சுயசரிதை எழுத வேண்டிய நேரம் வரவில்லை! மித்தாலி ராஜ்

சமீபத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தோற்கடித்ததில் மித்தாலியின் பங்கும் உண்டு.
சுயசரிதை எழுத வேண்டிய நேரம் வரவில்லை! மித்தாலி ராஜ்

சமீபத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தோற்கடித்ததில் மித்தாலியின் பங்கும் உண்டு. அப்போதுதான் மித்தாலி "இருபதாண்டு காலம் தாண்டிய சாதனையை நிகழ்த்தினார். தனது சாதனை... உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவு குறித்து மித்தாலி மனம் திறக்கிறார்.
 "நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் எல்லாம் ஒரு கனவாக இருக்கிறது. பின்னால் திரும்பிப் பார்த்தால் கடந்து போனது இருபது ஆண்டுகளா? என்று மலைப்பாக இருக்கிறது. இன்றைக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு ஏதோ சில ஆண்டுகள்தான் ஆகின்றன என்றுதான் நான் உணர்கிறேன். அதனால் இந்த இருபது ஆண்டுகள் நம்ப முடியாத பயணமாகவே எனக்குப் படுகிறது.
 நான் பதினாறு வயதில் கிரிக்கெட் ஆடத் தொடங்கும் போது, அடுத்த ஆட்டத்தில் ஆட எனக்கு அழைப்பு வருமா? என்று தெரியாது. பல சந்தர்ப்பங்களில் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போட்டுவிடலாம் என்று கூட நான் சிந்தித்ததுண்டு. ஆனால் ஏதோ ஒன்று என்னைத் தடுத்துக் கொண்டேயிருந்தது. இருபது ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டைத் தொடர்ந்து என்னால் ஆட முடியும் என்று ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.
 வரும் காலங்களில் ஆட்டத்திற்கு என்னைப் பொருத்தமானவளாக ஆக்கிக் கொள்ள பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். எங்களால் கிரிக்கெட்டில் சில புதுமுகங்களைக் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. அவர்கள் பட்டை தீட்டப்படுகிறார்கள். எனவே இந்திய மகளிர் கிரிக்கெட் ஆட்டத்திற்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
 இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பிரபல ஆட்டக்காரராக சவுரவ் கங்குலி தலைவராகியிருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஒவ்வோர் ஆட்டக்காரரும் எத்தனை சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று ஆட்டக்காரரான கங்குலிக்குத் தெரியும். அவரது அனுபவம் அவற்றை உரியவிதத்தில் புரிந்து கொள்ள வைக்கும். கங்குலி வங்காள கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த போது மாநில அளவில் மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தை முன்னேற்ற பலவகைகளில் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குத் தலைவராக இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கும் நிச்சயமாகப் பங்களிப்பு செய்வார் என்று நம்புகிறேன்.
 நான் விளையாடிக் கொண்டிருப்பதால் சுய சரிதை எழுத வேண்டிய நேரம் இன்னமும் உருவாகவில்லை. ஒரு வீராங்கனையாக விளையாட்டு துறையில் எவற்றை நான் எதிர் கொண்டேனோ அவையனைத்தையும் சுய சரிதையில் நிச்சயமாகப் பதிவு செய்வேன்.
 சமீபத்தில் எனக்கு தமிழ் தெரியாது என்று ஒருவர் பதிவு போட.. பதிலுக்கு "நான் தமிழச்சி' என்று பதிவு போட்டது வைரலானது. பொதுவாக என்னைக் கேலி செய்து போடப்படும் பதிவுகளுக்கு எதிர்ப்பதிவு நான் போடுவதில்லை. இது கொஞ்சம் எல்லை மீறியதாக எனக்குப்பட்டது. எனது ஆட்டம் குறித்து யாரும் விமர்சனம் செய்யலாம்... வரவேற்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதற்காக பதிவுகள் போட வேண்டும்'' என்று கேட்கிறார் மித்தாலிராஜ்.
 - கண்ணம்மா பாரதி
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com