கேமரா கண்கள்

கேமரா கண்கள் எனக்கு வாய்த்திருப்பது அதிசயமானது அல்ல; பயம் கவ்வச் செய்யும் பிசாசின் வடிவம் என அரண்டு போய் குமைந்து கொண்டிருக்கிறேன்
கேமரா கண்கள்

கேமரா கண்கள் எனக்கு வாய்த்திருப்பது அதிசயமானது அல்ல; பயம் கவ்வச் செய்யும் பிசாசின் வடிவம் என அரண்டு போய் குமைந்து கொண்டிருக்கிறேன்.
மனதில் அவிழ்க்க முடியாத குழப்பங்கள் நிரம்பியவனாக அலுவலகம் செல்ல ஆயத்தமானேன். பெண் வீட்டாரை நம்ப வைக்கும் ஒரு பொய்யை மனது திட்டமிட்டது. இயல்பாக அந்தப் பொய்யை அவர்களை நம்ப வைக்கத் தேவையான நுட்பங்களை ஆடியின் முன்னாள் நான் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். 
ஆரோக்கிய குறைபாடு, தீராத வியாதி. இதில் எதனைச் சொன்னால் திருமணத்தை இல்லாமல் செய்ய முடியும் என சிந்தனை விரிந்தது. கேள்வி, அதன் பின் எழும் கேள்விகளுக்கெல்லாம் நான் சொல்லும் பொய் இடம் தந்து விடாமல் இருக்க வேண்டும் என சூட்சுமப் பதில்களைத் தயாரித்தேன். 
அலுவலகம் செல்லும் வழியில், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குச் சென்றேன். இந்த அழுத்தங்கள், இல்லவே இல்லை என்பது போல உருமாறினேன். உயரதிகாரிகளுடனான ஆலோசனை சாகசத்தை ஏற்கும் மனதுடையவனாக என்னை மாற்றியது. அடுத்து என்ன சாகசம் செய்யப் போகிறேன்? பொம்மைகள் விற்கும் கடையில் நுழையும் பிள்ளை, விளையாட்டுப் பொருள் ஒன்றைப் பார்த்து வியந்து அடுத்ததைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்து அடுத்தடுத்து அதிசயித்து லயிப்பது போல நானும் மாறி விடுகிறேன்.
புதிதாக என்ன சாகசம் செய்ய காவல்துறை ஆணையர் உத்தரவிடப் போகிறாரோ என மூளையை குழம்ப விட்டேன்.
காக்கி உடையில் தங்களை ஒப்புவித்துக் கொண்ட அசையும் சிலைகள் சூழ நான் அந்த அறையில் நேரம் கடத்தினேன். ஆணையரின் வருகையை உணர்ந்த அதிகாரிகளின் செயல்பாடுகளால் அறையின் பாரம் அதிகரித்தது. என்னைத் தவிர மற்ற அதிகாரிகள் எல்லாம், மூச்சை அடக்கி விட்டு அறையில் அமைதியை பாய்ச்சினர். 
"வாம்பன், இது கொஞ்சம் டிஃப்ரண்ட்டான கேஸ்'' அறைக்குள்ளே வந்த, ஆணையரின் பார்வை எனை நோக்கிப் பாய்ந்தது. 
சற்று வாயைத் திறந்து வலது புற மீசையைச் சொறிந்தவனாக, சிந்திக்கும் பாவனையில் அவரைப் பார்த்தேன். நீள் வட்ட நாற்காலியைச் சுற்றி அறையப்பட்டது போல் அமர்ந்திருந்தவர்களில் நான், ஆணையருக்கு நேர் எதிரில் இருந்தேன். 
"எனக்கு ஸ்ட்ராங்கான ஆதாரம் வேணும்... ஐடியா எல்லாமே வழக்கம் போல உங்களோடதுதான்...'' சொல்லி விட்டு, மற்ற அதிகாரிகளுக்கு கண்களாலேயே உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு ஆணையர் புறப்பட்டார். 
பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கோப்புகளில் உள்ள புலனாய்வு சமாச்சாரங்களை விலாவரித்தனர். நான் பிரதிமையாக மாறி, பெண் வீட்டாரைச் சமாளிக்கும் யுக்திகளின் கவலைகளுக்கு மீண்டும் திரும்பினேன்.
"வாம்பன், நீங்க பணம் வாங்குறது மாதிரி 
ஃபோட்டோ வேணும். எல்லாமே ஹவாலா பணம்தான். பேங்க் டிரான்ஸ்சாக்ஷன் கிடையாது. ஒன்லி கேஷ் டெலிவரி. அந்தப் புள்ளி சிக்குறதுக்கான ஆதாரம்தான் நம்மள்ட்ட இல்ல. அதுக்குத்தான் உங்கள அனுப்புறோம். உங்களுக்குப் பணம் வர்ரது மாதிரி நாங்க ஏற்பாடு பண்ணிட்டோம். நீங்க பணம் வாங்குற மாதிரி ஃபோட்டோ தேவை. அவ்ளோதான்...''
"ஓகே...சார்...''
"ஆர் யூ நார்மல்...? கெட் அப் சேஞ்ச் பண்ண மறந்திடாதீங்க வாம்பன்...''
எனது கவனம் என்னிடம் இல்லாததை அறிந்த ஏசி எச்சரிக்கை செய்தார்.
கல்லூரி கேண்டீனில் அமர்ந்திருந்த நான், என் முக அடையாளத்தைக் காட்டி என் செல்ஃபோனை திறந்தேன். வழக்கத்துக்கு மாறாக கேலரி திறந்து காட்டியது. கேலரியைத் திறந்தே வைத்து போன் ஸ்கிரீனை ஆஃப் செய்து கொண்டதாக நினைத்தேன். ஆனால் அப்படிச் செய்வது என் வழக்கமில்லை. கேமரா ஃபோல்டரில் புதிய ஃபோட்டோக்கள் இருப்பதைப் பார்த்து பயந்து போனேன். 
என் முக அடையாளத்தை வைத்து மட்டுமே உள்நுழைய முடிந்த, என் போனை யாரோ எடுத்து பயன்படுத்தி போட்டோ பிடித்திருப்பதாக சந்தேகம் எழுந்தது. 
ஆசிரியர் பாடம் நடத்துவது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த நண்பர்கள், இடதுபுறம் இருந்த மாணவிகளில் சிலர்... என சற்று முன்பு நான் இருந்த வகுப்பறைக் காட்சிகள் அதில் இருந்தன. ஃபோட்டோக்களை நோட்டமிட்ட எனக்கு தலை சுற்றியது. 
யார் என் மொபைலை எடுத்தது? என்னுடைய பேக்-இல் தானே போன் இருந்தது? குழப்பத்தில் நண்பர்களில் சிலரைச் சந்தேகப்பட்டேன். 
கேண்டீனில் சாப்பிட்டு விட்டு மீண்டும் வகுப்புக்குச் சென்றேன். பாடத்தில் கவனம் செல்ல மனம் மறுத்தது. என் மொபைலை திருட்டுத்தனமாக எடுத்தது யார் என்பதை அறிந்து கொள்வதை விட, என் முக அமைப்பு இல்லாமல் எப்படி மொபைலை திறந்திருக்க முடியும் என்பதிலேயே என் சிந்தனை வட்டமிட்டது. 
"என்னடா மாப்ள... ரொம்ப நேரமா எதையோ திங்க் பண்ணிட்டிருக்க'' நண்பன் கேட்டான். அவன் மீது எனக்கு சந்தேகம் வலுத்தது.
"இங்க பாருடா... உன் கண்ணு ஏன் இப்படி துடிக்குது..?'' 
அவனைப் பார்த்து மூன்று முறை என் புருவங்கள் வெட்டி மூடித் திறந்தன. 
"தெரியலடா... இன்னிக்குத்தான் இப்படி இருக்குது. கண்ணுல பெயின் எதுவும் இல்ல....இருந்தாலும் டாக்டர்ட்ட கன்ஸல்ட் பண்ணனும்...'' 
கல்லூரி முடிந்து வீடு வந்து சோர்வு போக்கி, டிவி பார்த்து பொழுதைக் கழித்தேன். இரவு தூங்கும் போது, வாட்ஸ் அப் மெúஸஜ் பார்ப்பதற்காக மொபைலைத் திறந்தேன். ஃபோட்டோ கேலரியே திறந்தது. ஏகப்பட்ட புதிய ஃபோட்டோக்கள் விழுந்தன. 
எனக்கு மீண்டும் ஆச்சரியம் வழிந்தது. பயமும் அதிகரித்தது. யார் என் மொபைலை திருட்டுத்தனமாக பயன்படுத்துவது? என்னிடம்தான் போன் இருந்தது, ஒரு வேளை இணையம் வழி யாராவது உளவு பார்க்கும் வகையில் கண்காணிக்கப்பட்டு என் போன் பயன்படுத்தப்படுகிறதா? 
முதலில் கேலரியில் துளாவினேன். வகுப்பறைக் காட்சிகள், பைக்கில் வரும் போது எதிர்ப்பட்ட காட்சிகள், வீட்டில் வைத்து சில காட்சிகள் என படங்கள் விரிந்தன. 
எங்கேயோ தவறு நடக்கிறது, யாரோ நம்மை கண்காணிக்கிறார்கள் என பொறி தட்டியது. அதனைக் கண்டுபிடிப்பதற்காக, மொபலை லேப் டாப்போடு இணைத்தேன். 
கூகுளில் என் போன் மாடலைக் கொடுத்து, இணையத்தில் தேடினேன். முக அடையாளத்தின் வழி போனில் உள் நுழைவது மிகவும் பாதுகாப்பான அம்சம்
என்றே பெரும்பாலான தளங்கள் பரிந்துரைத்தன. 
ஃபோட்டோக்களை லேப்டாப்பிற்கு கொண்டு வந்து கவனமாக ஆராய்ந்தேன். அதன் கோணங்கள், படங்களில் தெரியும் பொருட்கள் என நுணுக்கமாக ஒவ்வொரு ஃபோட்டோவையும் நீண்ட நேரம் 
பார்த்தேன். 
சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்குச் சென்ற போது, நண்பன் உன் கண் துடிப்பதாக கேட்டானல்லவா... அவன் படமும் துல்லியமாகப் பதிந்திருந்தது. அவன் மேல்தான் எனக்கு சந்தேகம். அவன் என் மொபைலை பயன்படுத்தியிருந்தால் எப்படி அவன் படம் கேலரியில் வந்திருக்க முடியும்? 
என் கண் இமைகள் மூன்று முறை துடித்தன. நீண்ட நேரம் இல்லாத பிரச்னை இப்போது மீண்டும் 
தொடங்கியது. 
"டேய் வந்து பாலைக் குடிச்சிட்டு போய் 
தூங்குடா... ரொம்ப நேரம் சிஸ்டம் ல உட்காரத''
அம்மாவிடம் பால் டம்ப்ளரை வாங்கும் போதும் கண் இமைகள் வெட்டின. 
அறைக்கு வந்து முகத்தைக் காட்டி மொபைலைத் திறந்தேன். கேலரியிலேயே மீண்டும் மொபைல் திறந்தது. அச்சத்தில் அம்மா என்று அலறியவனாக மொபைலை வீசினேன். தலையணையில் விழுந்து துள்ளியது மொபைல். 
"என்னடா... என்ன ஆச்சு...'' அம்மா பதறிக் கொண்டே வந்தாள். 
"ஒண்ணுமில்லேம்மா... கரப்பான்பூச்சி'' அம்மாவைச் சமாளித்து அனுப்பினேன். 
பற்ற வைக்கும் போதே வெடித்து விடுமோ என அஞ்சி வெடியை பற்ற வைப்பது போல, மொபைலை எடுத்தேன். சற்று முன்பு மொபைலை லேப்டாப்போடு இணைத்து அதிலிருந்த காட்சிகளை ஆய்வு செய்த, அந்தக் கணங்களையும் கூட இப்போது படமாக்கி இருந்தது மொபைல். கேலரி விரிந்தது. அழகழகாக வர்ண ஜாலம் ஜொலித்து வாண வேடிக்கை காட்டிய சிலிர்ப்பை உணர்ந்தேன். 
இது தொழில்நுட்ப களவாடல் பிரச்னை இல்லை என்பது சட்டென பிடிபட்டது. ஏதோ அமானுஷ்ய சக்தி என் தலைக்கு மேலே மேகம் விரிப்பதாக உணர்ந்தேன். 
எழுந்து என் அலமாரியில் இருந்த புத்தகங்களைப் பார்த்தேன். உடுப்புகள் தொங்கவிட்டிருப்பதைப் பார்த்தேன். டேபிளில் இருந்த படித்துப் புரட்டிய தினசரிகளைப் பார்த்தேன். கட்டிலுக்கு கீழே இருந்த புதிதாக வாங்கிய ஷூக்களைப் பார்த்தேன். ஒளி குறைந்த அந்த இடத்தில் ஷூக்களை கூர்ந்து கவனித்த போது கண் இமைகள் வெட்டின. 
தீர்வு ஓரளவுக்கு எட்டியவன் போல ஆசுவாசமாக, என் முக அடையாளத்தைக் காட்டி மொபைலைத் திறந்தேன். இப்போதும் கேலரியே ஸ்கிரீனில் திறந்தது. ஆனால் ஒரு படம் மட்டுமே இருந்தது. அது கட்டிலின் அடியில் இருந்த ஷூக்கள். 
ஒரு முக்கியமான குறிப்பு எனக்கு கிடைத்து விட்ட உற்சாகம் தொற்றிக் கொண்டது. கண் இமைகளை சிமிட்டுவதற்கும் இந்த சித்து விளையாட்டுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகத் தீர்மானித்தேன். 
அதே காட்சிகளை கண் இமைகளைச் சிமிட்டிச் சிமிட்டி மீண்டும் ஒருமுறை பார்த்தேன். 
மொபைலைத் திறந்தால், அலமாரியில் புத்தகங்கள், ஆடைகள், நாளிதழ்கள், ஷூக்கள்...அத்தனையும் கேலரியில் படங்களாக மின்னின. 
ஆஹா...பாலைவனத்தில் காணாமல் போன ஒட்டகத்தை கண்டுபிடித்த நாடோடியைப் போல மகிழ்ச்சியில் மனம் ஆகாசத்தை தொட்டு குதித்தது. 
கேமராவின் ஷட்டரைப் போல மூன்று முறை கண் இமைகளை வெட்டி மூடினால் நான் பார்க்கும் காட்சி பதிவாகிறது. மொபைலைத் திறந்தால் பதிவான படங்கள் பதிவிறக்கமாகி விடுகிறது. இதுதான் அந்த மந்திர சக்தி. கண்களைப் போல் கேமரா இயங்குகிறது. எனக்கோ, கண்களே கேமராவாக வரம் பெற்றேன். 
அதிசய சக்தி வாய்க்கப் பெற்றவர்கள், அதனை வெளியே சொன்னால் அற்புதம் பலிக்காது என எப்போதோ படித்த வரிகள் நினைவுக்கு வந்தது. 
கேமரா கண்கள் வித்தையை யாரிடமும் சொல்லாமல் பொத்தி பொத்தி பாதுகாத்தேன். இதற்குப் பின்பு என் மொபைல் கேலரியையும் யாரையும் பார்க்க நான் அனுமதிக்கவில்லை. இந்த அற்புத சக்தியை சோதித்துப் பார்த்து மகிழ, மலை, கடல், நதி என சுற்றித் திரிந்து ஒளியைப் பருகி அழகிய காட்சிகளைப் படமாக்கினேன். அதில் சில படங்களை என் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தேன். என்னுடைய கலைத் திறமையை நண்பர்கள் வியந்தனர். ஆனால் நான் யாரிடமும் என் கண்களின் மேஜிக் சக்தியைப் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டதில்லை. 
ஐடி துறையில் பணியில் சேர்ந்தேன். சாலை விபத்து ஒன்றில், என் கண்களால் கிளிக்கிய ஃபோட்டோ, ஆதாரமாக போலீசுக்குப் பயன்பட்டது. அது முதல் போலீஸ் கமிஷனரோடு நட்பு. தொழில்நுட்ப அறிவு அதிகம் இருப்பதாகவும், நவீன உபகரணம் கொண்டு ரகசியமாக நான் படம் பிடிப்பதாகவும் காவல்துறை நம்பியது. 
16 வழக்குகளில் ஆதாரங்களைப் போலீசுக்கு கொடுத்துள்ளேன். இது 17-வது வழக்கு. 
அங்க அடையாளங்களை மாற்றி, அதிகாரிகள் சொன்ன இடத்துக்குப் போனேன். பாதுகாப்பு சோதனை கெடுபிடிகள் அதிகம் இருந்தன. உடலை முழுவதும் சோதித்து விட்டு, மொபைலை பிடுங்கிக் கொண்டார்கள். எனக்கு வந்த ஹவாலா பணத்தை வாங்கும் போது, கண்களைச் சிமிட்டினேன். 
வெளியே வந்து அவசர, அவசரமாக அந்தப் படங்களை கமிஷனருக்கு அனுப்பி வைத்தேன். இனிமேலும் தாமதிக்கக் கூடாது என போன் போட்டேன். 
"அங்கிள் நான் வாம்பன் பேசுறேன்...'' 
"சொல்லுங்க தம்பி...''
திட்டமிட்டது போல, ஆத்ம ஞானி மாதிரி அதிகம் பேசாமல், சரியாக விஷயத்தை சொல்லி விட வேண்டும் என்பதில் கவனமாகப் பேசினேன்.
"எனக்கு கொஞ்சம் ஹெல்த் பிரச்னை இருக்கு... அதனால இப்ப எனக்கு மேரேஜ்ல விருப்பமில்ல அங்கிள்''
பழகிய நண்பரைப் போல... "கொஞ்சம்தானே 
பிரச்னை சரி பண்ணிக்கலாம்...தம்பி'' என்றார்.
"இல்ல அங்கிள்...அது...அது...'' சுருக்கமாக பேச வேண்டும் என்ற என் தவத்தைக் கலைத்து என்னை அதிகம் பேச வைத்தார்.
"சொல்லுங்க...தயங்காம சொல்லுங்க...''
"என் ஹெல்த் பிரச்னை இல்லற வாழ்க்கைக்கும் பிரச்னை...''
எதிர் முனையில் சிரித்து விட்டார். "யாரையாவது லவ் பண்றீங்களா தம்பி...'' இயல்பாகக் கேட்டார்.
நான் அமைதியாக இருந்தேன். இருபுறமும் மவுனம் நீடித்தது.
"கல்யாணம் பண்ணினா எல்லாம் சரியாயிடும் 
தம்பி...நான் அப்பாட்ட பேசுறேன்''அவர் போனை வைத்துவிட்டார்.
இந்த மனுசனுக்கு என் பிரச்னை எப்படி புரியும்? யாரிடம் நான் போய் சொல்ல முடியும்? திருமண பேச்சை எடுத்ததில் இருந்து கேமரா கண்கள் பெரும் சாபமாக எனத் தோன்றின. இப்படி ஒரு சுழலுக்குள் சிக்குவேன் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அழகை கவ்விய கண்கள், போலீசுக்கு உதவிய கண்கள் என் இல்லற வாழ்க்கைக்கு சூன்யம் இட்டு விடுமோ எனப் பயந்தேன். 
மனைவியோடு தனிமையில் இருக்கும் என் இமைகள் சிமிட்டினால்...நினைக்கவே அருவருப்பாகவும் அச்சமாகவும் இருந்தது. இந்தச் சிக்கலை நான் எப்படி குடும்பத்தினரிடம் புரிய வைக்க முடியும்...இப்போதைக்கு திருமணமே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்தேன். 
உடல் நலம் சார்ந்த என் முறைப்பாடுகள் பெண் வீட்டிலும், என் வீட்டிலும் பலிக்கவில்லை. எல்லா எதிர்ப்பையும் மீறி திருமணம் நடந்தது. முதலிரவும் மிகுந்த உற்சாகத்தோடு முடிந்தது. நானும் பலமுறை கண்களைச் சிமிட்டியிருந்தேன். காலையில் மொபைலைத் திறந்தேன். அருகில் அமர்ந்த மனைவி, போனை வாங்கினாள். ஒரு வித பதற்றத்தோடு, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், போனை அவளிடம் கொடுத்தேன். கேலரியைப் பார்த்தாள். 
"என்னங்க...ஒரே கறுப்பு கறுப்பு ஃபோட்டோவா இருக்கு...'' எட்டிப் பார்த்த எனக்கு சில படங்கள் தெரிந்தன. 
"நிறைய கறுப்பு ஃபோட்டாவா இருக்கே...''
"உனக்கு அதெல்லாம் கறுப்பா தெரியுதா...?''
"ஏங்க...கறுப்பா இருந்தா கறுப்பாத்தானே 
தெரியும்...''
"யாராவது வாட்ஸ் அப்ல தெரியாம அனுப்பியிருப்பாங்க...'' 
என் மொபைலில் உள்ள என் கண்கள் சிமிட்டும் ஃபோட்டோக்கள் எனக்கு மட்டுமே தெரிவதை மனைவி மூலம் கண்டுபிடித்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com