முன்மாதிரி அரசுப் பள்ளி!

அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தவே பல இடர்கள். ஒன்று ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்
முன்மாதிரி அரசுப் பள்ளி!

அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தவே பல இடர்கள். ஒன்று ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இல்லை மாணவர்கள் வருகை குறைவாக இருக்கும். பொலிவிழந்த வகுப்பறைகள்... குடிநீர் இல்லாமை... முக்கியமாக கழிப்பறைகள் - அதுவும் ஆசிரியைகளுக்குக் கூட இல்லாமை... நகர்ப்புற அரசுப் பள்ளிகளின் நிலைமை இதுவென்றால் கிராமப்புற பள்ளிகள் பற்றி சொல்லவே வேண்டாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது. திருச்சி லால்குடிக்கு அருகில் இருக்கும் பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அங்கு பணிபுரியும் ஆசிரியரான சதீஷ் குமார் காரணமாக ஒரு முன்மாதிரிப் பள்ளியாக மாறியிருக்கிறது.
 தான் பணி புரியும் பள்ளியின் மாணவர்கள் வசதிக்காக பண உதவி கேட்டு வேண்டுகோள்விடுத்தே முகநூலில் பிரபலமாகி இருக்கிறார் சதீஷ். சுயபுராணம் பாடிக் கொண்டிருக்கும் முகநூல் ஆர்வலர்கள் இடையில் பள்ளிக்காக, மாணவ, மாணவிகளுக்காக உதவ குரல் எழுப்பி தனித்து காணப்படும் சிலரில் சதீஷும் ஒருவர்.
 படிக்க பணம் இல்லாமல் கஷ்டப்படும் மாணவ மாணவிகளுக்கு உதவிக் கரம் நீட்டி வரும் சதீஷ், பல மாணவ மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரி படிப்பிற்கு வழிகாட்டி முகநூல் ஆர்வலர்கள் மூலமாக பண உதவி செய்து வருவதுடன், அவர்கள் படித்து முடிந்தவுடன் வேலை வாய்ப்பையும் உறுதி செய்து தந்திருக்கிறார்.

நல்ல உள்ளங்களை அணுகி நிதி சேகரித்து ஸ்மார்ட் வகுப்பறை அமைத்த கையுடன், தண்ணீர் தேக்கத் தொட்டி கட்டி பள்ளியின் குடிநீர் பிரச்னையையும் தீர்த்து வைத்த சதீஷ் குமார் தொடர்கிறார்:
 ''ஆசிரியைகளுக்கு கழிப்பறைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் பயன்படுத்த முடியாத நிலைமை. மாணவிகளுக்கு கழிப்பறை வெறும் கனவாகத்தான் இருந்தது. நவீன கழிப்பறைகள் கட்ட பத்து லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. இந்தக் கனவுத் திட்டம் நிறைவேறுமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. முகநூல் ஆர்வலர்கள், வசதி படைத்தவர்கள், எனக்குத் தெரிந்தவர்கள் என்று பலரும் பணமாகவும், சிமெண்ட், இரும்புக் கம்பிகள், டைல்கள் என்று உதவி செய்ய கனவுத் திட்டம் நிறைவேறியுள்ளது. மாற்றுத் திறனாளி மாணவிகள் பயன்படுத்தவும் கழிப்பறை உண்டு. கழிப்பறைகளில் இந்தியன் வெஸ்டன் மாடல்களில் காட்டியுள்ளோம். முக்கியமாக பருவமடைந்த மாணவிகளுக்கு கழிப்பறையில் நாப்கின் வழங்கும் தானியங்கி கருவியும், பயன்படுத்திய நாப்கினை அழிக்கும் கருவியும் பொருத்தியுள்ளோம். கைகழுவ திரவ சோப்பும் உண்டு. இந்தப் பதினேழு கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இப்போது இருக்கும் வசதிகள் தொடர்ந்து நிரந்தரமாக அமைய கண்டிப்பாக கவனம் செலுத்துவோம். சில கழிப்பறைகளை பள்ளி ஆசிரியைகளுக்கென்று ஒதுக்கியுள்ளோம்.
 தற்போது மழைக்காலம் என்பதால் பள்ளி விட்டவுடன் மாணவர்கள் மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழல். பஸ்ûஸப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் மழையில் நனைந்தபடி ஓட வேண்டி உள்ளது. மாணவிகளுக்கு இது இன்னும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மாணவிகளின் நனைந்த உடைகளைப் பார்த்து கிண்டலடிப்பவர்களும் உள்ளார்கள். இதுமட்டுமின்றி மழையில் நனைந்து காய்ச்சல் வந்து பள்ளிக்கு வர இயலாத சூழலும் நிலவுகிறது. இவற்றிக்குத் தீர்வு காண, குடை வாங்க வசதியில்லாத மாணவ மாணவிகளுக்கு சுமார் நூற்றி எழுபது குடைகளை வழங்கி இருக்கிறோம்.
 எங்கள் பள்ளியின் அடுத்த குறை... மாணவ, மாணவிகள் அமர்ந்து மதிய உணவு சாப்பிட கூரையுள்ள இடம் இல்லை. மர நிழலில் சாப்பிடும் போது பறவைகளின் எச்சம் விழுகிறது. காற்று வேகமாக வீசும் போது மணல் உணவில் கலக்கிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க கூரை போட்ட கட்டடம் தேவை. அதை நிறைவேற்றுவதுதான் அடுத்த லட்சியம். நல்ல காரியங்களுக்கு உதவும் நல்லவர்களை நம்பித்தான் இந்த முயற்சியிலும் இறங்கப் போகிறேன்'' என்கிறார் சதீஷ் குமார்.
 - பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com