குள்ள நான் அதோ இருக்குற லெட்டர் பாக்சில் லெட்டர்சை போட்டுட்டு வரேன்பார்...
அதே மாதிரி போய் லிஃப்ட் கீழிறங்கும் நேரம் திரும்பி வந்தான் அவன்.
அவனுக்குத்தான் வெளேரென்று என்ன அழகான பல்வரிசை! கறிக்கு நறுக்கிய புடலங்காய் வளையங்களாகச் சுருள் மயிர். மைசூர் பாகு நிறம். சிரித்தால் கன்னம் குழி விழுகிறது. சட்டைக்குள் தெரியும் முண்டா பனியனுக்குப் பொருத்தமாய் சற்று இரட்டை நாடி ஆள்தான்.
"அடீ மன், அஞ்சாவது மாடி வந்தாச்சு. இன்னும் என்ன யோசனை?' என்றாள் ஒரு சிநேகிதி.
லிஃப்டிலிருந்து வெளிவந்ததும், ""என்னடீ, ஏ.ஓ.சாரை அப்படி வெச்ச கண் வாங்காமல் பாத்தே?'' என்றாள்.
""அக்கவுண்ட்ஸ் ஆபீசரா! நான் குமாஸ்தா என்று நினைத்தேனே? உத்தியோகம், ஆள் லட்சணம், உடுத்தும் அழகு எல்லாம் ஓகே. பொறு, பொறு! ஒரே ஒரு விஷயம் உதைக்கிறதே!''
""இவர் எப்படிடீ?''
""கோபம் வந்தே யாரும் பாத்தது இல்ல. சிரிப்பும் விளையாட்டும், கும்மாளமும்தான்...''
"அறைஞ்சேன்னா... பல் அத்தனையும்''என்று சொல்கிறவன் இவன் இல்லை. இவனைக் கணவனாக அடையக் கொடுத்து வைத்திருக்கணும்தான். பாழாய்ப் போன தெய்வம் ஏன் திருஷ்டிப் பரிகாரமாகக் கொஞ்சம் மூளியாக்கிற்று...?'
வீடு திரும்பியும் அதே சிந்தனை. காப்பி ஆற்றுகையில் எங்கோ பார்த்து கீழே கொட்டினாள். அப்பாவிடம் விஷயத்தைச் சொல்லவா, வேண்டாமா? இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து...
""மூடுடா ரேடியோவை!'' தம்பி மீது எரிந்து விழுந்தாள். 
காலையில் துயில் எழும்போதே பயமாக இருக்கிறது. இன்று ஆபீசில் அந்த விசித்திரனைப் பார்க்கணுமே என்று. ஆபீசுக்கு மட்டம் போட்டு விட்டால்...?
""ஏன்டி, ஏன்டி'' என்று அம்மா துளைத்தாள்.
""போ, என்னவோ எனக்குப் போகணும்போல இல்ல'' என்று முகத்தால் அடித்தாள்.

அடுத்தநாள் ஆபீஸ் போனதும் நல்ல வேளையாக அந்த விசித்திரக்கையன் தட்டுப்படவில்லை. ஆபீஸ் என்பதை மறந்து பக்கத்து சீட் பபிதா தான், ""ஆ... காட்டு?'' என்று ஒரு சாக்லேட்டை உரித்து இவள் வாயில் போட்டாள்.
""என்னடீ, என்ன?''
""ப்ரதீப் நேற்று வந்திருந்தார் டீ, நீ இல்லையா? உன் பங்கு சாக்லேட்டை என்னிடம்''
""தூ...'' டஸ்ட் பின்னில் துப்பிவிட்டாள் மன்மதி.
""கேளேன். அவருக்கு சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ப்ரமோஷனாகி பாம்பேக்கு மாத்திட்டாங்களாம். இந்த சாக்லேட்டையாவது வீணாக்காமல் மெல்லு...'' மறுபடி மன்மதியின் உதட்டில் செருகினாள் பபி.
ஐ! எஸ்.ஏ.ஓ. ப்ரமோஷன்! அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வாய் திறந்ததுமே யோகம் எப்படி அடிக்கிறது பார்! அப்புறம் என்னடி மன்மதி? இவ்வளவு நல்ல வரன் என்றால் கசக்கிறதா? உன் குடும்பத்தில் திரும்பத் திரும்ப யார் சம்பந்தம் பண்ண வருவார்கள்... க்ளார்க்... டைபிஸ்டு.. அசிஸ்டண்டு, டீச்சர், பஸ் கண்டக்டர்... இதற்குமேல் சீர் செய்யவும்தான் ஏது ஐவேசு? இவன் - சாரி - இவர் தானாக முன்வருவதால் அதிகம் பேரம் பேச மாட்டார். செய்தது போதும் என்று?
கல்யாணம் பண்ணிக் கொண்டு உறவினர் யார் கண்ணிலும் படாமல் பம்பாய் போய்விடலாம். முழுக்கை சட்டை தவிர வேறு ஒண்ணும் போடக் கூடாது என்று கண்டித்துச் சொல்லி - லா... லலா... லலா...
அன்று ப்ரதீப் லீவாம். பபி சென்னாள். "ஐயோ, எனக்கு உங்களைப் பார்க்கணும்போல இருக்கே'
அன்று மாலை அவள் ஆபீஸ் கேட்டருகே சென்றபோது யாரோ பெயர் சொல்லி அழைத்தார்கள்.
அட ப்ரதீப்! அருகில் ஓர் இளைஞன்... யுவதி... சிறுவன்.
""இவள் என் மனைவி மத்யமா. குழந்தை சத்யஜித்'' என்றான் ப்ரதீப். தொடர்ந்து, ""இவர் என் செக்ஷன் அசிஸ்டண்டு பிராணேஷ். இவர்தான் உங்களை மணக்க விரும்புகிறார். எனக்கும் பெண்களிடம் பேசுவது என்றால் ரொம்ப இது... அதான் அப்படிக் கடிதம்''
முதல் வேலையாக மன்மதி, பிராணேஷின் இரு கைகளையும் பார்த்தாள். அப்பாடா ஒழுங்காக இருந்தன. பிறகே முகம். பரவாயில்லை. ஹிப்பித் தலையும், முகவாயில் மட்டும் தாடியுமாக, குறுகுறுவென்று அவளையே பார்த்தான் பிராணேஷ். மன்மதி சிலிர்த்து, முகம் தாழ்த்தினாள். ஒருவழியாக...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com