எனது முதல் சந்திப்பு - 16

மட்டப்பாறை  சிங்கம் காங்கிரஸ்  போராட்ட  காலங்களில்  சிறைச்சாலைகளுக்கு  ஏராளமான  காங்கிரஸ்காரர்கள்  போவது  வழக்கம்.  ஆனால்,  சென்னை  ராஜ்யத்தைப் பொறுத்தவரையில்  ஒவ்வொரு
எனது முதல் சந்திப்பு - 16

மட்டப்பாறை சிங்கம்காங்கிரஸ் போராட்ட காலங்களில் சிறைச்சாலைகளுக்கு ஏராளமான காங்கிரஸ்காரர்கள் போவது வழக்கம். ஆனால், சென்னை ராஜ்யத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு போராட்டத்திலும் முதலில் ஜெயிலுக்குப் போகிறவரும் கடைசியில் அதைவிட்டு வெளியே வருகிறவரும் ஒரே ஒருவர்தான். அவரைத்தான் மட்டப்பாறை சிங்கம் என்று அக்காலத்தில் மக்கள் அழைத்து வந்தார்கள். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் அவருக்கு இருந்த செல்வாக்கைப் போல வேறு யாருக்கும் கிடையாது. அப்பகுதிகளில் இருந்த ஜமீன்தார்கள் எல்லாரும் அவருடைய நண்பர்கள். ஜமீன்தார்களாகட்டும், குடிகளாகட்டும் அவர் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது.
கோழிச் சண்டைகள்தான் அக்காலத்தில் ஜமீன்தார்களுக்குப் பெரிய பொழுதுபோக்கு. நமது சிங்கத்திற்கும் அதிலே ரொம்பக் கிறுக்கு. அந்தக் கோழிச் சண்டையில் அவரை நிபுணர் என்று சொல்ல வேண்டும். குஸ்தியிலும் சரி, பெரிய வஸ்தாத். ஆள் ஒல்லியாய், உயரமாய் இருப்பார். ஆனால், உடல் வலிமை மட்டும் சிங்கத்தின் வலிமையைப் போன்றதாய் இருக்கும். தெலுங்கு பிராமணராகையால் மீசை வைத்திருப்பார். அந்த மீசையும் பிரமாதமாய் இருக்கும். கதர் ஜிப்பா போட்டுக் கொண்டு மீசையையும் முறுக்கிவிட்டு வெளியே கிளம்பி விட்டாரானால், அசல் சிங்கம் புறப்பட்ட மாதிரியே இருக்கும்.
அவர் பெயர் ஆர்.எஸ்.வெங்கட்ட ராமய்யா. ஆனால், எல்லாரும் வெங்கட்ட ராமய்யர் என்றுதான் சொல்லுவார்கள். அக்காலத்தில் அப்பகுதிகளில் அவருக்கு இருந்த செல்வாக்கை இக்காலத்தில் யூகிக்க முடியாது. ராமநாதபுரம் ராஜாவை 1937-ஆம் வருஷ சட்டசபைத் தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் தோற்கடித்தார் என்றால், அதற்கு மூல காரணம் மட்டப்பாறை சிங்கம்தான். அய்யரின் செல்வாக்கு அவ்வளவு அதிகமாய் இருந்தபடியால் காங்கிரஸ் இயக்கம் தோன்றுகிற சமயங்களில் முதலில் மதுரை ஜில்லா அதிகாரிகள் அய்யரைத்தான் ஜெயிலில் போடுவார்கள். ஒவ்வொரு தடவையிலும் 2 வருஷங்களுக்குக் குறைந்தது அவருக்குத் தண்டனை கிடையாது. இம்மாதிரி நீண்டகாலத் தண்டனைகளை அவர் அனுபவிக்க வேண்டி வந்ததால், அவருடைய சொத்துகளுக்கும் குடும்பத்திற்கும் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் கொஞ்சமல்ல. என்றாலும், அய்யர் இவற்றைக் கண்டு அஞ்சவில்லை. சிங்கத்தைப் போல அஞ்சாமல் நின்றார்.
நானும் அய்யரும் ஜெயிலில் இருந்த காலங்களில் ஒரு விஷயத்தை நான் கண்டேன். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களிலிருந்து ஜெயிலுக்குள் வந்த சாதாரணக் கைதிகள் கூட அய்யரை "மட்டப்பாறை சாமி' என்று பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிடுவார்கள். அவ்வளவு செல்வாக்குள்ள வேறு யாரும் காங்கிரஸ் கைதிகளில் இருந்ததில்லை. மட்டப்பாறை சிங்கத்தைப் பற்றி முன்பே நான் அறிந்திருந்தாலும், நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கடலூர் ஜெயிலில் 1932 -இல் தான் கிடைத்தது. என்னைவிட வயதில் பத்து வருஷமாவது அவர் அதிகமாய் இருப்பார். என்றாலும், நானும் அவரும் சந்தித்த உடனேயே
எங்கள் இருவர் மனமும் ஒன்றுசேர்ந்து, நாங்கள்
நண்பர்களானோம். எங்கள் கூட்டுறவு எங்களுடைய வெற்றிலை,பாக்கு போடும் பழக்கத்தால் இன்னும் அதிகமாயிற்று. ஒருவேளை எங்கள் இருவருக்கும் சில பொதுவான குணங்கள் இருந்து, அவற்றால் அந்த நட்பு ஏற்பட்டிருக்கலாம். வெற்றிலை,பாக்கு என்றபோது கடலூர் ஜெயிலில் நாங்கள் இருந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. அதைச் சொல்லுகிறேன்.
ஜெயிலுக்குள் என்னதான் கட்டுப்பாடுகள் இருந்தாலும், வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு, சிகரெட்டுகள், பொடி ஆகியவை எப்படியாவது வந்துவிடும். ராஜீயக் கைதிகளில் பலர் இவைகளில் ஏதாவது ஒரு பழக்கத்தைக் கொண்டவர்களாய் இருப்பார்கள். அச்சமயம் ஜெயிலில் சூப்பரின்டென்டென்டாக ஒரு பிரிட்டிஷ்காரர் இருந்தார். ரொம்பக் கண்டிப்பு உள்ளவர். பி- வகுப்பு ராஜீயக் கைதிகளை மட்டும் கடலூர் ஜெயிலில் வைத்திருந்தார்கள். ஜெயிலராக அச்சமயம் இருந்தவர் ஓர் ஆந்திரர். அவர் அதற்கு முன்னால் பல ஜெயில்களில் ராஜீயக் கைதிகள் மீது தடியடி நடத்திப் பெயர் வாங்கியவர். ஜெயிலரும் சூப்பரின்டென்டென்டும் இப்படிப்பட்டவர்களாய் இருந்தும் எங்களுக்கு வேண்டிய புகையிலைச் சரக்குகள் மட்டும் ஒழுங்காய்க் கிடைத்து வந்தன. இந்த விஷயம் சூப்பரின்டென்டென்டுக்கு எட்டியது. அவருக்குக் கோபம் வந்து, ராஜீயக் கைதிகளின் அறைகளைச் சோதிக்க வேண்டும் என்று சொல்லி ஜெயிலர், உதவி ஜெயிலர், வார்டர்களுடன் கிளம்பிவிட்டார். சோதனை போட்டால் அநேகமாய் ஒவ்வொருவர் அறையிலும் ஏதாவது ஓர் ஆட்சேபணையான சரக்கு அகப்படத்தான் செய்யும். அப்படி அகப்பட்டால் அதற்காகத் தனியாகத் தண்டனை வேறு கிடைக்கும். அதற்கு என்ன செய்வது என்று நானும் அய்யரும் யோசனை செய்தோம்.
முடிவாக எல்லாரிடமும் இருக்கிற சரக்குகளை
நாங்கள் இருவரும் வாங்கி வைத்துக் கொள்ளுவதென்று முடிவு செய்தோம். அதே மாதிரி சரக்குகள் எல்லாம் எங்கள் அறைகளில் வந்து சேர்ந்தன. மற்ற வரிசைகளில் சோதனை போட்டு ஒன்றும் அகப்படாத ஜெயில் அதிகாரிகள் எங்கள் வரிசைக்கு வந்தார்கள். எங்கள் வரிசையில் அய்யர் அறை ஒரு கோடியிலும், என்னுடைய அறை மற்றொரு கோடியிலும் இருந்தன. அய்யர் அறையைச் சோதனை போட்டபோது சரக்குகள் ஏராளமாய் அகப்பட்டதைப் பார்த்ததும் சூப்பரின்டென்டென்ட் அப்படியே அசந்து போனார். என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. மற்ற அறைகளில் மேற்கொண்டு சோதனை போடுவதையும் நிறுத்தினார்.
ராஜீயக் கைதிகளில் முக்கியமானவர்களில் இரண்டொருவரை அழைத்துத் தனியாகப் பேசினார். என்னதான் கட்டுப்பாடு இருந்தாலும் புகையிலைச் சரக்குகள் எப்படியாவது ஜெயிலுக்குள் வந்துவிடுமென்றும், அவற்றைக் கவனிக்காதது போல இருந்து விடுவதுதான்
நல்லது என்றும் அவர்கள் சொன்னார்கள். ராஜீயக் கைதிகளிடம் போய் மோதிக் கொள்ளுவதால் தம்முடைய வேலைத்திறமையைப் பற்றிச் சர்க்கார் குறை கூறுவார்களோ என்ற பயம் அவருக்கு ஏற்பட்டது. அதனால் ஒரு சமரசத்திற்கு வந்தார். புகையிலைச் சரக்குகள் வேண்டியவர்கள் ஜெயில் சப்ளையர் மூலம் வரவழைத்துக் கொள்ளலாம் என்றும், வார்டர்கள் மூலம் வரவழைக்கக் கூடாது என்றும் சொன்னார். நாங்கள் சந்தோஷ
மாக ஒப்புக் கொண்டோம். ஜெயிலுக்குள் சரக்குகள் வந்து சேரவேண்டுமானால் ரூபாய்க்கு எட்டணா வார்டர்களுக்குக் கமிஷன் கொடுக்க வேண்டும். ஜெயில் சப்ளையர் மூலம் வரவழைத்தால் ரூபாய்க்கு ரூபாய் சரக்குகள் கிடைத்துவிடும். இதில் எங்களுக்கு என்ன
ஆட்சேபணை இருக்க முடியும்? அதன் பின்னால்
எல்லாம் சுமுகமாய் நடந்து வந்தது.
திருச்சி ஜெயிலில் 1941-இல் நாங்கள் இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. எங்களுடன் இருந்த ஒரு ராஜீயக் கைதி, தாம் நேதாஜி கட்சியைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவரது உண்மைப் பெயரைச் சொல்ல வேண்டாம். அவரைக் கணபதி என்று அழைப்போம். அவர் கடப்பையைச் சேர்ந்தவர். அவரும் தனிப்பட்டவர் சத்தியாக்கிரகம் செய்தே ஜெயிலுக்குள் வந்ததாகச் சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால், அவர் அதற்கு முன் காங்கிரசில் வேலை செய்ததாக யாருக்கும் தெரியவில்லை. காங்கிரஸ்காரர்கள் இருக்கும் ஜெயிலுக்குள் காங்கிரஸ்காரர்கள் என்ன பேசிக் கொள்ளுகிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்காகக் காங்கிரஸ்காரர்கள் வேஷத்தில் உள்ளவர்களைப் போலீசார் அனுப்புவது உண்டு. அம்மாதிரி வந்தவர்தான் கணபதி என்று நாங்கள் சந்தேகப்பட்டோம். அந்தச் சந்தேகத்திற்கு ஏற்றாற்போல், அந்தக் கணபதி நமது தலைவர்களைத் தூஷிக்க ஆரம்பித்தார். மகாத்மாவின் சத்தியாக்கிரகத் திட்டப்படி அந்த நபர் ஜெயிலுக்குள் வந்திருப்பாரானால் மகாத்மாவை அவர் தூஷிக்க வேண்டிய அவசியம் என்ன? இதுதான் எங்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
கணபதியின் தூஷணை கொஞ்சம் கொஞ்சமாக ராஜாஜி மீதும் திரும்பியது. ராஜாஜி குளித்துக் கொண்டிருக்கும்போது அங்கே போய் நின்று கொண்டு திட்டுவதும், சாப்பாட்டுக்கு எல்லாரும் உட்கார்ந்திருக்கும்போது இவர் ராஜாஜி பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு திட்டுவதுமாக ஆரம்பித்தார். ஜெயிலில் இருந்த தேசபக்தர்களுக்கெல்லாம் இந்த செய்கைகள் மிகுந்த மனவேதனையைக் கொடுத்தன. கணபதியின் நண்பர்களிடம் சொல்லி இதை நிறுத்தும்படி எச்சரிக்கை செய்தோம். ஆனால், கணபதி திருந்துகிறவராய் இல்லை. ஜெயிலைவிட்டு விடுதலையாகி வெளியே போகிறவர்கள் முதல் நாள் ஜெயிலில் நண்பர்களுக்கு விருந்து வைப்பது வழக்கம்.
அம்மாதிரி ஒருநாள் மாலையில் ஒரு "தேக்கச்சேரி' நடந்தது. அதில் திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை பேசிய போது தலைவர்களைத் தூஷித்து ஜெயிலுக்குள் பேசுவதைக் கண்டித்தார். இதை யாரோ போய்க் கணபதியிடம் சொல்லியிருக்கிறார்கள். உடனே கணபதி அண்ணாமலைப் பிள்ளை அறை முன்பு வந்து நின்று கொண்டு, ""ஏ அண்ணாமலை, அண்ணாமலை, வெளியே வா. என்னைப் பற்றி என்ன பேசினாய்?'' என்று கத்தினார்.

- அடுத்த இதழில் வெளியீடு: ஜெனரல் பப்ளிஷர்ஸ்,
244/64, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com