ஞானததுறவு

"சென்னையிலிருந்து வாரணாசி வரை செல்லும் வாரணாசி எக்ஸ்பிரஸ் இன்னும்சற்றுநேரத்தில் முதலாவது நடைமேடையிலிருந்து புறப்படும்.'
ஞானததுறவு

"சென்னையிலிருந்து வாரணாசி வரை செல்லும் வாரணாசி எக்ஸ்பிரஸ் இன்னும்சற்றுநேரத்தில் முதலாவது நடைமேடையிலிருந்து புறப்படும்.'

மும்மொழிகளில் வந்த அறிவிப்பு ஒன்றாம் நடைமேடையில் நின்றிருந்தவர்களைப் பரபரப்புக்குள்ளாக்கியது.
""போனவுடனே ஃபோன் பண்ணு''
""லக்கேஜ் பத்திரம். ஐ. டி ப்ரூஃ ப் இருக்குல்ல.....?''
வழியனுப்ப வந்தவர்களின் கேள்வியும், பயணப்
படுபவர்களின் பதிலும், ஒலியின் டெசிபல் அளவைக்கூட்ட, எங்கும் ஒரே இரைச்சலாயிருந்தது.
ஏ. சி கோச்சில் அமர்ந்திருந்த கோகிலா, மகன்
பிரபுவை அனுப்பிவிட்டு இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தாள்.
காசிக்குப் போகவேண்டும், கங்கையில் நீராடவேண்டு
மென்ற ஆசை மனதுக்குள் முளைவிட்டு, முடிச்சாகி, படிமுடிச்சும் ஆகி பல வருடங்களாயிற்று. விசுவநாதன் இருந்த போதே போயிருக்க வேண்டியது. ஏனோ சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.
"" காசிக்கு போகணும்ங்க'' என்றால் மனிதர் யோசிக்க
மாட்டார்.
""அதுக்கென்ன போயிட்டாப் போச்சு'' என்பார். ஆனால் அலுவலகத்தில் மீட்டிங், ஆடிட்டிங் என்று ஏகப்பட்ட டிங், டிங்குகள் வந்து முட்டுக்கட்டை போட்டுவிடும்.
""பேசாம நீ மட்டும் போயிட்டு வாயேன்'' என்று விசுவநாதன் ஒருநாள் சொல்லி கோகிலாவின் கோபத்துக்கு ஆளானார்.
""நான் மட்டும் போறதுக்கு காசிக்குப் போவானேன். கலிஃபோர்னியால இருக்க என் மாமா பிள்ளை வீட்டுக்குப் போறேன்'' என்றவள்,
""காசிக்கு தம்பதியாத்தான் போகணும். ஒத்தையா போனா பிரயோஜனமில்ல'' என்றாள் சுருக்கென்று.
விசுவநாதனுக்கு காசிக்குப் போக வேண்டுமென்ற ஆசையெல்லாம் கிடையாது. மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே.
""உனக்காக வேணா நான் வர்றேன். மத்தபடி எனக்கொன்னும் காசிக்குப் போகணுங்கற ஆசையெல்லாம் கெடையாது'' என்றவர் மனைவியின் முக மாறுதலைக் கண்டு கப்பென வாயை மூடிக்கொண்டார்.
எல்லாம் நிழற்படமாய் மூடிய இமைகளுக்குள் வந்து போயின.
""உங்க காலுக்கடியில என் பொட்டி இருக்கு. ஒரு கண் வச்சுக்குங்க''
உடன் வந்திருந்த வனஜா சொல்லிவிட்டு தோழியிடம் அரட்டையடிக்கப் போனாள்.
பதினைந்து பெண்கள் ஒரு குழுவாக காசிக்குக் கிளம்பியிருந்தனர். அனைவருமே ஒண்டிக்கட்டைகள். அறுபதைக் கடந்தவர்கள். சீனியர் சிட்டிசன் சலுகையோடு பிரயாணிப்பவர்கள்.
தம்பதியாக போகவேண்டுமென்று நினைத்திருந்த கோகிலாவுக்குத் தனியாக போகத்தான் வாய்த்தது. அதில் அவளுக்கு வருத்தமே.
ரயில் கிளம்பியது. ரப்பர் இணைப்புகளோடு பொருத்தப்பட்டிருந்த பெரிய செவ்வக வடிவக் கண்ணாடி வழியே மனிதர்கள் பின்னே நகர, ரயில் தடக், தடக் சத்தத்தோடு வேகம் பிடித்தது.
""பாட்டி, நீ சீக்கிரம் வந்துடுவேயில்ல...?''
சின்ன பேரன் கிருஷ் தாடை பிடித்து, தலையாட்டி, கொஞ்சி, கெஞ்சி கேட்டது கோகிலாவுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
"" பாட்டி வர ஒன் வீக் ஆகும். அதுவரைக்கும் நீக்ரீச்ல தான் இருக்கணும்.''
மருமகள் வித்யா குழந்தையிடம் சொல்லியதைக் கேட்டபோது, சங்கடமாகத்தான் இருந்தது. அதற்காக நெடுநாள் ஆசையை விட்டுத்தர முடியுமா?
தம்பதியாக காசிக்குப் போக வேண்டுமென்கிற ஆசைதான் நிறைவேறாமல் போயிற்று. விசுவநாதன் அழைத்துப் போகிறேன் என்று கூறி கடைசிவரை அதை செய்யாமலே மாரடைப்பில் போய்ச் சேர்ந்து விட்டார்.
அவர் போன அடியோடு ஆசையும் போயிருந்தால் பரவாயில்லை. நிலத்தில் புதையுண்ட விதை விருட்சமாகியே தீருவது என்கிற ஆவேசத்தோடு பூமி பிளந்து வருவதுபோல் மனதில் புதையுண்ட ஆசை வேர்
பரப்பி, கிளைவிரித்து வளர்ந்துவிட்டபின் வேறென்ன செய்ய?
இரவு ஏழுமணிக்கெல்லாம் கோகிலாவுக்குப் பசிக்க ஆரம்பித்துவிட்டது. மெதுவாக கட்டைப் பையிலிருந்து பொட்டலத்தை எடுத்துப் பிரித்தாள்.
வாழையிலையில் மிளகாய்ப்பொடி, எண்ணெய் தடவி மடித்து வைக்கப்பட்டிருந்த இட்லிகள் வாழையிலை வாசத்தோடு சுவையாயிருக்க ருசித்து சாப்பிட்டாள்.
மதியம் பன்னிரண்டு மணிக்கே ரயிலுக்குக் கிளம்பும் அவசரத்தில் அரக்க, பரக்க சாப்பிட்டது. சீக்கிரம் சாப்பிட்டது ஒருபுறம், ஆசை நிறைவேறிவிட்ட திருப்தி ஒருபுறம். எல்லாம் சேர்ந்து வயிற்றுக்குள் தீயைக் கொளுத்திப் போட, அத்தீ மிளகாய்ப்பொடி இட்டிலிகளை கபளீகரம் செய்து தணிந்து போனது.
""என்ன கோகிலாக்கா, அதுக்குள்ள சாப்பிட்டாச்சா....?''
ராதா கேட்டாள். அந்த காசி யாத்திரைக்கு ஏற்பாடு செய்தவள். குழுவிலேயே இளையவள்.
""ரொம்ப பசிச்சது ராதா. அதான் சாப்பிட்டேன். நீங்கள்லாம்?''
""எட்டு மணியாகட்டும்னு இருக்கோம்'' என்றவள்,
""இன்னிக்கு வியாழக்கிழமை. நாளைக்கழிச்சு சனிக்கிழமை கார்த்தால அஞ்சு மணிக்கு காசிக்குப் போயிடலாம். யாருக்காவது கால்வலி, தலைவலி, காய்ச்சல்ன்னா சொல்லுங்க. எங்கிட்ட மருந்து இருக்கு. தர்றேன்'' என்றாள்.
எல்லோரும் கொண்டு வந்திருப்பார்கள் என்றாலும் ஒரு சிறு நல்லிணக்க செயல்பாடுதான் இது.
மணி ஒன்பதுக்கெல்லாம் கோகிலாவுக்குத் தூக்கம் வந்துவிட்டது. இருக்கையில் கம்பளி விரித்து, மேலே விரிப்பைப் போட்டு தலையணை வைத்துப் படுத்தவளுக்கு கண்கள் சுழற்றியது. விளக்குகள் அணைக்கப்பட்டு நீல பல்பை ஒளிரவிட்டபிறகும் உடனிருந்த பெண்கள் பேசிக்கொண்டேயிருந்தனர்.
""காசியில நீ எதை விடப்போற...?''
""எனக்குப் பப்பாளிப்பழம் ஒத்துக்கறதேயில்ல. டாக்டர் பப்பாளிப்பழத்தை அறவேத் தொட கூடாதுன்னுட்டார். அதனால அதை விட்ரலாம்னு இருக்கேன். காய், இலை பத்தி இனிமேதான் யோசிக்கணும். நீ?''
""நானும் யோசனைதான் பண்ணிக்கிட்டிருக்கேன்.''
""ரயில்ல ஏறி ஒக்காந்தபிறகும் ஒரு முடிவுக்கு வரலியா?''
""அதொன்னுமில்லக்கா. எதையாவது விட்டுட்டு வந்துட்டு பிற்பாடு அதைப் பாக்கும்போது ஆசை வந்து சாப்பிட்டுட்டா என்ன செய்யிறதுன்னு பயமாயிருக்கு.''
""அடிப்பாவி, நீங்கள்லாம் நல்லா வருவீங்கடி''
மூவரும் பேசிக்கொள்ள, கோகிலாவுக்கு அந்தத் தூக்க, கலக்கத்திலும் விசுவநாதன் சொன்னது ஞாபகம் வந்தது.
""காசிக்கு போனா எதையாவது விட்டுட்டு வரணுமே. நீ எதை விடுவ?''
""நீங்க எதை விடுவீங்களோ அதைத்தான் நானும் விடணும்.''
""ஒரு பேச்சுக்குக் கேட்கறேன், சொல்லு''
அவர் கேட்க, கோகிலா யோசித்தாள்.
""அத்திப்பழம், அவரைக்காய்ன்னு சாப்பிடாததை, பிடிக்காததை விடுவ. சரியா?''
""கிண்டலா....""நீங்களாயிருந்தா எதை விடுவீங்க. டக்குன்னு சொல்லுங்க பாக்கலாம்''
""நான், உன்னை விட்டுடுவேன்''
விசுவநாதன் யோசிக்காமல் கூற, கோகிலா முறைத்தாள்.
""கோவப்படாத. நமக்கு பிடிச்சதை விடணும்னு சொல்லுவாங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சவ நீதான். அதனாலதான் அப்படி சொன்னேன்'' என்று விளக்கம் கூறி அவளின் கோபத்தைக் கூட்டினார்.
""விட்டுடுங்களேன். எனக்கென்ன பிரச்னை....நீங்கதான் கஷ்டப்படணும்''
"" சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். உடனே கோவிச்சிக்கறியே. உண்மையில காசிக்குப் போய் எதை விடணும் தெரியுமா... கோபத்தை, ஆசையை, கெட்ட குணத்தை... விட்டுட்டா மனுஷன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்படுவான். தெய்வம் மனுஷ ரூபம்ங்கறது உண்மையாயிடும்.''
விசுவநாதன் சொன்னது காதுகளில் ஒலிக்க, தூக்கம் பறந்தோடிப் போனது.
காசிக்குப் போகவேண்டுமென்று பிரபுவிடம் சொன்ன
போது அவன் ஏதேதோ சொல்லி தட்டிக்கழித்து விட்டான்.
""உன்னை தனியா அனுப்ப பயமாயிருக்கும்மா'' என்பான்.
"" மகேஷுக்கு எக்ஸாம் டைம். நீ போயிட்டா வித்யாவால சமையலும் செஞ்சு, படிப்பும் சொல்லிக் குடுக்க
முடியாது. அதனால பரீட்சை முடியட்டும்'' என்பான்.
"" இப்ப அங்கே ஒரே குளிராம். உனக்கு ஒத்துக்காது'' என்பான். மொத்தத்தில் ஏதோ ஒன்று சொல்லி அவள் ஆசையை நிராகரித்தவன் ஒருவழியாக சம்மதம் சொன்னபோது, கோகிலாவுக்குத் தலைகால் புரியவில்லை.
சந்தோஷத்தோடு கிளம்பிவிட்டாள்.
""வைரத்தோட்டை கழட்டி வச்சிட்டு சாதாரண பூத்தோடு போட்டுக்கம்மா. அதுதான் சேஃப்'' என்று பிரபு சொன்னபோது கோகிலாவுக்குப் பொசுக்கென்று ஆகிவிட்டது.
இருபத்தைந்து வருடங்களாக காதைவிட்டு கழற்றாமல் போட்டிருக்கிறாள்.
""காதுல உள்ளத யாரு கழட்ட போறா... அதுபாட்டுக்கு இருக்கட்டுமே...''
கோகிலா மெதுவாகக் கூற, அதை காதில் வாங்கிக்கொள்ளாத வித்யா,
""கையில போட்டிருக்க ரெண்டு ஜதை வளையலையும்
கூட கழட்டிடுங்க அத்தை. அதுக்கு பதிலா இந்தப் பிளாஸ்டிக் வளையலை ப் போட்டுக்குங்க. உங்க சைசுதான். மைலாப்பூர்ல வாங்கினேன்'' என்றாள்.
கோகிலாவுக்குக் கோபம் வந்தது. அதை வெளிக்காட்டாமல் நகைகளைக் கழட்டி வைத்தாள், செயின் உட்பட.
""ஒரு பழைய பட்டுப்புடவையை எடுத்து வச்சுக்குங்க. அங்கே குளிச்சிட்டு விட்டுட்டு வர்றதுக்கு''
வித்யா சொல்ல,
""எல்லாம் எடுத்து வச்சாச்சு''என்றாள் கோகிலா வெடுக்கென்று.
அது சம்பந்தமில்லாமல் இப்போது ஞாபகத்துக்கு வந்தது.
காசியில் எதைவிடுவது என்பதைப் பற்றி அவள் பலமுறை யோசித்திருக்கிறாள். ஒன்றும் பிடிபடவில்லை.
யோசனைக்கு ஊடாக வேறொரு யோசனை மனதில் வந்தமரும். விடுவதைப் பற்றிய யோசனையின் இழை அறுந்து போகும். இப்போது அதைப்பற்றிய எண்ணம் வந்தது.
""காசிக்குப் போய் எதை விடுவது...''
அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே
உள்மனசு சிரித்தது.
""தங்க வளையலையும், வைரத்தோட்டையும் பத்து
நாட்கள் துறப்பதற்கே இசையாத நீ எதை விடுவாய்...''
கோகிலாவுக்கு சுருக்கென்றிருந்தது.
"ஒரு பழம், காய், இலை விடுவது பெரிய விஷயமா... அதைத்தான் சாஸ்திரம் சொல்கிறதா.... ஆனால் அதனை விடவும் எவ்வளவு தயங்க வேண்டியுள்ளது.'
புரியாத கலக்கம் உள்ளே உருவானது.
திகட்ட, திகட்ட அன்பைத் திணித்த கணவர், ஆத்மார்த்தமான காதல் வாழ்க்கை, வேண்டிய அளவு செல்வம், உடல்நலம், புத்திரப்பேறு, பேரப்பிள்ளைகள் எல்லாம் கிடைத்து நிறைவான வாழ்க்கைதான்.
இது கிடைக்கவில்லை என்று எதற்காகவும் ஏங்கியதில்லை. இருந்தும் எதையாவது விடவேண்டுமென்றால் யோசிப்பதற்கே நிறைய மெனக்கெட வேண்டியுள்ளதே...
கோகிலா கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
கழிவறைக்கருகில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடி அவள் முகத்தை தெளிவாக பிரதிபலித்தது.
""நான் எதை விடறது...?''
கண்ணாடியைப் பார்த்து சன்னமாகக் கேட்டாள்.
""எதை விடறதா...........கடவுளே...''
திடீரென வெகு அருகாமையில் ஒலித்த அந்த
குரலில் திடுக்கிட்டுபோனவள் அப்போதுதான்
அவரைக் கவனித்தாள். கதவையொட்டி அவர் அமர்ந்
திருந்தார்.
அழுக்கான காவியுடை, வயிறுவரை நீண்டிருந்த நரைத்த தாடி. பார்த்ததுமே அவர் ஒரு பண்டாரம் என்று புரிந்தது. சட்டென சுதாரித்து உள்ளே போக முயன்றவளை அவர் குரல் தடுத்தது.
""கேள்வி கேட்டுட்டு நீ பாட்டுக்குப் போறியே. பதில் கெடைச்சிட்டுதா... நான் சொல்லவா...?''
கோகிலா தயக்கத்துடன் அவரைப் பார்த்தாள்.
""சொல்றேன் கேளு...... உனக்குள்ள இருக்க " நான்'....அதை விடு. அந்த "நான்' மேல உனக்கிருக்கிற பற்றுதலை விடு. ஆசை, அதையும் விடு. ஆசையை விட்டா ஞானம் வரும். உடனே அதை கழட்டி விட்டுடு. ஞானம்ங்கறது அறிவு. அது உன்னைக் குழப்பும். அதனாலதான் அதை விடச் சொல்றேன். விட்டுப் பாரு, நீ பஞ்சாட்டம் லேசாயிடுவே. அதுதான் துறவு. சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை புடிக்கிற யுக்தி இது''
கோகிலா விக்கித்து நிற்க, அவர் தொடர்ந்தார்.
""ஆசை, ஞானத்தை விட்டுட்டா மட்டும் துறவாயிடாது. விட்டுட்டேன்னு நினைக்கிறதையும், அதனால ஏற்படுற கர்வத்தையும் துறக்கறதுதான் துறவு. போ, போய் காசியில கருமத்தை தொலை. கூடவே நான் சொன்னதையும்...''
உத்தரவிட்டு அவர் அந்த பாடலை முணுமுணுக்க தொடங்கினார்.
""அருளால் அருள் வளரும்;
ஆள்வினையால் ஆக்கம்;
பொருளால் பொருள்வளரும் நாளும்;
தெருளா விழைவு இன்பத்தால் வளரும் காமம்;
அக்காமம் விழைவு இன்மையால் வளரும் வீடு''
கோகிலா உள்ளே வந்தாள். வைரத்தோடும், வளையலும் மனதிலிருந்து கழன்று ஓடின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com