அமிருதசரஸ் ஸ்டேஷனில் ஒரு தாய் காத்திருக்கிறாள்

திருலோச்சன்- அம்ருத் கெளர் தம்பதியினர் ரோட்டக்கில்இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கல்னா என்ற ஊரில் வசித்து வந்தனர். பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இருவரும் ஒரு கலவரத்தில்
அமிருதசரஸ் ஸ்டேஷனில் ஒரு தாய் காத்திருக்கிறாள்

திருலோச்சன்- அம்ருத் கெளர் தம்பதியினர் ரோட்டக்கில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கல்னா என்ற ஊரில் வசித்து வந்தனர். பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இருவரும் ஒரு கலவரத்தில் எல்லாவற்றையும் இழந்து, கட்டிய துணியோடு அகதி முகாமிற்கு 47-இல் வந்து சேர்ந்தனர். அவர்களுடன் வந்த ஒரே மூலதனம் தையற்கலை ஒன்றுதான். கல்னாவில் ஒரு சிறிய வீடும், நாலு குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்புக்கும் ஈடு கொடுத்தது இந்தத் தையல் கலைதான்.

தைத்த துணிகளை ரெடிமேட் ஷாப்பில் கொடுப்பதற்காக ஒரு முறை ரோட்டக் சென்ற திருலோச்சன், பஸ் விபத்துக்குள்ளாகி ஒரு காலை இழந்து விட்டார். வீட்டிலிருந்தபடியே காஜா எடுப்பது பட்டன்கள் தைப்பது போன்ற உதவிகளை அவர் செய்து வந்தார்.

அன்று விடியற்காலை தாசில்தார் குர்நாம் சிங் அவர்கள் வீடு தேடி வந்தார். "கல்னாவிற்கு இன்ஸ்பெக்ஷனுக்கு வந்திருக்கும் டிபுடி கமிஷனர் மிஸ். விமலா ஐ. ஏ. எஸ். அவர்கள் வீட்டிற்கு வந்து சில துணிகள் தைக்க ஆர்டர் கொடுக்கப் போவதாயும் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்' என்றும் கூறினார்.
அம்ருத்திற்குப் பெருமைபிடிபடவில்லை!
டிபுடி கமிஷனர் விமலா தன் தாயுடன் ஒன்பது மணிக்கு வந்தாள். தென்னிந்தியர்களுக்கே உரித்தான களை சொட்டும் முகம். ரொம்பவும் சகஜமாகப் பழகினாள். வித விதமாக எம்ப்ராய்டரி வேலைக்கு ஆர்டர் கொடுத்தாள். ஊரிலிருந்து தன் தங்கைகளுக்கு விதவிதமான ஃபிராக்குகளுக்கும் ஆர்டர் கொடுத்தாள். திருலோச்சன் அருகில் சென்று அமர்ந்து அவருக்கு ஆறுதல் சொன்னாள். ""எந்த விதமான உதவியும் தடங்கல் இல்லாமல் என்னிடம் கேட்கலாம்'' என்றாள்.

அப்பப்பா! என்ன அடக்கம், என்ன எளிமை!

குழந்தைகளை யெல்லாம் கூப்பிட்டு விசாரித்தாள். மூத்த பெண் அபிலாஷாவிடம் சொன்னாள்: ""அபிலாஷா, நீயும் கட்டாயம் ஐ. ஏ. எஸ். பாஸ் பண்ணி, உன் பெற்றோரையும், தம்பி, தங்கைகளையும் என்னைப் போல் காப்பாற்ற வேண்டும்'' என்று கூறினாள்.

""மாஜி! உங்கள் டீ ரொம்பப் பிரமாதம்'' என்று பலமுறை அம்ருதைப் பாராட்டினாள். போகும் முன் மறக்காமல் பர்சைத் திறந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை அம்ருத்திடம் கொடுத்து ""மாஜி! இதை இப்போதைக்கு வைத்துக் கொள்ளுங்கள்'' என்று சொன்னாள்.
அதன் பின் சகஜமாக இவர்களை அடிக்கடிச் சந்திக்க வருவாள் விமலா. அபிலாஷாவிற்கு வேண்டிய புத்தகங்கள் எல்லாவற்றையும் விமலாதான் கொடுத்து உதவினாள். கடைசியாக மாற்றலாகி டில்லி போகும் முன் ""அபிலாஷ் டியர், உன் வளர்ச்சியை நான் கவனித்துக் கொண்டே இருப்பேன். படிப்பில் முழுக் கவனம் செலுத்தி ஐ. ஏ. எஸ். பாஸ் பண்ணி விடு'' என்று சொல்லிப் போனாள்.

அன்றிலிருந்து அம்ருத் கனவு காண ஆரம்பித்து விட்டாள். "விமலாவின் தாயைப் போல தானும் தன் மகளுடன் கேம்ப் (இஅஙட) போகலாம். ஏழைக் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லி உதவிகள் செய்யலாம், பெரிய பங்களாவில் தான் பட்ட கஷ்டமெல்லாம் தீர்ந்து போய், திருலோச்சனுடனும் குழந்தைகளுடனும் ஒரு கமிஷனரின் பெற்றோர் என்ற முறையில் படாடோபமாக வாழலாம்' என்று இன்ப நினைவுகளில் லயிக்க ஆரம்பித்து விட்டாள்.

முதல் படியாக அவள் கண்ட ஒரு கனவு பலித்தது. அபிலாஷா ஐ. ஏ. எஸ். ஆனாள். தலைகால் புரியவில்லை அம்ருத்துக்கு. கல்னாவில் ஒரு வீடு பாக்கி இல்லாமல் சென்று இனிப்புப் பண்டங்கள் விநியோகித்து விட்டு வந்தாள். காலை, மாலை இரு வேளையும் தவறாமல் பெண்ணிற்கு திருஷ்டி சுற்றிப் போட்டாள். தன் திறமையையெல்லாம் காட்டி அபிலாஷாவிற்கு வண்ண வண்ணத் துணிகளில் விதவிதமாகத் தைத்து பெட்டி நிறைய அடுக்கினாள்.
அன்று முசோரியிலிருந்து அபிலாஷா கடிதம் எழுதி இருந்தாள். ""மா, நான் உங்களையெல்லாம் விட்டு வந்து விட்டேனே ஒழிய, எப்போதும் உங்கள் நினைவாகவே இருக்கிறது. இந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் நான் அழுவதைப் பார்த்து விட்ட என் "ரூம்மேட்ஸ்' என்னை ""அமுல் பேபி'' என்று கிண்டல் பண்ணுகிறார்கள். மாஜி, இரவென்றும், பகலென்றும் பாராமல், ஓய்ச்சல் ஒழிவின்றி தைத்துத் தைத்து எனக்காக கைகளில் தழும்பேற்றிக் கொண்டவர் நீங்கள் என்பதை இவர்கள் எப்படி அறிவார்கள்?

நேற்று இரவு பெய்த பனி மழையின் காரணமாய் இன்று எங்கள் அகாடமியை (அஇஅஈஉஙவ) சுற்றி, கண்ணுக் கெட்டியவரை வெள்ளை வெளேரென்று வெண் பஞ்சுக் குவியலைக் கொட்டி வைத்தார் போன்று, பனி கொட்டிக் கிடக்கிறது. மா, அந்த அற்புதக் காட்சியைக் காணும் போது என் இருதயத்தில் ரத்தம் கசிகிறது. உங்களுக்கு நான் பட்டிருக்கும் நன்றிக் கடன் இவ்வெண் பனி படலத்தைப் போல எவ்வளவு மடங்கு பெரியது தெரியுமா? உங்களது தூய்மையான அன்பு, மலர்ந்த வெள்ளை உள்ளத்தோடு நீங்கள் எனக்குச் செய்த அன்புப் பணிவிடைகள். எங்கே தான் தூங்கி விட்டால் நானும் படிக்காமல் தூங்கி விடுவேனோ என்ற அச்சத்தில் இரவு முழுவதும் என் அருகே அமர்ந்து, எனக்கு டீ போட்டுக் கொடுத்துக் கொண்டே தூங்காமல் நீங்களும் தைத்துக் கொண்டிருப்பீர்களே-மா, உங்களின் அந்த லட்சிய வெறி இவையல்லவா என்னை ஐ. ஏ. எஸ். ஆக்கியது? அந்தப் பணிவிடைகளை நான் எவ்வாறு மறக்க முடியும்?
இம்மாதம் முதல் தவறாமல் மணியார்டர் அனுப்புகிறேன். நீங்களும், பிதாஜீயும் தையல் வேலைக்கு இனிமேல் முழுக்குப் போட்டுவிட வேண்டும். குல்தீப், அமர், அனு மூவரையும் படிக்க வைத்து ஐ. ஏ. எஸ். ஆக்குவது என் பொறுப்பு. நீங்கள் யாவரும் கல்னாவை காலி பண்ணி விட்டு என்னுடன் வந்துவிட வேண்டும்,உங்கள் யாவருக்கும் என் அன்பு முத்தங்கள்!'' என்று எழுதி இருந்தாள்.
கடிதத்தை வருவோர், போவோரிட மெல்லாம் அம்ருத் பன்முறைப் படித்துக் காண்பித்தாள். அதன் பின் தன்னிடம் தைக்கக் கொண்டு வருபவர்களிடம் எல்லாம் "இனி மேல் தன்னால் தையல் வேலை செய்ய முடியாதென்றும், அதனால் தன் பெண்ணின் கவுரவம் பாதிக்கப்படும்' என்று கூறிவிட்டாள்.
அபிலாஷாவிடமிருந்து மீண்டும் கடிதம் வந்தது. அவளை ஜலந்தருக்கு மாற்றி இருக்கிறார்களாம். "ஜாயினிங் டைம்
(ஒஞஐசஐசஎ பஐஙஉ) இல்லாததால் நான் நேரே அங்கு போக வேண்டும். ஆகையால் பிதாஜி, மாவை உடனே நேரே ஜலந்தருக்கு அனுப்பி விடுங்கள்' என்று எழுதியிருந்தாள்.
கடைக்குட்டி அனுவிற்கு நல்ல ஜுரம். குல்தீப், அமர் இருவருக்கும் பரீட்சை சமயம். வேறு வழியில்லை! தான் போய் பங்களாவை ரெடி பண்ணி விட்டு வந்து, எல்லாரையும் அழைத்துப் போவதாகக் கூறிப் புறப்பட்டாள் அம்ருத் கெளர்.
ஜலந்தரில் வீடு ரொம்பவும் அழகாக இருந்தது. அம்ருத்திற்குப் பெருமை பிடிபடவில்லை. தன் கனவெல்லாம் நனவாகி விட்ட பெருமையில் வித விதமாக பங்களாவை அலங்கரித்தாள். இரவென்றும், பகலென்றும் பாராமல் கண்டோர் வியக்கும் வண்ணம் காட்டன்களும், டேபிள்வினன்களும், மற்றும் பெட்ஷீட், தலையணி உறைகளையும் தைத்துக் குவித்தாள். அன்பும், பெருமையும், பூரிப்பும் நிறைந்த சந்தடியில், தன் ஊனமுற்ற கணவனை, தன் அன்புக் குழந்தைகளை, உடல் நலிவுற்ற அனுவை மறந்தாள். "வீட்டை ரெடி பண்ண வேண்டும். "ஜம்' மென்று தன் பெண்ணுடன் எல்லா ஊர்களுக்கும் காரில் கேம்ப்
(இஅஙட) போக வேண்டும்'- இதுதான் அவளது லட்சியக் கனவுகள்!
அன்று அபிலாஷா கூறினாள்.
""மா, என்னுடன் முசோரியில் படித்த கமல் நாளை ஆக்ராவிலிருந்து அவள் அம்மாவுடன் வருகிறாள். அவள் ரொம்பவும் பணக்காரி. அவள் அப்பா ஒரு ஐ. சி. எஸ். அதிகாரி. நீ ரொம்ப நன்றாக "லஞ்ச்' தயாரிக்க வேண்டும். வீட்டை ரொம்ப அழகாக வைக்க வேண்டும்'' என்றாள்.

""நீ ஏன் குழந்தாய் கவலைப்படுகிறாய், நான் இருக்கும் போது?'' என்றாள் அம்ருத்.

மறு நாள் அதிகாலையிலே எழுந்து பம்பரமாய்ச் சுழன்றாள். கண்ணைப் பறிக்கும் வேலைப் பாடுகள் நிறைந்த கர்ட்டன்கள் வாசற்படியை அலங்கரித்தன. எழில் கொஞ்சும் டேபிள் விளன்கள் சாப்பாட்டு மேஜையை அலங்கரித்தன. வண்ண வண்ண மலர்கள் ஆங்காங்கே அழகழகாக ஜாடிகளில் காட்சி அளித்தன. எல்லாமே அம்ருத்தின் கைவண்ணம்தான்! தன் வாழ்வின் கனவெல்லாம் நனவாகி விட்ட பரவசத்தின் பிரதிபலிப்பு!!
சமையல் அறையிலிருந்து நெய் மணம் மூக்கைத் துளைத்தது. பரபரப்புடன் விருந்தினரை வரவேற்க வாசலுக்கு விரைந்தாள் அபிலாஷ். ஜன்னல் வழியாய் வந்தவர்களை நோட்டம் விட்டாள் அம்ருத். காதிலும், கழுத்திலும் வைரங்கள் டாலடிக்க, செல்வச் செழிப்பின் பிரதிபலிப்பாய் தாயும், மகளும் படகு போன்ற ஒரு காரிலிருந்து இறங்கினர்.
""ஹலோ, டார்லிங்'' என்று செல்லமாய் அபிலாஷாவின் கன்னத்தில் தட்டினாள் கமலின் தாய். அந்தக் காட்சியைக் கண்டு குளிர்ந்து போனாள் அம்ருத்.
கமலுடன் கைக் குலுக்கி இருவரையும் உள்ளே அழைத்து வந்தாள் அபிலாஷா. தன் மகள் தன்னைக் கூப்பிடுவதற்குள் கொஞ்சம் அலங்கரித்துக் கொள்ள கண்ணாடி முன்நின்றாள் அம்ருத். விருந்தினர்களின் முன்தான் எவ்வளவு ஏழை என்பது அப்போது தான் அவளுக்குப் புலனாயிற்று. "அவர்களின் பளபளக்கும் பனாரஸ் புடவைகள் எங்கே, தன் சாதா ஸல்வார் கம்மீஸ் எங்கே? அவர்கள் வைரங்கள் எங்கே, தன் இமிடேஷன் காதணி எங்கே?' என்று ஒரு நிமிட நேர சலனத்துக்கு உள்ளானாள் அம்ருத். "என்ன இருந்தாலும் என் அபிலாஷாவின் அழகிற்கு முன் அந்தக் கமல் ஒரு நோஞ்சான் காக்காய் அல்லவா?' என்ற எண்ணம் மறு நிமிடம் அவளை குதூகலத்திற்கு உள்ளாக்கியது. பவுடரையும், லிப்ஸ்டிக்கையும் அளவாகப் பூசிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் பெண்ணின் "சிக்னலை' எதிர்பார்த்து.
தன் டவாலி துல்சந்தை அபிலாஷா கூப்பிட்டு ""சாப்பாடு எடுத்து வை'' என்றதும் சற்றே அம்ருத் துணுக்குற்றாள். என்னமோ ஏதோவென்று சுதாரித்துக் கொண்டு சாப்பாட்டை துல்சந்திடமே அனுப்பி வைத்தாள்.
""சாப்பாடு ரொம்பவும் அருமை'' என்று புகழ்ந்தார்கள். இருவரும் மாறி, மாறி, ""இந்தக் கர்ட்டன் யார் தைத்தது? இந்த நாப்கினை ஃபாரினில் வாங்கினாயா? இந்த டேபிள் லினன் பிரான்சிலிருந்து வந்ததா?'' என்று ஒவ்வொன்றையும் வியந்து வியந்து பாராட்டினர்.
""இல்லை, என் மா தைத்தது'' என்று பெருமை தொனிக்கக் கூறியதைக் கேட்டு பூரித்துப் போனாள் அம்ருத்.
""ஹவ் லக்கி ஸி ஆர். உன் மம்மி எங்கிருக்கிறார்கள்? அவர்களிடம் சொல்லி எனக்கும் இதே மாதிரி தைத்துக் கொடுக்க வேண்டும்'' என்றாள் ரொம்பவும் உரிமையுடன்-கமலின் அன்னை.
""இதோ, என் மம்மி என்னுடன் இங்குதான் இருக்கிறாள்'' என்று தன் கண்மணி சொல்லப் போகிறாள் என்று காதைத் தீட்டிக் கொண்டாள் அம்ருத்.
""மம்மி. அப்பாவின் பிசினûஸப் பார்த்துக் கொண்டு ஊரிலிருக்கிறாள். எத்தனை தான் வேலைக்காரர்கள் இருந்தாலும் மம்மி அவர்களை நம்பிவிட மாட்டாள். நான் எவ்வளவோ வற்புறுத்திக் கூப்பிட்டும் என்னுடன் வந்து இருக்க மறுத்து விட்டார்கள். அதனால் மம்மியிடம் எனக்கு ரொம்பவும் கோபம்'' என்றாள் அபிலாஷா, வெகு நிதானமாக!
தன் கீழே பூமி வெடித்துவிட்டது போன்ற பிரமை அம்ருத்திற்கு. தன் தாய் ஒரு ஏழை தையற்காரி என்பது தன் மகளுக்கு எவ்வளவு பெரிய அவமானம் என்பதை முதல் முதலாக அவள் உணர்ந்தாள்!
அந்தக் கமிஷனர் பங்களாவில் அந்தத் தாய், வாசற்படிகளை அலங்கரிக்கும் கர்ட்டன்களில் இருந்தாள். மேஜை விரிப்புகளில் இருந்தாள். ஆனால் சமையல் அறையில் ரத்தமும் சதையுமாய் நின்றிருந்த அந்தத் தாய், மகளின் விருந்தாளிக்கு முன் அருவமாகி விட்டாள். ஏனெனில் அவள் ஓர் ஏழை தையல்காரி!
நினைத்து நினைத்து குன்றிப் போனாள் அம்ருத்.
""அபிலாஷா! இவ்வளவு நல்ல சமையல்காரி உனக்கு எங்கிருந்து கிடைத்தாள்?''
""ஓ! என்னுடன் இருப்பவள் என் ஆயா! என்னை குழந்தை முதல் வளர்த்தவள். ஆகையால் என் மம்மி என்னுடன் இவளை அனுப்பி விட்டாள்'' என்றாள் அபிலாஷா.
கற்சிலையாகிப் போனாள் அம்ருத்!
புறப்படும் சமயம் கமல் தன் தாயுடன் சமையலறைக்குள் வந்தாள். அம்ருத்திடம் அவள் சமையலை வெகுவாகப் புகழ்ந்தாள். தன் கைப் பையைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை அவளிடம் நீட்டினாள் அந்த ஐ. ஏ. எஸ். அதிகாரியின் தாய், மற்றொரு ஐ. ஏ. எஸ் அதிகாரியின் தாயிடம். பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு வாங்க மறுத்துவிட்டாள் அம்ருத்.
அவர்களை வழி அனுப்பி விட்டு உள்ளே வந்த அபிலாஷா ஒன்றுமே நடவாதது போல ""மா, எனக்கு ரொம்ப தலையை வலிக்கிறது. உன் கையால் கொஞ்சம் விக்ஸ் தடவி விடு. மா, நான் உன் மடியில் படுத்துக் கொள்கிறேன்'' என்று சொன்னவுடன் அந்தத் தாய் உள்ளத்தில் விழுந்த வலிகள்
எல்லாம் பறந்து விட்டன.
கன்னாவிலிருந்து குல்தீப் எழுதியிருந்தான்: ""மாஜி, நீங்கள் இல்லாமல் எங்களுக்கு ஒரே பணக் கஷ்டம். அனுவின் உடம்பு ரொம்ப மோசமாக இருக்கிறது. பிதாஜி
காலில் கட்டி புறப்பட்டு சீழ் பிடித்து ரொம்பவும் அவஸ்தைப்படுகிறார். எனக்கும் அமருக்கும் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டும்.
அக்காவிடம் சொல்லி உடனே ரூ. 2500 மணியார்டர் அனுப்பச் சொல்லு. பரீட்சை எப்போது முடியப் போகிறது. எப்போது கல்னாவை காலி பண்ணி விட்டு அங்கு வருவோம் என்று ஒரே ஆவலுடன் இருக்கிறோம். மாஜி! நீங்கள் எப்படி எங்களை மறந்து விட்டீர்கள்? உடனே புறப்பட்டு வாருங்கள் மாஜி. அக்காவிற்கு எங்கள் அன்பு முத்தங்கள்!- அக்காவிடம் சொல்லி எங்கள் இருவருக்கும் நிறைய டெரிலின் பேண்டும், ஷர்ட்டும் வாங்கி வரவேண்டும்'' என்று பின் குறிப்பும் எழுதியிருந்தாள்.
அபிலாஷா இந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்த பின்னரே, துல்சந்த் மூலம் அம்ருத்திடம் அனுப்பி இருந்தாள். மகள் இந்தத் கடிதத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறாளோ என்ற ஏக்கத்துடன் காத்திருந்தாள்.
சற்று நேரத்தில் "கமிஷனர் மேம் சாப்' உள்ளே வந்தாள். மிகுந்த தயக்கத்துடன் ""பேட்டி, குல்தீப்பின் கடிதம் பார்த்தாயா? என்ன பதில் எழுதுவது?''
என்றாள் அம்ருத்.
வெடித்தாள் கமிஷனர் மேம் சாப் அபிலாஷா.
""மா, உன்னுடன் பெரிய தொல்லையாகிப் போய்விட்டது. நான் இரவு பகலாக உழைப்பது அந்தக் கடன்காரன்கள் குல்தீப், அமர்தீபிற்காக அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள். அந்தத் தரித்திரக் கும்பலுக்கு நான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அழுது விட்டு நான் என்ன பண்ணுவது? எனக்கு கமலைப் போல விதவிதமான நகைகள் உண்டா? நல்ல டிரஸ்கள் உண்டா? ஒரு நல்ல கார் உண்டா? எனக்கு நினைவு தெரிந்த நாளாக உன் வீட்டில் பற்றாக் குறைதான்! ஏன், உன் பிள்ளைகள் வேலைக்குப் போகச் சொல், அவர்கள் படித்துக் கிழித்தது போதும். அந்தத் தரித்திரங்கள் ஒன்றும் கல்னாவை காலி பண்ணி விட்டு இங்கு வர வேண்டாம். என் மானமே கப்பல் ஏறிவிடும். ஓ! மறந்து விட்டேனே... உன் அழகுச் செல்வங்கள் உன்னை வரச்சொல்லி எழுதி இருக்கிறார்கள். நீ இன்று சாயங்காலமே புறப்படலாம். எனக்கு இன்ஸ்பெக்ஷன் இருக்கிறது. நான் கேம்ப் போனால் திரும்பி வர பதினைந்து தினங்களுக்கு மேலாகும். ஆகையால் நான் திரும்பி வந்து கடிதம் போட்டவுடன் நீ மாத்திரம் வந்தால் போதும்'' என்று கூறிவிட்டு, ஐம்பது ரூபாயை அவள் கையில் கொடுத்தாள். டிக்கெட் பணம் போக பாக்கியை அவளே வைத்துக் கொள்ளலாமாம்!
கையும், காலும் துவண்டு போய், நெஞ்செல்லாம் முள்ளாய்க் குத்த, பிரமைப் பிடித்துப் போனாள் அம்ருத். பொங்கி வந்த கண்ணீரை மிகுந்த சிரமத்துடன் அடக்கிக் கொண்டாள்.
""ஹும்! அபிலாஷாவின் உள்ளத்தில் இப்படியொரு விரிசல் விழுந்து விட்டதே... தெய்வமே! என் குடும்பத்தைச் சிதறவிடாதே... பேட்டி! உன்னால் எவ்வளவு பெருமை எங்களுக்கு. அது போதும்! பெயரும், புகழும் பெற தெய்வம் உனக்கு ஆசி புரியட்டும்' என்று மனதார வேண்டிக் கொண்டு கல்னாவுக்குப் பயணமானாள் அம்ருத்.
கல்னாவில் இவள் டோங்காவிலிருந்து இறங்கியவுடன் குழந்தைகள் இவளைச் சூழ்ந்து கொண்டன. அந்த ஆர்வமிக்க வரவேற்பில் படாடோபம் இல்லை. சுயநலம் இம்மியும் இல்லாத ஆத்மார்த்தமான, பவித்ரமான அன்பு பளிச்சிட்டது.
""மாஜி, நீ இல்லாமல் எங்களால் வாழ முடியாது'' என்று ஏக்கம் கவிந்த இந்தச் சிறுவர்களின் தாபக் கூக்குரல்கள் எங்கே? ""நீ இல்லாமல் என்னால் வாழ
முடியாதா?'' என்று அகங்காரம் தொனிக்கும் அபிலாஷாவின் அட்டகாச எக்காளம் எங்கே? அம்ருத்துக்கு நெஞ்சில் "சுரீர்' என்று தைத்தது!
அப்போது அபிலாஷாவிற்கு ஐந்து வயதிருக்கும். ஒரு நாள் துணிகள் தைத்துக் கொண்டிருக்கும் போது, ஊசி விரலில் குத்தி ரத்தம் கசிய ஆரம்பித்தது. குழந்தை அபிலாஷா தாயிடம் ஓடி வந்து தன் பிஞ்சுக் கையால் அந்த ரத்தத்தைத் துடைத்து விட்டு ""மா, உனக்கு வலிக்கிறதா, வலிக்கிறதா?'' என்று கேட்டுத் துடித்துப் போய்விட்டாள். பிதாஜியிடம் ஓடிப் போய், ""டாக்டர் வந்து மாஜிக்கு ஊசி போட வேண்டும்'' என்று ஒரே அடம்பிடித்தாள். அன்று ஒரு சொட்டு ரத்தத்தைக் கண்டு அலறிய அபிலாஷா, இன்று தன் இருதயத்திலிருந்து ரத்தம் சொட்டச் சொட்டக் குதறிப் பேசுகிறாள்?
பட்டமும் பதவியும் வந்தால் பண்பும் பாசமும் விலகிப் போய் விடுமோ?
தன்னுள் குமைந்து போனாள் அம்ருத்.
அனு ரொம்பவும் மெலிந்திருந்தாள். உள்ளே நுழைந்து திருலோச்சனைக் கண்டதும் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. உடல் அனலாய்க் காய்ந்தது. எலும்புக் கூடாகி போயிருந்தார்.
""பாவி, உங்களை யெல்லாம் விட்டு விட்டு போனதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன்'' என்று கூறி பொல பொலவென்று கண்ணீர் உகுத்தாள்.
புன்னகை மாறாத திருலோச்சன் ""நீதான் வந்து விட்டாயே! இனிமேல் எல்லாம் சரியாகி விடும். என் கண்மணி அபிலாஷா எப்படி இருக்கிறாள்? பிதாஜிக்கு என்ன சமாசாரம் தெரிவித்தாள்?'' என்று அடுக்கிக் கொண்டே போனார். ரயிலில் வரும் போதே தயாரித்து வைத்திருந்த பதில்களை அள்ளி வீசினாள்
அம்ருத். தாய் என்றாலே ஒரு திரையாக நின்று, நாலு சுவருக்குள்ளே நடக்கும் அவலங்களை வெளியே விடாமல், மலர்ந்த முகத்துடன் பாதுகாத்துச் சொல்ல வேண்டியவள் அல்லவா? அவளுக்குள்ள மனத் திண்மையும், உரமும் ஓர் ஆண் மகனுக்கு உண்டா
என்பது சந்தேகம்!
""சுநோ ஜி, அபிலாஷா வாங்கி அனுப்பிய விதவிதமான துணிகளும் நகைகளும், நான் ரயிலில் வரும் போது பெட்டியோடு களவு போய்விட்டது. குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு, பணத்தை சிக்கனம் பிடித்து, அவற்றையெல்லாம் எவ்வளவு அருமையாகப் பார்த்து வாங்கினாள் தெரியுமா? எதற்கும் கொடுப்பினை வேண்டாமா? களவு போன விஷயம் தெரிந்தால் நெஞ்சம் உடைந்து போவாள். உங்கள் மருந்துச் செலவிற்காகக் கொடுத்த ரூபாய் ஆயிரமும் அப்பெட்டியோடு போய் விட்டது. நான்
தீர்மானித்து விட்டேன். இது விஷயம் கண்மணி அபிலாஷாவுக்கு தெரியவே கூடாது. அவள் இங்கு வருவதற்குள், நான் மறுபடியும் தையல் வேலையை ஏற்றுக் கொண்டு, அதே மாதிரி துணிமணிகளை வாங்கி விடுகிறேன். ஆயிரம் ரூபாயும் சேர்த்து விடுகிறேன். அதுவரை எனக்கு ஓய்ச்சல் ஒழிவு கிடையாது. பாவம்! குழந்தை இத்தனைச் சம்பாதிக்கிறாளே ஒழிய, தனக்கென்று ஒன்றுமே செய்து கொள்ளவில்லை. இனிமேல் பணம் அனுப்பக் கூடாது என்று சொல்லி விட்டுத்தான் வந்தேன். ஒரே பிடிவாதமாக நாம் எல்லாரும் அவளிடம் வந்துவிட வேண்டும் என்கிறாள். பாதி படிப்பில் குழந்தைகளை அங்கு சேர்த்தால், உடனே அவளுக்கு மாற்றல் ஆகிவிட்டால் என்ன செய்வது? பண விரயம் தான் மிச்சம்! குல்தீப் எஸ். எஸ். எல். சி.
முடித்ததும் வருகிறோம் என்று ரொம்பவும் மன்றாடிச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். ஆகையால் நீங்கள் யாவரும் சமத்தாக இருக்க வேண்டும்'' என்று ஒரே மூச்சில் கொட்டித் தீர்த்தாள் அம்ருத்.
இவள் அளப்பை ஊரும் நம்பியது!
பழையபடி ஆர்டர்கள் வந்து குவிந்தன. வீட்டில் பழைய கலகலப்பு தோன்ற ஆரம்பித்தது. அந்தச் சுதாரிப்பிலே இதயத்தின் அடியிலே கண்ட வலி அம்ருத்துக்கு இலேசாக மறைய ஆரம்பித்தது.
ஒரு நாள் திடீரென தந்தி வந்தது அபிலாஷாவிட
மிருந்து, "அவளை அம்ருதசரசுக்கு மாற்றி இருக்கிறார்களாம். ஆகையால் மாவை உடனே அம்ருதசரசுக்கு அனுப்ப வேண்டும்' என்று.
தந்தி வந்ததிலிருந்து குழந்தைகளுக்கு ஒரே குஷி! தாங்களும் உடன் வருவோம் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அம்ருத் என்ன செய்வாள் பாவம்?
அன்றிரவு குழந்தைகள் யாவரும் தூங்கிய பின் குலுங்க குலுங்க அழுது கொண்டே விஷயத்தை விண்டுரைத்தாள் திருலோச்சனிடம். ஆறுதலாக அணைத்துக் கொண்டே அவர் கூறினார்:
""என் இனியவளே, குழந்தைகளின் இன்பக் கனவைக் கலைத்து விடாதே! இந்த இன்பச் செழிப்பிலே அவர்கள் வளர்ந்து ஓங்கட்டும். அவர்களிடம் தகுந்த சமாதானம் சொல்லி அவர்களை இங்கேயே இருத்திக் கொள்வது என் பொறுப்பு, அம்ருத், ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள். இந்த நொண்டித் தையல்காரனுக்கு, இந்த ஏழை தையல்காரியின் துணை என்றென்றுமே தேவை! ஆம், அம்ருத் என்னை நம்பு! உன் அன்புத் துணை இல்லாமல் என்னால் இவ்வுலகில் ஒரு நிமிஷம்கூட வாழ முடியாது. நீ ஒன்றுக்கும் கலங்கி மனமுடைந்து விடாதே. குல்தீபும், அம்ருதும் பெரியவர்களானதும் அபிலாஷாவைப் போல நம்மைப் புறக்கணிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? நம் பொறுப்புகளையும், சுமைகளையும் அபிலாஷா ஏற்றுக் கொண்டு, நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது ரொம்பவும் முட்டாள்தனமான செயல். ஆகையால் மனம் தளர்ந்து விடாதே! உன் துணையும், உன் ஆதரவும் உன் அன்பான பணிவிடைகளும், ரொம்பவும் தேவைப்பட்ட ஓர் ஆத்மா இங்கு ஏங்கிக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் இருத்திக் கொண்டு, சீக்கிரமே அங்கு வீட்டை "செட் அப்' பண்ணி விட்டுத் திரும்பி விடு. குழந்தை அபிலாஷாவுக்கு என் அன்பைத் தெரிவி. வேறு என்ன செய்ய முடியும் இந்த நொண்டித் தையல்காரனால்?'' என்று ரொம்பவும் ஆறுதல் கூறி வழி அனுப்பி வைத்தார்.
இம்முறை அவள் கல்னாவிலிருந்து புறப்பட்ட போது குழந்தைகள் ரொம்பவும் ஆரோக்கியமாகவே இருந்தார்கள். கணிசமான தொகை பாங்கிலும் போட்டிருந்தாள். ஆகையால் அவள் வரும் வரை வீட்டில் வறுமை இராது. அன்புக் கணவனையும் ஆதரவான குழந்தைகளையும் பிரிய மனமில்லாமல் பயணமானாள்.
பிராண்டியர் மெயில் அம்ருதசரசை அடைந்த போது காலை மணி ஆறு, ஸ்டேஷனுக்கு யாரும் வரவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரை அணுகி, தான் யார் என்பதை மிகவும் தயக்கத்துடன் தெரிவித்து. கமிஷனரின் பங்களாவிற்குப் போன் செய்து, தான் வந்திருக்கும் விவரத்தைத் தெரிவித்து, தன்னை அழைத்துப் போக கார் அனுப்புமாறு கேட்டுக் கொண்டாதகச் சொல்லச்
சொன்னாள்.
கமிஷனர் "மேம் சாப்' ஒன்பது மணிக்கு ஸ்டேஷனுக்கு வருவதாய் பதில் வந்தது.
"என்ன இருந்தாலும் என் குழந்தைக்கு என்னிடம் எவ்வளவு பிரியம்! இத்தனை வேலைகளுக்கு நடுவே என்னை அழைத்துப் போக நேரில் வருகிறாளே! என்ன இருந்தாலும் என் மகள் அல்லவா!' என்று பொங்கிப் பூரித்துப் போனாள் அம்ருத்.
சரியாக ஒன்பது மணிக்கு டவாலி பின்தொடர வந்தாள் கமிஷனர் மேம் சாப்.
ஸ்டேஷனில் உள்ள எல்லாரும் எழுந்து கைக்கட்டி நின்று மரியாதை செய்தனர். மகளை வரவேற்க வெயிட்டிங் ரூம் வாயிலை அடைந்தாள் அம்ருத். அதற்குள் விடுவிடென்று அறை வாசலை கடந்து. நேரே எதிர் திசையிலிருந்து வரும் ரயிலை நோக்கி நடந்தாள் அபிலாஷா.
ரயில் வந்தது. "ஏர் கண்டிஷன்' கோச்சிலிருந்து இறங்கினார்கள். கமலும், அவள் தாயும். பழைய பூரிப்பும், ஜொலிப்பும் சற்றும் குறையாமல் விந்தி விந்தி நடக்கும் கமலின் தாயை தோளை அணைத்தவாறு மிகவும் ஆதூரத்துடன், மெதுவாக அழைத்து வந்தாள் அபிலாஷா. "வெயிட்டிங் ரூம்' வாயிலைக் கடக்கும்போது ""டார்லிங்! என்னால் உனக்கு எவ்வளவு சிரமம்?'' என்று கமலின் தாய் கூற, ""ஓ, நோ ஆண்டிஜி, நீங்கள் என் அம்மா மாதிரி'' என்று
அபிலாஷா கூறியது துல்லியமாக அம்ருத் காதில் விழுந்தது. அறை வாசலிலேயே கல்லாய்ச் சமைந்து நின்ற தாயின் பார்வையும், மகளின் பார்வையும் ஒரு நிமிடம் கலந்து பிரிந்தன!
கூட்டம் காரை நோக்கிச் சென்றது. ஒரு வேளை குழந்தை தன்னைச் சரியாகக் கவனிக்க வில்லையோ என்ற சந்தேகத்துடன் கையில் பெட்டியுடன் காரை நோக்கி அம்ருத் விரைந்தாள். கார் கிளம்ப ரெடியாயிற்று. டிரைவர் சீட்டில் அபிலாஷா; அவள் பக்கத்தில் கமலின் தாயும் கமலும்.
""அபிலாஷா பேட்டி! இதோ நானும் வந்து விட்டேன்'' என்று கூறிக் கொண்டே காரின் பின் கதவைத் திறக்கப் போனாள் அம்ருத். சட்டென்று திரும்பினாள் அபிலாஷா. அந்த அளவுக்கு வெறுப்பை உமிழும் அந்தத் தீட்சண்யமான பார்வையைச் சந்திக்க முடியாமல் தகித்துப் போனாள் அந்த அன்புத் தாய்!
""குல், இந்த அம்மாவை பஸ்ஸில் ஏறி பங்களாவிற்கு வரச் சொல்'' என்று கன அலட்சியமாக தன் டவாலிக்கு உத்தரவு பிறப்பித்து விட்டு, காரை ஸ்டார்ட் செய்தாள் அபிலாஷா.
கல்னாவுக்குத் திரும்புவதற்காக அமிருதசரஸ் ஸ்டேஷனில் அடுத்த ரயிலுக்காக காத்திருக்கிறாள் அந்தத் தாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com