குழந்தைகளுக்கு ஏற்படும் டான்சில் பிரச்னை! 

என் பேரனுக்கு ஏழு வயது தொடங்கி இரண்டு மாதங்களே ஆகின்றன. முதல் வகுப்பு படிக்கின்றான்.
 குழந்தைகளுக்கு ஏற்படும் டான்சில் பிரச்னை! 

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
 என் பேரனுக்கு ஏழு வயது தொடங்கி இரண்டு மாதங்களே ஆகின்றன. முதல் வகுப்பு படிக்கின்றான். தொண்டையில் டான்சில் மோசமாக இருப்பதாகவும், அதனால் தான் சளி மற்றும் காய்ச்சல் அடிக்கடி வருவதாகவும் விடுமுறைக் காலங்களில் இரண்டொரு மாதங்களில் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமெனவும் அலோபதி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆபரேசன் இல்லாமல் ஆயுர்வேத சிகிச்சையால் இந்நோய் குணமடையாதா?
 -மு. அ. ஆ. செல்வராசு, அண்ணாநகர், தஞ்சாவூர்.
 சளி மற்றும் காய்ச்சல் வருவதற்கான வழிகளை நிறுத்தினாலே, டான்சில் உபாதை குறைய வாய்ப்பிருக்கிறது! உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியின் குறைபாடே, சிறு பிள்ளைகளுக்கு டான்சில் உபாதை, சளி, காய்ச்சல் என்று எற்படுவதற்குக் காரணமாகின்றன. எதிர்ப்புச் சக்தியை உருவாக்கித் தருவதே பசி தான். பசியின் தீவிரம் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் குன்றிவிடும். பசியும் தாக உணர்ச்சியும் தீவிரப்படும் வகையில் உணவும் - மருந்தும் அமைந்தால், உண்ணும் உணவின் சத்தான பகுதி உடலில் சேர்க்கப்பட்டு, அணுக்களின் நல்ல தன்மைகளை மேம்படுத்தும். அதை முதலில் பெறுவதற்கு, வில்வாதி அல்லது ஜீரகபில்வாதி லேகியத்தை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும், அஷ்ட சூரணம் எனும் மருந்தை அரை ஸ்பூன் அதாவது 2 மி.லி. கிராம் எடுத்து சூடான சாதத்துடன் பிசைந்து, சிறிது நெய் விட்டுத் தளர்த்தி, இரவு உணவுடன் சாப்பிடுவதும், அரவிந்தாஸவம் எனும் மருந்தை, சுமார் 15 மி.லி. காலை, இரவு சாப்பிடுவதையும் 1 - 2 மாதங்களுக்குச் செய்வதன் மூலம், பசி நன்கு மேம்பட்டு, உணவின் செரிமான கேந்திரங்கள் சுறுசுறுப்படையும். அதன் வாயிலாக, சத்தான உணவுகள் உடனுக்குடன் உடலில் சேர்க்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியானது நன்கு வளரும். உள்ளே நுழையக் கூடிய அணுக்கிருமிகளை எதிர்த்துப் போராடும் அணுவளர்ச்சியை ரத்தத்தில் ஏற்படுத்தித் தரும் ஒரு முன்னேற்பாடாக இதைக் கருதலாம்.
 இப்போது ஏற்பட்டுள்ள உபாதையைக் குறைக்கும் வழிகளையும் கூட ஆலோசிக்க வேண்டிய கட்டாயமிருப்பதால், தான்றிக்காய் தனி ஒருவனாக நின்று போராடும் குணம் கொண்டிருப்பதால், அதன் நுண்ணிய சூரணத்தை சுமார் 2 கிராம் எடுத்து, 5 மி.லி. தேன் குழைத்து டான்ஸில் பகுதியில் பூசலாம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பஞ்சு சுற்றிய குச்சியில் ஒத்தி எடுத்து இவ்வாறு செய்யலாம் - நல்ல துவர்ப்புச் சுவையுடையதும், வறட்சி மற்றும் லேசான தன்மை கொண்ட குணமுடையதும், வீர்யத்தில் சூடானதும், கப - பித்த தோஷங்களை மழுங்கடிக்கச் செய்வதுமாகிய தான்றிக்காயை நீங்கள் பேரனுக்குப் பயன்படுத்தி குணப்படுத்த முயற்சிக்கலாம்.
 மரமஞ்சள், வெட்பாலை, புங்கைமரப்பட்டை, வேப்பம்பட்டை, கடுக்காய் தோடு, திப்பிலி, வேப்பண்ணெய், சீந்தில்கொடி, மஞ்சிட்டை, நெல்லிக்காய், அதிமதுரம், முருங்கை மரப்பட்டை, குக்குலு, சுக்கு, மிளகு, திப்பிலி, புஷ்கரமூலம் போன்றவை, டான்ஸில் உபாதையை எதிர்த்துப் போராடக் கூடுபவை. இவை சேரக் கூடிய நிறைய ஆயுர்வேத மருந்துகள் இருப்பதால், மருத்துவரை நேரில் பார்த்து ஆலோசனை பெற்ற பிறகு சாப்பிட உகந்தது. காரமும் துவர்ப்பும் நிறைந்த இம் மருந்துகளால், டான்சில் சதை வீக்கத்தை ஏற்படுத்திய நெய்ப்பும், குளிர்ச்சியும், கனமும், மந்த குணமும் நீக்கப்படுவதால், டான்சில் சதை வீக்கமானது வற்றுகிறது. அதனைச் சுற்றியுள்ள பிற பகுதிகளும் சுத்தமடைகின்றன.
 இக்குணங்களை வளர்ச்சியடையச் செய்து வற்றாத டான்ஸில் சதையை ஊக்குவிக்கும் இனிப்பு, புளிப்பு மற்றும் உப்புச் சுவை நிறைந்த உணவுப் பண்டங்களாகிய இட்லி, தோசை, வடை ஆகியவற்றை உங்கள் பேரன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பொங்கல், இடியாப்பம், ராகி வகை உணவுகள், கோதுமை வகை உணவுகள், சூடான சாதம், சாம்பார், ரசம், சூடாக்கப்பட்ட மோர், வேக வைத்த கறிகாய்கள் சாப்பிட உகந்தவை. பகல் தூக்கம் தவிர்க்கப்பட வேண்டும். உணவே மருந்தாகும் போது, மருந்தும் கூட சேர்ந்தால், நல்ல பலன் விரைவில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
 சிறு பிள்ளையாக இருந்தாலும், வெது வெதுப்பான தண்ணீரில் உப்புப் போட்டு வாய் கொப்பளிப்பதையும், தொண்டைப் பகுதியில் படுமாறு அந்தத் தண்ணீரைக் கொண்டு கொப்பளித்துத் துப்புவதையும் சிறிது சிறிதாகப் பழக்கப்படுத்துவதைச் செய்தால், வாய் மற்றும் தொண்டையைச் சார்ந்த கிருமித் தொற்றுகளை பெரும் அளவு குறைக்கலாம். இரவில் படுக்கும் முன் இதைச் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
 கருங்காலிக்கட்டை, நால்பாமரப்பட்டை எனும் ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை மற்றும் வேலம்பட்டை ஆகியவற்றைக் கொண்டு கஷாயம் தயாரித்து வாய் மற்றும் தொண்டைப் பகுதியைச் சுத்தப்படுத்தும் வகையில் கொப்பளித்துத் துப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்த முன்னோர், பல தொண்டை - வாய் சம்பந்தமான உபாதைகளையும் தவிர்த்தனர். இதையே உங்கள் பேரனுக்கும் பயன்படுத்த முயற்சிக்கவும்.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com