முகிலினி

முகிலினி

"முகில்குட்டி எழுந்திருமா... சீக்கிரமா கிளம்புடா ... வேன் வந்திடும்...''"அம்மா... சாயங்காலம் பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங்மா நீ சீக்கிரமா வந்திருமா... நான் காத்திட்டிருப்பேன்...''

"முகில்குட்டி எழுந்திருமா... சீக்கிரமா கிளம்புடா ... வேன் வந்திடும்...''
"அம்மா... சாயங்காலம் பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங்மா நீ சீக்கிரமா வந்திருமா... நான் காத்திட்டிருப்பேன்...''
" இல்ல செல்லம்... இன்னைக்கு அம்மாக்கு ஆபீஸ்ல ஆடிட்டிங்மா...அப்பாவ கூட்டிட்டு போடா செல்லம்... ப்ளீஸ்....''
"போம்மா... உனக்கு என்னவிட வேலைதான்
முக்கியம்...!''
கையை உதறிவிட்டு அப்பாவிடம் சென்றாள்.
" அப்பா... , அம்மா ரொம்ப பிஸியாம் நீங்களாச்சும் வாங்கப்பா... ப்ளீஸ்.''
கெஞ்சினாள்.
""சாரி முகிலினி... அப்பாக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் இருக்கும்மா...! சித்தப்பா கிட்ட சொல்றேன் நீ அவன்கூட போடா...''
" சரி போங்க ... யாருக்கும் என் மேல அக்கறையே இல்ல''
அழுதாள்.
" முகில், இப்படி அசடாட்டம் பேசாதே... நாங்க ஓடி ஓடி சம்பாதிக்கிறோமே எதுக்காக? எல்லாம் உன் ஒருத்திக்காக தானே... அத புரிஞ்சிக்காம இப்படி ஏன்டி அடம்பிடிக்கற... ? போ... போய் கிளம்பு சீக்கிரமா...''
அதட்டினாள் அம்மா கீர்த்தி.
பள்ளிக்குச் சென்றாள்.
அவள் தோழி இனியா தன் அப்பாவோடு ஸ்கூட்டரில் வந்திறங்கினாள். அவளைப் பார்த்தபடியே பெருமூச்சு விட்டாள் முகிலினி.
"இனியா, நீ ரொம்ப குடுத்துவச்சவடி...! தினமும் அப்பா கூட வர... உன் அப்பா உன்கூட நிறைய நேரம் செலவழிக்கிறார்ல...!''
ஏங்கினாள்.
" உனக்கென்னடி குறைச்சல்? நீ டாக்டர் மகள்.... என்ன கேட்டாலும் உடனே கிடைச்சுடும்... என் நிலை அப்படியா ? ''
"நீ சொல்றது சரிதான், நான் என்ன கேட்டாலும் உடனே கிடைக்கும் தான்!ஆனா நான் விரும்பறது என் அப்பாஅம்மாவோட அருகாமை தானே?
அவங்க வரவே ராத்திரி 10 மணியாகிடும், காலைல சீக்கிரமாவே கிளம்பிடுவாங்க...தனியாக இருந்து பாரு அப்ப தான் புரியும் என் வலி என்னன்னு?!''
" என்னடி சொல்ற அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க, உன்னை நல்லா வளர்க்க தானே... நீயும் கொஞ்சம் புரிஞ்சிக்கணும்டி''
" சரி விடு இனியா... என் வலிய யாராலையும் புரிஞ்சிக்க முடியாது! வா வகுப்புக்கு போகலாம்...''
மாலை மீட்டிங் முடிந்ததும், சித்தப்பாவுடன் வீடு வந்து சேர்ந்தவளின் முகம் வாடி இருந்தது.
" பானும்மா எனக்கு பசிக்கிது... என்ன இருக்கு?''
பதிலில்லாததால் உள்ளே சென்றாள், ஆயாம்மா பானு ஏதோ ஒரு சீரியலில் மூழ்கி இருந்தார்.
" பானும்மா, நான் எவ்வளவு நேரமா கத்திட்டு இருக்கேன் காதில விழலயா?!''
" இரு பாப்பா இந்த சீரியல் முடியட்டும் வந்து உப்புமா செஞ்சு தர்றேன்... நீ போய் வீட்டுப்பாடம் எழுதிட்டிரு... சரியா...''
"ஆமாம் ... பொல்லாத உப்புமா''
முணுமுணுத்தபடியே தன் அறைக்குள் போனவள் அழுதபடியே தூங்கிவிட்டாள். எவ்வளவு நேரம் தூங்கினாளோ தெரியவில்லை, திடீரென எழுந்து பார்த்தாள் இரவு மணி எட்டு.
வெளியே எட்டிப்பார்த்த முகிலினிக்கு இன்னும் டிவி பார்த்தபடி இருந்த பானுவை காண எரிச்சல் அதிகமானது. தலையில் அடித்துக்கொண்டு, " பானும்மா எனக்கு எப்ப தான் சாப்பாடு தருவீங்க?''
கேட்டாள்.
" இதோ 5 நிமிசம் பாப்பா... இந்த சீரியல் முடிஞ்சதுமே...!''
" உங்களையெல்லாம் திருத்தவே முடியாது... எப்படியோ போங்க...எனக்கு எதுவும் வேணாம்...''
கோபத்தில் வெளியே போய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது எதிர் வீட்டில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த
பேராசிரியர் தனபாலன், " என்ன முகிலினி, ஏன் ஒரு மாதிரி சோர்வா இருக்க? சாப்பிட்டியா?''
இல்லையென அவள் தலையாட்ட , " என்னம்மா இன்னமா சாப்பிடல?! ஏன் அந்த ஆயாம்மா என்ன பண்றாங்க... ? வா போய் கேப்போம்...!''
உள்ளே வந்தவர் ஆத்திரமாய் கத்தினார், "ஏன்மா இங்க பச்சபுள்ள பசியால் வாடி கிடக்கு உனக்கென்ன சீரியல் வேண்டிக்கிடக்கு... ? இவள பாத்துக்க தான சம்பளம் வாங்குற? போம்மா போய் சாப்பாடு தயார் பண்ணு''
" எல்லாம் எங்களுக்குத் தெரியும்... நீங்க உங்க வேலையைப் பாருங்க...'' கழுத்தை ஒரு வெட்டு வெட்டிய படியே சமையலறைக்குள் புகுந்தாள். பாத்திரத்தை உருட்டியபடி எரிச்சலுடன், " இந்த சனியன் சும்மா இருக்காம அந்தாள கூட்டிட்டு வந்து அக்கப்போர் பண்ணுது... ச்சே''
புலம்பிக்கொண்டிருந்தாள்.

இரவு நெடுநேரங்கழித்தே இருவரும் வந்து
சேர்ந்தனர்.
" பானும்மா, முகிலினி சாப்பிட்டாளா? வீட்டுப்
பாடம் எழுதினாளா?''
" அம்மா, பாப்பா உப்புமா மட்டும் போதும்னு சாப்பிட்டு படுத்துடுச்சுமா...''
" அப்படியா?!''
" அம்மா உங்களுக்கு என்ன சமைக்கட்டும்?''
" எங்களுக்கு ஒண்ணும் வேணாம்... வரும்போதே வெளிய சாப்பிட்டு தான் வர்றோம்... நீ சாப்பிட்டு போய் தூங்கு...''
" சரிங்கம்மா... அப்புறம் சாய்ங்காலத்திலேருந்தே பாப்பா ஒரு மாதிரியா சிடுசிடுன்னு தான் கத்திகிட்டு இருக்குமா... ஏன்னே தெரியல.?!''
" ஓ அதுவா... மீட்டிங்க்கு நாங்க வரலல்ல அதான் கோவத்தில இருப்பா...! காலைல சரியாயிடுவா... நீ போ...''
விடிந்தது. வேண்டா வெறுப்பாய் காலை வணக்கம்
சொன்ன முகிலினி, பள்ளிக்கு கிளம்பினாள். உதவிக்கு வந்த அம்மாவையும் புறந்தள்ளி விட்டு தன் உணவுப்பையை தானே எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.
"என்ன பொண்ணோ ... பத்து வயசுல இவ்வளவு கோபம் ஆகவே ஆகாதுப்பா...எப்படி சமாளிக்க போறேனோ இவள?''
மனதில் எண்ணிக்கொண்டாள் கீர்த்தி.
இதை ஏதும் அறியாத அப்பா முகுந்தன், " கீர்த்தி, முகிலினி எங்கே?''
"அதுவா? மேடம் கிளம்பிட்டாங்க கோசிக்கிட்டு...!''
" ஏன் நம்மளை புரிஞ்சிக்கவே மாட்றா...அவளுக்காக தான ராப்பகல் பாக்காம மருத்துவமனையில கிடக்கிறேன்''
" விடுங்க அவ சின்னப்புள்ள தான... போகப்போக புரிஞ்சுக்குவா''
இருவரும் கிளம்பிவிட்டனர் தத்தம் வேலைக்கு.
மாலை நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை முகிலினி. பதட்டமான ஆயாம்மா கீர்த்திக்கு
ஃபோன் அடித்து விவரத்தை சொல்ல அதிர்ச்சி
யானாள். கணவனுக்கு தொடர்பு கொண்டு செய்தியைச் சொல்ல இருவரும் அலறியடித்து வீடு வந்து சேர்ந்தனர்.
" அம்மா, பாப்பா எப்பவும் 5:30 மணிக்கெல்லாம் வந்திடும், இன்னைக்கு ஆறு மணியாகியும் வரல. அதான்மா உடனே உங்களுக்கு ஃபோன் பண்ணினேன்...''
" என்னங்க இப்ப என்ன பண்றது?!''
கவலையின் உச்சத்தில் இருந்த முகுந்தனை தோளில் தட்டி உசுப்பினாள்.
" எனக்கும் புரியல கீர்த்தி... எங்க போயிருப்பா?''
" ஏங்க நாம போலீஸுக்குப் போகலாமா? எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க... இப்ப காலம் ரொம்ப கெட்டுகிடக்குங்க...''
அழுதாள்.
" ஐயா, முதல்ல பள்ளிக்கூடத்தில போய் கேட்டுப்பார்க்கலாம்ங்க...''
சொன்னாள் ஆயாம்மா.
" ஆமாங்க, சீக்கிரமா கிளம்புங்க...''
கண்களைத் துடைத்தபடி எழுந்தாள் கீர்த்தி.
பள்ளிக்கு சென்ற போது செக்யூரிட்டி சிநேகப் புன்னகையுடன் வரவேற்றார்.
" டாக்டர் சார், என்ன இந்த நேரத்தில் வந்திருக்கீங்க..?.''
" முகிலினி இன்னும் வீட்டுக்கு வரல ... அதான்...!''
சொன்னவர் கண்கள் கலங்கின.
" சார், பாப்பா 5 மணிக்கே கிளம்பிடுச்சே...இன்னுமா வரல? இருங்க டிரைவர கேக்கறேன்''
டிரைவர் , " சார், பாப்பாவ நான் 5:30 மணிக்கே வீட்டில் இறக்கிவிட்டுட்டேனே...! இன்னும் வரல?!''
திகைத்தான்.
"சரிங்க நாம போலீஸுக்கே போயிருவோம்... என்ன ஆச்சோ தெரியலயே....''
கதறி அழுதாள்.
காவல் நிலையம்-
""டாக்டர் சார், என்ன சொல்றீங்க பொண்ண காணோமா? எப்ப எப்படி ன்னு கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?''
சில நிமிடங்களில் சொல்லிமுடிக்க, மோவாயில் யோசனையாய் கைவைத்தபடி கேட்டார் ஆய்வாளர், ""சார், உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?''
இல்லை என தொய்வாய் தலையாட்டினார் டாக்டர் முகுந்தன். கீர்த்தியும் உதட்டைப் பிதுக்கினாள்.
" ஆயாம்மா, உனக்கு எதுனா தெரியுமா? நீ தான் அதிக நேரம் குழந்தையோட இருக்கற... எதையும் மறைக்காதே... உனக்கு தெரிஞ்சத தயங்காமச் சொல்லு''
" எனக்கு ஒண்ணும் தெரியாதுங்கய்யா''
" பொண்ணு வீட்டுக்கு வந்ததும் விளையாட வெளியில எங்கயாவது போகுமா...இல்ல வீட்டிலயே தான் இருக்குமா?''
""வீட்டுக்கு வந்ததும் வீட்டுப்பாடம் எழுதும், அப்புறம் எதிர்த்த வீட்டுக்கு போய் பேசிகிட்டு இருக்குங்கய்யா...''
" எதிர்த்த வீட்டில் யார் இருக்காங்க சார்... ?''
" பேராசிரியர் தனபாலன்...''
" டாக்டர் சார், அவர் ஆள் எப்படி?''
" சார் , அவர பத்தி எனக்கு எதுவும் தெரியாது''
" என்ன சார் எதிர் வீட்டில் இருக்கிறவங்களயே தெரியலன்னு சொல்றீங்க?!''
" சார், இன்றைய சூழ்நிலையில் அப்பார்ட்மென்ட் குடியிருப்பில் யாருக்குமே யாரையும் தெரிஞ்சிக்க நேரமில்லையே... என்ன செய்றது சொல்லுங்க..?''
"அது சரி தான், உக்காந்து சாப்பிடக்கூட நேரமில்லாம ஃபாஸ்ட் புட் கடைல வெந்தும் வேகாம கிடச்சத சாப்பிட்டுட்டு ஓடுறாங்க ... என்ன வாழ்க்கையோ?''
"அத விடுங்க சார் என் பொண்ணு கிடைப்பாளா மாட்டாளா?''
கத்தினாள் கீர்த்தி.
" இங்க பாருங்கம்மா. நீங்க எல்லாரும் ஒத்துழைப்பு கொடுத்தா தான் எங்களால உதவ முடியும்... புரியுதா?''
"ஆயாம்மா, இங்க பாரு உனக்கு ஏதாவது நெருடலா பட்டா தயங்காம சொல்லு...''
" ஐயா, எனக்கு ஒருத்தன் மேல சந்தேகம் இருக்கு சொல்லட்டா?''
" ம்ம்... சொல்லு'' ஆர்வத்துடன் அருகே வந்தார்.
" ஐயா, வாத்தியார் நல்ல மனுசன் தான்... ஆனா...''
இழுத்தாள்.
"என்ன இழுக்கற... சீக்கிரமா சொல்லு''
"அவர் மகன் கெளதம் தான் ஒரு மாதிரியா இருப்பான்''
என்ன என்பது போல் அவர் புருவத்தை உயர்த்த, தொடர்ந்தாள்''
தண்ணி சிகரெட்ன்னு சுத்திட்டு இருப்பான்... அதான்...''
" இன்னைக்கு பாதி பேருக்கு இந்த பழக்கமெல்லாம் இருக்கு... எப்படி அவன் மேல சந்தேகப்படறது?''
" என்ன சார் நீங்க... சின்ன வெளிச்சம்கூட கிடைக்காம இருந்திச்சி... இப்ப ஒரு மெழுகுவத்தியே கிடைச்சிருக்கு, போய் அந்தப் பயல உலுக்கிப் பாப்போம் சார் ... வாங்க''
உசுப்பினார் அருகிலிருந்த ஏட்டு.

பேராசிரியர் தனபாலன் வீடு-
பேராசிரியர் வெளியே சென்றிருக்க, கௌதம் மட்டும் டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது வந்த போலீஸ்," தம்பி எங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சி தான் வந்திருக்கோம், உண்மைய சொல்லிட்டீனா உனக்கு நல்லது... இல்லைனா லாக்கப் தான்.... புரியுதா?''
ஏட்டு உறும,
" சார், சத்தியமா எனக்கு ஒண்ணும் தெரியாது... என்ன விட்டுடுங்க...ப்ளீஸ்...''
கெஞ்சினான் கெளதம்.
" நீ இப்படில்லாம் சொன்னா கேட்கமாட்ட, யோவ் ஏத்துயா ஜீப்பில ஸ்டேசன் கொண்டு போனா தான் இவன் வாயிலேருந்து உண்மை வரும்!''
" சார்... சார்... விட்டுடுங்க சார்... எனக்கு எதுவுமே தெரியாது...''
அவனை இழுத்துக் கொண்டு வெளியே வர , எதிரில் முகிலினி நிற்பதைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி.
" கையை எடுங்க சார் அண்ணன் சட்டைலேருந்து... யார் எத சொன்னாலும் கைய வச்சிடுவீங்களா? விசாரிக்க மாட்டீங்களா?''
" இப்ப என்ன நடந்ததுனு நானே சொல்றேன்... என்னை யாரும் கடத்தல... நானே தான் என்னை கடத்திக்கிட்டேன்''
" என்ன சொல்ற பாப்பா... ? யாருக்கும் பயப்படாத... தைரியமா சொல்லு...''
கேட்டாள் ஆயம்மா.
" ச்சீ... வாய் மூடு, என்ன பாத்துக்கறேன்னு சொல்லிட்டு நீ உன்னை மட்டுமே பாத்துக்கற... சாப்பாடு கேட்டா சீரியல்ல மூழ்கி கிடக்கற... அன்னைக்கி ஏன் இப்படி பண்றன்னு அந்த புரபஸர் மாமா கேட்டத மனசுல வச்சிக்கிட்டு இப்படியா வீண்பழி போடுவ? உன்கிட்ட பேசவே பிடிக்கல... எட்ட போ''
கத்தினாள் முகிலினி.
" அண்ணா சாரி ... என்னால தான இவ்வளவு பிரச்சினையும் உங்களுக்கு...''
" எங்கடி போன இவ்வளவு நேரமா? எங்கெல்லாம் தேடறது...!''
கோபத்தின் உச்சஸ்தாயில் கத்தினாள் கீர்த்தி.
" ஏன்மா இன்னைக்கு இப்படி கத்துறியே, என்னைக்காவது என்னை பத்தி யோசிச்சிருக்கியா? நான் பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வந்த மிச்ச நேரத்தில் எல்லாம் யாரும் இல்லாமல் தனிமைல உக்காந்திருப்பேன்... ரொம்ப கஷ்டமா இருக்கும்... உன்னால ஒரு மணி நேரம் தனியா உட்காந்திருக்க முடியுமா?''
"...........'' மெளனமே குடி கொண்டிருந்தது .
"நான் தனியா உட்கார்ந்து அழுதுட்டு இருப்பேன்... ஆறுதலா என்கிட்ட பேசறது இந்த அண்ணனும் புரபஸர் மாமாவுந்தான் , அவங்கள போய் தப்பா நெனச்சி அடிச்சிட்டீங்களே''
" ஏன் உன்ன பாத்துக்க தான் பானும்மா இருக்காங்களே?! அப்புறமென்ன?''
" ஏன்மா, உன்ன ஒண்ணு கேட்கட்டுமா ? ஆயம்மாவ நம்பி உன் பர்ஸ், மொபைல் வச்சிட்டு வெளியே போவியா? சொல்லுமா ''
சில நிமிடங்கள் மெளனத்திற்குப் பின் மெதுவாக தலையாட்டினாள் "இல்லை'' என.
" அப்படின்னா, என்ன மட்டும் எப்படிம்மா அவங்கள நம்பி விட்டுட்டு போற?''
அதிர்ந்தே விட்டனர் அனைவரும்.
" சரியா கேட்ட பாப்பா... சூப்பர்!''
கைகொடுத்தார் ஆய்வாளர்.
" சரிம்மா எங்க தான் போன ? உன்ன காணாம்னு பதறிப்போய் ஹாஸ்பிட்டல்ல பாதிவேலைகள அப்படியே விட்டுட்டு வந்திருக்கிறேன்... சீக்கிரமா சொல்லுமா''
" அப்பா, உங்களுக்கு உங்க நோயாளிகள் தான் முக்கியம்... என்ன பத்தி என்னைக்கு கவலைபட்டிருக்கீங்க? அவங்க எந்த ஊரு, அவங்களுக்கு எத்தன பசங்க, என்ன படிக்கிறாங்க... எல்லாமே அக்கறையா தெரிஞ்சு வச்சிருப்பீங்க, ஆனா பெத்த பொண்ணு எப்படி இருக்கிறா, என்ன படிக்கிறா ? சாப்பிட்டாளா... இல்லையா? அதப்பத்தி என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களாப்பா?''
கண்கலங்கியவளை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டபடி, " சாரி செல்லம், உன் ஏக்கத்த நாங்க சரியா புரிஞ்சிக்காம வேலை , சம்பாத்யம்னு ஓடிட்டே இருந்திட்டோம்... எங்க மேல தப்பு தான்மா... இனிமே நாங்க எங்கள மாத்திக்கறோம்''
"நீ தான்மா எங்களுக்கு எல்லாமே... உனக்காக தான்மா நாங்க ஓடிஓடி சம்பாதிக்கறோம்''
என்றாள் கீர்த்தி.
" சரிம்மா... நீங்க சம்பாதிங்க நான் வேணாம்னு சொல்லல... எனக்கு வேண்டியதெல்லாம் உங்க கூட நான் மகிழ்ச்சியா பேசணும், விளையாடணும், வெளியே போகணும், கதை கேட்கணும் இப்படி பல கனவுகள் எனக்கு இருக்கு... அந்தந்த ஆசைகள் அந்தந்த வயசுல கிடைக்கணும்மா... அத விட்டுட்டு பணத்துக்குப் பின்னாடி ஓடி ஓடி நிறைய சம்பாதிச்சுட்டு திரும்பி பார்த்தா நாம வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கை வெறும் கானல் நீராய் சிரிக்கும்மா ''
" உண்மை தான் பாப்பா , பல குழந்தைகளோட எதிர்பார்ப்புகள நீ ரொம்ப அழகா சொல்லிருக்க...''
சிலாகித்தார் ஏட்டு.
" சரிடா செல்லம், இனிமே எந்த வேலையா இருந்தாலும் அப்பா 7 மணிக்கே வந்திடறேன், உன்கூடவே இருக்கேன்... என்ன சரியா... சிரிம்மா...''
"அம்மாவும் மாலை 6 மணிக்கே வந்து என் முகில்குட்டிய நல்லா பாத்துக்கறேன்டா...''
" இப்பவாவது சொல்லு பாப்பா இவ்வளவு நேரம் எங்கிருந்த?''
கெளதம் கேட்க,
" நான் இவ்வளவு நேரமா மாடியில தான் இருந்தேன்... நான் காணாம போயிட்டாலாவது என்னை தேடுவாங்களா, இல்ல அப்பவும் வேலை தான் முக்கியம்னு போவாங்களான்னு தெரிஞ்சிக்க தான் இப்படி என்னை நானே கடத்திக்கிட்டேன்...!''
தேம்பினாள்.
பிஞ்சு முகம் வாடி இருக்க " ஐயோ பாப்பா, என்ன மன்னிச்சுடுமா...''
என்றாள் ஆயம்மா.
எல்லார் விழிகளிலும் இனம்புரியா கண்ணீர் துளிகள், இமைகளைக் கடந்து கீழே விழத் தயாராய் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com