எனது முதல் சந்திப்பு - 8

"பாரதி என்ன ஒரு கவியா?' என்று கேட்டவர்களும், தமிழ்நாட்டில் உண்டு. பாரதியின் கவிதைகள் உண்மையில் கவிதையா? அவை வெறும் வசனம்தானே என்று சொன்னவர்களும் உண்டு.
எனது முதல் சந்திப்பு - 8

வ.ரா

"பாரதி என்ன ஒரு கவியா?' என்று கேட்டவர்களும், தமிழ்நாட்டில் உண்டு. பாரதியின் கவிதைகள் உண்மையில் கவிதையா? அவை வெறும் வசனம்தானே என்று சொன்னவர்களும் உண்டு. "பாரதி ஒரு தேசீய கவியே ஒழிய, மகாகவியல்ல' என்று பத்திரிகைகளில் எழுதி வாதிட்ட எழுத்தாளர்களும் உண்டு. இவர்கள் எல்லோருமே பிற்காலத்தில் ஆஹா பாரதியார் எப்பேர்ப்பட்ட கவி! அவர் மகாகவியல்லவா? அவர் கவிதைகள் தாம் எவ்வளவு உயர்ந்தவை!  என்று ஏகோபித்துப் பேசவும் எழுதவும் ஆரம்பித்தார்கள். "எதனால் அவர்கள் அப்படித் திரும்பினார்கள்? அவர்களுடைய செங்கல் மண்டையில் பாரதியின் பெருமை எப்படி ஏறிற்று?' என்று கேட்கலாம். அந்த மகாப் பெரிய அற்புதத்தை செய்தவர் யார் என்று கேட்கலாம்.

அவர்தான் வ.ரா. இன்றுள்ள பல எழுத்தாளர்களை எழுத்தாளர்களாக ஆக்கியதும் அவர்தான். விடாப் பிடியாகப் பாரதியின் பெருமையைப் பற்றிச் சுத்தியலைக் கொண்டு அடிப்பதைப் போல அடித்து அடித்துச் சொல்லிச்  சொல்லி, எதிர்ப்பவர் எப்பேர்ப்பட்டவராய் இருந்தாலும் எதிர்த்துத் தீவிரமாய்ப் போராடிப் பாரதியின் பெருமையைத் தமிழ்நாட்டில் அவர் நிலை நாட்டினார். பாரதியின் கவிதைகளைப் படித்துத் தமிழ்நாடு பயன்பெற்றது. ஆனால், பாரதியின் கவிதைகளைப் படிக்குமாறு செய்தவர் வ.ரா. ஆகவே கவிதைகளைப் படித்துப் பயன்பெற்ற தமிழ்நாடு யாருக்கு நன்றி செலுத்துவது? பயன்கொடுக்கக் கூடிய கவிதைகளைச் சிருஷ்டித்த பாரதிக்கு  நன்றி செலுத்துவதா? அல்லது அந்தச் சிருஷ்டியின் அற்புதத்தை எடுத்துக் காட்டிப் பயன்பெறும்படி செய்த வ.ரா.வுக்கு நன்றி செலுத்துவதா? என்னுடைய அபிப்பிராயத்தில் அந்த நன்றி என்பது பாரதி, வ.ரா இருவருக்குமே சமமாகச் சேர வேண்டும் என்றே தோன்றுகிறது.  

இராமாயணத்தை வால்மீகி எழுதினார். ஆனால், தமிழர் எல்லாரும் தெரிந்து கொள்ளும்படி செய்தவர் கம்பர். அதே மாதிரி கவிதைகளைப் பாரதி எழுதினார். அவற்றின் மகிமையை எல்லாரும் தெரிந்து கொள்ளும்படி செய்வதையே தமது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு வ.ரா. உழைத்து வந்தார். வ.ரா அந்த வேலையைச் செய்திருக்காவிட்டால் பாரதியின் பெருமை இன்று தமிழ்நாட்டில் பரவியிருப்பதைப் போலப் பரவி இருக்காது. 

"வர்த்தக மித்திரன்' என்ற பெயரோடும், பின்னால் "சுதந்திரன்' என்ற பெயரோடும் 35 வருஷங்களுக்கு முன்னால் தஞ்சையில் வ.ரா. ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். அந்தப் பத்திரிகையில் வ.ரா எழுதி வந்த பிரஞ்சுப் புரட்சி சரித்திரத்தைப் படித்த பின்பு வ.ரா.வின் எழுத்துகளில் எனக்குக் கவர்ச்சி ஏற்பட்டது. அக்காலத்தில் கவர்ச்சிகரமாய் தமிழில் எழுதக்கூடியவர்கள் மூன்றே பேர்தான். ஒன்று பாரதியார். மற்றொருவர் வ.ரா. மூன்றாமவர், டாக்டர் வரதராஜுலு நாயுடு. இவர்கள் மூவரும் முறையே "சுதேசமித்திரன்',  "வர்த்தக மித்திரன்'," பிரபஞ்ச மித்திரன்' ஆகிய பத்திரிகைகளில் எழுதி வந்தார்கள். மற்றவர்கள் எழுதுபவையெல்லாம் "வழவழா' "கொழ கொழா' என்றுதான் இருக்கும். இந்த மூவர் எழுதும் கட்டுரைகளை விடாமல் விருப்பத்தோடு நான் படிப்பதுண்டு. அதன் பலனாக நானும் பத்திரிகை நடத்த வேண்டும் என்று ஒரு விருப்பம் எனக்குத் தோன்றியது. 

1923-இல் சேலத்தில் நடந்துவந்த "தமிழ்நாடு' பத்திரிகையில் போய்ச் சேர்ந்தேன். தமிழ்நாடு பத்திரிகையில் "தேவிதாசன்' என்ற புனைபெயரில் கதைகள் எழுதிவந்தேன். அச்சமயம் தமிழ்நாடு அரசியல் மாநாடு சேலத்தில் நடந்தது. அதற்கு வ.ரா. வந்திருந்தார். ஒரு நாள் தமிழ்நாடு காரியாலயத்திற்குத் திடீரென்று வ.ரா. விஜயம் செய்தார். என்னைப் பார்த்ததும், ""நீங்கள்தான் தேவிதாசனா?'' என்றார். இதே கேள்வியைத் தேசபக்தர் சுப்பிரமணிய சிவாவும், அதே தமிழ்நாடு ஆபீஸில் மற்றொரு நாள் கேட்டார். ""நான்தான் என்பது உங்களுக்கு எப்படித்தெரியும்?'' என்று நான் கேட்டேன். இருவரும் ஒரே பதிலைத்தான் சொன்னார்கள்."" உங்கள் நெற்றியில் உள்ள குங்குமப் பொட்டே உங்களைக் காட்டிக் கொடுத்தது'' என்று சொன்னார்கள்.  

வ.ரா.வைப் பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவருடைய கட்டுரைகளைப் படித்து அவரிடம் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தபடியால், எதிர்பாராமல் அவர் தரிசனம் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவது வ.ரா.வுக்கு இயற்கையாக உள்ள ஒரு குணம். அதையொட்டி என்னுடைய கதைகளையும் கட்டுரைகளையும் பிரமாதமாகப் புகழ்ந்தார். அவருடைய புகழ்ச்சியால் எனக்கு உச்சி குளிர்ந்தது. அன்று சேலத்தில் ஏற்பட்ட நட்பு அவர் காலமாகிற வரையில் நீடித்தது. இடையில் எத்தனையோ அபிப்ராய பேதங்கள் இருவருக்கும் ஏற்பட்டதுண்டு. என்றாலும் அந்த அபிப்பிராய பேதங்களுக்கு அப்பால் அவர் மீது இருந்த மதிப்பும் நட்பும் மட்டும் என்றும் மாறியதில்லை. 

1933-இல் "காந்தி' என்ற பெயரோடு நான் பத்திரிகை நடத்தி வந்த போது ஓர் இலக்கிய வாரப் பத்திரிகையை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு ஸ்டாலின் சீனிவாசன் பம்பாயிலிருந்து சென்னை வந்தார். திருவையாறு சென்று வ.ரா.வையும் அழைத்து வந்தார். ஒரு நாள் சென்னை ஹைக்கோர்ட் கடற்கரையில் நாங்கள் மூவரும் உட்கார்ந்து புதிய பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அச்சமயம் கோட்டை மீது பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியின் கயிறு அறுந்து கீழே விழுந்தது. அது வீழ்ந்ததில் எங்களுக்குச் சந்தோஷம். ""பிரிட்டிஷ் கொடி வீழ்ந்தது. இனி நமது கொடிதான் பறக்கப் போகிறது'' என்று பேசிக்கொண்டோம். அச்சமயத்தில் தான் புதுப் பத்திரிகைக்கு "மணிக்கொடி' என்ற பெயர் உதயமாயிற்று. 

1925-இல் தமிழ்நாடு காரியாலயம் சேலத்திலிருந்து சென்னைக்கு வந்தது. "தமிழ் சுயராஜ்யா' என்ற பத்திரிகையில் வ.ரா இருந்தார். இரண்டு காரியாலயங்களும் வெகு சமீபத்திலேயே இருந்தபடியால் அநேகமாய் தினசரி மாலை வேளைகளில் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்போம். புதுச்சேரியில் அவர் பாரதியோடும் மகான் அரவிந்தரோடும் பழகிய பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருப்பார். அவற்றையெல்லாம் கேட்பதற்கு எனக்கு ரொம்பப் பிரியமாய் இருக்கும். 

ஐஸ்டிஸ் கட்சி தோன்றுவதற்கு முன்பே இம்மாதிரி ஒரு கட்சி தோன்றும் என்று சொல்லியவர் வ.ரா. சமூக விஷயங்களில் அவ்வளவு தீர்க்க தரிசனம் அவருக்கு உண்டு. அவர் கட்டுரைகள் ஆழ்ந்த கருத்துகள் கொண்டவையாக இருக்கும். கோமாளித்தனமாக எழுதுபவையெல்லாம் அவருக்குப் பிடிக்காது. பிரச்னைகளை சந்தித்து முடிவு செய்யும் உணர்ச்சி தமிழருக்கு வர வேண்டுமானால் ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டு கட்டுரைகளைப் படிக்கும்படி செய்ய வேண்டும். கோமாளித்தனமாக எழுதி பிரச்னைகளைத் தட்டிக் கழிக்கும் படி செய்யக்கூடாது என்ற உறுதியான கொள்கை உடையவர்.  
புதுமைப்பித்தனின் மேதைமையை வ.ரா.தான் கண்டுபிடித்தவர். புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் கொடுத்து மேலும் மேலும் தூண்டிவிட்டவர் அவர்தான். அவரைச் சுற்றி எப்பொழுதும் இளம் எழுத்தாளர் கூட்டம் ஒன்று இருந்துகொண்டே இருக்கும். அவருடைய ஆதரவான மொழிகளைக் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொருவரும் தாங்கள் பெரிய எழுத்தாளர் என்று நினைக்கும்படி தன்னம்பிக்கை ஏற்படும். இம்மாதிரி வாலிபர்களை ஆதரித்துத் தூக்கி விட வேண்டியது அவசியம் என்று கலிஸ்தீனஸ் என்பவர் அச்சமயம் மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகையில் எழுதியது எங்களுக்குக் கிடைத்தது. அதைப் படித்த வ.ரா தமது கொள்கை எவ்வளவு அவசியமானது என்று கூறிச் சந்தோஷமடைந்தார். அந்தக் கட்டுரையைப் படித்த பின்பு இளம் எழுத்தாளர்களோடு அவர் இருப்பதைப் பார்க்கும் போது எல்லாம் கலிஸ்தீனஸ் வேலையா? என்று நான் கேட்பேன். எங்கள் இருவருக்குத்தான் அது புரியும். மற்றவர்களுக்கு அது தெரியாது. அவர் கடகடவென்று சிரிப்பார். வ.ரா மாதிரி கடகடவென்று பலமாகச் சிரிப்பவர்களை நான் பார்த்ததில்லை.  

வ.ராவின் எழுத்துகளில் ஸ்டாலின் சீனிவாசனுக்கு ரொம்பப் பிரியம் உண்டு. வ.ரா.வைப் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது எழுதுங்கள் எழுதுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், வ.ராவை எழுதும்படி வைப்பது சுலபமான காரியமல்ல. பத்திரிகை அச்சுக்குப் போக வேண்டும்; இனி, தாமதம் செய்ய முடியாது என்ற மாதிரி நெருக்கடி ஏற்பட்டாலொழிய அவர் எழுதமாட்டார். அவருடைய எழுத்தின் மதிப்பை அறிந்த ஸ்டாலின் சீனிவாசன் அவரிடமிருந்த நிறைய எழுதி வாங்கித் தமிழ்நாட்டுக்குச் சேர்த்துவிட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். அவருடைய முயற்சிகள் அவ்வளவாகப் பலிக்கவில்லை. 

"குமரிமலர்' பத்திரிகைக்கு உங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தருவதாக ஒப்புக் கொண்டுவிட்டேன். எழுதப் போகிறேன்'' என்று ஒரு நாள் வ.ரா. என்னிடம் சொன்னார். வேண்டாம் என்று நான் சொன்னேன். அவர் கேட்கவில்லை. அவரைத் தடுப்பதற்கு ஒரே வழிதான் உண்டு என்பது எனக்குத் தெரியும். அந்த வழியை உபயோகித்தேன். ""உங்களைப் பற்றி நான் "குமரி மல'ரில் எழுதுகிறேன்.  என்னைப் பற்றி எழுத வேண்டாம்' என்றேன். அப்புறம்தான் "சரி' என்று வ.ரா. ஒப்புக் கொண்டார். நான் கொடுத்த வாக்குப்படியே "குமரி மல'ரில் எழுதினேன். அதைப் படித்து மிகுந்த திருப்தி அடைந்தார். ஆனால், அந்தத் திருப்தி வெகுநாள் நீடிக்கவில்லை. கொஞ்சகாலம் கழித்ததும், ""நீங்கள் சுருக்கமாய் எழுதியது போதாது. விரிவாய் எழுத வேண்டும்.'' என்று சொன்னார். "சரி' என்று ஒப்புக் கொண்டேன். ஆனால், அந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்ற முடியவில்லை. 

(தொடரும்)

வெளியீடு: ஜெனரல் பப்ளிஷர்ஸ், 
244/64, ராமகிருஷ்ணா மடம் சாலை, 
மயிலாப்பூர், சென்னை-600 004.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com