பேச்சினிலே ஒரு துளி!

சனநாயக மரபுகள், இந்தியாவின் பல ஆண்டுகாலமாகப் போற்றிப் பாதுகாத்துக் காப்பாற்றப்பட்டு வருகின்ற முறையாகும்.
பேச்சினிலே ஒரு துளி!

சனநாயக மரபுகள், இந்தியாவின் பல ஆண்டுகாலமாகப் போற்றிப் பாதுகாத்துக் காப்பாற்றப்பட்டு வருகின்ற முறையாகும். குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஆயிரம் ஆண்டுகாலத்திற்கு முன்பே-சனநாயக மரபைத் தமிழன் உணர்ந்து- அதனை செயல்படுத்திக்
 காட்டினான்!
 இன்றைக்கு செங்கற்பட்டு மாவட்டத்தில் உத்தரமேரூர் என்ற ஊரில் காணப்படும் கி.பி.919-921-ஆம் ஆண்டுகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டில் முதல் பராந்தகச் சோழன் காலத்தில்-கிராமப்புறங்களில் ஆட்சி நடத்த-அதற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் "குடவோலை முறை' என்கின்ற மக்களாட்சி சனநாயக முறை இருந்தது என்ற குறிப்பு காணப்படுகிறது!
 அந்த முறையை ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பே கடைப்பிடித்த நாடு- தமிழ்நாடு!
 சனநாயக முறை தமிழன் இரத்தத்தில் ஆயிரம் ஆண்டுகாலமாக ஊறிப்போய் இருந்தது!
 அந்த நெறிக்கு ஆபத்து வருகின்ற நேரத்தில்தான்- தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகின்ற சனநாயக மரபுக்கு ஊனம் வருகின்ற நேரத்தில்தான்- கழகம் கலங்குகிறது! திகைக்கிறது! "என்னவாகுமோ' என்று அஞ்சுகிறது!
 கட்சிரீதியாகப் பார்த்தாலும்- ஆட்சிரீதியாகப் பார்த்தாலும்- சனநாயக மரபுகளைக் கட்டி காத்து வருகின்ற இயக்கம்- தி.மு.கழகம்!
 இன்று நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன; அந்தக் கட்சிகள் சிலவற்றிற்கு அமைப்பு முறைகள் கூட கிடையாது!
 நூறு பேருக்குத் தந்தி கொடுத்து- "நீங்கள் எல்லாம் பொதுக்குழு உறுப்பினர்கள்; சென்னைக்கு வாருங்கள்' என்று தந்தி கொடுத்து- "நான் உங்களைப் பொதுக்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தேன். நீங்கள் என்னைத் தலைவனாகத் தேர்ந்தெடுங்கள்' என்பதுதான் அவர்களது சனநாயக முறையாக இருக்கிறது!
 தி.மு.கழகத்திற்கு அத்தகைய சனநாயக முறை இருந்தால், இன்றைக்கு இந்திராகாந்தி அம்மையாரின் போக்கை நிபந்தனையில்லாமல் நிறைவேற்றுகின்ற "கால்வருடி'களாகத்தான் தி.மு.கழகம் இருந்திருக்க முடியும்!
 தி.மு.கழகத்திற்கு சனநாயக மரபுகளை அண்ணா அவர்கள் எப்படிக் கற்றுக் கொடுத்தார் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்லலாம்.
 அண்ணா அவர்கள் பொதுச் செயலாளராக இருந்த நேரத்தில், ஒரு பொதுக்குழுவின் ஒரே ஓர் உறுப்பினர், அண்ணா அவர்கள்மீது ஒரு சாதாரணக் குறையைச் சொன்னதும், அந்தப் பொதுக்குழுவுக்குத் தலைமை ஏற்றிருந்த அண்ணா அவர்கள் கீழே இறங்கி வந்து-கீழ் வரிசையில் அமர்ந்திருந்த நண்பர் ஏ.வி.பி.ஆசைத்தம்பியை அழைத்து, "என்னைப் பற்றிய குற்றச்சாட்டு வந்திருக்கிறது. ஆகவே, நான் தலைவராக வீற்றிருந்து விசாரிக்கக் கூடாது; விசாரணை முடிகின்ற வரையில் நீ தலைவனாக உட்கார்ந்து-என்னைக் கேள்விகளைக் கேட்டு விசாரணை செய்; நான் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்கிறேன்'' என்று சொன்னார்கள்.
 இப்படிப்பட்ட சனநாயக முறையைக் கற்றுக் கொடுத்த தலைவன் வழியில் வந்தவர்கள் தி.மு.கழகத்தினர்!
 (கடற்கரைப் பேச்சு -1976)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com