கிராமத்தை காப்பாற்றிய  ஓவியங்கள்!

முதியவர்  ஒருவர் ஓவியங்களால் ஒரு கிராமத்தையே காப்பாற்றியுள்ளார் என்றால்  நம்ப  முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும்.
கிராமத்தை காப்பாற்றிய  ஓவியங்கள்!

முதியவர்  ஒருவர் ஓவியங்களால் ஒரு கிராமத்தையே காப்பாற்றியுள்ளார் என்றால்  நம்ப  முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும்.  ஆம், தைவானில் நன்துன் மாவட்டத்தில்  அமைந்திருக்கும்  தைசுங்  என்ற  அந்த  கிராமம்  1940-50 களில், சீனாவிலிருந்து  திரும்பிய முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருப்பதற்காக அந்தக் கிராமத்தை தைவான் அரசு தற்காலிகமாக உருவாக்கியது. 

சுமார் 1200 வீடுகளைக் கொண்டது அந்த கிராமம்.  ஒரு கட்டத்தில், இந்த கிராமத்தில் வசித்து வந்த  மக்கள் அனைவரும் வெளியேறி விட,  12 வீடுகள் மட்டுமே  இருந்துள்ளன.    அதில்  ஒரு  வீட்டில் 37 ஆண்டுகளாக வசித்து வந்த 96 வயதான முன்னாள் ராணுவ வீரரான ஹூவாங் யுங்-ஃபுவிற்கு, தான் வாழ்ந்த கிராமத்தை விட்டுச்செல்ல மனம் வரவில்லை.  இந்நிலையில்,  அரசும்,  தனியார் நிறுவனங்களும் இந்தக் கிராமத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டன.  

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஹூவாங்,  அந்தக்  கிராமத்தை மீட்டெடுக்க என்ன செய்வதென்று யோசிக்கையில், அவரது வீட்டில் ஓவியங்களை வரையத் தொடங்கியுள்ளார்.  பின்னர், சிறிது சிறிதாக காலியாக இருந்த வீடுகளில்  உள்ள  சுவர்களிலும்  வரையத் தொடங்கியிருக்கிறார். 

ஒரு கட்டத்தில் ஹூவாங்கின் இந்த முயற்சி அருகில் இருந்த பல்கலைக்கழக மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்ததுள்ளது. எனவே, அவர்களும் ஹூவாங்கோடு சேர்ந்து ஓவியங்கள் வரையத் தொடங்கினர்.   அக்கம்பக்கத்து ஊர்களுக்கு இந்தச் செய்தி  பரவ, இந்தக் கிராமத்தை பார்வையிட  மக்கள் வரத் தொடங்கினர்.  ஒரு கட்டத்தில்  அந்த கிராமத்தை  "வானவில் கிராமம்' என்றும், ஹூவாங்கை  "வானவில் தாத்தா'  என்றும் அழைக்கத் தொடங்கியுள்ளனர். 

தற்போது தைவானின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாறியிருக்கிறது அந்த கிராமம்.  ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அந்தக் கிராமத்திற்கு வந்து செல்கின்றனர்.  இதனால்  தைவான் அரசு,  இந்த கிராமத்தை இடிக்கும் முடிவைக் கைவிடுவதாக அறிவித்தது.  விரைவில் அந்த கிராமத்தை கலாசார சுற்றுலாத் தளமாக அறிவிக்க இருப்பதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

96 வயதில் ஓவியங்கள் வரைந்து, தான் வாழ்ந்து வந்த கிராமம் இடிக்கப்படாமல் காப்பாற்றியிருக்கும்  ஹுவாங், முறைப்படி ஓவியம் கற்றவரில்லை. மூன்று வயதில், தன் தந்தையிடம் வரைய கற்றுக்கொண்டதை வைத்தே ஒரு கிராமத்தையே ஓவிய கிராமமாக மாற்றியிருக்கிறார்.

இவரது, ஓவியங்களில்,  நாய்கள், பூனைகள், பறவைகள், பூக்கள்  என பல்வேறு விதமான உருவங்கள் வீடுகளின் சுவர்களை  அலங்கரிக்கின்றன.  இன்றும், தினமும் காலை 3 மணிக்கு எழுந்து, கிராமத்தில் இருக்கும் கைவிடப்பட்ட  வீடுகள், சுவர்கள், சாலைகளில் ஓவியம் வரைந்து வருகிறார் ஹூவாங்.

""தனக்கு நூறு 100 வயதானலும் வரைவதை நிறுத்த மாட்டேன்'' என்று சொல்கிறார்  இந்த "வானவில்' தாத்தா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com