தேனிலவு ரயில் பயணம்!

வித்தியாசமான திருமணம், வித்தியாசமான தேனிலவு என்றெல்லாம் வெளிநாட்டு செய்திகளைப் பார்த்த நமக்கு வித்தியாசமாக செலவு செய்து ரயிலில் உதகைக்கு
தேனிலவு ரயில் பயணம்!

வித்தியாசமான திருமணம், வித்தியாசமான தேனிலவு என்றெல்லாம் வெளிநாட்டு செய்திகளைப் பார்த்த நமக்கு வித்தியாசமாக செலவு செய்து ரயிலில் உதகைக்கு வந்த புதுமணத் தம்பதிகளைப் பார்த்ததும் பெரியஆச்சரியம்தான். ஆம், தனது காதல் மனைவிக்காக தேனிலவுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நீலகிரி மலை ரயில் பயணத்தை பரிசளித்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் கிரஹம் வில்லியம் லின்.
 30 வயதான இவர் இவர் போலந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சில்வியா (27) என்பவரை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார்.
 தேனிலவை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற முடிவு செய்த லின், அதற்கு உலக பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில் பயணம்தான் சரியானது என தேர்வு செய்தார்.
 பாரம்பரிய நீராவி ரயில் என்ற அந்தஸ்த்தை யுனெஸ்கோ அமைப்பின் மூலம் பெற்றுள்ள நீலகிரி மலை ரயில் பயணம் குறித்தும், அதில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின்(ஐஆர்சிடிசி) மூலம் செயல்படுத்தப்படும் நீலகிரி மலை ரயிலில் தனிப்பயணம் குறித்தும் அறிந்து, நீலகிரி மலை ரயிலில் 3 பெட்டிகளில் மொத்தமுள்ள 143 இருக்கைகள் அனைத்தையும் சுமார் ரூ.2.85 லட்சத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு முன் பதிவு செய்துள்ளார். இந்த பயணம் ஆகஸ்ட் 31ஆம்தேதி என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேனிலவை கொண்டாட 15 தினங்களுக்கு முன் புதுமண தம்பதியினர் கிரஹம் லின் மற்றும் சில்வியா ஆகியோர் விமானம் மூலம் தில்லி வந்துள்ளனர். தொடர்ந்து தில்லியில் ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்த பின் ரயில் மூலம் சென்னை வந்தனர்.
 இதைத்தொடர்ந்து அங்கிருந்தும் மேட்டுப்பாளையத்திற்கு ரயிலிலேயே வந்த இருவரும் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மலை ரயிலில் ஏறி குன்னூர் வழியாக உதகை வந்தடைந்தனர். குன்னூர் மற்றும் உதகை ரயில் நிலையங்களில் புதுமண தம்பதியினருக்கு ரயில்வே ஊழியர்கள் மற்றும் மலை ரயில் ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலா அலுவலர் ஸ்ரீதர் வழிகாட்டியாக உடன் வந்தார். நீலகிரி மலை ரயில் பயணம் குறித்து சிலாகித்த கிரஹம் லின் மற்றும் சில்வியா ஆகியோர் ஐரோப்பாவை ஒட்டியே நீலகிரி மாவட்டத்தின் புவியமைப்பு உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

உதகை வந்த இருவரும் உதகையில் ஒருநாள் தங்கிய பின்னர் ஞாயிற்றுக்கிழமை உதகை நகர சாலைகளில் உலா வந்தனர். அப்போது கிரஹம் லின் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது-
 "நான் நீராவி ரயில் என்ஜின்களில் பயணம் செய்ய அதிகம் விரும்புவேன். நான் ஒரு முறை போலந்து நாட்டில் உள்ள வோல்ஸ்டின் நகருக்கு சென்ற போது, அங்கு நீராவியில் ஓடும் ரயிலில் பயணம் செய்தேன். அப்போதுதான் சில்வியாவை பார்த்து காதல் கொண்டேன். அதன்பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணமும் நடைபெற்றது. இந்தியாவின் பெருமைகளை அறிந்து இங்கு வருவதாக தீர்மானித்தோம். அப்போது இங்கிலாந்திலுள்ள லாரி மார்ஷல் என்ற நண்பரின் அறிவுரைப்படி மலை ரயிலில் பயணிக்க தீர்மானித்தோம். இவர் இதுவரை 28 முறை நீலகிரி மலை ரயிலில் பயணித்துள்ளார். பசுமையான மலைகள், உயர்ந்த மரங்கள், பரந்த தேயிலைத் தோட்டங்கள் என நீலகிரியின் இயற்கை அழகு ஐரோப்பிய நாடுகளை ஒத்துள்ளது. வேறு நாடுகளில் இது போன்ற அழகை நான் பார்த்ததில்லை. மலை ரயில் பயணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. அத்துடன் உபசரிப்பும் இங்கு சிறப்பாகவே உள்ளது. இவ்வளவு அழகான இந்தியாவுக்கு வந்தது பெருமையாக உள்ளது. இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம் அதனால் கூடுதலாக மூன்று நாட்கள் உதகையில் தங்க தீர்மானித்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.
 தென்னக ரயில்வேயின் சார்பில் ஐஆர்சிடிசியின் சார்பில் சார்ட்டர்டு ரயில் எனப்படும் புதிய ரயில் சுற்றுலா திட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். ஆனால், தேனிலவு சுற்றுலாவையே இந்த மலை ரயிலில் உதகைக்கு மாற்றி தம்பதியினராக வந்த பயணம்தான் ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ள சார்ட்டர்ட் ரயில் சுற்றுலாவிலேயே முதலாவதாகும். அதிலும் இந்திய ரயில் பயண வரலாற்றிலேயே இரு பயணிகளுக்காக மட்டுமே இயக்கப்பட்ட முதல் ரயில் அனேகமாக இதுவாகத்தானிருக்கும்.
 - அ.பேட்ரிக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com