ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தமோ குணம்... ரஜோ குணம்.... 

ஸத்வ குணம்!கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் என் மகன், மாலையில் கல்லூரி முடிந்து வீடு வந்து சேர்ந்ததும் சுமார் ஒரு மணி நேரம் தூங்குகிறான்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தமோ குணம்... ரஜோ குணம்.... 

ஸத்வ குணம்!கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் என் மகன், மாலையில் கல்லூரி முடிந்து வீடு வந்து சேர்ந்ததும் சுமார் ஒரு மணி நேரம் தூங்குகிறான். அதன் பிறகு இரண்டு மணி நேரம் வாட்ஸ்அப்,  முகநூல் ஆகியவற்றில் நேரம் கழித்து, அதன் பின்னரே படிக்கிறான். இரவில் 10 மணி முதல் 11 மணி வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு,  அதன் பின்னர் உறங்குகிறான். இது அவன் படிப்பை மிகவும் பாதிக்கும் என்று எடுத்துச் சொன்னாலும், கேட்க மாட்டேன் என்கிறான். அவனை எப்படித் திருத்துவது?

-கல்யாணி,
மேற்கு மாம்பலம், சென்னை.

கல்லூரி முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த பிறகு, சுமார் மூன்று மணி நேரத்தை உங்கள் மகன் வீணடிக்கிறான் என்று நீங்கள் வேதனைப்படுவது நன்கு தெரிகிறது. காலம் எனும் நேரத்தின் பெருமையைக் குறிப்பிடும் போது, ஆயுர்வேதம் அதை "காலோஹி நாம பகவான்' என்றே அழைக்கிறது. அதாவது காலத்தை இறைவனுக்கு ஒப்பாக அதைப் பாராட்டுகிறது. ஆதியும் அந்தமும் இல்லாத காலமானது, மனிதர்களின் செயல் வினைக்கேற்ப, அவர்களின் ஜனன - மரணத்தைத் தீர்மானித்து செயலைச் செய்கிறது. காலத்தின் கட்டளைக்கேற்ப, சூரியன் சந்திரன் போன்ற கிரகங்களும், நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் பஞ்ச மகாபூதங்களும் அவற்றின் சுழற்சியை செவ்வனே செய்கின்றன. பருவகால மாற்றங்கள் காலத்தின் வாயிலாகவே நிறைவேற்றப் படுகின்றன. மாற்றங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கும் காலமானது, புதிது புதிதாக உருவாக்கும் செடி, கொடி மரங்களில் சுவை, வீரியம் போன்ற மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மனித உடலில் வலுவூட்டுவதையும், வயோதிகத்தையும் ஏற்படுத்தி, வலுவிழக்கச் செய்வதையும் காலமே தீர்மானிக்கிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த காலத்தை உங்கள் மகன் உதாசீனப்படுத்துவது எதனால்? என்று ஆராய்ந்து பார்த்தால், இதனைப் பள்ளியில் படித்த நாட்களிலேயே செய்யத் தொடங்கியிருக்கலாம். நீங்களும் மகன் மீது கொண்டுள்ள பாசத்தால் அதை அனுமதித்திருக்கலாம். பள்ளியில் செய்ததையே கல்லூரியிலும் செய்கிறான் என்றால் அதற்கு அடித்தளமிட்டது பெற்றோரின் அன்பே என்று கூறலாம்!

மகனுடைய உடலில் சில மாறுபாடுகள் காலத்தை ஒட்டியே நிகழ்கின்றன. அந்த மாறுபாடுகளில் பெரிதும் கவனத்திற்குரியவை இரண்டு. ஒன்று, தேய்வு, மற்றொன்று நிறைவு. கல்லூரி நேரத்தில் உடலிலுள்ள தாது பலத்தைச் சக்தியாக மாற்றி படிப்பிலும் விளையாட்டிலும் செலவழித்துவிட்டு, மாலையில் வீடுவந்து சேர்ந்த பிறகு உறக்கத்தாலும், மனநிறைவு ஏற்படுத்தும் வாட்ஸ்அப், முகநூல் மற்றும் உணவாலும், தாது பலசேமிப்பை இட்டு நிரப்புவதாலும் உடல் - மன ஆரோக்யம் குன்றிவிடாமலிருக்க, உடலே செய்யும் ஓர் ஏற்பாடாகவே நாம் கருதலாம். செலவழித்தலும் - சேமிப்பும் ரஜோ குணம் மற்றும் தமோ குணம் ஆகியவற்றால் நிகழ்பவை.

பகலில் கல்லூரி நேரத்தில் - உடல் பலத்தைச் சக்தியாக்கி, பல செயல்களில் ஈடுபடுத்துவதை ரஜோ குணமே செய்கிறது. விழிப்பு, சுறுசுறுப்பு, பகுத்தறிவு, ஞாபகசக்தி, கண், காது, கை, கால் முதலியவற்றால் வெளிப் பொருள்களை உணர்வதும் நாடுவதுமாகிய பல உடல், மன இயக்க நிலைகள் ரஜோ குணத்தின் விரிவு. பெரும்பாலும் பகலில் ரஜோ குணம் அதிகம் விரிவு பெறுகிறது.

மாலையில் வீட்டிற்குள் நுழைந்ததும் செயல்களைத் தாமதப்படுத்தும் தமோ குணம் அவரை வந்தடைகிறது. தூக்கம், அயர்வு, சோம்பல், உணர்வு மந்தம், பொறிகளின் ஓய்வு முதலியவை தமோகுணத்தால் நிகழ்பவை. தமோ குணம் பெரும்பாலும் இரவில் விரிவு பெறுகிறது.

மேற்குறிப்பிட்ட இரு குணங்கள் தொடர்ந்து அதிகமாகிக் கொண்டேயிருத்தல் நல்லதல்ல. இவற்றின் இயக்கத்தை ஒரே சீராக மாற்றி மாற்றி இயற்கை அமைத்துக் கொடுக்கிறது. இது இயற்கையின் தனி சக்தி. இதனை ஸத்வகுணம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இருட்டகன்று வெளிச்சம் தோன்றும் போதும் வெளிச்சம் அகன்று இருட்டு தோன்றும் போது ஸத்வகுணம் தன் செயலைக் காட்டுகிறது. 

காலை - மாலை வேளைகளே இதன் தனி இயக்கத்திற்கான காலம். தமோ குணத்தால் உடலில் ஏற்பட்ட தூக்கம், செயல் - மந்தம் குளிர்ச்சி, முதலியவற்றிலிருந்து  முற்றிலும் மாறுபட்ட விழிப்பு, சுறுசுறுப்பு, சூடு என்ற நிலைக்கும் காலையிலும், மாலையிலும்  மெல்ல மெல்லத் தனி மனிதனின் உடலையும் உலகத்தையும் மாற்றி ஆயத்தப்படுத்துகிறது. ஸத்வ குணம் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் தன் தன் நிலையில் கட்டுப்படுத்துவதால் இதனை இயற்கையின் தனிசக்தி அல்லது தெய்வீக சக்தி என்று குறிப்பிடுவர். தெய்வீக சக்தியாக இருப்பதாலேயே இயற்கையின் சக்தியாகிறது.

மாணவர் சமுதாயம் இந்த ஸத்வ குணவளர்ச்சியைப் பெற விடியற்காலையில் - வைகறைத் துயிலெழுவதையும் இரவில் தமோ குணத்திற்கேற்ப உறக்கத்தை நன்கு தழுவிக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொண்டால் வாழ்வு இன்பமயமாக மாறி எதிர்காலம் மிளிரும்! 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com