விசுக்காரம்

பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வரத் தொடங்கியிருந்தார்கள். மஞ்சள் வெயில் தன் சாரமிழந்து வெளுத்துப் போன சேலையாய் தார் ரோட்டிலும், கடை வீதிக் கட்டடங்களிலும் படர்ந்து கிடந்தது.
விசுக்காரம்

பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வரத் தொடங்கியிருந்தார்கள். மஞ்சள் வெயில் தன் சாரமிழந்து வெளுத்துப் போன சேலையாய் தார் ரோட்டிலும், கடை வீதிக் கட்டடங்களிலும் படர்ந்து கிடந்தது. மெயின் ரோட்டிலிருந்து ஊருக்குள் நுழையும் முச்சந்தியிலிருந்த அந்த வணிக வளாகக் கட்டடத்தின் படிகளில் இப்போதே நிறைய ஆட்கள் அமர்ந்து கிடந்தார்கள். இரவானால் இன்னமும் கூடுதலாகும். முஜிபுரும் ஒரு அடைத்த கடையின் வாசலில் அப்போதுதான் வந்து உட்கார்ந்தான். மேல் படியில் ஓர் ஆள் குப்புறச் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். மேற்கிலிருந்து காற்று சிலுசிலுவென வந்து கொண்டிருந்தது. இந்தக் காற்றுக்காகத்தான் இவ்வளவு கூட்டம். 
தேனியிலிருந்தும், பெரியகுளம், லட்சுமிபுரம், வடபுதுப்பட்டியிலிருந்தும் பள்ளிக் கல்லூரி பேருந்துகள் கலர்கலராய் அந்த முச்சந்தியில் வந்து நின்றன. பள்ளிளிவிட்டு வரும் சிறார்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் காத்துக்கிடந்தனர். 
""லே...முஜ்ஜீ...'' தொளதொளத்த பேண்ட்டும், அரைக்கை சட்டையும் அணிந்து பபூன் போலக் காட்சியளித்த ரமேஷ், முஜிபுரைக் கைதட்டி அழைத்தான்.
நமநமத்த வாய்க்கு பீடி பற்ற வைக்க சட்டைப் பைக்குள் கைவிட்ட முஜிபுர் ரமேஷைப் பார்த்ததும், பீடியை ஒளித்து விட்டு சேப்பிலிருந்து செல்லை எடுத்தான். ஒரு பீடி எடுத்தால் ஓசிப் பீடியும் செலவாகும். 
""என்னா..?''
""இங்கனயா இருக்க...? ஊரே ராவிட்டேன்...'' சொல்லிக் கொண்டே அவன் உட்கார்ந்திருந்த கடைக்கு முன்னால் வந்து நின்றான்.
""என்னடா மென்ட்டலு ஒரு மணி நேரமா இங்க''யேதே ஒக்காந்திருக்கேன்....ஊரே லாவுனானாம்...?'' கேலியான சிரிப்பு சிரித்தான். பக்கத்திலிருந்தவன் முஜிபுரை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.
""இப்பதான்டா இங்கன பாத்துட்டு, அப்பிடியே வீட்ல கேட்டு வாரேன். ஒரு மணி நேரம்னு, அடிச்சு விடுற...'' வேலை அறிக்கை சமர்ப்பிப்பதுபோல் பேசிவிட்டு, ""ஒரு பீடி குடு...'' காலிச் சட்டைப் பையை பிதுக்கிக் காண்பித்துக் கேட்டான்.
""இந்த வெளக்கெண்ணெய்க்கித்தேந் தேடுனியாக்கும்...''
""இல்லடா மாப்ள, சாரதி உன்னிய போன் போடச் சொன்னாப்ல...'' தீப்பெட்டியும் அவனிடமே வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டான்.
""என்னாவாம் ?... அந்தாளுக்கு வேற வேல இல்ல... எதுனாச்சும் கோட்ர வாங்கிட்டுவா, ஆப்ப வாங்கிட்டுவான்னு நச்சரிப்பாப்பல.. அவெவெ பீடி வாங்கக் காசில்லாமக் கெடக்கான்...''
ஊருக்குள் பெரிய சமையல் மாஸ்டர்களில் ஒருத்தர் சாரதி. முஜிபுர், ரமேஷ் எல்லாம் இணை துணை வேலையாட்கள்.
""யே... முக்கியமான விசியமாம்டா...''
""அந்தாளப் பத்தி தெரியும்டா...'' என்றபோது போன் வந்தது. சாரதிதான்,
""அந்தாள்தான் டா... ஹய்யோ'' சலித்துக் கொண்டே பச்சைப் பொத்தானை அழுத்தினான்.
"" சொல்லுயா...''
""எங்கடா இருக்கே...?'' போனில் சாரதி.
""நா... நானா... ஒரு சோலியா தேனி - டவுனுக்குப் போய்க் கிட்டிருக்கேன்''
""பஸ்சிலயா...''
""ஆமாயா...''
""பஸ் சத்தம் கேக்கல...''
அந்த நேரம் முச்சந்தியில் ஒரு கல்லூரி பஸ் ஆரன் அடித்து நின்றது.
""ஆரன் சத்தம் கேக்குதா...?'' சிரிக்காமல் பதில் சொன்னான். ரமேஷ் பீடியின் கடைசி சொட்டை விரலால் அழுத்திப் பிடித்து உறிஞ்சினான்.
""ஒன்னப்பத்தித் தெரியாதாடா.. ரோட்ல நின்னுட்டிருப்ப...''
""சரி, நான் பொய்தே பேசுவேன். நீ ஒராள் மட்டுந்தே ஊருக்குள் உம்ம பேசுவ... விசயத்தச் சொல்லு...!''
""கெழக்க அய்ஸ்கூல் தெருவுல, விசால் வீடு தெரியுமா...''
தெரு, சந்து, வீடு, வீட்டுக்காரர் அங்க அடையாளம் எல்லாம் சொன்னான்.
""ஆமா ஆமா...விசாலு... ஐஸ்கூல் தெருவு...'' சாரதி சொன்னதை அப்படியே திருப்பிச் சொன்னான் முஜிபுர்.
""நாள நைட்டு வளகாப்பு வேல இருக்கு. நாளக்கழிச்சு காலைல ஆறு மணிக்கு ரெடி பண்ணிக் குடுத்தரணும். அஞ்சு சாதந்தே.. முடிச்சிடுறியா...?''
""ஆமா... பெரிய பெரிய வேலைக்கெல்லாம் விட்டுட்டுப் போயிரு. ஆகாதவேல போகாத வேலைக்கு மட்டும் அனுப்பிச்சு வையி...''
""ரமேசு இருக்கானா...''
""இருக்கான்..''
""அவனுக்கு வீடு தெரியும். கூப்பிட்டுப் போயி பேசி அட்வான்ஸ் வாங்கீடு. ரெண்டு பேரும் இருந்து முடிச்சுவிட்ருங்க...'' முஜிபுரின் பேச்சை கணக்கில் கொள்ளாமல் உத்தரவிட்டார். இது வழக்கப்படியாக வருகிற வார்த்தைகள் என்பதும் அதனை காற்றில் பறக்கவிடுவதே உத்தமம் என்பதும் விதி. 
""இதுக்கு எதுக்கு ஏழாளு. நானே முடிச்சிருவேன்...''
""யே... போடா... அவனுக்கென்னா பங்கா தரப்போறா... செலவுக்கு எதாச்சும் குடு. வாங்கிக்குவான்...''
""ரேட் பேசிட்டியா...?''
""நிய்யே பேசிக்க... அட்வான்ஸ் வாங்குனதும், ஒரு ஆப்ப வாங்கி ரமேசு கிட்ட குடுத்துவிடு...''
""ம்... புல்லு வாங்கித்தாரே... !'' போனை அணைத்து பையில் போட்டான். ஏற்கெனவே ரமேஷுக்கு தெரியுமோ. 
""போலாமா...'' ரமேஷ் தயாராய் நின்றான். 
எழுந்து வந்து ரமேசோடு நின்ற முஜிபுர், சோம்பல் முறித்து கொட்டாவி விட்டான். அது யார்ரா ரமேசு... அவன் தோளில் கை போட்டுக் கொண்டான்.
""ஒரு டீ அடிக்கலாமா...?'' செக் வைத்தான் ரமேஷ்.
""போடா வெண்ண... சட்டையில மானி கூட இல்ல...
உள்ச் சேப்ல பார்ரா... ஒன்னப் பத்தித் தெரியாதா...'' என்ற ரமேஷ், ""கரட்டுக்குப் போகணும்டா... ஒண்ணு வாங்கு... ரெண்டா ஆக்கிச் சாப்பிடுவம்...'' மேலும் அழுத்தம் கொடுத்தான்.
""அமையும்ல...''
""அமையும் டா... சாரதி ணே அனுப்பிச்சா சும்மாவா...'' 
""ஆமா, ஆகாதது போகாததுக்காகத்தே அனுப்புவாப்ல...'' என்று சலித்துக் கொண்டபடி ஒரு டீயை வாங்கி இன்னொரு கிளாஸ் எடுத்துப் பகிர்ந்து கொண்டனர்.
""ஆர்ரா அது...'' மறுபடி கேட்டான் முஜிபுர்.
""சொன்னா ஒனக்குத் தெரியாதுடா...'' மறுபடி ஒரு பீடியை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டு இருவரும் ரோட்டைத் தாண்டி நடந்தனர். 


அரசு உயர்நிலைப் பள்ளியின் வலது புற சந்துக்குள் நுழைந்தான். ரமேஷ். ""இது ஆசாரி தெருவில்லியா...?'' முதலில் இருந்த வீட்டைப் பார்த்துக் கேட்டான், 
முஜிபுர்.
பள்ளிக் கூடத்தின் விளையாட்டுத் திடலிலிருந்து பிள்ளைகளின் ஆரவாரம் கேட்டது. தொடர்ந்து பந்து உதைபடுகிற சத்தம். பள்ளியின் சுற்றுச் சுவரை யாரும் எட்டித் தொடமுடியாத உயரத்திற்கு உயர்த்திக் கட்டி இருந்தனர்.
""இன்னும் ஸ்கூல் விடலியா...?''
""ரோட்லருந்து மேல ஏறும்பாதே பிள்ளைக வந்திச்சில்ல.... ஏதாச்சும் கோச்சிங் பழகுற பயலுக, வெளாடுவாங்கெ...'' ரமேஷ் முஜிபுரின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பதில் சொல்ல வேண்டியிருந்தது.
சந்து மிகவும் குறுகலாக இருந்தது. ஆறடி அகலம் வரலாம். சிமெண்ட் பலகைகள் பதிக்கப்பட்டிருந்தது. குழாய்கள் இணைப்பிற்காக தோண்டப்பட்ட இடங்கள் நாய்க்கடிபட்டு காயப்பட்டது போல தெருமுழுதும் குதறிக் கிடந்தது. ஆங்காங்கே சாக்கடை ஓரமாய் தலை உயர்த்தி நிற்கும் பாம்பினைப் போல தண்ணீர்க்குழாயின் இரும்பு வடிவங்கள் காலில் இடறின.
""ஆட்டோவில வெல்லாம் வர முடியாது போல...'' சமையல் பாத்திரங்களைக் கொண்டு வருவது சம்பந்தமான கவலை வந்தது. முஜிபுருக்கு, இதற்கு பதில் சொல்ல விரும்பாத ரமேஷ், பீடி குடு என நின்று கேட்டான்.
""எத்தன பீடி தாரது.. ஒன்னுரெண்டு இதோட நாலு பீடியாயிருச்சு...'' என கடுப்புடன் முஜிபுர் பேசியபோது.
""அத்தா...என்னா இங்கிட்டு...'' என ஒரு வீட்டுப் பக்கமிருந்து குரல் வந்தது. உள்ளே திண்ணைமேல் காங்கை போட்டு துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொண்டிருந்த நபர்தான் கூப்பிட்டார்.
""யே... பாண்டியா... ஓந் தெருவா...? அதான ஓசன பண்ணிட்டே வந்தே...'' என்ற முஜிபுர், வேற ""ஒண்ணுமில்ல பாண்டி, இங்க ஒரு வேல...சொன்னாக. அதேன்! பேசிட்டு வாரேன்...'' என பேச்சை முடித்தான்.
""காப்பி சாப்பிடலாம் த்தா'' என பாண்டி அழைப்பு விடுத்தபோது இருவரும் அந்த வீட்டைக் கடந்திருந்தார்கள்.
""எனக்கு அப்பவே சந்தேகமா இருந்துச்சுரா ரமேசு.. வண்ணார் தெருவுல, இதே பாண்டிக்கு நிச்சயதார்த்த வேல ஒன்னு பாத்தேன்...''
""ஒனக்கு என்னா பெரச்சன...?'' என்ற ரமேஷ், ""மொதல்ல பாத்த வீடு ஆசாரி வீடுதே, ஒடனே ஆசாரி தெருவுங்கற, இது வண்ணார் வீடு, வண்ணார் தெருவுங்கற... நாம் பேசப் போற வீடு வேற ஆளுக... ஒடனே அவக தெருவு ங்காத... தெரிஞ்சாப் பேசு. இலலாட்டி அமுக்கீட்டு வா...''
""ஏண்டா இப்பிடி கத்துற... சீச்சீ..'' என முகத்தை சுருக்கிக் கொண்டு ஏதோ முனகியபடி, ரமேசிடமிருந்து கொஞ்சம் விலகி நடந்தான் முஜிபுர்.. தெருவிற்குள் புதிதாய் நுழைந்த இவர்களை வாசலில் உட்கார்ந்திருந்த பெண்களில் சிலர் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்த வீட்டில் முன்புறம் சிறிய இரும்பு கேட் போட்டிருந்தது. ரமேஷ் சாதாரணமாய் திறந்து கொண்டு உள்ளே போனான்.
""சாரதி ணே, அனுப்ச்சு விட்டாரு...''
உள்ளேயிருந்து பனியன் போட்டு பெரிய மீசையுடன் இருந்த ஒருத்தர் எட்டிப் பார்த்தார். முஜிபுர் வணக்கம் சொன்னான் சுற்றும் முற்றும் பார்த்தவர் ரமேசிடம், சாரதியக் காணாம்'' என்றார்.
""அண்ணே, பெரியகொளத்துல வேல பாத்துக்கிட்டிருக்கார். பேசிட்டு வரச் சொன்னார்.'' முஜிபுர் மடித்துக் கட்டிய வேஷ்டியை இறக்கிவிட்டு பதில் சொன்னான்.
""சரி... சரி, தம்பி வருவான்னாரு... நீங்க அவரு தம்பியா...?''
""ஆமாங்..''
உள்ளே அழைத்துப்போய் உட்கார வைத்தார். அளவான வீடு பளிச்சென வெள்ளையடித்து சுத்தமாய் இருந்தது. கீழே சிவப்புக்கலரில் டைல்ஸ் ஒட்டி இருந்தார்கள். சுவரில் டிவி அறையப்பட்டிருந்தது. மேலே ஒரு மின்விசிறி சுழல, தரையில் மேசை மின் விசிறி ஒன்றும் சுழன்று கொண்டிருந்தது. சோபாவில் இவர்களை அமரவைத்து விட்டு, பிளாஸ்டிக் சேரில் மீசைக்காரர் அமர்ந்து கொண்டார்.
""யம்மோய் தண்ணி கொண்டுட்டு வாம்மா...'' உள் பக்கமாய்த் திரும்பிக் குரல் விடுத்தார்.
ஒரு கர்ப்பிணிப் பெண் எவர்சில்வர் செம்பில் தண்ணீர் கொண்டு வந்தார்.
""தம்பி பேரு ?''
""முஜிபுர் ரகுமான்...''
""முஜிபுரா...''முகம் பலகேள்விகளை கொண்டுவந்தது மீசைக்காரருக்கு. ரமேசைப் பார்த்தார்.
"" நீங்க?''
""எம்பேரு... ரமேசு...'' வெளியில் வந்து முஜிபுர் உதைப்பான். 
""பேர எதுக்குடா சொன்ன... இனி என் கூட வராத...''
""நீங்கதே சாரதி தம்பியா...?'' ரமேசைப் பார்த்து மீசைக்காரர் பேசினார்.
முஜிபுருக்கு முகம் விகாரப்பட்டது. ரமேசுக்கும் என்ன பதில் சொல்லுவதென விளங்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த டி.விப் பெட்டியைப் பார்த்தான்
""ப்பா...பேருக்கு தம்பீன்னு சொல்லீருப்பாரு... எல்லாம் டீம் மெம்பரா இருப்பாங்கப்பா..'' கர்ப்பிணிப் பெண் அங்கிருந்த சங்கடத்தை விலக்கினாள்.
""ஓ... அவர்ட்ட வேல செய்றவங்களா...?'' மீசையை தடவி, நீவிவிட்டுக் கொண்டார்.
""அதென்னமோ ங்யா... எங்க வீட்ல எந்த விசேஷம்னாலும் அவருதே வந்து செஞ்சு குடுப்பாரு.... இன்னிக்கும் அவர்தே வருவேனு சொன்னாரு... நீங்க வந்திட்டீங்க...'' தம்ளரில் ஆவி பறக்கும் டீயுடன் தட்டேந்தி வந்த நடுத்தரவயதுப் பெண்மணி, ஆளுக்கொரு டம்ளரை தந்து விட்டு மீசைக்காரர் பக்கத்தில் நின்று கொண்டார். அவரது மனைவியாயிருக்கும்.
""அதெல்லா நீங்க எதிர்பார்த்ததவிட நல்லாவே இருக்கும். இல்லாட்டி அண்ணே யாரையும் நம்பி அனுப்ப மாட்டாரு... இவரும் பெரிய மாஸ்டர்தான்...'' ரமேஷ் எடுத்துக் கொடுக்க, முஜிபுர் முகம் விரிந்தது.
""அப்பச்சிக்கு என்னா தெரியாதா... நம்ம வீட்லயே நெறையா வேல பாத்திருக்கேனே...'' என ஒரே போடு போட்டான் முஜிபுர்.
மீசைக்காரர் குழம்பினார். ""அப்படியா... எனக்கு ஞாவகம் இல்லயே !''
""அய்யோ... ஒங்கள நா அடிக்கடி பாப்பேன்''
""என்னயவா... நா லாரி ஏஜெண்டு தம்பி... அடிக்கடி வெளியூர் போயிருவேனே... எங்க பாத்திருக்கீங்க?''
""அதுதே தெரியுமே... லாரி வச்சிருக்கீங்க... தெரியாதா... ஒருதரம் இருக்கங்குடி கோயிலுக்கு போனம்ல...'' சத்தியம் செய்யாத குறையாய் ஊன்றி அடித்தான்.
மீசைக்காரர் உண்மையாகவே குழம்பிப் போனார், ""அப்பிடியா... நா சரக்குதே ஏத்துவேன். ஆள்கள ஏத்துனதில்லியே...''
""எனக்கு நல்லா ஆவகம் இருக்குங்க...''
""ஆனா நான் ஏஜெண்டு ஓனரு இல்ல...''
""நானும் அதத்தான சொல்றேன்''
ரமேஷ் இந்த ஆட்டையில் சிக்கவில்லை. முஜிபுர் எந்த நிலையிலும் தான் சொன்னதை வாபஸ் வாங்குவதோ தவறுதான் என ஒப்புக்கொள்ளவோ மாட்டான் அவர்களாகப் பேசி களைத்து வரட்டும்.
அடுத்த இரண்டு நிமிடத்திலேயே ரமேஷ் நினைத்தது நடந்து விட்டது வீட்டுக்காரம்மாள் அதனைச் செய்தார்.
""வந்த விசயத்தப் பேசுங்க...'' என முற்றுப்புள்ளி வைத்தார். 
""நல்லாச் செஞ்சுருவீங்கள்ல, சரியில்லனா சம்பந்தகாரவக மூஞ்சீல முழிக்க முடியாது தம்பி'' என உறுதி மொழி வாங்கிய பிறகே வேலையைச் சொன்னார்.
""பொண்ணுக்கு வளகாப்பு...''
""இப்ப வந்தாங்கள்ள அந்தப் பொண்ணுக்கா...''
""ஆமாமா...''
""இங்க இருக்காங்க...?'' ரமேஷ் தேவையில்லாமல் பேசுவதாய் முஜிபுர்க்குப் பட்டது. ஆனாலும் பொறுமை காத்தான்.
""காலம்பற மாப்ள வந்து கூப்பிட்டுப் போயிருவாரு... நாளக்கழிச்சு சோறாக்கிட்டுப் போயி, வளையல் போட்டு கூப்புட்டு வரணும்...'' வீட்டுக்காரம்மாள் சங்கடப்படாமல் விளக்கமளித்தார்.
""எத்தன சோறுங்மா'' பூர்வாங்கமான பேச்சைத் துவங்கினான் முஜிபுர்..
""என்னென்னா சாதம் செய்வீங்க...''
""ஒங்களுக்கு என்னென்னா வேணும்...?''
""இல்ல...நீங்க எது தெளிவாச் செய்வீங்க....'' இந்தப் பேச்சு இன்னொரு பக்கம் நீளலாம் என பயந்த ரமேஷ், சாதங்களின் பெயர் வரிசையை அடுக்கலானான், ""சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம், அவல் பொங்கல், தினைப் பொங்கல், வரகரிசிப் பொங்கல், புளிசாதம், சாம்பார் சாதம், வெண் பொங்கல், புதினா சாதம், மல்லிசாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம், கறிவேப்பிலை சாதம், மிளகு சாதம், கடுகு சாதம், சீரக சாதம், வெங்காய சாதம், பூண்டு சாதம், தயிர் சாதம்...''
மூச்சுவாங்காமல் சொன்னதைக் கேட்டதும் முஜிபூருக்கு புல்லரித்துப் போனது. ""மாப்ள தரமானவன் தான்'' என பெருமிதம் கொண்டான். வீட்டுக்குள்ளிருந்து அந்த சாத வரிசையைக் கேட்ட கர்ப்பிணிப் பெண் வாய் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே வந்தாள்.
""இத்தன சோறா...? செத்தாங்கெ, சுருளிப்பட்டிக் காரெங்கெ...'' தன் புருசன் வீட்டாரை இழுத்துப் பேசியது.
""இல்லம்மா.... என்னா செய்யலாம்னு கேட்டுக்கிருக்கம்...''
""ஏழுசாதம் போடலாமா...'' முஜிபுர் இடைமறித்தான்.
""ஏழா...? அஞ்சு பத்தாது...'' என்ற வீட்டுக்காரம்மாள், ""என்னென்ன போட்டா நல்லாருக்கும்...?'' மீண்டும் கேள்வியை இவர்களிடமே வைத்தது.
முஜிபுர் முந்திக் கொண்டான். ""இனிப்புக்கு கல்கண்டு சாதம், தக்காளி சாதம், நெய்ச் சாதம், கீ ரைஸ் தேங்காசாதம், புளிய வெதரை, லெமன்சாதம், ஒரு புளிக்காய் ஆகமொத்தம் ஏழு அய்ட்டம். 
சாதம் ஏழு வரணும்னா தயிர் சாதம் போட்டு ஊறுகாய் சேத்து ஒம்பது அய்ட்டம். ஒத்தப்படை...'' என முடித்தான்.
""அதென்னா புளிய வெதரை'' கர்ப்பிணிப் பெண் கேட்டாள்.
""புளியோதரை, புளிச்சாதம்'' ரமேஷ் விளக்கமளிக்க அதற்கும் அந்தப் பெண் சிரித்தாள். அப்படியே வீட்டுக்குள் போனாள்.    
""சரி எத்தனபேர் வருவீங்க... என்ன சம்பளம்...?''
""மூணுபேர் வந்திரம்.... மூவாயிரம் குடுத்திருங்க...'' ரமேசைப் பார்த்து சரியா என்பது போல ஒருகண் காட்டிப் பேசினான்.
""மூணு பேரா....? எதுக்கு ?... ஒராள் பத்தாதா...'' மீசைக்காரர் துடிப்புடன் நிமிர்ந்து கொண்டு பேசினார்.
""ஒராள் வந்து ஒண்ணும் முடியாதுங்க. அடுப்புல ஏத்தி எறக்கவே தொணையாள் வேணும்...''
""நாங்கதே இருக்கம்ல... எங்களுக்கென்னா வேல...?''
""அதல்லா தோதுப்படாதுங்க...'' ""பொழுதீக்கும் ஒங்களக் கூப்புட முடீமா ! சரி, ரெண்டாள் வாரம். ரெண்டு ஐநூறு குடுத்திருங்க...''
""அதென்னாப்பா மூணாள் மூவாயிரம், ரெண்டாள் ரெண்டு ஐநூறு
""பொம்பளையாள்க்கு ஐநூறு'' ரமேஷ் சொன்னான்.
""ஆறாரூ வருவிங்க...''
""நீங்க பாய்... தெரியும்... இவரப் பாத்திருக்கனா...? எந்தத் தெருவு தம்பி...'' மீசைக்காரர் ரமேசை அப்போதுதான் உற்றுப் பார்த்தார்.
""கீரக்கல் தெருவுங்க...'' 
""கீரக்கல் தெருவுவா ? கீரக்கல்லுல ரோட்டுக்கு மேலயா கீழயா ?''
""ரோட்டுக்கு மேலதான கீரக்கல்லு''
""அதான் நீ எங்க இருக்க''
""சொன்னேன்லங்க . கீரக்கல்லு''
வாழைப்பழக் கதையாய் நீண்டது பேச்சு. ""கீரக்கல்லு மெயினா, சந்தா ? கடவீதிங்கறதால பலசாதியும் கலந்து கெடக்கேப்பா?'' 
ரமேசுக்கு அவரது உள்ளக்கிடக்கை புரிந்தது, 
""ராசப்பிள்ள மகெங்க...''
வீட்டுக்காரம்மாளுக்கும் அப்போதான் உயிர் வந்ததுபோல மூச்சை இழுத்து விட்டுக் கொண்டார், ""அப்படித் தெளிவாச்சொல்லு ! சரி...சரி'' என தலையாட்டியவர், ""தம்பிகளுக்கு டீ போட்டு வாம்மா'' என்றார்.
அடுத்த நிமிசத்தில் பலகாரமும் சேர்ந்து வந்தது. சம்பளம் பேசி முடித்து முன்பணம் வாங்கிக் கிளம்பிய போது, ""காப்பி பலகாரத்த தொடவே இல்ல தம்பி'' வீட்டுக்காரம்மாள் வற்புறுத்தினார்.
""நாங்க வேலைக்குப் போற எடத்தில கை நனைக்கிறதில்லைங்க'' என்று சொல்லிவிட்டு விசுக்காரமாய் வெளியேறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com