எனது முதல் சந்திப்பு 5

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை  அவர்களைப் பற்றி தற்சமயம் தமிழ்நாடே அறியும். அக்காலத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் அவரைப் பற்றி அறியாதவர்கள் திருநெல்வேலி ஜில்லாவில் யாரும் கிடையாது
எனது முதல் சந்திப்பு 5

வ.உ.சிதம்பரம் பிள்ளை 

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை  அவர்களைப் பற்றி தற்சமயம் தமிழ்நாடே அறியும். அக்காலத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் அவரைப் பற்றி அறியாதவர்கள் திருநெல்வேலி ஜில்லாவில் யாரும் கிடையாது என்று சொல்லலாம். அவருடைய சேவையைப் பற்றிய கதைகளை மிகவும் ஆர்வத்தோடு அக்காலத்தில் தேச பக்தர்கள் பேசிக் கொள்வார்கள். 

திருநெல்வேலி ஜில்லாவில் அக்காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கும், திருநெல்வேலி ஜில்லா கலெக்டர் ஆஷ் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கும் வ.உ.சியைப் பிரிட்டிஷ் சர்க்கார் ஜெயிலில் போட்டதுதான் காரணம். அக்காலத்திலெல்லாம் சென்னை மாகாணத்தில் தலைவர்கள் யார் என்றால், பிள்ளை, ஐயர் என்று இரண்டு பேர்களைத்தான் பிற மாகாணத் தலைவர்கள் சொல்லுவார்கள். பிள்ளை என்றால் வ.உ.சி, ஐயர் என்றால் ஹிந்து சுதேசமித்ரன் ஐயர். லோகமான்ய பாலகங்காதர திலகரின் நெருங்கிய சகாக்களில் ஒருவராய் இருந்தார் வ.உ.சி. எனவே அவரைத் தரிசிக்க வேண்டும் என்ற அவா எனக்கு ஏற்பட்டிருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், அந்தத் தரிசனம் எதிர்பாராத விதத்தில் என் வீட்டிலேயே கிடைத்ததுதான் ஆச்சரியம். 

நான் வ.உ.சியைச் சந்தித்த காலம் ஒத்துழையாமை இயக்கம் நடந்து வந்த காலம். திலகர் காலமாகி விட்டார். திலகரின் சகாக்களும் கோஷ்டியாரும் ஒத்துழையாமையை ஆதரிக்கவில்லை. மகாத்மாவை ஒரு தலைவராகத் திலகர் கோஷ்டியார் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை. திலகருடைய தலைமை எங்கே, இந்தக் காந்தி எங்கே?  என்பது அவர்களுடைய நினைப்பு. ஏதாவது மாறுதல் ஏற்படும்போது இம்மாதிரி எதிர்ப்பு இருப்பது சகஜம். புதிதாய் காங்கிரசில் வந்து சேருகிறவர்களைப் பழைய காங்கிரஸ்காரர்கள் மேலும் கீழும் பார்ப்பதை இன்றும் காணலாம். இதற்கு அந்த மாறுதலை விரும்பாத மனோபாவம் தான் காரணம். எனவே காங்கிரஸ் மகாசபை சட்டசபை பகிஷ்காரத்தை நடத்தி வந்த போதிலும் திலகர் கோஷ்டியார் அதை ஒப்புக் கொள்ளவில்லை. எனவே அச்சமயம் டில்லி ராஜாங்க சபைக்குத் தேர்தலுக்கு நின்ற ஒரு சென்னை நண்பருக்கு ஓட்டுகள் சேகரிப்பதற்காக வ.உ.சி தென்காசிக்கு வந்தார். அந்த ஓட்டுகள் தபால் மூலம் அனுப்பக் கூடிய ஓட்டுகள்.  

எனது சகோதரர் பெயரும் சிதம்பரம் பிள்ளை. வ.உ.சியை ஜெயலில் போட்டதன் காரணமாய் ஏற்பட்ட திருநெல்வேலி கலெக்டர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு ஜெயிலுக்குப் போனவர்களில் எனது சகோதரரும் ஒருவர். எனது சகோதரரும், அவரும் நண்பர்கள். எனவே தென்காசிக்கு, ரயிலில் வந்த வ.உ.சி நேராக எங்கள் வீட்டுக்கே வந்தார். எனது சகோதரர் வரவேற்று உபசாரம் செய்தார். அச்சமயம் நான் வீட்டிலில்லை. தென்காசியில் காங்கிரஸ் கமிட்டிக்கு நான் காரியதரிசியாய் இருந்தபடியால் சாப்பாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் நான் வீட்டில் இருப்பதில்லை. காங்கிரஸ் காரியாலயத்தில் தான் இருப்பேன். சாப்பாட்டுக்காக  நான் வந்த போது புது மனிதர் ஒருவர் கம்பீரமாய் வீற்றிருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தேன். எனது சகோதரர் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்புறம் தான் இவ்வளவு பெரிய தேசபக்தரை இவ்வளவு சுலபமாகத் தரிசிக்க அதிர்ஷ்டம் கிடைத்ததை நினைத்து என் மனம் பூரிப்படைந்தது. 

வ.உ.சி பேசுவது எப்பொழுதுமே வெட்டு ஒன்று, துண்டு இரண்டாய் இருக்கும். விளக்கெண்ணெய்ப் பேச்சே கிடையாது. கோபம் வந்தால் பிரமாதமாய் இருக்கும். ஆனால் தங்கமான மனம். வந்த கோபம் நொடியில் அமர்ந்து போகும். ஒத்துழையாமை இயக்கம் நின்ற பின்பு காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் எவ்வளவோ பேசியிருக்கிறார். என்றாலும், கூடிய வரையில் பொதுக்கூட்டங்களுக்குப் போக அவர் விரும்புவதில்லை. அதற்குக் காரணம் அவருடைய ஆவேசத்தை அவரால் அடக்க முடியாது. கடைசியில் அந்தப் பிரசங்கம் ராஜத் துவேஷ குற்றத்தில் வந்து முடியும். அந்த மாதிரி அனாவசியமாகச் சிறைக்குப் போவதை அவர் விரும்பவில்லை. 

நாட்டிற்காக அவர் பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு அளவே கிடையாது. ஆனால், மக்களின் ஆதரவைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. பாரதியார் உயிருடன் இருந்தவரை எப்படி அலட்சியமாய் இருந்து, செத்த பின்பு மண்டபங்கள் கட்டினார்களோ, அதே மாதிரிதான் வ.உ.சியிடமும் நடந்து கொண்டார்கள். ஆனால், கடைசி வரையில் அவருடைய மனத்தின் வேகம் மட்டும் கொஞ்சம் கூடக் குறையவே இல்லை. என்னைப் பார்த்ததும் அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் மனதை விட்டு அகலவில்லை. அவர் சொன்னதாவது "நீயோ, தீவிர காங்கிரஸ்காரன்; சட்டசபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்லுகிறவன். நானோ சட்டசபைக்குள் போக வேண்டுமென்று சொல்லுகிறவன். ஏனப்பா எனக்கு வீட்டில் இருக்கக்கூட இடம் கொடுக்கமாட்டாயா?'' 

அவர் தமாஷாய்த்தான் பேசினார். என்றாலும் கொள்கையில் உறுதி அவருக்கு எவ்வளவு இருந்ததோ, அதே உறுதியை மற்றவர்களிடம் அவர் எதிர்பார்த்தார் என்பதை அவருடைய தமாஷ் பேச்சு நன்றாய் எடுத்துக்காட்டியது. அதன் பின்னால் பல தடவை வ.உ.சியிடம் நெருங்கிப் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. புத்திரன் பேரில் தந்தைக்கு எவ்வளவு வாஞ்சை உண்டோ, அம்மாதிரி வாஞ்சையோடு என்னிடம் நடந்து வந்தார். அவருடைய சுயசரிதையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஒரு நாள் அவரிடம் சொன்னேன். அச்சமயம் "காந்தி' என்ற பெயரோடு நான் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தேன். வ.உ.சியும் சம்மதித்து இரண்டாம் பாகத்தை ஆரம்பித்துப் பூர்த்தி செய்தார். இரண்டாம் பாகம் ஆரம்பத்தில் அவர் எழுதியதாவது:

உலகெலாம் புகழும்
நலனெலாம் அமைந்த
காந்திமா முனிவன்
ஏந்திய கொள்கையை
நிலனெலாம் பரப்புதற் (கு)
அவனற் பெயரால்
பத்திரிகை யொன்றை
எத்திசையும் செலுத்தும்
சொக்கலிங்கத் தூயோய் கேண்மோ!

வ.உ.சி எத்தனையோ கடிதங்கள் எழுதி இருக்கிறார். எனது பத்திரிகைக் கொள்கையைக் கண்டித்துக் கோபமாய்க் கூடப் பல தடவைகளில் எழுதியிருக்கிறார். என்றாலும், என் மீது இருந்த பிரியத்தில் மட்டுமென்றும் குறை ஏற்பட்டதில்லை. எல்லோரிடமும் அவர் சுபாவம் அதுதான். குறிப்பாகத் திருநெல்வேலி ஜில்லாவிலும், பொதுவாக தமிழ்நாட்டிலும், தேசபக்தியைத் தோற்றுவித்த பல புருஷர்களில் அவரும் முக்கியமானவர். இந்தியரும் கப்பலோட்ட முடியும் என்று இந்தியாவுக்கு ஞாபகமூட்டி அந்த ஆசையை வளர்த்த மூல புருஷரும் அவர்தான். வ.உ.சியைப் பற்றி எனக்குள்ள ஒரு வருத்தம் என்றும் மாற முடியாதது. அவர் காலமாவதற்குச் சில தினங்களுக்கு முன்னால் என்னைப் பார்க்க விரும்பினார். ஆனால், அந்த அவரது விருப்பம் அவர் காலமான பின்பே எனக்குத் தெரிவிக்கப்பட்டது. காரணம் எதுவாய் இருந்தால் என்ன? அந்தச் சந்தர்ப்பத்தை யாரால் தான் இனி தோற்றுவிக்க முடியும்?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com