டெங்கு

காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. இரண்டு நாட்களாக அடிக்கும் காய்ச்சல் டெங்குவாக இருக்குமோ என்ற சந்தேகம் அடிக்கடி வந்து போனது. அரசு மருத்துவமனையின் அழகான பெண் மருத்துவர்,
டெங்கு

காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. இரண்டு நாட்களாக அடிக்கும் காய்ச்சல் டெங்குவாக இருக்குமோ என்ற சந்தேகம் அடிக்கடி வந்து போனது. அரசு மருத்துவமனையின் அழகான பெண் மருத்துவர், ""சாதாரண காய்ச்சலாகக் கூட இருக்கலாம் எதுக்கும் மூனு நாள் பொறுத்து பாத்துட்டு முடிவு செய்யலாம்'' என்று கூறினார். இவன் கண் அசங்காமல் அவரையே பார்ப்பதை அறிந்ததும், "பயப்படாதீங்க இப்ப ஒரு ஊசிய போட்டுட்டு போங்க'' என்று புன்னகை புரிந்தார். இருந்தும் அவனுக்கு ஏனோ நம்பிக்கை வரவில்லை.
 டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கிடையாதாம். பலியாகிப் போனால் என்ன ஆகும்... மனதிற்குள்ளேயே மருகினான். அவனது தாய் மார்பில் அடித்துக் கொண்டு, "அட சிவநேசா என்னை விட்டுட்டு போயிட்டியா?''" என அலறுவதும் நண்பர்கள் டங்காசெட் மேளத்திற்கு தாளகதி போட்டு ஆடுவதும் கண்ணுக்குள் வந்து போனது. ஒரு வேளை அவன் உறுப்பினராக இருக்கும் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் இது போல கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டாலும் போடும். அதில் சாதிப்பெயர் போடுமளவுக்கு அவன் பெரிய சாதிக்காரன் இல்லை. ஆனால் பள்ளிக்கூடத்தில் நண்பர்கள் வைத்த பட்டப் பெயரைப் போட்டு விடுவார்களோ என பதற்றம் கொண்டான். "பொட்டுக்கல்லை' அது அவன் பட்டப்பெயர். காலையில் பசியாற்றுவதற்காக அவன் அம்மா ஒரு கைப்பிடி பொட்டுக்கடலையை அவனது சட்டைப் பாக்கெட்டில் போட்டு பள்ளிக்கு அனுப்பி வைப்பாள். "பொட்டுக்கடலை என்ற சிவநேசன்' என்று பெயர் போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போடுவதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என திடம் கொண்டவன் செத்த பிறகு என்ன செய்ய முடியும் என விசனப்பட்டான்.
 விநாயகர் கோவில் திருப்பத்தில் அவளைப் பார்த்தான். அவளது இரண்டு கைகளிலும் சாப்பாட்டு பாத்திர பைகள் கனத்து தொங்கின. முகத்திலும் கக்கத்திலும் வழியும் வியர்வையை அவளால் நின்று நிதானித்து துடைத்துக் கொள்ள முடியாது. அதைப்பற்றி அவள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவளை அந்த புங்கமர நிழலுக்கு அழைத்துச் சென்று வழியும் வியர்வையைத் துடைத்துவிட தயாராக இருந்தான். அவள் பெயர் அருந்ததி. நட்சத்திரத்தின் பெயர். அவள் அவனைக் கடக்கும்பொழுது அந்த டாக்டரைப் போலவே சிரித்து, "நல்லா இருக்கியா?'' எனக் கேட்டவாறு நடந்தாள்.
 இவனுக்கு அவள் பின்னாடியே நடக்கத் தோன்றியது. "இல்ல காய்ச்சல் அடிக்குது'' என்றான்.
 நடையை நிறுத்தி திரும்பியவள், "ஆமா என்னமோ போலத்தான் இருக்க... சாயந்தரம் வீட்டுப்பக்கம் வா. காளியம்மன் கோயில் பூசாரிகிட்ட மந்திரிக்கப் போலாம்'' என அக்கறைப்பட்டவள் மீண்டும் நடக்கத் துவங்கினாள்.
 அவள் போய் ஐந்து நிமிடங்கள் இருக்கும். அவள் விட்டுச்சென்ற முகப்பவுடருடன் கூடிய வியர்வை வாசனை இவனது நாசியை சுற்றி வலம் வந்தது.
 புங்க மரத்தின் கீழ் ஓடிக் கொண்டிருந்த சாக்கடையைப் பார்த்தவாறு இருந்தான். கீழே சேறும் சகதியும் மண்டி சிமெண்ட் கலவை போல கெட்டியாய்ப் படிந்திருந்தது. மேலே கறுப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் சாக்கடை நீர் ஓடியது. சாக்கடை நீரில் டெங்கு கொசு வராதாம். நல்ல தண்ணீரில் தான் வருமாம். இரவு நேரத்தில் வந்து கடிக்காதாம். பகல் நேரத்தில் தான் வியாதியைப் பரப்புமாம். கொஞ்சம் வில்லங்கமான கொசுதான்.
 இவன் மரத்திண்டின் மீது சாய்ந்து உட்கார்ந்தான். பக்கத்தில் செருப்பு தைத்துக் கொண்டிருந்த தாத்தா திரும்பி அனிச்சையாய் இவன் கால் செருப்பை முதலில் பார்த்தார். பிறகு இவன் முகத்தைப் பார்த்தார். முகத்தில் அவனவன் பிறப்பு ஒட்டியிருக்குமோ என்னமோ?
 "தம்பி வேலக்கி போகலையா?'' என உறவுக்காரரைப்போல கேட்டார்.
 "ஒடம்பு ஒரு மாதிரியா இருக்கு தாத்தா'' என்றான். தாத்தா தகர டப்பாவில் இருந்த தண்ணீரை ஒரு வாய் குடித்துவிட்டு, " இவனுக்கும் வேணுமா?' என தலையசைத்துக் கேட்டார். இவன் "வேண்டாம்' என கைகளை அசைத்துக் காட்டினான்.
 மதியவெயில் உக்கிரமாக இருந்தது. தாத்தாவின் உறுமால் கட்டிலிருந்து வழிந்த வியர்வை முதுகில் எலி வால் அருவியைப்போல இறங்கி இடுப்புத் துணியை நனைத்தது. வெயிலைப் பற்றிய சொரணையற்று வேலையில் ஈடுபட்டிருந்த தாத்தா ஒரு ஜோடி செருப்பு வேலையை முடித்து இருந்தார்.
 இவனுக்கு உடம்பு உஷ்ணமேறியிருந்தது. கண்கள் இறுக்கி கொண்டு வந்தது. மூட்டுக்கு மூட்டு வலித்த உடலை கைகளை மேலே தூக்கி நெளித்துக் கொடுத்தான். வலிக்கும் தலையை பின்புறம் மரத்திற்கு அண்டக் கொடுத்தான். அடிக்கடி கொட்டாவி வந்தது.
 அம்மாவை நினைத்துக் கொண்டான். காய்ச்சிய கஞ்சியுடன் இவனுக்காகக் காத்திருப்பாள். கஞ்சி வேண்டாம்; அம்மாவின் அருகாமையும் அவள் வாசமும் வேண்டும். போக்கு ஆட்டோ ஏதும் வருகிறதா, என கண்களை இடுக்கிப் பார்த்தான். கொட்டாவி மறுபடி மறுபடி வந்தது. சூடாக டீ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என இவன் மனது விரும்பியது.
 கோல்டன் காபி பாரில் ஒரு தினசரிப் பத்திரிகை நாலைந்தாய் பிரிந்து கிடந்தது. அநேகமாக மாலை நேரப் பலகாரம் கட்ட பேப்பர் பலியாகி விடும். "
 "அண்ணே ஒரு டீ போடுங்க''" என்றவன் ராசி பலன் குறித்து பத்திரிகை பேப்பரை எடுத்துப் பார்த்தான்.
 கடக ராசியின் மீது கண்கள் மேய்ந்தன. அதில் "ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் மேலோங்கும், எடுத்த காரியம் வெற்றி பெறும்' என்றிருந்தது. உடல் அசெளகர்யம் குறித்து அதில் ஒன்றும் இல்லை. ஒருவேளை உண்மையிலேயே தன் உடம்புக்கு ஒன்றும் இல்லையோ? என யோசித்தவன் முன்பு டீ வந்தது.
 கண்ணாடி டீ டம்ளர் விளிம்பில் ஈ வந்து அமர்ந்து படபடத்தது. கடைக்காரர் எச்சரிக்கையாக, "தம்பி டீயக் குடிங்க''" என்றார். கடைக்காரரின் வலது கையில் தங்கக் காப்பு உருண்டையாக இருந்தது. நெற்றி நிறைய விபூதிக்குப் பதிலாக குங்குமப்பட்டை அடித்திருந்தார். அவரது தலைக்கு மேல் கால் நீட்டி கைக்குழந்தையுடன் மாசாணியம்மன் படுத்திருந்தது. அப்பா இறந்த புதிதில் அம்மா ஆத்தோரம் உள்ள மாசாணியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றது ஞாபகத்திற்கு வந்தது.
 அப்பொழுது இவனுக்கு ஐந்து வயது இருக்கும். ஆற்றில் குளித்துவிட்டு ஈரம் சொட்ட அமைதியாக வந்தவள் கோயிலுக்குள் நுழைந்ததும் அருள் வந்த சாமி போல வேறு மனுசியாகிப் போனாள். ஆட்டாங்கல்லில் மிளகாயை வெறியுடன் ஆட்டி வழித்தெடுத்தாள். அதை அம்மனின் மீது ஆவேசமாக சாத்திவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கினாள். இவன் மிகவும் பயந்து போனான். கோயிலுக்கு வெளியே வந்ததும் அம்மா குச்சி ஐஸ் வாங்கிக் கொடுத்தாள்.வெள்ளைக் குச்சி ஐஸில் கலர்கலராய் எசன்ஸ் அடித்து ஐஸ்காரன் கொடுத்தான். அம்மா சிகப்பு வெள்ளை பச்சை அடித்த குச்சி ஐஸும் கறுப்பு சிவப்பு கலர் அடித்த குச்சி ஐஸும் வாங்கிக் கொடுத்ததில் பயத்திலிருந்து மெல்ல விடுபட்டு சிவநேசன் சமாதானமாகிப் போனான்.
 அவ்வளவு சிறு வயதில் அப்பா எப்படி இறந்து போனார். அம்மா ஏன் மிளகாயை வெறியுடன் ஆட்டி அம்மனுக்குச் சாத்தினாள். அம்மாவிடம் கேட்கத் தயங்கிய விடை இல்லாக் கேள்விகள் இப்பொழுதும் இவனைச் சுற்றி வட்டமிட்டன.
 தங்க காப்புக் கை காசை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டது. சட்டை பாக்கெட்டிலிருந்த செல்போன் அடித்தது. அருந்ததி தான் பேசினாள். "என்னா...எப்பிடி இருக்கு?'' எனக் கேட்டாள்.
 "அப்படியே தான் இருக்கு'' என இவன் சொன்னான்.
 "காய்ச்சல்னு சொல்ற... பெறகு வெயில்ல ஏன் திரியற வீட்டுக்குப்போ'' என்றாள்.
 "இல்ல...'' என இழுத்தவன் "ரெண்டு மணிக்கு உதயக்குமார் டாக்டரு வருவாரு. அவருகிட்ட காட்டலாம்னு தான் காத்திட்டு இருக்கேன்'' என இவன் பொய் சொன்னான்.
 "எனக்கு வேல முடிஞ்சிருச்சு புள்ளையார் கோயிலுக்கு பக்கத்துல வர்றேன். நீ அங்கியே இரு'' என அவள் செல் போனைக் கட் செய்து விட்டாள்.
 இவன் பேண்ட் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தான். எழுபது ரூபாய் இருந்தது. இதை வைத்துக் கொண்டு தனியார் டாக்டரிடம் எப்படிப் போவது என யோசித்தவன் விநாயகர் கோயில் அருகில் நின்று கொண்டான். கோயிலுக்குள் இருந்து வாடிய பூக்களின் மணம் எண்ணெய் பிசுக்கு வாசமுடன் சேர்ந்து அடித்தது. பழைய கம்பிக் கதவின் வழியே பார்த்தான். பிள்ளையார் வேட்டி கட்டி அமைதியாக அமர்ந்திருந்தார். வேட்டி கால் மடிப்பில் எலி மறைந்து இருந்தது.
 பின்னால் இருந்து குரல் கேட்டது. "என்னத்துக்கு புள்ளையார இப்படி அதிசயமாக பாத்துக்கிட்டு இருக்கே?'' அருந்ததி தான் அது.
 இவன் திரும்பிப் பார்த்த பொழுது அவள் எவ்வளவு வேகமாய் வந்திருப்பாள் என புரிந்தது. மேலும் கீழும் மூச்சு வாங்க நின்றவளின் முகத்தில் மகிழ்ச்சியும் கவலையும் கலந்திருந்தன.
 "சரி வா...ரெண்டு மணியாகப் போகுது டாக்டரு வந்திருப்பாரு'' என அவள் மருத்துவமனைக்கு போகும் வழியில் நடக்க ஆரம்பித்தாள். பணம் இல்லை என எப்படிச் சொல்வது என தயங்கி நின்றவனை அருந்ததி ஒரு தென்னங்கீற்றைப் போல கையசைத்து அழைத்துச் சென்றாள்.
 அருந்ததியின் கணவன் மருதவீரன் இவனுக்குப் பழக்கமானவன். வொர்க்ஷாப் வேலை. அடிக்கடி மோட்டார் சாமான்களை எடுத்துவர சிவநேசனின் ஆட்டோவைப் பயன்படுத்திக் கொள்வான். திருமணமாகி இரண்டு வருசம் ஆன பிறகும் குழந்தை இல்லை என்ற குறை மருத வீரனிடம் நிறைய இருந்தது. வாரக் கடைசி விடுமுறையில் மாட்னி ஷோ சினிமாவுக்கு அருந்ததியை இவனது ஆட்டோவில் தான் அழைத்துப் போவான்.
 ஒருமுறை அவன் வசிக்கும் காலனியில் நடந்த காளியம்மன் திருவிழாவுக்கு சிவநேசனை விருந்தாளியாக அழைத்திருந்தான். அருந்ததி மாளாத மாட்டுக்கறியை அகப்பையில் அள்ளியள்ளி இவன் இலையில் போட்டாள். வயிறு முட்டத் தின்றுவிட்டு அங்கேயே மாலை வரை தூங்கி விட்டான். எழுந்து பார்த்த பொழுது வீட்டு வாசலில் வேறு சூழல் இருந்தது. மருதவீரனுடன் வொர்க்ஷாப் நண்பர்கள் டாஸ்மாக் மதுக்கடையை விரித்திருந்தனர்.
 இவன் முகம் கழுவி கிளம்பினான். அப்பொழுது அருந்ததி மெல்லிய குரலில் "இதமட்டும் அவர விடச்சொல்லு'' என கண்கலங்கினாள். அதற்கடுத்த ஒரு வாரத்தில் மருதவீரன் கிணற்றில் மோட்டார் மாட்டப் போயிருக்கிறான். கரண்ட் அடித்ததில் கிணற்றில் தூக்கி வீசப்பட்டான். பிறகு மருதவீரனை பிணமாகத்தான் வெளியில் எடுத்தனர். இவன் எல்லாக் காரியங்களையும் உடன்பிறந்தவன் போல செய்து முடித்தான். வொர்க்ஷாப் நண்பர்கள் குழு மருதவீரனுக்கு ஆளுயர போஸ்ட்டர் அடித்து அதில் "இமயம் சரிந்தது' என கண்ணீர் வடித்திருந்தது.
 அருந்ததியின் ஜாக்கெட் மறைவிலிருந்த பர்ஸ் மருத்துவச் செலவுகளை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டது. ரத்த டெஸ்ட் கொடுத்துவிட்டு வெளியிலிருந்த பெஞ்ச்சில் சிவநேசனும் கொஞ்சமாய் இடம் விட்டு அருந்ததியும் அமர்ந்திருந்தனர். இதுவரை வெயிலில் வெந்த வெள்ளை மேகங்கள் தீய்ந்து போன தோசையாய் கறுத்து இருந்தன. சூரியனை மறைத்து அவிழ்த்து விடப்பட்ட அல்சேஷன் நாயாய் அவ்வப்பொழுது உறுமின. பெரும் சொட்டுகள் மண்ணில் விழுந்து மணத்துடன் தெறித்தன.
 "மழை பெருசா வரும்போல...'' என அருந்ததி முணுமுணுத்தாள். அவளது வெறும் நெற்றியின் இரு புருவங்களுக்கு மத்தியில் சிவநேசன் திலகம் வைத்து மானசீகமாய் அழகு பார்த்தான்.
 அவள் அதைப் புரிந்து கொண்டது போல நெற்றியை அழுந்த துடைத்துக்கொண்டு இவனைப் பார்த்து முறுவலித்தாள். பிறகு "அம்மா எப்பிடி நல்லா இருக்காங்களா?'' என அக்கறையுடன் கேட்டாள். ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருப்பது போல இவன் உணர்ந்தான். ""ம்..வயசாயிடுச்சு அவங்களால முன்னமாதிரி வேல பாக்க முடியல'' என இவன் தொடர்பை நீட்டித்தான்.
 "ஆமா கல்யாணமில்லாமல் ஆட்டோவைக் கட்டிக்கிட்டு அழுதா அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்'' என கரிசனம் காட்டி தொடர்பை அருந்ததி தூண்டினாள்.
 " டாக்டரு கூப்பிடறாரு'' என நர்ஸ் அழைத்ததும் இவனுக்கு முன்னே அருந்ததி சென்றாள். டாக்டர் "இவருக்கு நீங்க என்னாகனும்'' என அருந்ததியைப் பார்த்து கேட்டார்.
 "அவரு ஆட்டோக்காரருங்க. எனக்கு சாப்பாட்டு கேரியர சொமக்குற வேலைங்க ஒத்தாசைக்கு கூட வந்தேன்'' என அருந்ததி சொன்ன பதிலால் டாக்டர் புருவங்களை சுருக்கி விரித்தார்.
 அடுத்த ஒரு மணி நேரத்தில் மழைக்கு மத்தியில் பஸ்டாண்டு வந்திருந்தார்கள். அம்மா, அப்பாவைக் கும்பிட்டு "உனக்கு ஒன்னும் ஆகாதுப்பா'' என விபூதி பூசி அனுப்பி வைத்தாள். அருந்ததியின் கைகளை பிடித்துக் கொண்டு "எங்களுக்கு யாரும் இல்லம்மா மாசாணியாத்தாவாட்டம் நீ வந்திருக்க'' என அழுதாள்.
 ""நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம்மா. டெங்கு காய்ச்சல் தான், மதுரை அரசாங்க ஆஸ்பத்திரிக்கு போனா ஒடனெ குணமாக்கியிருவாங்களாம்'' என அருந்ததி இவன் உயிருக்கான பொறுப்பை தைரியமாக ஏற்றுக் கொண்டாள்.
 மதுரை போகும் பஸ்ஸில் இவனுக்கு முன்புற சீட்டில் அருந்ததி அமர்ந்திருந்தாள். இவன் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. காய்ச்சலின் தாக்கம் கூடியிருந்தது. டெங்கு காய்ச்சலால் கடைசியாக மரணமடைந்த மொபைல்போன் கடைக்காரரின் மகன் இவன் ஞாபகத்திற்கு வந்தான். பள்ளிச்சிறுவன் என்பதால் நகர் முழுக்க பரபரப்பாக பேசப்பட்ட மரணம் அது. அந்த பையன் புத்தாடை அணிந்து மத்தாப்பு குச்சியுடன் டிஜிட்டல் போர்டில் மரண சேதியை சிரித்த முகத்துடன் சொல்லிக் கொண்டிருந்தான். தீபாவளி அன்று எடுத்த போட்டோவாக இருக்கும் போல.
 இவனிடம் டிரைவிங் லைசென்சுக்காக எடுத்த பழைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மட்டும் இருந்தது. கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டரில் அந்த போட்டோ இவனை அடையாளப்படுத்துமா என சந்தேகமாக இருந்தது. ஏன் இப்படியெல்லாம் யோசனை போகிறது என திடுக்கிட்டவன் நகரை விட்டு பஸ் வெளியேறி இருப்பதைக் கவனித்தான். வயல்வெளி நிறைந்த சாலையில் பயணித்த பஸ்ûஸப் பார்த்து "தங்கள் வருகைக்கு நன்றி' என நகராட்சியின் பெயர் பலகை வழியனுப்பி வைத்தது. ஆனால் நகரம் அடுத்த மரணத்தை எதிர்பார்த்து அமைதியாக காத்திருப்பது போல அச்சமாக இவனுக்கு தோன்றியது. கண்கள் கதகதவென எரிய ஆரம்பித்தன.
 பயத்தில் உடம்பு சில்லிட்டது போல உணர்ந்தவன் "அருந்ததீ...'' என அழைத்தான். திரும்பிப் பார்த்தவள் நிலைமையை புரிந்து கொண்டு இவன் அருகில் வந்து சுவாதீனமாக அமர்ந்து கொண்டாள். சிவநேசனின் தலையை மடியில் சாய்த்து முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com