தாண்டவம்

தாண்டவம்

அப்பா அடிக்கடி காணாமல் போய்விடுவார். அம்மா, நான், என் மனைவி, அப்பா இந்த நால்வர் இருக்கும் வீட்டில் சட்டென்று ஒரு நபர் காணாமல் போவது உடனே தெரிந்து விடும்

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை
 
 அப்பா அடிக்கடி காணாமல் போய்விடுவார். அம்மா, நான், என் மனைவி, அப்பா இந்த நால்வர் இருக்கும் வீட்டில் சட்டென்று ஒரு நபர் காணாமல் போவது உடனே தெரிந்து விடும். அவர் எப்போதும் மூக்கு நிறைய போட்டுக் கொள்ளும் பட்டணம் பொடி வாசனை இருக்காது. தேய்ந்து விடக் கூடாது என்று சுந்தரம் ஆஸ்பத்திரி வாசலில் இருக்கும் செருப்புத் தொழிலாளியிடம் தனியாக ஆர்டர் செய்து வாங்கிப்போட்டுக் கொள்ளும் டயர் செருப்பு வாசலில் இருக்காது. தனக்கு இல்லாத வயிற்று வலியை இருப்பதாக எண்ணிக் கொண்டு அரைமணிக்கு ஒருமுறை போடும் ஊளையுமல்லாத வேதனை ஓதையுமல்லாத ஒருவித அமானுஷ்ய சப்தம் திடீரென்று கிளம்பாது . இவை போன்றவற்றை உணரத் தொடங்கிய பின்னர்தான் எங்களுக்கு அப்பா காணாமல் போனது தெரிய வரும்.
 பொதுவாக அப்பா காலை வேளைகளில்தான் காணாமல் போவார். இரண்டு நபர்கள் பணிக்குச் செல்லும் ஒரு வீட்டில் காலை நேரம் எத்தனை பரபரப்பாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டாம். அம்மா அத்தனைக்கும் மெüன சாட்சி. மேலும் அம்மாவின் உடல்நிலை முற்றிலும் பழுதுபட்ட நிலையில் இருந்ததால், அப்பா காணாமல் போயிருக்கும் சமாசாரமே எங்களுக்கு ஒரு மணிநேரம் சென்ற பின்னர்தான் உணர்வில் உறைக்கும்.
 "அப்பாவுக்கும் தட்டு வை'' என்பார் அம்மா என் மனைவியிடம். அம்மா தனது இரு சிறுநீரகங்களும் பழுதாகிப் போகும் வரையில் தனக்கிருந்த உயர் இரத்த அழுத்தத்தையும் பொருட்படுத்தாமல் அப்பாவிற்குச் சிற்றுண்டியும், உணவும் பரிமாறுவதை ஒரு கடமையாகவே செய்து வந்தார். காலையில் எழுந்து டிகாஷன் இறக்கி அப்பாவிற்குக் காபி கொடுப்பதிலிருந்து இரவு கரைசலாக மோர்சாதம் போடும் வரையில் அம்மாதான் எல்லாம் செய்து கொண்டிருந்தார். எட்டு மணிக்குச் சாப்பாட்டு மேசையில் தட்டு வைக்க மறந்து அம்மா அடுத்த வீட்டுப் பெண்களின் பேச்சு சுவாரஸ்யத்தில் தன்னை மறந்திருந்தால் போதும், அப்பாவின் எதிர் வினை கடுமையாக இருக்கும். சமையலறையில் ஏதாவது ஒரு பொருளை விட்டு எறிவார். பற்களை " நறநற' வென்று கடித்துக் கூக்குரல் இடுவார். அம்மா வாசுகி மாதிரி பாதி பேச்சில் ஓடி வர வேண்டும். அம்மாவின் பாரி சரீரத்தால் அது முடியாது. எனவே அப்பாவின் எதிர்வினை நொடிக்கு நொடி சூடு பிடிக்கும்.
 அம்மா அப்படி உத்தரவிட்ட பின்னர்தான் அப்பா காணாமல் போயிருப்பது தெரியவரும்.
 நான் ஒருமணிநேரம் அலுவலகத்திற்குக் கால அவகாசம் கேட்டுக் கொண்டு அப்பாவைத் தேடக் கிளம்புவேன்.
 அப்பாவின் அந்திமக் காலம். வயது எழுபத்தைந்தைத் தாண்டியிருந்தது. முக்கால் செஞ்சுரி போட்டவர். அப்பாவிற்கு இரண்டு விஷயங்கள் தீவிரம். ஒன்று படிப்பு. இன்னொன்று நடை. படிப்பு என்றால் அப்படி ஒரு படிப்பாக இருக்கும். 1940-களில் தனது கல்வியை முடித்தவர் என்பதால் அந்தக் காலத்திற்கு உண்டான கவித்துவமும், அழகியலும் கலந்த படிப்பு அவருடையது. அவர் ஆங்கிலப் புத்தகங்களில் குடியிருப்பவர் என்பதால் நிகழ் உலகில் அவர் வேற்று கிரகவாசி என்றுதான் குறிப்பிட வேண்டும். நடைமுறை உலகிற்கும் அவருக்கும் தொடர்பே இல்லாதது போல இருக்கும். அவரது நடவடிக்கைகளில் சில நேரங்களில் நாங்கள் கண்டிராத அன்பைப் பொழிபவராகவும், பல நேரங்களில் மிகவும் தன்னலம் உடையவராகவும் தெரிவார்.
 நாங்கள் குடியிருக்கும் பகுதியில் அவர் வயதிற்கு மில்டனையும், ஷெல்லியையும், பைரனையும் சிலாகிக்க ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். "பண்டிதன் வேறு கலைஞன் வேறு' என்று அப்பா அவரையும் மட்டம் தட்டுவார். அப்பாவைக் காணவில்லை என்றால் அந்தப் பேராசிரியர் வீட்டிற்கு ஓடுவோம். அங்குமில்லை என்றால் அவரது காலை நடை பழகும் வழித் தடங்களில் தேடுவோம். அப்பா சூரமங்கலத்திலிருந்து கிளம்பினார் என்றால் ஜங்க்ஷன் மேம்பாலத்தைக் கடந்து இரும்பாலை சாலையில் குறைந்தது ஐந்து கிலோ மீட்டர் நடக்கக் கூடியவர். ஒருமுறை வழி தப்பிப் போய் ஒரு பால் பண்ணை வீட்டில் குழப்பமான முகத்துடன் கூடிய அப்பாவைக் கூட்டி வந்திருக்கிறேன்.
 இந்தமுறை அப்படி எதுவும் நிகழாமல் போகவே நான் வெறும் கையுடன் திரும்பி வந்தேன். என் மனைவி வங்கிக் கிளை ஒன்றில் காசாளர் என்பதால் விடுப்பு எடுக்க இயலாது என்று கூறி விட்டு அலுவலகம் கிளம்பிப் போய் விட்டிருந்தாள். துப்புரவு பணிப்பெண் கூடமாட அம்மாவிற்கு உதவி புரிந்து கொண்டிருந்தாள்.
 "அப்பா கிடைக்கவில்லை''"என்றேன் பொதுவாக.
 பணிப்பெண் இருப்பதன் காரணமாக அம்மா என்னிடம் அதிகம் பேச்சு கொடுக்கவில்லை. அம்மாவை மெதுவாக அழைத்து வந்து அவள் சாப்பிடும் அளவு உணவை அவள் தட்டில் போட்டுக் கொடுத்தேன். சிறுநீரகப் பழுதுடையவள் என்பதால் புரதம் கூடாது; இத்தனை மில்லி லிட்டர் தண்ணீர்தான் குடிக்கலாம் என்ற உணவுக் கட்டுப்பாடு உண்டு. குறிப்பிட்ட இடங்களில் தேடி வந்ததைக் கூறி விட்டு அலுவலகத்திற்கு நான் விடுப்பு சொன்னேன்.
 அம்மாவிற்குத் திருமணம் ஆனபோது வயது பதினெட்டு. அப்பாவிற்கு முப்பத்தியாறு. அப்பாவுடன் கூடப் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். அத்தனையும் அப்பாவின் சகோதரர்கள். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அவரவர் உத்தியோகத்தில் நிலை பெற்று விட, அப்பா மட்டும் இலக்கியம், கவிதை என்று பொருளியல் உலகைக் கை நழுவ விட்டு விட்டார். பொருளில்லாருக்கு எப்போதுமே இவ்வுலகமில்லை. அங்கே இங்கே என்று அரைகுறையாக வேலை பார்த்து ஓட்டிக் கொண்டே வந்தவர், இறுதியாக ஐயங்கார் நிறுவனத்தில் குமாஸ்தா வேலையில் ஒட்டிக் கொண்டபோது வயது முப்பத்தைந்தைக் கடந்திருந்தது.
 நாகர்கோவிலில் மாமா வீட்டில் வளர்ந்த அம்மாவின் வறுமை, அப்பாவின் வயது இடைவெளிக்குச் சமனாகியிருக்க வேண்டும். அம்மா இந்த அறுபது வயதிலும் அழகிதான். வாழ்வின் குரூரம் அவளைத் தாக்கியிரா விட்டால் அம்மாவிடம் எம்.எஸ். சுப்புலக்ஷ்மியிடம் இருந்த கம்பீரமும் சோபையும் குடிகொண்டிருக்கும். அம்மா அத்தனை அழகு.
 அம்மா விவேகி. தனது அழகைக் குறித்து அவளுக்குத் தன்னுணர்வு இருந்ததா என்று தெரியவில்லை. பதினெட்டு வயதில் தொடங்கிய அவளது வாழ்க்கைப் போராட்டம் இதோ இன்று வரையில் தொடர்கிறது. குறைவான சம்பாத்தியம், பொறுப்பில்லாமல் சீட்டாட்டத்தில் பணத்தை இழந்து விட்டு வரும் கணவன், ஐந்து குழந்தைகள் இவை போதாதா ஒரு பெண்ணிற்குப் பொழுதுக்கும் அல்லல்பட ? அப்பா ஆண் என்பதால் அதற்குண்டான வீம்பு, பிடிவாதம், அகந்தை இன்னும் என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் அவரிடம் உள்ளன.
 தனது அத்தனை துயரிலும் அம்மா பிள்ளைகளை வளர்ப்பதில் ஆயிரம் தாய்களுக்குச் சமமாக எங்களை வளர்த்தார் என்றுதான் கூறுவேன். சற்று மிகையாகத் தெரிந்தாலும், அவளுடைய அந்தக் கால கட்டங்களின் இன்னல்களைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் தனது நலனை முற்றிலும் தியாகம் செய்து விட்டுத் தனது பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறை செலுத்தினாள் என்பது விளங்கும். நாங்கள் உருவாவதற்கு எங்கள் தாய்தான் ஆணிவேர் என்று கூறுவேன்.
 "விளக்கு ரெண்டையும் புளி போட்டு தேச்சு வச்சுட்டேன் அம்மா. நான் சாயந்திரம் வாறேன்'' என்று கூறி விட்டுப் பணிப்பெண் அம்மா எடுத்து வைத்திருந்த உணவு பண்டங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
 வேலை எதுவுமற்ற பகல் பொழுது என்னை இம்சித்தது.
 "நேத்திக்கு அப்பா ஏதாவது சொன்னாரா? இல்லை நீ அப்பாவை ஏதாவது சொன்னாயா?'' என்று அம்மாவிடம் கேட்டேன்.
 எப்போதும் நான்கு திசைகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் அம்மாவின் பேச்சு, இப்போது அருகியபடி உள்ளது. அம்மாதான் எங்கள் வீட்டில் அதிகம் பேசுபவள். அப்பா தான் உண்டு தனது கையில் இருக்கும் புத்தகம் உண்டு என்று இருப்பவர். ஆனால் அம்மாவிற்கு அரைமணிநேரம் பேசுவதற்கு ஒருவரும் அருகில் இல்லையென்றால் பித்துப் பிடித்தவர் போல மாறி விடுவாள். எங்களது பழைய வாடகை வீடுகளில் எல்லாம் அக்கம்பக்கத்துப் பெண்டிருக்கு அம்மாதான் சபை நாயகி. நாம் வெளியில் பேசுவதற்குக் கூச்சப்படும் சில அகக்கூறு விஷயங்களை அம்மா மெலிதான நகைச்சுவை இழையோட கூறும்போது "திக்'கென்று இருக்கும். அக்கம்பக்கத்துப் பெண்டிரில் யாராவது,""மாமி நேத்திக்கு மாட்னி பார்த்த படம் எப்படி இருந்தது ?''
 என்று கேட்கப் போய்ப் படம் உப்புசப்பில்லாமல் இருந்திருந்தால் அம்மா,"போடி இவளே படமா அது? சின்னக் குழந்தைக்கு முத்தம் கொடுத்தா மாதிரி சப்புன்னு இருந்தது"என்று கூறுவாள்.
 அம்மாவின் உலகமும் அப்பாவின் உலகமும் வெவ்வேறானது என்றாலும் பல நாகரீக மடிப்புகளின் அடியில் அவர்கள் உலகில் சிங்கம், புலி, ஓநாய், நட்டுவாக்கிளி, பாம்பு, நரி என்று கொடிய விலங்குகள் உலாவியபடி இருக்கும். உடனே நீங்கள் என்னைக் கேள்வி கேட்க நிமிர்ந்து உட்காரக் கூடாது. எனக்கும் மிருகங்கள் உள்ளன. நானும் அவற்றை சமய சந்தர்ப்பம் பார்த்து அவிழ்த்து விடுவேன். மிருகங்களைக் கட்டுப்படுத்தி வாழ்வதில்தான் வாழ்வின் அர்த்தமே உள்ளது என்றாலும், மிருகங்களே இல்லாத மனித உலகமே கிடையாது. தட்டையாக இதனை எழுதுவதால் படிக்கும் உங்களுக்குப் புரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. பதுங்குவதும், உறுமுவதும், பாய்வதும், அடங்குவதும், அலறுவதுமான விலங்கு உலகை எண்ணுந்தோறும் அசிங்கமாகவும், பயிலுந்தோறும் ஆவேசமாகவும் இருக்கும். அனுபவித்து அறியும் உலகம் அது. இந்த மெய்ப்பாட்டை உணரும்போது வாழ்க்கை புரிந்து விடும். அம்மாவிற்கு, அம்மாவிற்கு என்றில்லை, பொதுவாகப் பெண்களுக்கு இந்த விலங்கு வாழ்க்கை எளிதில் பழகி வந்து விடும். அக உலகின் விலங்குகளைப் பெண்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்வதைப் போல ஆண்களால் இயலாது. உடல் வலிமைதான் ஆயுதம் என்று நம்பி மோசம் போகின்றவன் ஆடவன்.
 "நேத்திக்கு டயாலிசிஸ் முடிஞ்சிட்டு லக்ஷ்மணன் ஆட்டோமேன் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டில் கொண்டு வந்து விட்டான். நேத்திக்கு உடலிலிருந்து ப்ளுயிட் எடுத்ததால ரொம்பக் களைப்பா இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்தே ஆட்டோமேன்தான் கைத் தாங்கலாப் பிடிச்சிண்டு கொண்டு வந்து விட்டான். வீட்டுப் படியேறும்போது கால் கொஞ்சம் தடுமாறியது. பக்கத்து வீட்டுக் கார்த்திதான் அப்போ பக்கத்தில் இருந்தான். சட்டுன்னு என்னைக் கீழே விழாமல் பிடிச்சிண்டு கைத்தாங்கலா கொண்டு போயி படுக்கையில் கிடத்தினான். எனக்குக் கொஞ்சம் ஆசுவாசம் ஆகும் வரையில் அவன்தான் பக்கத்தில் அமர்ந்து பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தான். இது அரைமணி நேரம்தான் இருக்கும். அவன் போனதுக்கப்புறம் உங்கப்பா ஒரு ஆட்டம் ஆடினார் பாரு. எனக்கு அவர் எதுக்குக் கோச்சுக்கறார்னு ஆரம்பத்தில் தெரியலை. நானும் பேசாம இருந்துட்டேன். அவன் வயசு என்ன? என் வயசு என்ன?"என்றாள். எனக்கு முதலில் "பக்' என்று இருந்தது.
 அம்மா எப்போதுமே தனது கருத்தைத் தான் சொல்லும் பதில்களில் ஏற்றிச் சொன்னதே இல்லை. இது மிக நுட்பமான சமாசாரம். அதிகம் உணர்ச்சி வசப்படும் ஒரு சராசரி மகனால் உடனே உணர்ச்சிவசப்பட்டு, "இந்த வயசில் நீ அம்மாவை தப்பா நினைக்கறியே' என்று குரல் ஒங்கவோ, கை ஒங்கவோ என்னால் செய்திருக்க முடியும். ஆனால் அம்மாவின் மருத்துவச் செலவு, ஆறு மாத கர்ப்பத்தில் இருக்கும் என் மனைவியின் உடல் நிலை இவற்றை உத்தேசித்து நான் வாய் மூடி மௌனமாக இருந்தேன்.
 அம்மா இதனைக் கூறிவிட்டு கிட்டத்தட்ட அரைமணிநேரம் வாய்மூடிக் கிடந்தாள். பிறகு தனக்குண்டான உடல் உபாதையைப் பொறுத்துக் கொண்டு மெதுவாக எழுந்து தனது படுக்கையின் அடியில் தலையணையைச் சற்று தூக்கி ஒரு கடிதம் ஒன்றை என்னிடம் நீட்டினார். அம்மா ஏராளமாகக் கதை புத்தகங்கள் படிப்பாள். எட்டாவது வரை படித்திருப்பதாகக் கூறுவாள். லக்ஷ்மி, அநுத்தமா, பி.வி.ஆர் போன்றவர்களின் கதைகளை அம்மா படிப்பது வழக்கம். அந்தக் காலத்தில் பெரும் மேதைகளின் புத்தகங்களைப் படிக்கவில்லை என்றால் அடுத்தவர்களைப் பூச்சி போலப் பார்க்க வேண்டும் என்று எனக்குக் கற்பிக்கப்பட்ட சூழலை முதன் முதலில் உடைத்தெறிந்தவள் எனது தாய்தான் என்று சொல்வேன். எத்தனை மேதைகளின் எழுத்துக்களை அறிந்து வைத்திருந்தாலும் நாம் வாழும் வாழ்க்கையைச் சரியாக வழி நடத்த தெரியவில்லை என்றால் ஆண்- பெண் உறவு என்பது வெறும் பாலியல் தேவை மட்டும் என்றாகி விடும்.
 எனக்கு இப்போது நினைத்தால் ஏற்படும் ஆச்சரியங்களை நான் உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும். எனக்கும் கீழே என் தங்கை பிறக்கும்போது என் தந்தையின் வயது ஐம்பது, தாயின் வயது முப்பத்திரண்டு. பல நாட்கள் இந்த விஷயம் என்னை அலைக்கழித்திருக்கிறது. மேற்கத்திய சிந்தனை தாக்கத்தில் வளர்ந்த அப்பாவால் எங்கள் குடும்பத்தைக் கொண்டு செலுத்த இயலவில்லை. ஆனால் வெறும் பதினெட்டு வயதில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய என் தாயாரின் கீழைச் சிந்தனைகள் எங்களை அவரவர் நிலையில் தனித்து இயங்கும் மனிதர்களாக ஆக்கியிருக்கிறது. எனக்கு ஒப்பீடு செய்வதற்கு யோக்கியதை இல்லை என்றாலும் அவர்கள் வாழ்ந்த வாழ்வு எனக்குக் கண் முன்னால் பாடம் சொல்லிக் கொடுத்தது.
 கலங்கலான கிறுக்கலில் அம்மாவின் கையெழுத்தில்- என் கையெழுத்து கோழி கிண்டினது மாதிரி இருக்கும் என்று அம்மாவே வெட்கமாகச் சிரித்திருக்கிறாள்- அந்தக் கடிதம் எனது மூத்த சகோதரி மீனாவின் கணவர் பாபுவிற்கு எழுதப்பட்டிருந்தது. சற்று நிலை தடுமாறி நின்ற வேளையில் எங்கள் குடும்பத்தைக் கை தூக்கி விட்டதில் மீனாவிற்கும் அவள் கணவர் என் அத்திம்பேர் பாபுவிற்கும் முக்கியப் பங்கு உள்ளது. அம்மா எப்போதும் பாபுவைத் தனது மூத்த மருமகனாகக் கருதாமல் மூத்த மகனாகவே கருதினாள்.
 படித்துக் கொண்டே வந்தபோது சட்டென்று தூக்கி வாரிப் போடவே மீண்டும் நிதானமாகப் படித்தேன்."மீனாவைப் பிள்ளையாண்டு இருந்து நாகர்கோவிலில் அம்மா வீட்டில் பிரசவித்துத் திரும்பவும் ஜெய்ஹிந்துபுரம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தேன். கூடவே ஒரு பெண்பிள்ளையும் வீட்டில் இருந்தாள். எனக்கு ஒன்றும் புரியாமல் அவரிடம், "இவள் யார்?'' என்று கேட்டேன். "உனக்கு ஒத்தாசைக்குக் கூட்டிக் கொண்டு வந்துள்ளேன்'' என்றார். எனக்கு அருவெறுப்பானது. அப்படியே மீனாவைத் தூக்கிக் கொண்டு மீனாட்சி மில் கேட் பக்கம் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் ஓடினேன். கொல்லம் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. போதும் இதோடு வாழ்க்கை என்று அப்போது துணிந்து விட்டேன். யார் என்று தெரியாது, ஒருவேளை அந்தச் சொக்கனாதனாகக் கூட இருக்கலாம், ஒரு சந்நியாசி என்னை ஒரே தாவலாகப் பற்றி இழுத்துத் தண்டவாளத்திற்கு வெளியில் தள்ளினார். ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார்."சாவதற்குத் துணிவு வேண்டாம்; வாழ்வதற்குதான் துணிவு வேண்டும்''"என்று. அதன் பிறகும் என் வாழ்க்கை தொடர்ந்தது. மீனாவிற்கு அடுத்து ஒரு குறை பிரசவம் அப்புறம் யமுனா, ராகவன் , கிச்சா (நான்), ரேவதி என்று அவருக்கும் எனக்கும் குழந்தைகள் பிறக்கத்தான் செய்தன. என் மாமியாருக்கு அவரது பிள்ளையின் யோக்கியதை குறித்துக் கடுதாசு போட்டேன். மாமியார் நளாயினி, அகலிகை கதையை உதாரணம் காட்டி பதில் கடிதம் போட்டார்.' "
 நான் அந்தப் பகுதியைப் படித்து விட்டு அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். அம்மாவின் முகத்தில் நாற்பத்தைந்து வருட தாம்பத்தியத்தின் அயர்வு மட்டுமே எஞ்சியிருந்தது.
 "இதை உன் அத்திம்பேருக்குதான் எழுதினேன். ஆனால் கொடுக்கவில்லை. இது உன்னோடு இருக்கட்டும். யாருக்கும் சொல்லாதே''"என்றார்.
 அந்தக் கடிதத்தில் கூறியிருப்பது நிஜமா என்று கேட்பதற்குக் கூட எனக்கு நா எழவில்லை. பிரமை பிடித்தவனைப் போல இருந்தேன்.
 மாலை நான் அடுப்புப் பற்ற வைத்து பால் காய்ச்சி அம்மாவிற்கும் எனக்கும் காபி போட்டுக் கொண்டு போனேன்.
 "இந்த முறை உங்கப்பா வழி தெரியாமல் காணாமல் போகவில்லை. வழி தெரிஞ்சு காணாமல் போயிருக்கிறார்'' என்றாள் அம்மா.
 மிகச் சாதாரணமாகத்தான் அம்மா இதனைக் கூறினார். ஆனால் ஒரு மனிதனின் வாயிலிருந்து வெளியில் வரும் வார்த்தைகளை நிர்ணயிப்பது எது? காலமா? சூழலா? வாழ்ந்த வாழ்க்கையின் வேக்காடா?
 "சுலபமா ஒரு பொண்ணு ஜெயிப்பதை எந்த ஆணாலும் ஏத்துக்க முடியாது. காலம் காலமா எல்லா ஆண்களும் போடும் அபாண்டப் பழியைதான் அவர் என் மீது போட்டிருக்கார். அது அபத்தம் முற்றிலும் பொய்யானது என்பது தெரிஞ்சும் போட்டிருக்கார். தான் ஆண் என்றாலும் தனது மனைவியின் இளமையை முற்றிலும் வெல்ல முடியவில்லை என்ற ஆற்றாமையின் வெளிப்பாடுதான் இது. இது எனக்கும் அப்பாவுக்கும் உண்டான யுத்தம் கிடையாது. ஒவ்வோர் ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் காலம் காலமா நடக்கும் போட்டி. சிவகாமியால காலைத் தூக்கி ஆட முடியாது என்ற ஆணவம்தானே நடராஜனைக் காலைத் தூக்க வச்சது? காலைத் தூக்காமல் சிவகாமி போட்டியிலிருந்து விலகிக் கொண்டதால் அவள் தோற்றுப் போனதாகவா அர்த்தம்? அவள்தான் ஜெயிச்சா . இது ஈசனுக்கும் தெரியும். அந்த சக்திக்கும் தெரியும். இதைப் பூரணமா உங்கப்பா உணர்ந்துட்டார். அதனால்தான் இப்போ கதவுக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கறது மாதிரி காணாமல் போயிருக்கார்''"என்றாள் தனது தீராத நோயிலும்.
 "எப்பவும் கார்த்தால போனா மத்தியானத்துக்குள்ள வந்துடுவார். இந்த முறை கொஞ்சம் நாளாகும். ஆனால் வந்திடுவார்''"என்றாள் உறுதியாக.
 அம்மா சொன்னது சரிதான். அப்பா ஒரு வாரம் கழித்து ஓமலூர் வரைக்கும் சென்றவர் அங்கு ஒரு மின்துறை ஊழியர் வீட்டில் அடைக்கலமாகி தனது நிலையைக் கூறி வேறு ஒரு வேட்டி வேறு ஒரு சட்டையுடன் புது மனிதராக வந்தார்.
 அதன் பிறகு அப்பா இறுதி வரையில் அம்மாவுடன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. காணாமலும் போகவில்லை.
 
 
 "திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையைப் பூர்வீகமாகக் கொண்ட சத்தியப்பிரியன்(இரா.பிரபாகர்), சேலம் கர்நாடகா வங்கிக் கிளையில் 27 ஆண்டுகள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.
 "காதலாகிக் காத்திருந்து', "நிழல் சுடுவதுண்டு' உட்பட 4 சிறுகதைத் தொகுப்புகள், "மறந்து போகுமோ ஆசை முகம்', " பாரத புத்திரி' உட்பட 3 நாவல் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்பு ஆகியவை இவருடைய நூல்கள்.
 1989 -இல் கல்கி நடத்திய சிறுகதைப் போட்டி முதல் பல சிறுகதை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகளை வென்றவர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com