வாடகை

வீட்டுக் கதவை காலையில் திறந்தவுடன் தென்றல் காற்றோ, மலர்களின் நறுமண வாசனையோ நம்மைத் தழுவும் என எழுத முடியாத இக்கட்டான சூழல் இப்பொழுது
வாடகை

வீட்டுக் கதவை காலையில் திறந்தவுடன் தென்றல் காற்றோ, மலர்களின் நறுமண வாசனையோ நம்மைத் தழுவும் என எழுத முடியாத இக்கட்டான சூழல் இப்பொழுது. எனவே எவ்வித கற்பனையும் இன்றி கதவைத் திறந்தவுடன் அருகில் இருக்கும் பேக்கரியிலிருந்து வரும் பீடி, சிகரெட் வாசனைதான் ஒவ்வொரு அதிகாலையும் எங்களை வரவேற்கும். பேக்கரிக்கு வாடகைக்கு விடவேண்டாம் என எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அப்பா செய்த செயல், இப்பொழுது குடும்பத்தில் ஒவ்வொருவரும் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டியதாகிவிட்டது.
என்ன செய்வது ? மாத வாடகை ஏழாயிரம் என்றதும் "பிறகு வருகிறோம்' என்று சொல்லிச் சென்றவர்களுக்கு மத்தியில் பத்து மாத வாடகையை முன்பணம் (அட்வான்ஸ்) ஆக கையோடு கொண்டு வந்து பேசியிருக்கும் பேக்கரி முதலாளியிடம் சரியெனச் சொல்லாமல் என்ன செய்வார் அப்பா? இதோ வாங்கிய முன்பணத்தில் சிறுசிறு மராமத்து பணிகள் செய்து வாடகைக்கு விட்டாயிற்று. செலவு போக பணம் கையிலிருந்ததால் அப்பாவிற்கு கூடுதலாக ஒரு கை இருப்பது போல. எனவே, மன மகிழ்சியுடன் இருந்தார் என்பதை உணர முடிந்தது. வாடகை ஒப்பந்தப்படி இருவரில் யாரொருவர் காலிசெய்வது குறித்துப் பேசினாலும் 3 மாத அவகாசம் தரவேண்டும் என்றிருந்தது.
ஓரளவு முதல்மாதம் சமாளித்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். பேக்கரி கடைக்கு வரும் சிறுவயது சிறுவர்கள் முதல் பல்போன வயதானவர்கள் வரை அனைவரும் அவரவர்களுக்குத் தகுந்த பீடி, சிகரெட் என புகைத்து அவர்களின் கவலையைப் போக்கிக் கொள்கிறார்களாம். எப்படியோ போகட்டும், அவர்கள் விடும் புகை அவர்கள் வயிற்றுக்குள் செல்லாமல் வெளியே செல்வதுதான் பிரச்னை.
எப்படி இப்படி ஒரு பழக்கத்தை கண்டுபிடித்தார்களோ? அதிசயமாகத்தான் இருக்கிறது. சாராயமோ, புலால் உணவோ நமக்கு ஒருவித போதை என்றால் அது நமது உடலுக்குள் செல்வதால். ஆனால், புகைபிடிக்கும் வழக்கம் என்பது புகையை வெளியே விட்டு அதில் சிறிது உடலுக்குள் செல்வதால் ஏற்படும் போதை என்பதாகச் சொல்கிறார்கள்.
சில மாதங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்பது பேக்கரியினால் ஏற்படும் தீமைகள் குறித்து கட்டுரை எழுதச் சொன்னால் இரண்டு பக்கத்திற்கு எழுதிவிட முடியும். வீட்டிற்கு முன் சிறிதும் பெரிதுமாய் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வருவதும் போவதும் நடந்து கொண்டுதான் இருந்தது. எவ்வளவு பெரிய காரில் வந்தாலும் அந்த சில நிமிட புகைபிடிக்கும் செயலுக்காகவே வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். சிலசமயம் என்னைப் பார்த்துவிட்டால் பைக்கில் புறப்படுபவர்கள் வேண்டுமென்றே ஆக்ஸிலேட்டரை முறுக்கி விர் விர்ரென சப்தம் எழுப்பி, எதோ "டுகாட்டி' பைக் ஓட்டுவது போல கற்பனை செய்துகொண்டு கிளம்புவார்கள். ஐம்பதாயிரம் ரூபாய் வண்டிக்கே இப்படி செய்கிறார்களே! ஐந்து லட்சம் பத்து லட்சம் என பைக் வாங்கி ஓட்டினால் என்ன செய்வார்கள் என நினைத்துப் பார்த்தேன். சிலருக்கு வயசுக் கோளாறு என்று நினைத்தேன். ஆனால், வயது வித்தியாசமின்றி அவரவர் வயதிற்கு ஏற்றபடி என்னைப் பார்த்ததும் நடந்து கொள்கின்றனர்.
அப்பாவுடன் வெளியே போகும்பொழுது ஒருமாதிரியும், நான் தனியாகப் போகும்பொழுது ஒருமாதிரியும் நடந்து கொண்டனர். கூடுமானவரை வீட்டைவிட்டு வெளியே வருவது தவிர்த்தாலும், அருகில் மளிகை, பால், இத்தியாதிக்கு வெளியே ஒரிரு முறை சென்றாக வேண்டும்.
நாளாக நாளாக தொந்தரவு அதிகம் என்பதோடு, வாடிக்கையாளர்களின் புகைப்பழக்கம் மூடியிருந்த சன்னல், கதவுகளைத் தாண்டியும் உள்ளே வர ஆரம்பித்தது. மூன்று மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஒன்றும் மாற்றமில்லை. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே தவிர, குறைவதாகக் காணோம்.
சமீபத்தில் நானும் தம்பி, அப்பா என மூவரும் ஓர் இரவுக்காட்சி சினிமா சென்று வந்தோம். ஜோதிகா வானொலி அறிவிப்பாளராக வரும் அந்தப்படம் நன்றாக இருப்பதாகச் சொன்னதால் சென்றோம். அம்மாவிற்கு சினிமாவில் அவ்வளவாக விருப்பம் இல்லை என்பதால் வீட்டிலேயே இருந்துவிட்டார். அவருக்கு தொலைக்காட்சித் தொடர்களே போதுமானதாக இருந்தது. எப்படித்தான் அத்தனை தொடர்களையும் கதாபாத்திரங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்கிறாளோ தெரியாது. உறவினர் மற்றும் நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டாருடன் பேசும்பொழுது அம்மாவின் தொலைக்காட்சி தொடர் பற்றிய அறிவு எல்லாரையும் வியக்க வைக்கும்.
நாங்கள் சென்ற சினிமாவிற்கு இடைவேளை நேரம் முடிந்து படம் தொடங்குவதற்கு முன்பு விளம்பரப் படமாக புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை குறும்படமாக வெளியிட்டனர். அதில் பெரும்பாலும் வடஇந்திய நடிகர்கள் நடித்திருந்தாலும் தமிழ்மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருந்தனர். புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் நோய்கள் குறிப்பாக கேன்சர் எனும் புற்றுநோய் குறித்தும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டியும் ஒளிபரப்பினர். தொண்டைப் புற்றுநோய், வாய்ப்புற்று நோய் என பலவிதங்களில் பாதிப்படைகிறார்கள் என ஆதாரப்பூர்வமாக ஒளிபரப்பினர். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், புகையிலை புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு மட்டும் பாதிப்பு என்றில்லாமல் அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு என்றம் குறிப்பிட்டதை அனைவரும் அதிர்ச்சியோடும், புற்று நோய் வந்தவர்களை ஒருவித அருவருப்போடும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
படம் முடிந்து வீடுவந்து சேர்ந்தோம். அடுத்து ஓரிரு நாளில் அப்பா பேக்கரி உரிமையாளரை வீட்டிற்குள் அழைத்து மூன்று மாதங்களில் காலிசெய்யச் சொல்லிவிட்டார். ஏற்கெனவே பூக்கடை வைக்க கேட்டிருந்த பக்கத்துத் தெருவைச் சேர்ந்த இசுலாமிய நண்பருக்கு ஆயிரம் ரூபாய் குறைவான வாடகையாக இருந்தாலும் பரவாயில்லை என அழைத்து மூன்று மாதத்திற்குப் பின் வரச் சொல்லி தெரிவித்து விட்டார்.
மூன்றுமாதம் கழித்து வரும் பூக்கடையின் வாசத்தை நினைத்து இப்பொழுதே சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஜனனி

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com