அரசுப் பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர்!

அரசுப் பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர்!

அரசுப்பள்ளி மாணவர்களுடன் சில மணி நேரம் கலந்துரையாடிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தனது வாழ்க்கைச் சம்பவத்தை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி

அரசுப்பள்ளி மாணவர்களுடன் சில மணி நேரம் கலந்துரையாடிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தனது வாழ்க்கைச் சம்பவத்தை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.
 திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்துக்குள்பட்ட, புளியங்குடி அருகே மிக குக்கிராமமான மடத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுடன்தான் இந்த கலந்துரையாடலை ஆட்சியர் மேற்கொண்டார். அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், அவர்களது பல்திறனை உயர்த்தும் நோக்கிலும், கடையநல்லூர் வட்டாட்சியர் அழகப்பராஜா சார்பில் மாணவர்களுக்கு ஆட்சியர் புத்தகங்களை வழங்கினார்.
 அதைத் தொடர்ந்து மாணவர்களுடன் பேசிய ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ், "நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினார். பல மாணவர்கள் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது:
 "9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவனமாகப் படிக்க வேண்டிய காலம் இது. இந்த காலம்தான் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய காலம். உங்களுக்கென்று கண்டிப்பாக எதிர்காலக் கனவு உருவாக வேண்டிய தருணம் இது. குறிக்கோளை மனதில் உருவாக்க வேண்டிய தருணம். குறிக்கோள் இருந்தால் மட்டும் போதாது. அந்தக் குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு முயல வேண்டும். அதற்கான தொடக்க நிலை விவரங்களை ஆசிரியர்கள் வாரத்திற்கு ஒரு முறை நேரம் ஒதுக்கி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
 இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பின்பு இதே தேதியில் நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்யுங்கள். உங்களின் குறிக்கோளை எட்ட படிப்படியாக உழைக்க வேண்டும். மாடியிலுள்ள குடிநீர்த் தொட்டியைப் பார்க்கச் செல்ல வேண்டுமென்றால் ஏணி வைத்து அதிலுள்ள படிகளில் ஒன்றன் பின் ஒன்றாக ஏறி அந்த தொட்டியைப் பார்க்க வேண்டும். நேரடியாக அந்த தொட்டியை எட்டிப் பிடிக்க முடியாது. ஏணியிலும் 4 படிகளைத் தாண்ட நினைக்கக் கூடாது. அது தோல்வியைத் தரும்.
 இலக்கை அடைய, முயற்சி தேவை. பல்வேறு இடையூறுகள் அதில் வரும். எனக்கும் ஆட்சியர் கனவு எளிதாக நிறைவேறவில்லை. பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் வர முடிந்தது. கஷ்டப்பட்டு உழைத்தால் சாதிக்கலாம். குறிக்கோளை நோக்கி மட்டுமே பயணப்பட வேண்டும். வாழ்வில் வெற்றி பெற விருப்பங்கள் தேவை. ஆசை இருந்தால் அதை நிறைவேற்ற உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
 நம்முடைய குறிக்கோளை, கனவைச் சொல்லும் போது நமது நண்பர்கள் கூட சிரிப்பார்கள். எப்படி ஆக முடியும் எனக் கேட்பார்கள். நான் எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக ஆக விரும்புகிறேன் என கூறியபோது, எனது நண்பர்கள் எப்படி முடியும்? என கேட்டு நகைத்தார்கள். நம்பவில்லை.
 ஆனாலும், நான் விடாமுயற்சியுடன் முயற்சித்தேன். ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்தேன். சும்மா முயற்சி செய்து பார்ப்போம்; வந்தால் வரட்டும்; வரவில்லை என்றால் விட்டு விடுவோம் என நினைக்காமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
 மற்றவர்களுக்காகப் படிக்கிறோம்; கிடைத்த பாடப்பிரிவைப் படிக்கிறோம் என்று இல்லாமல், குறிக்கோளுடன் படித்தால் இலக்கை அடையலாம். ஐஏஎஸ் அதிகாரி என்று இல்லை. நமது விருப்பம் எனனவோ, அதில் சிறந்தவராக ஜொலிக்க இடைவிடாது முயற்சி செய்யுங்கள். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து நிச்சயம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் விசாரிப்பேன்'' என்ற அவரின் பாசிட்டிவ்
 பேச்சுக்கு மாணவர் கூட்டம் உற்சாகமாக கரவொலி எழுப்பி மகிழ்ந்தது.
 - வி.குமாரமுருகன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com