பரிகாரம் செய்யலாமா?

பங்கள் பலவிதமாக இருக்கின்றன. கணவனுடன் சேர்ந்து செய்யும் ஜபமும் இருக்கிறது. அதேபோன்று பெண்கள் தனியாகச் செய்யும் ஜபங்களும் இருக்கின்றனவா? பெண்கள் காயத்ரி ஜபம் செய்யலாமா? 
பரிகாரம் செய்யலாமா?

காஞ்சி பெரியவர் ஸ்ரீ ஜயேந்திரர் 28.2.2018 -இல் முக்தியடைந்தார். 
அவரது நினைவுகளுடன் - அவர் அளித்த அருளுரையின் சில பகுதிகள்:

பங்கள் பலவிதமாக இருக்கின்றன. கணவனுடன் சேர்ந்து செய்யும் ஜபமும் இருக்கிறது. அதேபோன்று பெண்கள் தனியாகச் செய்யும் ஜபங்களும் இருக்கின்றனவா? பெண்கள் காயத்ரி ஜபம் செய்யலாமா? 
மந்திரத்திலும் ஜபத்திலும் ஆண்களுக்குத் தனி, பெண்களுக்குத் தனி என்ற வேறுபாடு இல்லை. அனைத்தையும் இருபாலரும் செய்யலாம். ஆனால் காயத்ரி என்பது ஜபமல்ல. அது ஒரு வகையான வழிபாடு. அதைப் பூணூல் தரித்து பிராமணீயத்தைக் கடைப்பிடிக்கும் - அந்தணனாகப் பிறந்தவன் மட்டும் - மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பது நியதி. அதைப் பெண்கள் செய்ய முடியாது. ஆனால் கணவனிடம் செய்யும் நல்ல காரியங்கள் எல்லாவற்றிலும் அதன் பலனில் பங்கு உண்டு. 
காலம் எவ்வளவோ மாறிக் கொண்டு வருகிறது. அதற்கேற்ப நாம் சில மாறுதல்களைச் செய்து கொண்டால் என்ன? ஒன்பது கஜ மடிசார் புடைவை கட்டிக் கொள்ள வேண்டியது அவசியமா? அதை விட்டுவிடலாமா?'' 
வேலைக்குத் தகுந்த வேஷம் போட்டுத்தான் ஆக வேண்டும். உதாரணமாக, ஆபீசுக்குப் போகும்போது ஓர் உடை, வீட்டில் இருக்கும்போது ஓர் உடை, இப்படி அணிகிறோம் அல்லவா? அந்தந்த உடையை அணியும்போது, மனத்திலும் அதற்கேற்ற பக்குவம் வந்து விடுகிறது. அதேபோல பூஜை செய்யும் நேரத்தில் அதற்கேற்ற உடையை அணிகிறோம். மனத்திலும் அந்த சமயத்தில் அதற்கு ஏற்ற பக்குவம் வந்துவிடும். இதை நாம் ஒரு கடமையாகக் கருத வேண்டும். தகுந்த உடையுடன் ஆபீசுக்குப் போய்வருவதைப் போல.
ஜோதிட சாஸ்திரத்தில், சில காரியங்களுக்குப் பரிகாரம் செய்து, குறையை நிவர்த்தி செய்து விடமுடியும் என்று சொல்கிறார்களே? விதிப்படி சில காரியங்கள் நடக்கும் போது, அதைப் பரிகாரம் செய்து மாற்றிவிட முடியுமா? 
ஜோதிட சாஸ்திரம் என்பது இந்தப் பூமியில் தோன்றிய போது, பொதுமக்களின் நன்மைக்காகவே ஏற்பட்டது. தேசத்தில் எப்போது மழை பெய்யும்? யாகங்களை எப்போது செய்யலாம்? நல்ல காரியங்களுக்கு உரிய நேரம் எது? அப்படி வழிகாட்டி, வழிமுறைகளைச் சொல்வதற்குத்தான் அது ஏற்பட்டது. அதில் சொல்லப்பட்டிருக்கும் பரிகாரங்களின் மூலம், நடக்கவிருக்கும் தீமைகளின் அளவைக் குறைக்கலாமே தவிர, நீக்க இயலாது, பகவான் ஒருவர்தான் மாற்றவல்லவர். அவர்தான் எல்லாவற்றுக்கும் மேம்பட்டவர் - சுப்ரீம் ! நவக்கிரகங்கள் குட்டி தேவதைகள்தாம். வெயில் அடிக்கும்போது என்ன செய்கிறோம். குடையைப் பிடித்துக் கொள்கிறோம் அதனால் தலையில் "சுள்' ளென்று அடிக்கும் வெயிலின் வேகத்தைக் குறைக்கலாமே தவிர, வெப்பமே தெரியாமல் செய்துவிட முடியாது. அதைப்போலத்தான் பிரகாரங்களும், கெடுதலின் வேகத்தைக் குறைக்கும் அளவுக்கு மட்டுமே உதவும். மேலும் அப்படிச் செய்து கொள்ளும்போது, மனோதத்துவ ரீதியாக நமக்கு ஒரு தெம்பும் பலமும் கூடக் கிடைக்கின்றன.
ராகுகாலம், எமகண்டம் போன்ற வேளைகளில் நல்ல காரியங்கள் எதையும் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களே? அப்படி விட்டுவிடுவதால் நிறைய நேரம் வீணாகிப் போய்விடுமே? 
ராகுகாலம், எமகண்டம் போன்ற வேளைகளில் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லையே, தொடங்க வேண்டாம் என்றுதானே சொல்லுகிறார்கள்? அது ஆரம்பிப்பதற்கு முன், சில நிமிடங்கள் முன்னதாகவே, நாம் நல்ல காரியங்களைச் செய்ய ஆரம்பித்து விடலாமே, அப்போது கொஞ்சம் கூடுதலான நேரம்தானே கிடைக்கும். விரயம் ஆக முடியாதே ?
ஒவ்வொரு பண்டிகைக்கும் இன்னின்ன பட்சணம் செய்ய வேண்டும் என்று விதிமுறை வகுத்திருக்கிறார்களே, அது ஏன்? அப்படிச் செய்யாவிட்டால் கடவுளின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமா? 
நாம் உண்ணுவதை, இறைவனுக்கு நிவேதனமாகப் படைத்து, அதை அவர் நமக்கு அருளியதற்கு நன்றி தெரிவித்து உண்பது நெறிமுறை. உள்ளன்போடு ஒரு சிறு கற்கண்டை நிவேதனம் செய்தால் கூடப் போதும். 
பொதுவாக நல்லவர்களுக்குக் கஷ்டமும், கெட்டவர்களுக்கு வசதியும் ஏற்படுவதாகத் தோன்றுகிறதே? அது ஏன்? இந்தக் கருத்தினால் நன்மையில் உள்ள நம்பிக்கையின் பலம் குறைந்து விடாதா? 
கஷ்டப்படுகிறவர்கள் இரண்டு இடத்திலுமே இருக்கிறார்கள். கஷ்டத்தையோ, சுகத்தையோ கொடுப்பது அவர்களுடைய இந்த ஜென்ம வினைகள் அல்ல. முந்தைய ஜென்மத்தின் கர்ம வினைகள் அவை. அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமே கிடையாது. கடவுள்நமக்குக் கஷ்டத்தைக் கொடுப்பார் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால், அப்புறம் நாம் அவரை வணங்கவே மாட்டோம். நாம் கடவுளை வணங்கக் கோயிலுக்குச் செல்லுகிறோம். அங்கே போய், கடவுளே, எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்தாய் ? என்று ஆண்டவனைக் கேட்கலாமா? அப்படிக் கேட்பது நம்முடைய அறியாமையே அல்லவா? மின்சாரம் இருக்கிறது. அது நமக்கு ஒளியைக் கொடுக்கிறது. சூட்டை உற்பத்தி செய்து அளிக்கிறது. ஆனால், அதை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் "ஷாக்' அடிக்கிறது. அதற்காக மின்சாரத்தைக் குறை சொல்ல முடியுமா? அதே மாதிரிதான் நமக்குச் சில சமயம் கஷ்டம் ஏற்படுவதும். அதற்காகக் கடவுளை நிந்தனை செய்யக் கூடாது.
வரதட்சணை விஷயத்தில் அப்பாவை எதிர்க்கலாம் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களாமே? அது உண்மையா?
உண்மைதான். ஒரு பெண் மற்ற எல்லா விஷயங்களிலும் பெற்றோர் சொல்வதைக் கேட்டு, கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதுதான் கடமை. ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் அப்படிக் கேட்க வேண்டாம் என்று நான் கூறி இருக்கிறேன். முக்கியமாக இதைப் பையன்களைவிடப் பெண்களிடமே அதிகமாகக் கூறி வருகிறேன். "உங்கள் தந்தை உங்களுக்கு மணம் செய்து வைக்கும்போது பட்ட கஷ்டங்களை மனத்தில் வைத்துக் கொண்டு, உங்கள் மகனுக்கு வரதட்சணை கேட்காதீர்கள்' என்றும் நான் கூறி வருகிறேன். வரதட்சணை வாங்காத பையனுக்கு, மடத்திலிருந்து, ஒரு சர்ட்டிபிகேட்டும், ஒரு வெள்ளிக் காசும், விசேஷப் பிரசாதமும் அளித்து ஊக்குவிக்கிறோம்.
உணவைப் பொறுத்து நம்முடைய குணங்களும் அமைய முடியுமா? மாமிச உணவு சாப்பிடுவது தவறாகுமா? 
உண்ணும் உணவை வைத்துதான் மனிதனின் உணர்ச்சிகள் வளர்கின்றன. அதாவது அதிகக் காரமில்லாததும் அதிகப் புளிப்பில்லாததும், இனிப்பாக உள்ளதுமான சாத்வீக உணவை உட்கொள்வதால் நல்லுணர்ச்சிகள் உண்டாகின்றன. மாமிச உணவை நம் நாட்டில் இப்படிச் சாப்பிட முடியாது. அதிகக் காரமான உணவை உட்கொள்வதனால் ராஜஸமான, கோப - தாப உணர்வுகள் பெருகின்றன. அதிகப் புளிப்புள்ள உணவைச் சாப்பிடுவதனால், தாமஸமான தூக்கம் முதலியவை ஏற்படும். ஆகவே நாம் உட்கொள்ளும் உணவு, சாத்வீகமான முறையில் இருந்தால் நமக்கும் நல்லது நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது.

நன்றி : ஞானபூமி

காஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமியின் ஆன்மிக அருளுரை
 

  • மனிதன் பிறர் மீது காட்டுவது அன்பு. கடவுள் நம் மீது காட்டுவது அருள்.
  •  
  • சுகத்தை அனுபவிக்க புண்ணியத்தை விதையுங்கள். நற்செயல்களில் ஈடுபட்டால் அது மரம் போல வளர்ந்து நமக்கு நிழல் கொடுக்கும்.
  • பலனை எதிர்பார்க்காமல் வழிபாட்டில் ஈடுபடுங்கள். உங்களின் தேவை அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார்.
  • விரதம் இருப்பதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமும், உள்ளத்திற்கு அமைதியும் கிடைக்கிறது.
  • பக்தி ஆழமானதாக இருந்தால் வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப் போவது உறுதி.
  • கடவுளைச் சரணடைவதன் மூலம் விதியின் கடுமை குறையும்.
  • எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறிது நேரம் கடவுளை வணங்கிவிட்டு பிறகு துவங்குங்கள்.
  • கடவுள் மீது பக்தி செலுத்துவதே மண்ணில் மனிதர்களாகப் பிறந்ததன் ரகசியம்.
  • தினமும் வீட்டில் நேரம் ஒதுக்கி வழிபாடு செய்வது அவசியம். 
  • தாயும், தந்தையுமே கண்கண்ட தெய்வம். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது கடமை.
  • தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com