எனது  முதல் சந்திப்பு - 12

மகாகவி பாரதியாரின் கவிதைகளும், கட்டுரைகளும் தனிப்பட்டவர்களின் உரிமையாக இல்லாமல் மக்களின் பொதுச் சொத்துக்களாக மாறிவிட்டன.
எனது  முதல் சந்திப்பு - 12

ஸ்ரீஅவினாசிலிங்கம்

மகாகவி பாரதியாரின் கவிதைகளும், கட்டுரைகளும் தனிப்பட்டவர்களின் உரிமையாக இல்லாமல் மக்களின் பொதுச் சொத்துக்களாக மாறிவிட்டன. இம்மாதிரி செய்து பாரதியாரின் கவிதைகளை தங்கு தடையில்லாமல் யார் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்ற நிலைமையை ஏற்படுத்திய பெருமை மாஜி கல்வி மந்திரி அவினாசி லிங்கத்தைச் சேரும்.

அதுமட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், தமிழ்க்கலைச் சொற்கள் அமைப்பு, தமிழ் அறிவுக் களஞ்சியம், தமிழர் திருவிழா போன்ற தமிழ் வளர்ச்சிக்கான பல காரியங்களை ஆதரித்து வளர்த்த பெருமையும் அவரையே சேரும். எல்லாரும் தமிழின் பெருமையை வளர்க்க வேண்டுமென்று பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால், உருப்படியான காரியங்களைச் செய்து முடித்தவர் அவினாசிலிங்கம் ஒருவர்தான். கல்வி மந்திரிகளாய் இருந்தவர்களில் அவினாசிலிங்கத்தைப் போல அதிகமான காரியங்களைச் செய்து முடித்தவர் வேறு யாரும் கிடையாது. எப்பொழுதும் சுறுசுறுப்பு, எதையாவது புதிதாக உபயோகமுள்ள வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆவல், எடுத்த காரியத்தைச் சீக்கிரம் நிறைவேற்ற வேண்டும் என்ற துடிதுடிப்பு - இவ்வளவும் சேர்ந்தவர்தான் அவினாசிலிங்கம்.
கல்வித்துறையில் அவருக்குள்ள ஆர்வம் வேறு எதிலும் கிடையாது. அவரே ஒரு பெரிய ஹைஸ்கூலை நடத்தி வருகிறார். அதனால் அவருக்கு நல்ல அனுபவமும் உண்டு. புதிய புத்தகங்களைப் படிப்பதிலும் ஆர்வம் உள்ளவர். அதனால் அவர் வளர்ந்து கொண்டே இருக்கிறார். சிலரைப் போல ""எல்லாம் எனக்குத் தெரியும். இனி புத்தகப் படிப்பு அவசியமில்லை'' என்று நினைக்கிறவர் அல்ல. அவர் தொடர்ந்து கல்வி மந்திரியாக இல்லாமல் போனது தமிழ்நாட்டுக்கு நஷ்டம்.

ஸ்ரீ அவினாசிலிங்கத்தை முதன் முதலில் கடலூர் ஜெயிலில் 1932 -இல் சந்தித்தேன். ஜெயிலுக்குள் இருக்கும்போது மனக்கோட்டை கட்டுவது எல்லாருக்கும் வழக்கம். பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் ஜெயில்களில் உருவாகும். ஆனால், வெளியில் வந்த பின்பு அவைகளில் நிறைவேறுபவை ரொம்ப சொற்பம். ஜெயிலுக்குள் அடைப்பட்டுக் கிடக்கும்போது சொந்தக் கவலைகள் எதுவும் பிடிப்பதில்லை. வெளியே வந்தால் அவை பிடித்துக் கொள்ளுகின்றன. இதனால், நிறைவேறுகிற திட்டங்கள் சொற்பமாகவே இருக்கும்.

தமிழில் நல்ல புத்தகங்கள் மலிவான விலைக்கு வரவேண்டும் என்ற கருத்து எனக்கு வெகு காலமாய் உண்டு. இதை கடலூர் ஜெயிலில் நான் பரப்பி வந்தேன். இந்தக் கருத்துக்கு ஸ்ரீ அவினாசி எனக்கு முதலில் ஆதரவு கொடுத்தார். ஜெயிலிலேயே இதற்காக ஒரு கூட்டம் போட்டு விடுதலை அடைந்து வெளியில் வந்ததும் ஒரு கம்பெனியை அமைப்பது என்று தீர்மானமும் செய்து புத்தகத்தில் கையெழுத்து வாங்கினோம். விடுதலை அடைந்து வெளியே வந்ததும், "பொருளாதாரம்', "தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரகம்' என்று இரண்டு புத்தகங்களை ஸ்ரீ அவினாசிலிங்கம் எழுதி, பிரசுரிக்க என்னிடம் ஒப்படைத்தார்.

ஆனால், கம்பெனியை உடனே ஆரம்பிக்க முடியவில்லை; இரண்டு வருஷங்கள் கழித்து "நவயுகப் பிரசுராலயம்' என்ற பெயருடன் நான் ஒரு கம்பெனியை ஆரம்பித்தேன். மலிவான விலையில் புத்தகங்களைப் பிரசுரிக்கவும் செய்தோம். ஆனால், இரண்டாவது மகாயுத்தம் தோன்றிய பின்பு மலிவான விலையில் பிரசுரிப்பது என்பது சாத்தியமில்லாமல் போயிற்று. ஆனால், கடலூர் ஜெயிலில் நாங்கள் பேசிய "அறிவுக் களஞ்சியம்' யோசனையை அவினாசிலிங்கம் மறந்து விடவில்லை. அவர் கல்வி மந்திரியாக வந்ததும் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துக் கொண்டார்.

மந்திரி பதவியில் இருந்த வரையில் குன்றின் மேலிட்ட விளக்குப் போல அவினாசிலிங்கம் பிரகாசித்து வந்தார். மந்திரி பதவியை விட்ட பின்பு குடத்துக்குள் அடைபட்ட விளக்காகி விட்டார். குன்றின்மீது இருந்தாலும், குடத்திற்குள் இருந்தாலும் விளக்கு விளக்குத்தான்!

அவரால் தமிழ் நாட்டுக்குப் பயன் ஏற்பட வேண்டுமானால், அவர் கல்வி மந்திரியாய் இருக்க வேண்டும். அந்தப் பதவி அவருக்குக் கிடைக்காவிட்டால் அதற்காக அவர் மூலையில் போய் உட்காருகிறவர் அல்ல, அவருடைய வழியில் கல்வித்துறையில் வேலை செய்து கொண்டே இருப்பார். ராஜீய வேலைகளில் முண்டி அடித்துக் கொண்டு முன்னால் நிற்கும் சுபாவம் அவருக்கு இல்லை. அதனால்தான் தமிழ்நாட்டு ராஜீயத்தில் அவர் பெயர் பிரபலமாய் அடிபடுவதில்லை. அவர் அம்மாதிரி ராஜீயத்தில் தீவிர சிரத்தை கொள்ளாமல் இருப்பது தமிழ்நாட்டுக் கல்வித்துறைக்கு அளவற்ற லாபமாகும்.

(தொடரும்)

வெளியீடு: ஜெனரல் பப்ளிஷர்ஸ்,
244/64, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை-600 004.

மாவட்டச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரும்!

1953-இல் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் உள்ள டால்மியாபுரம் ரயில் நிலையத்தின் பெயரைக் கல்லக்குடி என்று மாற்றவேண்டும் என்ற திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தை வடிவமைத்தவர் அப்போதைய திருச்சி மாவட்டத் திமுக செயலாளர் பொறுப்பிலிருந்த அன்பில் தர்மலிங்கம். போராட்டத்தில் கலந்துகொண்ட கவிஞர் கண்ணதாசன் காவல்துறையால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலைஉயிருமாய்க் கிடந்தார். கண்ணதாசனை காவல் துறை கைது செய்து லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தது. போராட்டத்தை வடிவமைத்த அன்பில் தர்மலிங்கத்தைக் காவல் துறை தேடிவந்தது.

போராட்டத்தில் கலந்து கொண்டு காயம் அடைந்த கண்ணதாசன், சிலரைக் காண லால்குடி மருத்துவமனைக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் வந்திருந்தார். இதனை அறிந்த அன்பில் தர்மலிங்கம், தலையில் தலைப்பாகை கட்டி கொண்டு கண்ணதாசனைக் காண மருத்துவமனைக்குச் சென்றார்.

மருத்துவமனையில் கண்ணதாசன் அறைக்குச் சென்று கொண்டிருந்த அன்பில் தர்மலிங்கத்தைப் பார்த்து, "நீங்கள் யார்?' என்று மாவட்ட ஆட்சியர் கேட்க, அன்பில் தர்மலிங்கம் தன் பெயரைக் கூறாமல், "நான் திமுக மாவட்டச் செயலாளர்' என்று பதில் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அருகிலிருந்தவரிடம் "மாவட்டச் செயலாளர் என்றால் என்ன?' என்று கேட்டிருக்கிறார். உடனே அன்பில் தர்மலிங்கம்,"இந்த மாவட்டத்திற்கு நீங்க எப்படி ஆட்சியரோ...அது மாதிரி இந்த மாவட்டத் திமுகவிற்கு நான் ஆட்சியர்' என்று கூறியுள்ளார்.


ஆட்சியர், "மாவட்டச் செயலாளரால் என்ன செய்யமுடியும்?' என்று கேள்வி எழுப்பியபோது, "அதிகாரம் வைத்துள்ள மாவட்ட ஆட்சியரை நான் நினைத்தால் மாற்றமுடியும். அதிகாரத்தை வைத்துள்ள உங்களால் என்னை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து மாற்ற முடியாது'” என்றார் அன்பில் தர்மலிங்கம்.

எனவே, திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி என்பது ஒரு மாவட்டத்தின் அதிகாரங்கள் அனைத்தையும் வைத்திருக்கும் ஆட்சியர் பதவிக்கு நிகரானதே தவிர, 5 ஆண்டுக்கு மட்டுமே அதிகாரம் கொண்ட அமைச்சர் பதவிக்கு நிகரானது அல்ல என்பதே பொருத்தமான உண்மையாகும்.

முனைவர் தி.நெடுஞ்செழியன்,
தமிழ் இணைப் பேராசிரியர் (ஓய்வு),
திருச்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com