வேலை வேண்டாம்!

அபிராமியின் அலங்காரம் முடிந்தது.
வேலை வேண்டாம்!

அபிராமியின் அலங்காரம் முடிந்தது.

சரியாக மாலை ஆறு மணிக்கு வந்து விடுவதாகச் சொல்லி இருந்தான், அவள் கணவன் சுப்பிரமணி.  "படபட டப டப' என்று வீட்டு வாசலில் கேட்கப் போகும் அவனின் டூ வீலர் சத்தத்திற்காக அவள் செவிகள் காத்திருந்தன.   அவனுக்குப் பிடித்த இளநீல வண்ணத்தில் அவள் உடுத்தி இருந்தாள்.  பீரோவிலிருந்து அவன் அணிய வேண்டிய சிமெண்ட் கலர் பேண்ட், ப்ரௌன் சட்டையையும் அவள் சலவை மடிப்புக் கலையாமல் எடுத்து இரட்டைக் கட்டில் மீது வைத்திருந்தாள்.

"படபட' என்று திடீர் மழை. நனைந்துகொண்டே சுப்பிரமணி வந்துவிட்டான். வண்டியில் இருந்தபடி, ""“அபி, ரெடியா?''” என்றான்.

பிளாஸ்கில் இருந்து அவள் காப்பி ஊற்றித் தருவதற்குள் அவன் பேண்ட், சர்ட் மாற்றி, தலையைத் தூக்கிச் சீவி, விசில் அடித்தபடி சீப்பை வீசி எறிந்தான். பவுடரை உள்ளங்கையில் பரப்பி, அப்படியே முகத்தில் ஒற்றி, கைக்குட்டையால் துடைத்தான்.

வீட்டைப் பூட்டிப் புறப்பட்டனர்.

சுப்பிரமணியின் வண்டி ஓட்டல் சகாராவில் நின்றது.  சோளப் பட்டூராவும், ஸ்பெஷல் காப்பியும் ஓட்டல் முன்புறத் திறந்தவெளியில் சாப்பிட்டனர்.

அடுத்தது ஜவுளிக் கடல்.

இவர்களின் வர இருந்த இரண்டாவது திருமண நாளுக்கு அவளுக்குப் புது ஆடை எடுத்துத் தருவதாக சுப்பிரமணியனின் வாக்குறுதி!

ஆயிற்று. முப்பது நிமிட அலசலில் ஒரு சுடிதார் தேறியது.  கடையில் அடுத்த பிரிவில், லெகிங்ஸ் எடுத்தனர்.

""உங்க ட்ரஸ் நான் தான் செலக்ட் பண்ணுவேங்க''”
""எடுத்தாப் போச்சி. அதுக்கு வேற கடை போவோம்''” என்று எச்சில் தொட்டுத் தொட்டு ரூபாயை எண்ணினான் சுப்பிரமணி.

அடப்பாவமே, ஒரு குண்டுப் பெண்! மூக்குக் கண்ணாடி.  நடக்கும் போது ஒவ்வொரு முறையும் ஒரு பக்கம் வளைந்து கால் முட்டியைத் தொட்டு நிமிர்ந்தாள். மற்றோர் அடி எடுத்து வைக்க அதே மாதிரி மறுபடி குனிந்து நிமிர வேண்டி இருந்தது.  குனிந்து நிமிர்ந்து, குனிந்து நிமிர்ந்து, முகம் முழுவதும் வியர்வை வழிந்தோட, பின் தலையில் வைத்த கொத்துப் பூச்சரம் அசைந்து அசைந்து அவளின் முகத்தைப் பார்க்கும் ஆசையில் ஊசலாட...
""பகவானே, இந்த பெண்ணுக்கு ஏன்டா இப்படி ஒரு குரூரத் தண்டனை?'' என்று விக்கித்துப் பார்த்திருந்தாள் அபி. பாவம், பாவம்!
அந்தப் பெண் இவர்களின் அருகே வந்து நின்றாள். பெருமூச்சு விட்டாள்.  நிமிர்ந்து நின்றாள். இவர்களைப் பார்த்து முகம் மலர்ந்து.
 ""டேய் சுப்பிரமணி, டேய்!''”
அந்தப் பெண், குனிந்து, முட்டி தாங்கி நிமிர்ந்து இவர்களை மிக சமீபித்தாள்.
""ஏன்டா சுப்பிரமணி, எவ்வளவு நேரமாக் கூப்பிட்றேன்? காதுல விழாத மாதிரி பாசாங்கு ஏன்டா பண்ற? பெரிய மனுஷன் ஆயிட்டயா? டேய், உன்னைத் தான்டா, என்னைக் கொஞ்சம் பாருடா!''” 
என்றாள்.
சுப்பிரமணி நிமிர்ந்தான்.  அந்தப் பெண்ணைக் கண்டதும் அவன் உடலில் சிலிர்ப்பு.
""அடேடே, மேடம்! சாரி, நீங்க வந்ததை உண்மையிலேயே நான் பாக்கல. சொல்லுங்க மேடம், நான் என்ன செய்யணும்?''” என்று கும்பிட்டபடி கூனிக்
குறுகி நின்றான்.  
""பரவாயில்லடா பரவாயில்ல.  இது யார் உன் சம்சாரமா? நல்லாத்தான் இருக்கா. ஒண்ணும் இல்லடா. பொங்கல் வருது இல்லியா, துணி எடுத்தேன்.  அதோ இருக்குது பாரு.  அந்த பண்டில்தான். என்னை ஒரு ஆட்டோவப் பாத்து ஏத்தி விடுடா
சுப்பிரமணி, நல்ல பையன் இல்ல?''”
""எஸ் மேடம்,  உங்களுக்கு இல்லாத உதவியா? பண்டிலைக் குடுங்க.  நான் எடுத்துக்கறேன்.  வாங்க, போவோம்''” என்று புறப்பட்ட சுப்பிரமணியன் நினைவு வந்தவனாக நின்று, “""அபி, நீ கெüண்டர்ல பே பண்ணு.  மேடத்த அனுப்பிட்டு வந்துடறேன்''” என்றான்.
கடை வாசலில் அந்த அழகியை ஆட்டோவில் ஏற்றி, பார்சலைக் கொடுத்து, கை கூப்பி, பற்களை வெளிப்படுத்தி, “""போய் வாங்க மேடம்''”
அபி, பிரமித்து, நின்ற இடம்விட்டு நகராமல் 
நின்றாள்.  
"டேயாமே, டேய்! ஒரு பெண் பிள்ளை, அதிலும் அவலட்சணி... அவள் பின்னால் நாய்க்குட்டி போல ஒடுகிறாரே இவர்... எத்தனை டேய், எத்தனை டா, அடாடா! அட, மானம் கெட்ட மனுஷா'
""அட! என்னம்மா, இன்னும் இங்கயே நின்னுக்கிட்டு? வா'' சுப்பிரமணி திரும்பிவந்தான்.
அபிக்கு கால்களைப் பெயர்த்து நடக்கவே முடியவில்லை.  கண்கள் இருட்டியது. நா வறண்டது.
""ஏங்க, ஒரு சோடா வேணுமே? எதிர இருக்கிற பூங்கால உக்காருவமா?''” என்றாள்.
கைத் தாங்கலாக அவளைத் தெருவுக்குக் குறுக்கே நடத்திச் சென்றான்.  ஈரப்புல் இதம். அமர்ந்தாள்.  கோகோ கோலா வாங்கி வர ஓடினான். வந்தான்.
""என்னம்மா கலாட்டா பண்ற? இதைக் குடி..''” மெல்ல மெல்லப் பருகினாள்.
""ஏங்க அந்தப் பொம்பளை யாரு? உங்க ஆபீசரா?'' 
""பொம்பளை  யாரு? குயிலாம்பாவைக் கேக்கறியா? அது ஆபீசரும் இல்ல. கலெக்டரும் இல்ல. கிளார்க்குத்தான்''”
""உங்க ஆபீசா?''”
""ஆமா''
""நீங்களும் தானே கிளார்க்கு? ஏன், அவ எதிர கைகட்டி, வாய் பொத்தி நின்னீங்க?''”
சுப்பிரமணி புல்லைப் பிடுங்கிக் கடித்தான். “ஹி... ஹி...”
""சொல்லுங்க''”
 ""வந்து அபி... அவதான் எனக்குத் தினமும்
சம்பளம் குடுக்கிறவ''”
""சம்பள பில் போடற குமாஸ்தாவா?''”
""இல்ல இவளே, இவகிட்டத்தான் நான் தினமும்
வேல பாக்கறேன்.  இவதான் எனக்குப் படி
அளக்கறவ''
""புரியது, ஆபீஸ்ல இவளுக்கு உதவியாளர் நீங்க. இவ சீனியர்.  நீங்க ஜுனியர்...''”
""அதில்ல அபி. இவ பாத்து எனக்கு வேலைக்குடுத்தாத்தான் உண்டு. இவளாலத்தான் எனக்கு
வருமானம்''”
புரியலியே..''”
சுப்பிரமணி மௌனமாக இருந்தான்.  பிறகு திருதிருவென்று விழித்தான்.
""சரி, சொல்லிட்றேன் அபி. அந்த ஆபீஸ் சம்பளப் பட்டியலில் ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்துப் போட்டு சம்பளம் வாங்கறவன் இல்ல நான். எனக்குத் தினமும் குயிலாம்பா தரும் வெறும் அம்பது ரூபா''”
""ஆனா, நூத்துக் கணக்குல நிதம் உங்க கைல பணம் புரளுது?'' 
""ஆமாம். அதெல்லாம் ஆபீஸ்க்கு வர்ற பார்ட்டிங்க.  அவங்களுக்கு வேலையை முடிச்சுத் தர்றதுக்காக எனக்குத் தர்ற மேல் வரும்படி.  எனக்கு ஒண்ணுமே தெரியாதுப்பா. எப்படியோ வேலையை நீதான் முடிக்கணும்னு ஒரு பார்ட்டி வந்து என் கைல முந்நூறைத் திணிப்பார்.  அவருக்காக நானே ஃபாரம் எழுதி, குமாஸ்தா - சூப்ரண்டு - இன்ஸ்பெக்டர் பிற - ஆபீசர் என்று எல்லா லெவல்லயும் கையெழுத்து வாங்குவேன்.  நூறு ரூபாய் என் பையில் போகும்.  மீதி இருநூறைப் பிரிச்சு எல்லா மட்டத்திலும் எல்லாருக்கும் குடுத்துடுவேன்.  இப்படி எனக்கு ஒரு நாளைக்கு மூணு பார்ட்டி வந்தாலும் போதும். இப்படியே தான் பதினஞ்சு வருசம் ஓட்டினேன்.  எங்களுக்கு செக்ஷன் ரைட்டர்கள்னு பெயர். வேறு பெயரில் சொன்னால். என்னைப் போல ஆபீசில் பல டேய்கள்''”
சொல்லி ஓய்ந்தான் சுப்பிரமணி.
அதுதானா! அபிராமியின் வீட்டில் முதல் தேதி என்று வந்ததே இல்லை. மாதத்தில் பலமுறை ஒண்ணாந் தேதிதான்.  இவர்களின் வீட்டில் மாதக் கடைசி என்பதே இல்லை.  எப்போதும் பணப் புழக்கம்தான்.
"அப்பாவும் எப்படி ஏமாந்தார்? திருமணத்திற்கு முன்பு தீர விசாரிக்கத் தவறிவிட்டாரே!'
பூங்காவிலேயே இரவு முழுவதும் உட்கார்ந்திருக்க முடியுமா? சுப்பிரமணியனின் வண்டி புறப்பட்டது.
வீட்டுக் கதவைத் திறந்தனர்.  அவனுக்கு மட்டும் சாதம் பரிமாறினாள். படுத்தாள்.
சுப்பிரமணி கவலை இல்லாமல் குறட்டை விட்டுத் தூங்கினான்.
""டேயாமே, டேய் ! எவ்வளவு கேவலம்! ஒரு பொம்பளை, என் கணவனை... எவராவது கடிதத் தொடக்கத்தில் வணக்கம் போடாமல், சுப்பிரமணியனுக்கு எழுதிக் கொண்டது என்று கடிதம் எழுதினாலே இவனுக்குக் கோபம் வந்துவிடும். படிக்காமலே கடிதத்தைச் சுருட்டிக் கசக்கிக் குப்பையில் எறிந்துவிடுவான்.  அவனா இப்படி?
"டேய், சுப்பிரமணியா, டேய்'  அந்தக் குரல் காதிலேயே இருந்தது.   
அவளின் முகமும்...  பாவி, பொது இடம் என்று பாராமல் எத்தனை டேய்... மாட்டுக்காரனைக்கூட இந்நாளில் "டே' போட முடியாதே! இந்த மனுஷனும் மான, ரோஷம் கெட்டு...
அபிக்கு இரவு முழுவதும் உறக்கம் இல்லை. பெருமூச்சு, மூச்சு, ச்சு...
அதிகாலை ஐந்து மணிக்கு தினசரி எழுந்து விடுவாள் அபி. அன்று அவள் எழுந்திருக்கவில்லை.  சுப்பிரமணி ஆறரைக்கு எழுந்தபோது பக்கத்தில் அபியின் மெல்லிய குறட்டை கேட்டது.  கழுத்தில் தொட்டுப் பார்த்தான். அனலாகக் கொதித்தது.
சுப்பிரமணியனே காஸ் மூட்டி காப்பி போட்டு அபிக்கும் கொடுத்தான்.  தானே கடைக்குப் போய் காய் வாங்கி வர நினைத்தான்.  ஆனால் அவனது நேற்றைய பேண்டையும், சட்டையையும் இரவே சோப்புக் கரைசலில் நனைத்திருந்தாள் அபி.
""கொத்துச் சாவி குடும்மா.  பீரோலேந்து சலவைச் சட்டை எடுப்போம்''”
""சாவி... நேத்துப் பக்கத்துல வீட்ல ஏதோ சாவி தொலைஞ்சுதுன்னு  வாங்கினாங்க.  இன்னும் திருப்பித் தர்ல.  கேளுங்க''”
""போச்சி. பக்கத்து வூடு பூட்டி இருக்குதே!
நா எத்தப் போட்டுக்கிட்டு ஆபீஸ் போவேன் அபி கண்ணு? சரி  துண்டையாவது போத்திக் கிட்டுப் போய் காய் வாங்கியாறேன்''”
வண்டியின் பின் சக்கரத்திலும் ஆணிக் குத்தி காற்று  சுத்தமாக இறங்கி இருந்தது.  “ கஷ்ட காலம்டா சாமி!”
ரவை வாங்கி வந்து உப்புமா செய்தான்.
""அபி, உன்னையும் கூட்டிக்கிட்டுப் புறப்படறேன். தெரு முனைக் கடையில் புது பேண்ட், ஷர்ட் எடுக்கறேன்.  உன்ன டாக்டர் கிட்டக் காட்டி, ஆட்டோல ஏத்தி, உன் அம்மா வூட்ல உட்டு நா
ஆபீஸ் போறேன்.  சரியா?''”
""ஏங்க, எனக்கு மயக்கமும், தலைசுத்தலுமா இருக்குது. தயவு செஞ்சு நீங்க என்னை விட்டுப் போகாதீங்க.''”
""தைரியமா இரு அபி.  உனக்கு சாதா ஜுரம்தான்.  அம்மா ஊட்ல ரெஸ்ட் எடு.  எனக்கு ஆபீஸ்ல வேலை தலைக்கு மேலக் கிடக்கு''”
""சரி'' - எழுந்து தோட்டம் சென்றாள். 
""அய்யோ!''” - அலறினாள். தோட்டக் கதவு அருகில் கிணற்று மோட்டார் எஞ்ஜின். காலைப் பலமாகப் பதம் பார்த்துவிட்டது.  காலைப் பிடித்துக் கொண்டு துடித்தாள்.
""அபி, அபி, என்ன ஆச்சும்மா?''” - சுப்பிரமணி ஓடி வந்து தாங்கிப் பிடித்தான்.  “ 
""அடடா கால் இப்படி வீங்கிடிச்சே!''”
தூக்கி வந்து படுக்கையில் கிடத்தினான். தைலம் தேய்த்துவிட முட்டிவரை சேலையை உயர்த்தினான்.
""செஞ்சு கொடுங்க! எனக்கு ஒரு சத்தியம்''
""என்ன அபி இதெல்லாம் ?''
""பண்ணுங்க, என் தலையில் அடிச்சி''
""ம்... சரி''
""வாக்குத் தவற மாட்டீங்களே? தவறினீங்க, நா செத்துப் போயிருவேன்''
""சேச்சே!''
""அப்படின்னா, இனிமே நீங்க அந்த ஆபீஸ் படிய மிதிக்கக் கூடாது.  சரியா? எனக்குப் பணம் வேணாம், காசு வேணாம், வசதி வேணாம்.  இனி நீங்க டேய் கிடையாது.  பெருமை குலையாத என் புருஷன்'' அபி அவனை இறுகத் தழுவி புன்னகைத்தாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com