சொன்னால் நம்பமாட்டீர்கள் ! - 11

நான் காசியில் தலைமறைவாக இருக்கும்போது தேவகோட்டையில் என் இல்லத்தில் என் பெரிய தந்தையார் புதல்வர் பழ. லெட்சுமணனுக்குத் திருமணம் நடந்தது. அத்திருமணத்திற்குக் கண்டிப்பாக நான் வருவேன் என்று
சொன்னால் நம்பமாட்டீர்கள் ! - 11

சுயராஜ்யம் வாங்கியாச்சா?

நான் காசியில் தலைமறைவாக இருக்கும்போது தேவகோட்டையில் என் இல்லத்தில் என் பெரிய தந்தையார் புதல்வர் பழ. லெட்சுமணனுக்குத் திருமணம் நடந்தது. அத்திருமணத்திற்குக் கண்டிப்பாக நான் வருவேன் என்று போலீஸார் நினைத்து திருமணத்தன்று ஏராளமான போலீஸாருடன் இன்ஸ்பெக்டர் வீராசாமி ஐயர், திருமண வீட்டிற்குள் நுழைந்தார். ஏராளமான பிரமுகர்களும், சொந்தக்காரர்களும் நிறைந்திருந்த திருமணப் பந்தல் போலீûஸக் கண்டதும் குழம்பிவிட்டது. போலீஸார் எல்லோரையும் விரட்டி அடித்ததோடு, சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்து, சாப்பாட்டை நாசம் செய்து, பல இடங்களிலும் என்னைத் தேடி இருக்கிறார்கள். அப்போது என் பெரிய தந்தையார், எனது தந்தையார் அனைவரும் போலீஸாரால் அடிக்கப்பட்டனர்.

அச்சமயம் என் தாயார் அங்கு வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களைப் பார்த்து ""ஐயா, நீங்கள் தேடி வந்த பையன் என் மகன்தான். அவனுக்காக மற்றவர்களை அடிக்காதீர்கள். என்னை அடியுங்கள்; நான்தான் அவன் தாய்'' என்று உருக்கமாகச் சொல்ல; உடனே இன்ஸ்பெக்டர், ""இன்னும் பத்து நாட்களில் அவனைக் கொண்டு வந்து போலீஸில் ஒப்படைக்காவிட்டால் உங்கள் அனைவரையும் லாக்கப்பில் தள்ளி இந்த வீட்டையும் தீ வைத்துக் கொளுத்தி விடுவேன்'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

உடனே பதறிப் போய் தேவகோட்டையில் இருந்து ஒரு நண்பர் காசிக்கு நேராகப் புறப்பட்டு வந்து என்னிடம் விவரத்தைச் சொன்னார்.

என்னால் எனது உறவினர்களும், தாய் தந்தையர்களும் பட்ட சிரமங்களை எண்ணி மிகவும் மனம் வருந்தினேன். நாம் செய்த காரியத்திற்குத் தண்டனையை மற்றவர்கள் அனுபவிப்பது தவறு என்று எனக்குத் தோன்றியது. ஆங்கில அரசாங்கம் என்ன தண்டனை கொடுத்தாலும் பெற்றுக்கொள்வது, உறவினர்களையும் தாய் தந்தையர்களையும் காப்பாற்றுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆகவே ஒரு நிமிடம் கூட காசியில் தாமதியாமல் அங்கு இருந்து நேராகப் புறப்பட்டு என்னைக் கூப்பிட வந்த நண்பருடன் தேவகோட்டை வந்து சேர்ந்தேன்.

தேவகோட்டையில் என்னை ஒரு வீட்டில் தலைமறைவாகக் கொண்டு போய் வைத்தார்கள். இரவு 8 மணிக்குமேல் எனது நெருங்கிய உறவினர்களில் பலரும் ஊரின் முக்கிய பிரமுகர்களும், நான் தலைமறைவாக இருந்த வீட்டிற்கு வந்தார்கள்.

என் தாயார் என்னைப் பார்த்ததும் கதறி அழுதார். எல்லோருமாகக் கூடி மறுநாள் காலையில் என்னைப் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்பது என்று முடிவு செய்தார்கள்.

அப்போது ஊரின் முக்கிய பிரமுகர் ஒருவர், ""ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைக்கும்போது தம்பி கதர் கட்டாமல் மில் துணியை அணிந்து கொண்டு
வந்தால் நல்லது. கதரைக் கண்டால் இன்ஸ்பெக்டருக்கு கோபம் வரும். நம் கண் முன்னே தம்பியைப் போட்டு அடிப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அதனால் மில் துணியை அணிவதுதான் இந்த நேரத்திற்குச் சரியாக இருக்கும்'' என்று சொன்னார்.

நான் சொன்னேன்: ""தயவு செய்து மன்னித்து விடுங்கள். இன்று நான் அடிவாங்குவதற்குப் பயந்து கதரை மாற்றி மில் துணியை அணிந்தால், என் பேச்சைக் கேட்டு ஆயிரக்கணக்கான பேர் கதர் கட்டி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு போலீஸ்காரர்களிடம் அடிபட்டார்களே, அவர்கள் அனைவரும் என்னைத் "துரோகி' என்று சொல்லமாட்டார்களா? இன்றைக்கு நான் தப்பிக்கலாம். நாளை என் பிள்ளைகள் தெருவில் போகும்போது இதோ போகிறார்களே அவர்கள்தான் அந்தத் துரோகியின் பிள்ளைகள் என்று பெயர் வராதா? அந்தக் களங்கத்தை என் சந்ததியாருக்கு ஏற்படுத்திக் கொடுக்க நான் விரும்பவில்லை. அடிபட்டாலும் உதைபட்டாலும் சாக நேரிட்டாலும் கதர் துணியுடன்தான் சாவேன். நான் இறந்த பிறகு கதர் கொடியையே எனது சடலத்திற்குப் போர்த்த உபயோகப்படுத்த வேண்டும், என்பதே என் விருப்பம்'' என்று நான் சொன்னேன்.

என் தந்தையார் ""அவனைக் கட்டாயப்படுத்த வேண்டாம். அவன் ஓர் உயர்ந்த லட்சியத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுவிட்டான். உயர்ந்தவன் உயர்ந்தவனாகவே இருக்கட்டும்'' என்று கூறியதும் எனக்கு மெய்சிலிர்த்தது. மிகப் பயந்த குணம் உடைய என் தந்தையாருடைய உள்ளத்தில் அப்படியொரு உறுதியான உணர்ச்சி ஏற்பட்டது எனக்கு வியப்பாக இருந்தது.

என்னால் சிரமப்பட்ட  உறவினர்களிடம் என்னை மன்னிக்கும்படி நான் கேட்டுக்கொண்டபோது அவர்கள் அனைவரும் தங்கள் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ""எல்லாம் விதிப்படி நடக்கிறது, அதற்கு நீ என்ன செய்ய முடியும்'' என்று தத்துவம் பேசி என்னைச் சமாதானப்படுத்தினார்கள்.

மறுநாள் நான் வாங்கப் போகும் அடி உதை இவைகளைப் பற்றியே என் உறவினர்கள் அனைவரும் கவலைப்பட்டதாகத் தெரிந்தது. நான் சிறிதும் கவலைப்படவில்லை. என் கண்முன்னேயே என்னைக் காப்பாற்றப் பலபேர் துப்பாக்கி குண்டுபட்டு இறந்து, என் மீது சாய்ந்து தங்கள் இரத்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தது போல் என் உடம்பெல்லாம் இரத்தத்தைத் தெளித்து அமரநிலை அடைந்த காட்சி என் மனக்கண் முன் நின்று கொண்டே இருந்தது. இவ்வளவு மாபெரும் தியாகத்திற்கு முன்னால் ஏதோ சில அடி உதைகள் என் உடம்பில் படுவது ஒரு சாதாரண தூசிக்குச் சமம் என்ற உறுதியான எண்ண அலைகள் என் உள்ளத்தில் மோதிக்கொண்டு இருந்தன.

மறுநாள் காலை ஊர் பிரமுகர்கள் 5 பேர் வந்து என்னைத் தேவகோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இருப்பதைப் பார்த்து மேற்படி ஐவரும் மேல் துண்டை (அங்கவஸ்திரம்) எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு பய பக்தியுடன் இன்ஸ்பெக்டருக்கு முன்னால் போய் நின்றார்கள்.

இன்ஸ்பெக்டர் வீராசாமி ஐயர் என்ன விஷயம் என்று அதிகாரத் தோரணையில் கேட்டார்.

""பையனைக் கொண்டு வந்திருக்கிறோம்'' என்று பிரமுகர்கள் பவ்யமாகச் சொன்னார்கள்.

""வந்துட்டானா? எங்கே அவன்?'' என்ற மிரட்டல் சத்தம் கொடுத்து கொண்டு இருக்கும்போது நான் அவர் பார்க்கும்படியாக முன்னால் வந்து நின்றேன்.

""டேய் சுயராச்சியம் வாங்கிவிட்டாயா?'' என்று ஒரு உறுமல் உறுமினார்.

நான் சமாளித்துக் கொண்டு ""இன்ஸ்பெக்டர் சார், நீங்களும் எங்களுடன் சேர்ந்து ஒத்துழைத்தால்தான் சுயராச்சியம் கிடைக்கும் போல் இருக்கிறது'' என்று சொன்னேன். இன்ஸ்பெக்டர் கடகட என்று சிரித்து ""அப்படிச் சொல்லு, சரியாகச் சொன்னாய், நீதாண்டா உண்மையான காங்கிரஸ்காரன். எங்க ஒத்துழைப்பு இல்லை என்றால் வெள்ளைக்காரனை நாட்டை விட்டு விரட்ட முடியுமா? இது பலபேருக்குத் தெரியவில்லை. உனக்குத் தெரிந்திருக்கிறது'' என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும் ""இதுதான் என்னுடைய அனுபவம்'' என்று நான் சொன்னேன்.

இன்ஸ்பெக்டருக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. வந்திருந்த ஊர் பிரமுகர்கள் அனைவரையும் பார்த்து,  ""நீங்கள் எல்லோரும் போகலாம்'' என்று உத்தரவு கொடுத்தார்.

அவர்கள் அனைவரும் புறப்பட்டனர்.

சொன்னால் நம்பமாட்டீர்கள்.

இன்ஸ்பெக்டர் ஒரு போலீஸ் காவலரைப் பார்த்து ""டே 403 உடனே போய் எங்கள் இருவருக்கும் காபி வாங்கிக் கொண்டு வா'' என்று சொன்னார்.

இதைக் காதில் கேட்டுக்கொண்டு ஊர் பிரமுகர்கள் மகிழ்ச்சியாகச் சென்றார்கள்.

காபி வந்ததும் இன்ஸ்பெக்டர் என்னை காபி சாப்பிடச் சொன்னார். அதன் பின்னர்,  என்னை ஸ்டேஷனில் உள்ள லாக்கப்பில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

 - தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com