கரைந்தது

'பட, பட'..."டப, டப' என்று பெரும் சத்தத்துடன் டூவீலரில் பிற்பகல் மூன்று மணிக்கு சொன்னபடி, சார் சரியாக வந்துவிட்டார். "சட சட' வென்று கூடவே பெருமழையும் பிடித்துக் கொண்டது. காம்பெளண்டில் நுழைந்து
கரைந்தது

'பட, பட'..."டப, டப' என்று பெரும் சத்தத்துடன் டூவீலரில் பிற்பகல் மூன்று மணிக்கு சொன்னபடி, சார் சரியாக வந்துவிட்டார். "சட சட' வென்று கூடவே பெருமழையும் பிடித்துக் கொண்டது. காம்பெளண்டில் நுழைந்து போர்டிகோவில் வந்து வண்டி நிற்பதற்குள் சார் தொப்பலாகி இருந்தார்.
"ஐயோ, நனைஞ்சிட்டீங்களே சார்?''" அமலா விரைந்து வந்து அவர் தலைக்கு மேலே விரித்தக் குடையைப் பிடித்தாள். " 
"பாத்து நிக்றீங்களேடா தடிப்பசங்களா, சார் கைப் பெட்டிய வாங்குங்கடா''" என்று தன் மகன்களை விரட்டினாள்.
"போர்டிகோல மழை இல்லம்மா. நீ குடைப் பிடிக்கிறது வேஸ்ட். குடைக் கம்பியால சார் கண்ணைக் குத்திடப் போற'' என்றான் ஒரு 
சிறுவன்.
மற்றொரு சிறுவன், சார் கை ப்ரீஃபை வாங்கிக் கொண்டு, "வாங்க''" என்று படி ஏறினான்.
"ஆபீஸ் ரூம்' என்று போர்டு போட்டிருந்த அறையில் நுழைந்தார் சார். ஒற்றை மேசை புதிய மேசை விரிப்புடன். எக்சிக்யூடிவ் குஷன் சுழல் நாற்காலி.
"இது நமக்கு சப்ளை உண்டா அமலா?''"
"கிடையாதுங்க, ஐயா கணக்குப் பாக்க வர்றீங்கன்னு எதிர் மரவாடிலேந்து இரவல் வாங்கிப் போட்டேன், உக்காருங்க ஐயா''" அமலா ஃபேன் சுவிட்சைத் தட்டினாள்.
சார் அமர்ந்ததும் ஒரு பூத்துவாலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. "
"முதல்ல தலை ஈரத்தத் துவட்டுங்கய்யா, காய்ச்சல் வந்திரப் போவுது''
கண்ணாடியும், சீப்பும் மேசை மீது வைக்கப்பட்டது. "
"பவுடரும் வேணுமா ஐயா?''"
"வணக்கம் சாரு''" கும்பிட்டபடி இரு பெண்கள் வந்தனர். அந்தக் கால சிரிப்பு நடிகைகள் அங்க
முத்து, முத்துலட்சுமி மாதிரி உடல் அமைப்பு. "
"சமையல் சதுர்ப்புஜம், வாட்சுமேன் செந்தாமரை''" என்றாள் அமலா.
மேசைமீது பீங்கான் தட்டில் வறுத்த கார முந்திரி, பிஸ்கட்ஸ், பால்கோவா, கண்ணாடித் தம்ளரில்
குடிநீர்.
"எடுத்துக்குங்க ஐயா''" என்றாள் அமலா பற்
களைக் காட்டி.
"இதெல்லாம் ஏன் ?''" என்றார் சார்.
"முதமுத எங்க ஹாஸ்டலுக்கு கணக்குப் பரிசோதிக்க ஆபீசர் வந்திருக்கீங்க. அந்த சந்
தோசம்''"
"அப்ப அடுத்த மாசம் நான் வரும்போது ஒண்ணும் கிடையாது?''"
"அப்படி விட்ருவமா ஐயா... அப்பவும் 
செய்வம்''"
சிறுவன் ஒருவன் காபி ஃபிளாஸ்கை சற்று ஒதுப்புற ஸ்டூலில் வைத்தான். கப் அண்டு சாசரையும் தயாராக.
சார் சுற்று முற்றும் பார்த்தார்.
"என்னங்க ஐயா, சிகரெட் புடிக்கணுமா? ஒங்கள்து என்னா பிராண்டு? ஒரு பாக்கெட் வாங்கியாரச் சொல்லவா? கதவை மூடிக்குங்க. நாங்க வேணுனா வெளில இருக்கோம்''"
"இல்ல வந்து... லேடீஸ் ஹாஸ்டலுக்கு ஆம்பளைங்க வந்தா இதான் கஷ்டம்''"
" ஓ, டாய்லட் போகணுங்களா! ஒரு கஸ்டமும் இல்லீங்க. ஏ... செந்தாமரை, எல்லாப் பொண்ணுங்களையும் அவங்க அவங்க ரூம்ல கதவை மூடிக்கிட்டு இருக்கச் சொல்லு. யாரும் வெளிலத் தலை காட்டக் கூடாது. நீங்க போங்க ஐயா, அந்தக் கடைசீல சமையலறையை ஒட்டி இருக்குது''" என்றாள் அமலா. 
சார் எழுந்து நடந்தார். சில அறைகளின் ஒருக்களித்த கதவு வழியே கயிற்றுக் கொடி
களில் தொங்கிய சுடிதார், தாவணி தெரிந்தது. தரையில் சுவர் ஓரம் தகரப் பெட்டிகள், பாய்கள், சில பெண்கள் படுத்தபடி கதைப் புத்தகம் படித்தபடி சில அறைகளில் ரேடியோவில் சினிமாப் பாட்டு.
"யாரோ அக்கவுண்ட்ஸ் ஆபீசராண்டி வறுத்த முந்திரி திங்க வந்திருக்காரு''"
"நாமும் போனா இந்த மாதிரி முந்திரி திங்கற வேலைக்குத் தாண்டி போகணும்''"
"ஹிஹ்ஹிஹீ!''"
"ஷ்! பாக்கறாண்டி இந்த பக்கம்''"
"எல்லா ஆம்பளைங்களும் திருடனுங்க. பொம்பளைங்கப் பக்கம் "ஓ'"னுப் பாப்
பானுங்க!
பல அறைகள். சாதா சிமெண்ட் நீள நடை கூடத்தின் முடிவில் முற்றம். அடுத்து சமையல் அறை. பாத்ரூம், டாய்லட்கள், மழை வேறு பெய்திருந்ததில் தண்ணீர் தேங்கி பாசியுடன் குண்டும் குழியுமாக சமையல் மற்றும் சாப்பாட்டுக் கூடம், கோட்டை அடுப்பு "பக பக' என்று எரிந்தது. ஏற்றப்பட்ட பெரிய குண்டான்கள்.
"ராத்ரிக்கு இட்லியா?''"
"ஆமாங்க சார், நீங்க காலை ஊனிப்போங்க, வழுக்கி விட்ரப் போவுது''" செந்தாமரை 
பல்லைக் காட்டினாள்.
அவர் ஓர் அறையில் நுழைந்து வெளிப்பட்டதும், "கும்பிட்றேனுங்க ஐயா!''" என்றாள் ஒருத்தி, கக்கத்தில் இடுக்கிய துடைப்பத்துடன், சேலை, பாவாடையைத் தூக்கி செருகி.
"ஐயா, நா இங்க கூட்டிங்க, என் சம்பளத்தக் கூட்டணும்க. ஆரம்பத்துலக் குடுத்த தொளாயிரம் ரூவா சம்பளம் இன்னும் போடுறாங்க, மத்த ஆஸ்டல்கள்ல ரெண்டாயிரம், ஐயா மனசு வெக்கோணும், எனக்கு ஆறு வர்ச சம்பள உயர்வுப் பாக்கி வந்தா என் மவ கண்ணாலம் முடிப்பேனுங்கோ''"
"இந்தா, வாருகோலக் கீழப் போடு! ஐயாவாண்ட எங்க தான் முறையீடு செய்யறதுன்னு முறை இல்லியா? கலெக்டர் ஆபீஸ்ல, ஐயா, ரூம்புலப் போய் மனுக்குடுப்பியா''" என்றாள் சதுர்புஜம்.
சார் இருக்கை திரும்பினார்.
"ஐயா ஸ்வீட் எடுத்துக்கலியே''" அமலா மறுபடி சிரித்தாள்.
சார் பால்கோவா கடித்தபடி "அமலா, உன் 
புருசன் என்ன செய்றாரு?''" என்றார்.
அமலாவின் வெள்ளை முகத்தில் சோக நிழல். "அவரு தான் கைலாசம் பூட்டாருங்களே!''"
"வெரி சாரி, மறந்துக் கேட்டுட்டேன். ரெண்டுப் பசங்க தானா?''"
"ஆமாங்க, டே, சாருக்கு காபிய ஊத்திக் குடுடா''" அமலா மரியாதை உணர்வோடு சற்றுத் தள்ளி இரும்பு மடக்கு நாற்காலியில் கை கட்டி அமர்ந்திருந்தாள்.
சார் காபி உறிஞ்சியபடி, "அப்பா, என்னா புழுக்கம்! இந்த மழை சூட்டைக் கிளப்பி விட்ருச்சே''" என்றார்.
"ஆமா''" என்ற அமலா நிழல் ஆடுவது கண்டு திரும்பினாள். சுடிதாரில் நான்கு மாணவிகள்.
"ஏய், போங்க, இங்கெல்லாம் வரக்கூடாது, ஐயா கணக்குப் பாக்றாங்க''"
"இல்ல மேட்ரன் மேடம், மாணவிகள் சார்புல எங்க குறைகளை சார்ட்ட''"
"அவங்களைத் தடுக்காதீங்க அமலா. யெஸ், வாங்க, என்ன உங்க குறைகள்? வாரத்துல மூணு நாள் முட்டை உணவு தர ஆணையிட்டோம். வாரம் ஒரு நாள் அசைவ சமையலுக்கு அனுமதி உண்டு. பாய் சீருடைகள் குடுக்க மறுக்குறாங்களா?''" என்றார், சார் நட்பாகப் புன்னகைத்து.
"இல்லீங்க ஹாஸ்டல் டி.வி. ரிப்பேர். அதைச் சரி செய்யணும்''"
"டி.வி. நாங்க அரசாங்க செலவுல வாங்கிக் குடுத்தமா?''"
"இல்லீங்க நன்கொடையா வந்தது''"
"பழுது பார்ப்பதும் நன்கொடையாளர் பொறுப்புதான். இதுக்கெல்லாம் செலவு செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்ல''"
"இதச் சொல்லவா ஒரு ஆபீசர்னுப் புறப்பட்டு வந்தீங்க?''" - சிலீர் சிரிப்பு, பெண்கள் திரும்பிச் சென்றனர்.
"வாயாடிப் பொண்ணுங்க! சமயத்துல என்னையே எப்படி மடக்கும் தெரியுங்களா! நீங்க ஒண்ணும் வருத்தப்படாதீங்க ஐயா''" என்றாள் அமலா.
"சரி கணக்கை எல்லாம் எடுங்க''" என்றார் சார்.
இப்போது அறையில் சாரும், அமலாவும் ரிகார்டுகளும் மட்டும் தான், எல்லோரும் வெளியில் போய் விட்டனர்.
"முதல்ல மாணவிகள் வருகைப் பதிவேடு'' " என்று சென்ற மாதப் பக்கத்தைத் திருப்பி சார் முன் வைத்தபோது அவள் விரல்கள் இவர் விரல்களை உரசின. இது தற்செயலா? வேண்டுமென்றா? சாருக்குப் புரியவில்லை. 
"பின் தங்கிய, மிகப் பிற்படுத்தப்பட்ட , சீர் மரபினர் மாணவியரைப் பிரிச்சு எழுதினியா?''" சார் பச்சை மசிப் பேனாவைத் திறந்தார்.
"இதோ ஐயா, சிவப்பு, வயலேட், ஆரஞ்சு, வண்ணக் கோடுகள் போட்டுப் பிரிச்சிருக்குது...'' அமலாவின் ஆள்காட்டி விரல் சாரின் விரலைத் தொட்டது.
அமலாவின் முகத்தை ஏறிட்டார் சார். அதில் எதுவும் தெரியவில்லை சாருக்கு.
நல்ல பால் வெள்ளை நிறம், முகமும் லட்சணம், பல் வரிசையும் அழகு. நெற்றியின் இரு மேற்புறங்களிலும் தூக்கி வாரி இருந்தது முகத்திற்கே கம்பீரம். நடுநெற்றியில் கரும் சாந்துப் பொட்டு. இரு காதுகளிலும் சிறு தங்க வளையங்கள், வளையல் அணியாத மொழு மொழுக் கைகள், அழகியான இவளுடன் நீண்ட காலம் வாழக் கொடுப்பினை இல்லையே இவள் கணவனுக்கு?
இவளுக்கு முப்பத்து மூன்று வயது தான் இருக்கும். அழகிய இளம் விதவை. ஆண் துணை இல்லாமல் எப்படி இவளால் காலம் தள்ள முடிகிறது? பாவம், இவள் அழகும், இளமையும் வீண். 
இவள் தனக்கேற்ற மற்றொரு மணாளனைத் தேடிக் கொள்ளலாம். தவறு இல்லை, ஏன் இப்படி ஏகபதி விரதமிருக்கிறாள்? இயற்கை உணர்வுகளை, மன ஓட்டங்களை எவ்வளவு காலம் தான் இவளால் அடக்க முடியும்?
நிச்சயம் இவள் மனம் ஒரு கொழுக்கொழும்பை நாடித் தவிக்காமல் இருக்காது. உணர்ச்சிகளை அடக்கி, எல்லாவற்றையும் துறந்தவள் போல நடிக்கிறாள். பக்குவமாகப் பேசிப் பார்க்கணும். பேசி பேசி...
இந்த சார் இப்போது தான் இந்த ஊரும் ஆபீசும் மாற்றி வந்துப் பத்து நாள்கள் ஆயின. இவருக்கு முன்பு இருந்தவர், அமலாவை வைத்த கண் வாங்காமல் பார்ப்பாராம். கையைத் தொடுவாராம். உரசுவாராம், ஏதோ பொருள் தொனிக்க எதுவோப் பேசி ஹேஹே என்பாராம். அமலா கோபித்ததில்லை. கையை "சரேல்' என்று இழுத்துக் கொண்டு, "என்ன நினைத்தாயடா என்னை?' என்று சுட்டெரிக்கும் பார்வையைப் பரிசாகத் தந்தது இல்லை. அவளின் மவுனம் தான் பதில்.
"நான் கொஞ்சம் துணிஞ்சிருந்தா அமலாவின் மனசையும், உடம்பையும் எப்பவோ ஜெயிச்சிருப்பேன். என்னவோ, மனசின் ஒரு கூறு வேணாம்னுத் தடுத்துக்கிட்டே இருந்திச்சி. நாற்பத்தி எட்டு ஹாஸ்டல்ஸ்ல இருவத்தி அஞ்சுப் பேர் மேட்ரன்ஸ். மீதிப் பேர் வார்டன்ஸ். இருவத்தி அஞ்சுல இவ தான் கண்ணுக்கு நிறைவு. நீங்க நல்ல பர்சனாலிடி. உங்க முயற்சில இவளை வழிக்குக் கொணாந்திடுவீங்க. முன் கூட்டிய வாழ்த்துகள். ஜமாய்ங்க..''" என்றார் பழைய அதிகாரி, இவரிடம் பொறுப்பு ஒப்படைக்கையில், எதை ஒப்படைக்கணுமோ, அதை ஒழுங்காக ஒப்படைக்க மாட்டார்கள், இந்த மாதிரி விஷயங்களை...
மூன்று வருடங்கள் இதே ஊரில் வேலை பார்த்தும் தன் மனதில் பொங்கிய காதல் எண்ணங்களை அமலாவிடம் வெளியிடத் துணியவில்லை, பழையவர்.
நான் அப்படியா? பக்குவமாய்ப் பேசி...
உலகம் விரிந்தது, பரந்தது அமலா, நெஞ்சைத் தொட்டு நிஜம் சொல், உன் தனிமை உன்னைத் தகிக்க
வில்லை?
நிலைக் கண்ணாடி எதிரே நின்று உன்னை நீயே பார்க்கும் போது என்ன கொடுமை இது, இத்தனை அழகாக என்னைப் படைத்த இறைவன் என்னை ஏன் பூஜைக்கு எடுக்காத மலர் என்று ஒதுக்கினான் என்று உன் மனம் ஊமை அழுகை அழுகிறதா? இல்லையா?
இந்தப் பிறவியை, உடலை, இளமையை, வாழ்க்கையை வீண் ஆக்கிக் கொள்ளாதே.
உனக்குத் தேவை புதிய சிந்தனைகள், சிந்தனையில் தெளிவு தெளிந்த பின் துணிவு, துணிந்த பின் துயரம் கூடாது. ஒரு துணையிடம் உன்னை ஒப்படை, அந்தத் துணை நான்தான். உன்னை என் ரகசிய சின்ன வீடாக ஏற்க நான் தயார்.
வாழத் துவங்கு, தவறு என்று யார் சொல்வார்? உலகில் புரட்சி சிந்தனைகள் எப்போதோ பிறந்து வலம் வரத் துவங்கி விட்டன..."
இப்படியாக சார் மனதில் காதல் வசனங்கள் பேசியபடி சென்ற மாத அந்த மகளிர் விடுதி கணக்குகளைப் பச்சை மசிப் பேனாவால் பரிசீலித்தார். 
ஆங்காங்கே ஏகப்பட்ட தவறுகள். பெருக்கல் வாய்ப்பாடு தெரியவில்லை எனில் கால்குலேட்டர் பயன்படுத்த வேண்டியது தானே? எல்லாவற்றையும் சார் சுழித்துத் திருத்தினார். 
இருப்பினும் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. 
"என்னம்மா, உன் கணக்கும் நீயும்! எத்தனை தப்புகள் ?''" என்று கடுப்படித்தார்.
"கணக்கு எழுதிக்கினே இருப்பேனா, "திடுக்'னு அது ஞாபகம் வந்திரும். அவ்வளவு தான், என் மனசு எங்கேயோ பூடும், என் எதிர நின்னு அது சிரிக்கற மாதிரியும் அம்லு, அம்லுக் கண்ணுன்னுக் கூப்பிட்றா மாதிரியும் இருக்கும் ஐயா''
"அதுன்னா?''"
"என் ஊட்டுக்காரர் தான். சின்ன வயசுலேந்து பக்கத்து வீடுகள்ளப் பழகிப் பெரியவங்க ஆனவங்க தான் நாங்க ரெண்டு பேரும், என்னத் தான் கட்டுவேன்னு பிடிவாதம் பிடிச்சாரு, அவங்க ஊட்ல யாருக்குமே என்னைப் புடிக்கல. இருந்தாலும் எங்க கண்ணாலம் நடந்திச்சி. மாமியார் எப்பவும் என்னைத் திட்டுவாங்க, நான் உன்னாண்ட பிரியமா இருக்கேன், 
அது போதும், நீ யார் பேச்சையும் காதுல வாங்காதங்கும் அது. ரொம்ப குறும்பு அதுக்கு பின்னால வந்து கண்ணைப் பொத்தும். சடையைப் புடிச்சி இழுக்கும். அழகா வாரின தலையைக் கலைச்சிட்டியேம்பேன். என்ன பிரமாதம், இதோ ஒரு நிமிசம்னு அதுவே பின்னி பூ வைக்கும். திஸ்டி பொட்டு வெக்றேன்னு கட்டை விரல்ல மை தொட்டு ரெயின்கோட் பட்டன் மாதிரி கன்னத்துலப் பெரிய பொட்டு வெக்கும்..''"
"என்ன வேலை பாத்தாரு?''"
"சொந்தமா டிராக்டர் ஓட்டினாரு, இதப் பாருங்க ஐயா..''" தன் டைரியைப் புரட்டி ஒரு பழைய 
ஃபோட்டோ எடுத்தாள் அமலா.
"என்ன அரை டவுசர் போட்டிருக்காரு?...''" 
"ஆமா, அவரு அப்பப்ப எங்கத் தோட்டத்துல இப்படி அரை ட்ராயரோடு கொத்திக் களை எடுக்கறதப் பாத்தேன். நானே அரை டசன் டவுசர் வாங்கிக் குடுத்தேன்.. சின்னப் புள்ள மாதிரி இருக்காரு, இல்லீங்களா? எப்படி இருக்காருங்க ஐயா என் வூட்டுக்காரரு?''
"நல்லாத் தான் இருக்காரு..''"
"அம்லு, ரெண்டு குழந்தையோடு நிப்பாட்டுவோம், தேச நலனையும் பாக்கணும்னாரு, சரிதாம்பான்னேன். ஆனா பாருங்க எனக்கு முதல் பிரசவத்துலயே ரெட்டைப் புள்ளை!''"
"அடடே!''"
"ரெட்டை வாழைப்பழம் சாப்டியா புள்ளன்னு கேலி செஞ்சாரு நீ என்னை விட ஃபாஸ்டுன்னுக் காதைக் கிள்ளினாரு''"
"கிள்ளிகிட்டே இருப்பாரோ?''
"கிட்ட வந்தாலே இந்தத் தொந்தரவு தான். எங்க வாழ்க்கை ஒரு அஞ்சு வருசம் தான்யா அமைதியா போச்சு. அப்புறம் ஆயிட்டது பிரச்னை...''"
"என்ன பிரச்னை?''"
"பணம் தான், தம்பி, தங்கைங்க அவங்க அம்மா எல்லாரும் எப்ப பார் இவரை பணம் கேட்டுத் தொல்லைப் பண்ணுவாங்க. இவரும் குடுப்பாரு, பிள்ளைங்க பொறந்த பிற்பாடு முன்ன மாதிரி கேட்ட தொகைக் குடுக்கறது இல்ல, கொஞ்சம் குடுப்பாரு. என் பசங்க எதிர்காலத்தைப் பாக்க வேணாமான்னு ஒரு சமயம் கேட்டுட்டாரு, ஓகோ, இது எல்லாம் அவ போதனையான்னு கத்தினாங்க. நான் குடுன்னோ, குடுக்காதேன்னோ சொல்ல மாட்டேன். அது அவங்களுக்குள்ளே புகைஞ்சுக்கிட்டே இருந்திச்சி...''"
"அடப் பாவமே!''"
"ஆமாங்கய்யா, ஒரு தீபாவளிக்கு ரெண்டு நாள் முந்தி .. கலெக்டர் ஆபீஸ்லேந்து கடுமையா டோஸ் விட்டு எனக்கு ஒரு கடிதம் வந்திச்சி, என் ஹாஸ்டல் மாணவிகளுக்கு சீருடைகள் தெச்சி, கலெக்டர் ஆபீஸ்ல ரெடியா இருக்கறதாவும், உடனே நா வந்து எவ்வளவு நேரம் ஆனாலும் எடுத்துப் போவணும்னும், மறுநாள் சம்பள நாள் வேற''
"சரி''"
"சம்பளம் வாங்கி வர அடுத்த நா கலெக்டர் ஆபீஸ் புறப்பட்டேன், இன்னி மாதிரி அன்னைக்கும் மழை''"
"இதே காலேஜ் ஹாஸ்டல் தானா?...''"
"இல்லீங்க, அப்ப பள்ளிக்கூட ஹாஸ்டல் மேட்ரன், கலெக்டர் ஆபீசுக்கும், எங்க ஹாஸ்டலுக்கும் அறுபது கி.மீ. தொலைவு ஹாஸ்டல் இருந்த ஊர்ல தான் என் குடும்பமும் இருந்திச்சி''"
"மேற்கொண்டு சொல்லும்மா..''" என்றார் சார்.
"அன்னிக்குப் பாருங்க, சோதனையா எல்லா ஹாஸ்டல் வார்டன், மேட்ரன்களுக்கும் சம்பளப் பட்டுவாடா முடிக்க ராத்திரி ஏழரை மணி, எல்லா ஹாஸ்டல் பசங்க சீருடையையும் வாங்கி ஒரு உள்ளூர் ஹாஸ்டல்ல ஸ்டாக் பண்ணி இருந்தாங்க, நான் ஒரு ஆட்டோ பிடிச்சி அந்த ஹாஸ்டல் போனேன். என் ஹாஸ்டல் நூறு குழந்தைகளுக்குமான சீருடைகளைக் கையெழுத்துப் போட்டு உள்ளூர் ஹாஸ்டல் வார்டன் கிட்டேந்து வாங்கும் போது ராத்ரி மணி ஒம்போது''"
"ஐயோடா!''"
"அன்னிக் காலேல நான் ஆபீஸ் புறப்படப் பாத்து "அது" தோள்ல மண்வெட்டியோட என் எதிரே வந்து சிரிச்சுது, அப்பவும் அரை வெள்ளை ட்ராயரும், கலர் கட் பனியனுமா இருந்தது. அது வெள்ளைச் சிரிப்பு அப்படியே மனசை அள்ளுங்க. குழந்தை மாதிரி அழகாச் சிரிக்கும். பல் வரிசை நல்லா இருக்கும் . காலை, மாலை, இரவுன்னு மாஞ்சு மாஞ்சு பிரஷ் பண்ணும், இன்னிக்கு உனக்குச் சம்பளமான்னிச்சி, ஆமா ராசா, ஒனக்கு என்ன வேணும் சொல்லு, வாங்கியாறேன்னேன். சின்னப் பிள்ளை மாதிரி கடலை மிட்டாய் ரெண்டு பாக்கெட் வாங்கியான்னுது. எனக்குச் சிரிப்பு வந்திட்டுது. ஜிலேபி, மிக்சர், காராசேவு எல்லாமும் வாங்கியாறேம்பான்னேன், உனக்காக எந்நேரம் ஆனாலும் முழிச்சிருப்பேன்னாரு''"
"முழிச்சிருந்தாரா?''"
"கேளுங்க கதையை அங்க தான் விதி விளையாடிடிச்சி , என் தலைல அந்த ராத்திரி தான் பெரிய இடி விழுந்திச்சி''" கண்கள் கலங்கி, குரல் தழுதழுத்தது. அமலாவுக்கு.
"அப்புறம்?''"
"மணியைப் பாக்றேன், ஒம்போது, திக்குன்னிச்சி. அந்த ஹாஸ்டல் சமையல்காரனை விட்டு ஆட்டோ பிடின்னேன். பஸ் ஸ்டாண்டு வந்தேன், என் ராசா கேட்ட ஸ்வீட், காரம், கடலை முட்டாயி வாங்கினேன், எங்க ஊர் போற கடைசி பஸ் .. அதுல சீருடை மூட்டைய மேற்படி சமையக்காரன் ஏத்தி விட்டு, பத்திரமாப் போய் வான்னான்."
"சரி''"
"ஒரு மணி நேர ஓட்டம், வழி எல்லாம் தீபாவளிக் கொண்டாட்டம். விடிஞ்சா தீபாவளி. எங்க ஊட்டுக்காரரை நாளைக் கூட்டி வந்து இந்தப் பெரிய டவுன்ல அவருக்கு ரெடிமேட் ட்ரெஸ் எடுக்கணும்னு நினைப்புல போறேன். ராத்ரி மணிப் பத்தரை''
"உம்''"
"சீருடை மூட்டை, நான் , என்னோடு எறங்கின நாலஞ்சுப் பேர், சுத்து முத்தும் பாத்தேன். லேட்டானா என் ராசாவே பஸ் ஸ்டாண்டு வந்து காத்திருக்கும். பஸ் ஸ்டாண்டு என்னா பஸ் ஸ்டாண்டு, ஆல மரத்தடி தான். "அண்ணீ'ன்னுக்குரல், என் ரெண்டு மச்சான்களும், ஒருத்தன் சைக்கிளோடு, ஒருத்தன் மொபெட். "ஏன் அவரு எங்க?" குந்துங்க அண்ணி, அவருக்கு உடம்பு சுகமில்ல..." "என்ன? காலேல கூட சிரிச்சுக்
கிட்டுக் கை ஆட்டினாரே? ஏன் வண்டியை எங்க வூட்டுக்கு விடாம? "பேசாம வா அண்ணி, அண்ணன் படுத்திருக்கிற எடம் தான் போறோம்''"
சாருக்கு நெஞ்சு படபடத்தது. அமலாவின் முகத்தையே பயத்துடன் பார்த்தார்.
"வண்டீலேந்துக் குதிச்சி ஓடினேங்க. கூட்டமான கூட்டம். ஊர் சனம். கூடத்திலேயே அவுரு படுத்திருக்காரு, நெஞ்சுலேந்து கால்வரை வெள்ளைத் துணி போத்தி, கால் கட்டை விரல்கள் இணைந்து தலைமாட்டில் எண்ணெய் தீபம். பாம்பு கடிச்சி... ராசா..ன்னு அவர் மேல விழுந்து கத்திக் கதறினேன். உருண்டேன், புரண்டேன், கண்ணீர் வெள்ளமா ஓடுது. காலையிலே சிரிச்ச முகமா இது? கண் மூடிட்டியே கண்ணே! இது எந்த தெய்வத்துக்கு அடுக்கும்? நான் யாருக்கு என்ன கெடுதல் செஞ்சேன்? எனக்கு ஏன் இப்படி... உண்மையிலே பாம்புதான் கடிச்சிதா? யாராவது விஷம் குடுத்துட்டாங்களா ? என் உயிரே, இனி, இந்த உலகில் எனக்கு யார்? ஆதரவு?'' "அமலா, அப்போது கண் எதிரில் சடலம் கிடப்பதுப் போல கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள்.
சாரின் கண்களும் ஆறாய்ப் பெருக்கின. கன்னத்தில் வழிந்தது கண்ணீர். மூக்கு கண்ணாடி அகற்றி கைக் குட்டையால், துடைத்தார். அந்தக் கண்ணீரில் அவரின் கெட்ட எண்ணங்களும் கரைந்திருக்குமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com