எனது முதல் சந்திப்பு - 6

எனது முதல் சந்திப்பு - 6

உள்ளத்தில் உருவகமாகும் கனவுகளை அனுபவித்து அதிலேயே ஐக்கியமாகிறவன்தான் உண்மையான கவி. அகராதிகளைப் புரட்டி வார்த்தைகளைப் பொறுக்கிப் போட்டு எழுதுகிறவர்களும் கவிகள் என்றுதான்

பாரதியார்

உள்ளத்தில் உருவகமாகும் கனவுகளை அனுபவித்து அதிலேயே ஐக்கியமாகிறவன்தான் உண்மையான கவி. அகராதிகளைப் புரட்டி வார்த்தைகளைப் பொறுக்கிப் போட்டு எழுதுகிறவர்களும் கவிகள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மைக்கவிகள் அல்ல. எனவே உண்மைக் கவிகளைப் பார்க்கும் போது இவர் என்ன துறவியைப் போல் இருக்கிறாரே என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள். அதாவது சாதாரண மக்களின் சம்பிரதாயங்களைப் பற்றி உண்மைக் கவிகளுக்குக் கவலையில்லை. தங்கள் கற்பனை உலகத்திலேயே அவர்கள் எப்பொழுதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்.

இது காலஞ்சென்ற கவியரசர் சுப்பிரமணிய பாரதியாரிடம் எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருந்தது. வருகின்ற பாரதத்தை அவர் வாழ்த்தும் பாட்டில் "ஏறுபோல் நடையினாய் வா வா' என்று கூறினார். அதையேதான் அவர் செய்கையிலும் காட்டினார். சிப்பாய் மாதிரி நிமிர்ந்துதான் நடப்பார். வலப்பக்கமோ இடப்பக்கமோ திரும்ப வேண்டுமானால் ரைட்டர்ன் லெப்டர்ன் போட்டு எப்படிச் சிப்பாய்கள் திரும்புவார்களோ, அம்மாதிரியேதான் திரும்புவார். சிப்பாய்கள் அம்மாதிரி நடந்தால் அது வேடிக்கையல்ல. ஆனால் மற்றவர்கள் அப்படி நடந்தால் அது வேடிக்கையாகத்தானே இருக்கும்? அதனால் அம்மாதிரி பாரதியார் நடந்து போவதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள். பாரதியார் தமது சிந்தனை உலகில், கவி உலகில் லயித்து ஒன்றுபட்டுப் போய்விட்டதால், பாரத நாட்டார் எப்படி நடக்க வேண்டுமென்று அவர் கனவு கண்டாரோ அம்மாதிரியே தான் அவர் நடத்தையில் காட்டுகிறார் என்பது மற்றவர்களுக்கு எப்படிப் புரிய போகிறது? அதனால் அவர் ஓர் அதிசய மனிதராக மற்றவர்களுக்குத் தோன்றி வந்தார்.

1919-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தான் முதன் முதலில் நான் பாரதியைப் பார்த்தேன். அச்சமயம் நான் அவர் புதுச்சேரியை விட்டு வெளியே வந்தார். எனது சகோதரரும் அவரும் நண்பர்களானபடியால் புதுச்சேரியை விட்டுப் பாரதியார் வெளியே வந்ததும், சில தினங்கள் எங்கள் வீட்டில் வந்து தங்கினார். பாரதியார் புதுச்சேரியில் இருந்தபோது எழுதி வந்த கதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் ஒழுங்காய்ப் படித்து வந்தேன். அவர் நடத்தி வந்த "இந்தியா' என்ற பத்திரிகையில் பிரசுரமான கார்ட்டூன்கள் என் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. பாரதியாரின் பெருமையைப் பற்றிப் பூர்ணமாய் அறியக் கூடிய வயது எனக்கு அச்சமயம் இல்லை. ஆனால் அவர் ஒரு பெரிய தேசபக்தர், புரட்சி வீரர் என்ற முறையிலேயே அச்சமயம் அவரைக் கருதினேன். எனக்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுக்கும்படி கேட்டேன். மறு பேச்சு பேசாமல் ஒரு காகிதத்தை எடுத்து தமது மணி மணியான எழுத்துக்களில் ""ஜெயமுண்டு பயமில்லை மனமே'' என்ற பாட்டை எழுதிக் கொடுத்தார். எதற்காகஅந்தப் பாட்டை தேர்ந்தெடுத்தார் என்பதை நான் கேட்கவில்லை. ஒரு வேளை அச்சமயம் என் வயதில் அந்தப் பாட்டுத்தான் எனக்கு அவசியம் என்று அவர் நினைத்திருக்கலாம்.

ஒரு நாள் எனது சகோதரர் தமது குழந்தையை பாரதியார் மடி மீது வைத்து ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டார். பாரதியார் உடனே ""கொட்டடா ஜெயபேரிகை கொட்டடா'' என்ற பாட்டைப் பாடினார். எந்தப் பாட்டையும் பாதியார் உச்ச ஸ்தாயியில்தான் பாடுவார். அப்படியிருந்தும் நல்ல வேளையாக பாட்டு முடிகிற வரையில் குழந்தை அழவில்லை. குழந்தை எந்த வழியில் வளர வேண்டும். அதன் உள்ளத்தில் என்னென்ன பதிய வேண்டும் என்று பாரதியின் கவிதா உள்ளம் சொல்லுகிறதோ, அது உடனே வெளிப்படுகிறது. நாம் சொல்லுவது குழந்தைக்குப் புரியுமா என்பதைப் பற்றி அவருக்கு கவலையில்லை. குழந்தைக்கு எது அவசியம் என்று அவர் நினைக்கிறாரோ அதைச் சொல்லியாக வேண்டும். அங்கேதான் கற்பனையில் சதா லயித்திருக்கும் உண்மை கவியைப் பார்க்கிறோம்.

பாரதியார் தம்மோடு ஒரு வேலைக்காரப் பையனையும் அழைத்து வந்திருந்தார். அவன் சொந்தப் பெயர் என்ன என்பது எனக்கு ஞாபகம் இல்லை. பாரதியார் அவனுக்குச் "சமத்துவம்' என்று பெயரிட்டு இருந்தார். ஒரு நாள் எங்கள் வீட்டில் பாரதியாரும் சில நண்பர்களும் பேசிக் கொண்டு இருந்தார்கள். எல்லாரும் நாற்காலிகளில் அமர்ந்து இருந்தார்கள். சமத்துவம் ஏதோ வேலையாய்ப் போய்விட்டுத் திரும்பியவன் கீழே உட்கார்ந்தான். பாரதியார் அவனைப் பார்த்தார். ""அடே சமத்துவம் நாற்காலியில் உட்கார்'' என்றார். அவன் நாற்காலியில் உட்காரத் துணியவில்லை. நடுங்கினான். பாரதி எழுந்து அவனைத் தூக்கி நாற்காலியில் உட்கார வைத்தார். அவர் அப்படிச் செய்தது மற்றவர்களுக்கு வேடிக்கையாய்த் தோன்றலாம். ஆனால், தமது கற்பனை உலகில் எப்பொழுதுமே லயித்துப் போயிருந்த பாரதிக்கு அப்படித் தோன்றவில்லை. சமத்துவத்தை உருவகப்படுத்திய அவருடைய கவிதை உள்ளம் எல்லாருக்கும் எல்லா இடத்திலேயும் சமத்துவத்தையே கண்டது.

"ஸ்டார் கம்பெனி' என்ற பெயரோடு நான் ஒரு கடை நடத்தி வந்தேன். ஒரு நாள் என் கடைக்கு வந்து அங்குள்ள சரக்குகளைப் பாரதியார் பார்வையிட்டார். துணிகளைப் பார்த்தபோது, ""தம்பீ இந்தத் துணியில் கோட் தைத்தால் எனக்கு நன்றாய் இருக்கும்'' என்றார். ""எதில் வேண்டுமானாலும் தைத்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லித் தையற்காரனைக் கூப்பிட்டுத் தைக்கும்படி சொன்னேன். அந்தக் கோட்டுகள் தென்காசியை விட்டு அவர் புறப்படுகிற வரையிலாவது அவரிடம் இருந்தனவா என்பது தெரியாது. அவர் சுபாவம் அப்படி. யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார். என் கடையில் அன்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயம்சொன்னார். ""தம்பீ எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும்'' என்று சொன்னார். ""எதற்காக?'' என்று கேட்டேன். ""எனது கவிதைகளை அச்சிட்டுப் புத்தகமாகப் போட வேண்டும்'' என்று சொன்னார்.

நான்: அதற்கு அவ்வளவு பணம் செலவாகுமா?

பாரதியார்: உனக்குத் தெரியாது தம்பீ. உலகத்திலேயே அமெரிக்காவில்தான் சிறந்த முறையில்அச்சிடுகிறார்கள்.

நான்: அப்படியே இருந்தாலும் அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டியிருக்குமா?
பாரதியார்: 50 ஆயிரம் ரூபாய் அச்சுக் கூலி. இன்னும் 50 ஆயிரம் சித்திரக்காரனுக்கு.

நான்: சித்திரக்காரன் எதற்கு?

பாரதியார்: என் பாட்டுகளுக்குச் சித்திரம் போட அன்று அவர் சொன்னது என் மனத்தில் பதிந்து போய்விட்டது. நான் பத்திரிகை உலகிற்கு வந்த பின்பு பாரதியார் பாடல்களுக்கு எப்படியாவது சித்திரம் போட வேண்டும் என்று நினைத்தேன். 1925-ஆம் ஆண்டு பிரசுரமான "தமிழ்நாடு' பொங்கல்மலரில் பாரதியார் பாட்டுகள் சிலவற்றிற்குச்சித்திரங்கள் போட ஏற்பாடு செய்தேன். அதற்குப் பின்னால் தமிழ்நாட்டில் அந்த முறை வேகமாய்ப் பரவிவிட்டது. அதைப் பார்ப்பதற்கு பாரதியார் உயிரோடு இல்லாவிட்டாலும் அவருடைய ஆத்மா திருப்தி அடையுமென்று நினைக்கிறேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com