காதைத் திருகிய சிலம்பொலி!

பழைய காலங்களில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் காதுகளைத் திருகுகிற இனிய "மரபு' உண்டு.
காதைத் திருகிய சிலம்பொலி!

பழைய காலங்களில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் காதுகளைத் திருகுகிற இனிய "மரபு' உண்டு.  அது செல்லமாகவும் இருக்கலாம், கண்டிப்பதாகவும் இருக்கலாம். அப்படி  ஓர் இனிய, செல்லமான வருடலை என்னுடைய காதும் பெற்றது, அண்மையில் நிறைவான சிலம்பொலி அவர்களிடமிருந்து!.

கல்லூரிக் கல்வி அலுவலகத்தில் நான் பணியாற்றிய சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில் ஒரு சமயம் "தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்க ஆய்வுப் பணி'க்காக அய்யா அவர்கள் அங்கு வந்திருந்தார்கள். என் பொறுப்பிலிருந்த ஒரு பதிவேட்டில் தவிர்த்திருக்க வேண்டிய ஓர் இடத்தில் ஆங்கிலப் பதிவைச் செய்துவிட்டிருந்தேன். ஆய்வாளர்கள் அதை அய்யாவின் பார்வைக்கு எடுத்துச் சென்றார்கள். பொதுவாக, "இப்படிச் செய்யாதீர்கள்', "இப்படிச் செய்யுங்கள்' என்று எடுத்துச் சொல்லி நெறிப்படுத்துவதே அந்த ஆய்வின் நோக்கம்.  நான் அவர்கள் முன் அழைக்கப்பட்டேன். 

அதற்கு முன்பே அய்யா அவர்களிடம்  நான் ஓரளவு அறிமுகமானவன். அவர்கள் இயக்குநராக இருந்த காலத்தில் என்னுடைய நூல் ஒன்று சிறுவர் இலக்கிய வகையில் தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்றிருந்தது. என்னைக் கண்டதும்..  ""வாங்க..  நீங்கதானா?  நம்ம ஆளாச்சே'' என்று உரிமையோடு அழைத்தார். 

நான் அய்யாவின் இடப் புறமாகப் போய் நின்று பதிவேட்டில் அவர் சுட்டிக்காட்டிய இடத்தைக் கவனித்தேன். அவருடைய இடக்கரம் தன்னியல்பாக என் காதை வருடியது. நானும் அவருடைய மாணவர்களுள் ஒருவனாக ஆகிவிட்டது போலவே உணர்ந்த இனிய தருணம் அது. அய்யா அவர்கள் கணித ஆசிரியராக இருந்தவர் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னால் சிலப்பதிகாரக் கதை நிகழ்வு இடங்களுக்கெல்லாம் சென்று பார்வையிட்டு வித்தியாசமான பயணத் தொடர் ஒன்றை எழுத  "கல்கி' இதழில் எனக்கு வாய்ப்பளித்தார்கள்.  அப்போது நான் முதலில் அணுகிப் பெற்றது சிலம்பொலி அய்யா அவர்களின் மதிப்புமிக்க ஆலோசனையைத்தான்.  துணையாகக் கொண்டதும் அவர்கள் எழுதிய "சிலப்பதிகார உரை விளக்கம்' நூலைத்தான். நாகை மாவட்டத்துப் பூம்புகார் தொடங்கிக் கேரள மாநிலப் பகுதியில் உள்ள கண்ணகி கோட்டம் வரை நேரில் சென்று பார்த்து விவரங்களைத் திரட்டி எழுதிய "சிலம்புச் சாலை' என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றபோது அதற்கு அழகான அணிந்துரை ஒன்றையும் நல்கி என்னை வாழ்த்தினார்கள். 

சிலம்பொலி  அவர்களிடம்  அணிந்துரை பெற்ற நூலாசிரியர்களின் எண்ணிக்கை  ஆயிரத்தைத்தாண்டும். அந்த "ஆயிரத்தில்' நானும் ஒருவன் என்கிற பெருமையை எனக்கு நல்கியவர் அய்யா அவர்கள்.  முப்பது பக்கங்கள், நூறு பக்கங்கள் என்று அய்யாவின் ஆய்வுரை  பெற்ற நூல்களும்  உண்டு.  இது வரை அந்த அணிந்துரைகளின் ஒரு பகுதி ஆறு தொகுதிகளாக வெளிவந்திருக்கிறது.

கடும் உழைப்பாளி என்பதோடு வாழ்நாள் முழுமையும் நேர்மையாகவும் வாய்மையோடும் விளங்கிய பெருமகனார் அவர்கள். அதிகம் பழகக் கொடுத்து வைத்திருக்கவில்லை என்ற போதிலும் ஏதோ பல காலம் உடன் வாழ்ந்த நிறைவைத் தந்திருக்கிறார். இந்தப் பிறவியின் நான் பெற்ற பெரும்பேறு அது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com