இன்று புதிதாய் பிறந்தோம்!

திவ்யாவிற்கு தினந்தோறும் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறிகளை வாங்கியாக வேண்டும்.
இன்று புதிதாய் பிறந்தோம்!

திவ்யாவிற்கு தினந்தோறும் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறிகளை வாங்கியாக வேண்டும். வசதிப் பட்டபோது, தேவையான காய்களை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து... அவ்வப்போது எடுத்துச் சமைக்கிற பழக்கம் இல்லை. தினேஷ் வேலை பார்க்கும் ஆபீஸ், வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் இருக்கலாம். ஆனாலும் டூவீலர் உள்ளதால் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்துவிடுவான்; அவன் சூடான சோறு, ஃபிரஷாக காய்கறி வகைகளுடன் சமைத்த மதிய உணவையே விரும்பிச் சாப்பிடுவான். எனவே திவ்யா காலையில் பம்பரமாகச் சுழல்வாள். ஐந்து வயது மகளை ஸ்கூல் வேன் வருவதற்குள் தயார் செய்து, கணவன் ரெடியானதும் காலை டிபன், அணிய வேண்டிய பேண்ட், சர்ட் இத்தியாதிகளைத் தேர்வு பண்ணி தினேஷை அலுவலகம் அனுப்ப வேண்டும். அதன் பிறகு, டிபன் முடித்து, மார்க்கெட்டிற்குக் கிளம்புவாள். இது இம்மியளவு கூட பிசகாமல் அவளால் தினசரி கடைப்பிடிக்கப்படும் நடைமுறை ஆகும்.
 என்றும் போல் இன்றும் பத்தரை மணி வாக்கில் மார்க்கெட் வளாகத்திற்குள் நுழைந்தாள் திவ்யா. எப்போதும் வாங்குகிற காமாட்சி காய்கறிக் கடை பூட்டப்பட்டு இருந்தது. இந்த ஊருக்கு வந்த நாள் முதல் காமாட்சியிடம்தான் காய்கறி வாங்குகிறாள். வேறு கடைகளில் இதுவரை வாங்கினதில்லை. தினமும் கடைக்கு வருவதால் இருவருக்குள் ஒருவித அந்நியோன்யம்... பரஸ்பரப் பழக்கம் ஏற்பட்டுப் போயிற்று. காய்கறிகளை எடுத்து நிறுத்துக் கொண்டே பற்பல விசயங்களைப் பேசுவாள், விசாரிப்பாள். அவ்வப்போது அவளுக்குத் சரியெனப்படுகிற ஆலோசனைகளையும் வழங்குவாள். "இந்தாக்கா இந்த தித்திப்பான கொய்யாப் பழத்த ஒம்மகனுக்கு கொடு... ஆப்பிளை விடச் சத்தானது'' இரண்டு மூன்று கொய்யாக் கனிகளை இலவசமாகக் கொடுப்பாள்.
 திவ்யா கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தே முக்கால் ஆயிற்று. "இன்னம் இந்த காமாட்சியைக் காணமே. பதினொன்றரைக்கு வேலைக்காரப் பெண் வந்துவிடுவாளே... வீடு பூட்டி இருந்தா அவ பாட்டுக்குப் போயிடுவாளே. அப்பறம் கழுவ வேண்டிய பாத்திரங்களக் கழுவி. களைந்து போட்ட துணிகள துவைச்சு... சமைத்து முடிக்க நேரமாகிடுமே... டாண்ணு ஒண்ணரைக்கெல்லாம் அவர் சாப்பிட வந்திடுவாரே...' என்கிற தினுசில் திவ்யாவின் மனது பதைபதைத்தது. "அம்மா வாங்க... என்ன வேணும். எல்லாக் காய்கறிகளும் இங்க இருக்கு. வெல மலிவுதான்''
 அடுத்த கடைக்காரர் தூண்டில் போட்டார். "சரி நேரமாய்க்கிட்டே போகுது' என்று அந்தக் கடையை நோக்கிப் போனாள். இவள் அந்தப் பக்கம் போய் தேவையான காய்கறிகளை விலை விசாரித்து எடுக்கும் போது காமாட்சி வேகமாக வந்து கடையைத் திறந்தாள். ஓரக்கண்ணால் காமாட்சியை திவ்யா பார்க்க... இரண்டு பேர்களின் பார்வைகளும் அரை குறையாய்ச் சந்தித்துக் கொண்டன. திவ்யாவின் மனதிற்குள் தாம் தப்புப் பண்ணி விட்டோமோ என்கிற எண்ணம் தோன்றியது. இன்னும் சிறிது நேரம் காத்திருந்து காமாட்சியிடமே வாங்கி இருக்கலாமோ.
 "ம்... எவ்வளவு நேரந்தான் காத்திருக்கிறது. நமக்கும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கிறதே'" தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் திவ்யா.
 காய்கறி வாங்கி கிளம்புகிற பொழுது, காமாட்சி கடையில் இரண்டொருவர் காய்கள் வாங்கியவாறு இருந்தார்கள். அதனால் அவள் முகத்தை நேருக்கு நேர் சந்திக்கிற சிரமம் ஏற்படாமல் காமாட்சியின் கடையைக் கடந்தாள் திவ்யா.
 சாலையில் போகிற போது திவ்யாவின் அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்க்கும் போது காமாட்சி அழைப்பில் இருந்தாள். அலைபேசியை "அட்டர்ன்' பண்ணாமல் நடந்தாள் திவ்யா. காமாட்சியிடம் காய் வாங்காத உறுத்தல் மனதை அழுத்திற்று. தொடர்ந்து ஒலித்த அலைபேசியை எடுத்து, "ஹலோ யாரு?" என்றாள்.
 "திவ்யாக்கா நெஜமாவே யாருன்னு தெரியலையா?"
 "வெயில் சாஸ்தியா இருக்கிறதால பதிஞ்சிருக்கிற பேரு தெளிவாத் தெரியல"
 "என்னோட கொரலு எப்பிடி தெரியாது போகும்? ஃபோன் எடுத்த உடனே சொல்லு காமாட்சின்னு எத்தன தடவ சொல்லி இருக்கிங்க''
 "வெயிலு கவனக்கொறச்சல். அதான் யாருன்னு சட்டுன்னு புரியல காமாட்சி"
 "அடுத்த கடையில காய் வாங்கிக்கிட்டு போனதுக்கு நான் கோவிச்சுக்கிடுவேன்னு என்னயக் கண்டும் காணாமப் போயிட்டிங்க... இதுல கோபிக்கிறதுக்கு என்னக்கா இருக்கு...
 எனக்கு கிடைக்கிற பத்து ருபாய் இன்னக்கி அந்த அண்ணனுக்கு கெடச்சிட்டுப் போகுது. அதெல்லாம் எனக்கு வருத்தம் கெடையாது. "கடைய லேட்டாத் தெறந்தியே ஏன்? என்ன காரணம்னு ஒரு வார்த்த விசாரிக்காம போயிட்டிங்களே... அதுதான் என்னால தாங்கிக்கிட முடியல. கொய்யாப் பழம் எப்பவும் கொடுக்கிறவரு இன்னக்கி வந்து போடல. கொய்யாப் பழம் கேக்கிறவுங்களுக்கு எப்பிடி இல்லைன்னு சொல்றது. பெரிய மார்க்கட்டுக்கு போய் கொய்யாப் பழம் வாங்கிட்டு வந்தேன். நேரமாகிடுச்சு... வேற ஒண்ணுமில்ல... நீங்க ஒரு வார்த்த கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்... ம்... என்ன இருந்தாலும் நான் சாதாரண காய்கறி வியாபரம் பண்ணுறவதானே? நீங்க ஆபீஸர் பெஞ்சாதி... ரெண்டு பேரும் தோஸ்த்தா இருக்க முடியுமா? சரி விடுங்க''" படபடவென்று பட்டாசு வெடித்தாற் போல பொரிந்து தள்ளி விட்டு ஃபோனை வைத்து விட்டாள் காமாட்சி.
 "நாம இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் காத்திருந்திருக்கலாம்... இல்ல... அடுத்த கடையில காய்கறி வாங்கிட்டு வரும்போது காமாட்சியக் கண்டு பேசிட்டு வந்திருக்கலாம். கடைய ஏன் லேட்டாத் தெறந்தேன்னு கேட்டிருக்கலாம்... அவள்ட்ட காய் வாங்காமப் போறோமே... எப்பிடிப் பேசுறதுன்னு தயங்கி தப்பிச்சு வந்தது அவளச் சங்கடப் படுத்திருச்சு. ம்... நாளைக்குப் பாத்து... விசயத்த வெளக்கி...கோவிச்சுக்கிடாத... இனி இப்பிடி நடக்காதுன்னு சொல்லிடுவோம்' என்கிற முடிவோடு வீடு வந்து வேலைகளில் ஈடுபட்டாள் திவ்யா.
 மறுநாள் மார்க்கெட்டிற்கு வழக்கம் போல் போனாள். கூச்சத்தோடு காமாட்சி கடை முன் நின்றாள்.
 "வாங்க திவ்யாக்கா... என்ன காய் வேணும். எல்லாமே இப்ப வந்ததுதான்''
 "காமாட்சி நேத்து...''
 "அத விடுக்கா. நேத்து விசயம் நேத்தோடு போச்சு... அதயே நெனச்சுக்கிட்டு இருந்தா அவ்வளவுதான்... பொதன் கெழம போயிடுச்சு... இன்னக்கி வெயாழக்கிழம வந்திருச்சு. வெயாழக் கெழமப் பொழுதக் கஷ்டமில்லாம கடக்கணும்னு சாமியக் கும்பிட்டு வேலைகளப் பாத்துக்கிட்டே போகணும்...பழச நெனச்சுப் புழுங்கிக்கிட்டே திரிஞ்சோம்னு வையுங்க... நிம்மதி போயி மனசு கொழம்பிக் கிடக்க வேண்டியதுதான்''
 என்ன காய்ங்க வேண்டுமென கேட்டு அவளே நல்ல காய்களைப் பொறுக்கி எடுத்துப் போட்டு... நிறுத்துக் கொடுத்து பணத்தை வாங்கி... "இந்தா இது ஒங்க பிள்ளைக்கு'' என்று கனிந்த கொய்யாப் பழங்கள் இரண்டை தந்தாள் காமாட்சி.
 "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்ற பாரதியின் வரியை காமாட்சி அறிந்திருக்க மாட்டாள். ஆனாலும் அவள் அதன் பிரகாரம் நடந்தது திவ்யாவின் நெஞ்சை நெகிழ வைத்தது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com