மௌனத் தாண்டவம்

''எங்கப்பா இருக்க ?''”
மௌனத் தாண்டவம்

''எங்கப்பா இருக்க ?''”
ஒளிர்ந்த எண்களைக் கொண்டு, அது வீட்டு போன்தான் என நிச்சயம் செய்து, பச்சைப் பொத்தானை பிச்சையா அழுத்தியதும் வந்தது மகனின் முதல் கேள்வி.

வந்திருக்கிற பகுதியைச் சொன்னால் போதுமா? அல்லது நிற்கிற இடத்தைத் துல்லியமாகச் சொல்ல வேண்டுமா எனும் சிறுகுழப்பத்தில், நின்றிருக்கும் வீதியினை கண்களால் துழாவினார். செல்போன் காதில் குடியிருந்தது.

""என்னா, பிச்சையாண்ணே, தக்காளிய வெல கேட்டா, போனைப் போட்டு யாருகிட்ட நெலவரம் வெசாரிக்கிறீங்க. செகப்புச் சட்டக்காரவுகள நம்ப முடியாதுப்பா''” என்றைக்கும் போல இயல்பான கேலிப் பேச்சோடு, பிச்சையாவின் தள்ளுவண்டியில் பரத்திக் கிடக்கும் தக்காளிப் பழத்தினைப் பொறுக்கி தராசுத் தட்டில் வைத்தபடி பெண்ணொருத்தி உரத்த குரலில் கேட்டாள். இடுப்பிலிருந்த அவளது குழந்தை தனது பிஞ்சுக் கைக்கு எட்டிய ஒரு பழத்தினை எடுத்து தன் நுனிப்பல்லில் கடிக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. நாட்டுப் பழமென்றால் இந்நேரம் கிழிபட்டிருக்கும். இது ஹைபிரிட்டாகையால் தனது முரட்டுத்தோலால் குழந்தையின் பல்லுக்குச் சிக்காமல், ரப்பர் பந்தினைப்போல வழுக்கிக் கொண்டிருந்தது. 

அந்தப் பெண்ணுக்கு அபயம் தருவதுபோல கைவிரித்து சைகையில் பதிலளித்த பிச்சையா, “""ம்..ம்.. சமதர்மபுரத்து மேட்டுல எம்.ஜி.ஆர் நகர்ப்பக்கம் இருக்கேன் நாகராசு''-” மகனுக்கு விடை பகர்ந்தார்.

எதிர்முனையில் கொஞ்சநேரம் மெளனம் நீட்டித்தது. நாகராசு தனது தாயாரிடம் கலந்து பேசுவான். அதற்குள் தக்காளிக் குவியலைச் சரித்து, பழங்களை அழுத்திப் பதம் பார்க்கும் பெண்களைத் தடுக்க வேண்டியிருந்தது. “ 
""உள்ளுக்குள்ள தங்கத்தையா ஒளிச்சு வச்சிருக்கேன். எதுக்குமா இப்பிடிப் பொரட்டுறீக ? மேலாப்பலயே நல்ல பழமாத்தான இருக்கு''

”""வீட்டுக்கு எந்நேரம்ப்பா வருவ ?''” இரண்டாவது கேள்வி வந்தது போனில். சரக்கு  விற்றுத் தீரும் மட்டும் வரமுடியாது. சந்தையிலிருந்து புறப்பட்டு நாலைந்து தெருக்கள்தான் வந்திருக்கிறார். இன்னும் முக்கால்வாசி தூரமிருக்கிறது.  வழமையாய் வீட்டுக்கு மதியச் சாப்பாட்டுக்கு வந்து சேருவார். சிலசமயம் அதையும் தாண்டுவது உண்டு. காரியம் என்னவெனத் தெரியவில்லை. கேட்டால் கோபிப்பான். அம்மாக்காரி அருகில் இருந்தால், ""யேன், போன்லயே படம் போட்டுக் காமிக்கணுமாக்கும்''” என ரெண்டு வார்த்தை கூடுதலாய் வரும். 

""சீக்கிரமா வந்திர்ரேன்ப்பா''
போனை அணைக்கும் தருணத்தில், “    ""ஏவாரத்த மட்டும் பாத்துட்டு வெரசா வீட்டுக்கு வந்து சேரட்டும்''” மனைவியின் குரல் இடை
மறித்து வந்தது. ஒருகணம் அசையும் பொருட்கள் யாவும் அசைவற்று நின்றன. அடுத்த விநாடியில் “ரைட்” என தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பிச்சையா, போனை சட்டைப்பையில் போட்டுக் கொண்டார்.    
மனைவியின் இந்தப்போக்கை அவர் உதாசீனம் என எடுத்துக் கொள்வதில்லை. அவள் பிரச்னை அவளுக்கு. அவளது எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் தன்னுடைய நடவடிக்கைகளை அவரால் அமைத்துக் கொள்ள முடிவதில்லை. அதற்காக பிச்சையா எப்போதும் விசனப்பட்டது கிடையாது. மனைவியின் மேல் கோபப்பட்டதும் 
கிடையாது. 
தன்னைப் பற்றியும் தனது வேலைகளைப் பற்றியும் தெரிந்தேதான் அவருக்கு தங்கத்தை பெண் கொடுத்தார்கள். அவரது மாமியாருக்கு பிச்சையாவை ரொம்பவும் பிடித்துப் 
போயிருந்தது. 
""பீடி, சீரட்ட கையில தொடாத பிள்ளையாமே ! ஆயிரம் பத்தாயிரம்னு சம்பாரிச்சு, அரசாங்க வேல பாத்தாலும் இதுபோல கொணம் வந்து அமையுமா !''
பிச்சையாவுக்கு இருந்த பொதுவுடமைச்சிந்தனையால் மாமியார் வீட்டில் லெளகீகமான எந்தவொரு வார்த்தைக்கும் இடமளிக்காமல் தங்கத்தைக் கைப்பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார். பிச்சையாவின் தாயாருக்கும், மகன் ஊருக்கு உபகாரியாய், நாடோ தேசமோ என திரிகிற போக்கைக் கண்டு, காமராசரைப் போல கட்டை பிரம்மச்சாரியாகி கலியாணமே செய்யாமல் இருந்துவிடுவாரோ என்ற அச்சமிருந்தது. தனது "கட்டை' வேகும் நாளில் தனக்கு நெய்ப்பந்தம் பிடிக்க வாரிசில்லாமல் போகுமோ எனும் பயத்தில் கோயில் கோயிலாய் நேர்த்திக்கடன் போட்டுக் கொண்டிருந்தார். மருமகளாய் தங்கம் காலடி வைத்த கணத்தை தவறவிடாமல் அவளை ஆரத்தழுவி அடைகாத்துக் கொண்டார்.
பிச்சையாவும் சங்க வேலை அது இதுவென அலைந்தாலும், வீட்டுக்கு உண்டானதைச் செய்ய மறப்பதில்லை. கறி, புளி என பெரிதாகச் செய்யாவிட்டாலும் கஞ்சித்தண்ணிக்கு குறை வைக்கமாட்டார்.  "நாட்டில் இருவது கோடிப்பேர் ராப்பட்டினியாய் உறங்குவதாக' மேடையில் கொந்தளித்துப் பேசினாலும் தனது குடும்பம் அதில் ஒன்றாய் இருக்கலாகாது என்பதில் இந்திய சர்க்காரைக் காட்டிலும் கூடுதல் அக்கறை காட்டினார்.
"பொதுவேலைக்கு வந்ததால வீட்டக் கவனிக்காம விட்டுட்டாகன்னு யாரும் உதாரணம் காமிச்சு பேச நாம எடம் தரக்கூடாது. "தன் வீட்டையே ஒழுங்கா கவனிக்காத மனுசெ, நாட்டத் திருத்த வந்திட்டார்னு' கைநீட்டி யாரும் பேசிடக்கூடாது. எப்பவும் நம்ம வேலையை வீட்டிலிருந்து துவங்கணும்'  என சங்கத்தில் தலபாடமாய் ஓதி இருந்ததை பிச்சையா மறந்தாரில்லை.. 
அதனால் மாதச் சம்பளம் தரும் வேலைகளை பிச்சையா தனக்குத் தோதுப்படாது என ஒதுக்கிவிட்டார். திடீரென மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என சங்க வேலை
களுக்குப் போக வேண்டி இருக்கும். ஒவ்வொரு முறையும் முதலாளியிடம் கெஞ்ச வேண்டும். அல்லது பொய் சொல்ல வேண்டும். அதனால் அத்தக் கூலி வேலைகளுக்குத்தான் ஆர்வம் காட்டினார். 
சங்கத்து வேலைகள் தெரியவரும்போது, முதல்நாள் கூடுதலாய் வேலை பார்த்து சரிக்கட்டி வைத்துக் கொள்வார்.
தங்கத்துக்கு, அவளது அம்மா சொன்னது
போல பிச்சையாவால் எந்த கொறபாடும் இல்லை. "அடியே' என இன்றுவரைக்கும் சுடுசொல் சொல்லி அழைத்தது கிடையாது. செல்லமாகக் கூட அப்படிச் சொல்லிக் கூப்பிட்டது இல்லை. "அம்மா வீட்டுக்குப் போ' என்று ஒருபோதும் அடித்து விரட்டியதோ, "ஏதும் வாங்கி வா' என்று மிரட்டிப் பேசினதோ இல்லை. வேலை இல்லாக் காலத்தில் சிலபோது பட்டினி கிடந்ததுண்டு. "சங்கக் கூட்டத்துக்கு போகிறேன்' எனச் சொல்லி ஜெயிலுக்குப் போய்விட்ட போதில் பயம்பிடித்து அலறிய இரவுகள் பலவுண்டு. அவற்றையெல்லாம் சரிக்கட்டும் விதமாக, ஜெயில்  கதைகள் சொல்லி தானும் போய் வர வேணும் எனும் எண்ணத்தை உருவாக்கி விடுவார்.
விருமாண்டித் தாத்தா வீட்டாளுகளும் அடிக்கடி ஜெயிலுக்குப் போய்வருவார்கள். வந்தவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்து துணிமணிகளைக் கழற்றி தூர எறிந்துவிட்டு, நல்லெண்ணெய் தேய்த்து தலைமுழுக்காட்டி, புதுத்துணி உடுத்தி, கறியும் சோறுமாய் முங்க முங்க திங்க விடுவார்கள். 
பிச்சையா விழுந்து விழுந்து சிரிப்பார். 
""“நாங்களென்ன களவாணித்தனம் செஞ்சு அக்யுஸ்ட்டாவா  ஜெயிலுக்குப் போறோம்? அடிவாங்கி கெறங்கிப் போய் வர ? அரசியல் கைதிகள் ம்மா... மக்கள் பிரச்னைக்காக போறோம். ஜெயில்ல எங்கள சரிவர நடத்தலன்னா ஜெயிலுக்குள்ளயும் போராடுவோம்''”
பிள்ளைகள் வளர்ந்து வந்த காலத்தில் வேலைத்தன்மையை பிச்சையா மாற்றிக் கொண்டார். முன்போல சுமைகளைச் சுமக்கும் திறனும் குறைந்து போனது. அதனால் வாடகைக்கு ஒரு தள்ளுவண்டி எடுத்துக் கொண்டு ஏவாரம் செய்யத் துணிந்தார். தினசரிச் சந்தையில் தக்காளிப் பெட்டியை ஏலத்தில் எடுத்து, முப்பத்தி மூன்று வார்டுகளுக்கும் தெருத்தெருவாக வண்டி தள்ளி விற்கும் தொழிலை மேற்கொண்டார். ஊர் மக்கள் அத்தனை பேரையும் கண்ணுக்குக் கண் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. வியாபாரத்துக்கு வியாபாரம். வேலைக்கு வேலை. ஒவ்வொரு வார்டின் நிலையும் கண்கூடாய் அவருக்குத் தெரிய வரலாயின. மக்கள் ரொம்பவும் உரிமை எடுத்து பழகினர். “
""சாக்கட அடப்பு தீர மாட்டேங்கிது. முனிசிபாலிடில எல்லாம் காண்ட்ராக்ட் விட்டதால குப்பை வாங்க மட்டும்தான் ஆள் வாராங்க''
""ரேசன் கடைல கூட்டம்னு திரும்பி வந்தா மறுநாள் பொருளு இல்லேங்கறான்''”
”""தம்பியக் கொணாந்து ஒப்படைச்சுட்டு புள்ளையக் கூட்டிட்டுப்போ ன்னு போலீஸ் ஸ்டேசனுக்கு சின்னப் பெயல கூட்டிட்டுப் போய்ட்டாங்க பிச்சையா''” தவிர, வீட்டுப் பஞ்சாயத்து, கந்துவட்டி பிரச்னை என  எல்லோரும் வந்து போனார்கள். 
பிச்சையாவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கினைக் கொண்டு, அவரை வார்டு கவுன்சிலராக்க கட்சியில் முடிவு செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் போய்க் கொண்டிருந்தது. தேர்தல் செலவுக்காக, கூட்டணிக் கட்சி சார்பில் பெருந்தொகை ஒன்று பிச்சையாவின் வீட்டுக்கு வந்தது. அது கண்டு ஆடிப்போன பிச்சையா கட்சிக்கு தகவல் சொல்ல வந்த வழியே பணம் திரும்பியது. ""நீங்களே வச்சு செலவழியுங்க, நாங்க பொதுமக்கள்கிட்ட வசூல் செஞ்சு பாத்துக்கிறோம்'' என கறாராகப் பேசினபோதுதான், தங்கத்தின் சொந்தக்காரர்கள் பிச்சையாவை பிழைக்கத் தெரியாதவன் என்று  ஏசினார்கள். அதிலிருந்து உறவினர்களை ஒதுக்கி வைத்தாள் தங்கம்.
சமதர்மபுரம் மேட்டை விட்டிறங்கி, சிவராம்நகர் நுழைந்தபோது அடுத்து ஓர் அழைப்பு. 
"விசயம் என்னான்னு சொல்ல மாட்டேங்கறாங்கெ' தன்னளவில் குறைபடத்தான் முடிந்தது. வாய்விட்டுக் கேட்டால் அதுவொரு குற்றமாகக் கொள்ளப்படும். “
""யே ? என்னானு சொன்னாத்தே வண்டி வீட்டுக்குத் திரும்புமா ! வேற சோலி நெறையக் கெடக்காக்கும்''” தங்கம் பிரச்னையை வேறு
புறம் திருப்புவாள்.
இப்பவும் அவள் நல்ல பெண்தான். அவள் அளவில் குறைசொல்ல முடியாது. வயதான பின்னும் வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் கூடி உட்கார்ந்து ரெண்டு கதைபேசிச் சிரித்து விளையாடி காலத்தை ஓட்டாமல், இன்னமும் கூட்டம், மாநாடு, வகுப்பு என பட்டாம்பூச்சியாய் காலில் ரெக்கைகட்டி விட்டதுபோல பறந்துபறந்து ஊர்சுற்றுவதை எந்தப் பொண்டாட்டிதான் விரும்புவாள்?  இதையெல்லாம் விட, முக்கியம் "வெள்ளையப்பன்'. முதல் வருசம் வார்டு செயலாளர், அடுத்தவருசம், வார்டு கவுன்சிலர் அப்புறம், கடை என்ன கண்ணி என்ன, வீடுகளென்ன, மாடி வைத்த பங்களாக்கள் எத்தனை ! என சம்பாத்தியம் பண்ணும் அரசியலில்  கல்யாணம் கட்டி நாற்பது வருசமாகியும், வாடகை வீடே கதியாய் சட்டிபொட்டியைத் தூக்கி அலைவதே விதியாய் வாய்த்த பொம்பளையிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். அந்த அலைச்சலின் அவதியாகத்தான் தங்கத்தின் பேச்சைப் பார்க்கவேண்டி 
இருந்தது. 
ஆனாலும் பிறத்தியார் பிச்சையாவை ஒரு வார்த்தை அனாவசியமாகப் பேசச் சகிக்க மாட்டாள். “
""அவரப்பத்தி என்னா தெரியும் உங்களுக்கு? நாக்குமேல பல்லுப்போட்டு பேச வந்திட்டீக! ஊரூராச் சுத்திவாரார்ல ஒராள்ட்ட ஓசிக் காப்பி வாங்கிச் சாப்புட பாத்ததுண்டா ? அடுத்தாள் காசு அஞ்சி பைசா தனக்குன்னு வாங்கக் கேட்டதுண்டா ? அப்பிடி இருக்கப் போய்த்தே இந்த வயசிலயும் வெய்யிலு மழன்னு பாக்காம, பள்ளம் மேடு, நேரம் காலம்னு ஒக்காராம பம்பரம்மா சுத்தி வந்தாலும், நோவு, நொம்பளம்னு ஏதுமில்லாம முறுக்கோட திரிறாரு. அவெவெ முப்பது வயசிலயே முப்பத்திரெண்டு சீக்கோட சீரழியறதவும் பாக்கறம்ல'' மூச்சுவிடாமல் பிழிந்து தள்ளிவிடுவாள்.
ஊருக்குள் இறங்கியபோது வெய்யில் உச்சிக்கு ஏறிக் கொண்டது. கழுத்திலிருந்த துண்டை எடுத்து முகத்தில் வழிந்த வியர்வையினைத் துடைத்தவர், நெஞ்சுக்கூட்டையும் ஒற்றியெடுத்தார். உச்சந்தலையில் சூரிய வெப்பம் "சுர்ர்'ரெனத் தாக்க, துண்டை உருமாலாய்ப் போட்டுக் கொண்டார். பழங்களில் காய், சொத்தைகளைப் பொறுக்கி ஒதுக்கினார். நல்ல பழங்களை ஒன்று சேர்த்தார். மூன்றுபேர் கிடைத்தால் விற்றுவிடலாம். அல்லது காபிக்கடை அமைந்தால் போதும்.  வீட்டுக்குக் கொஞ்சம் தேவைப்படும். ஏதேதோ கணக்குப் போட்டபடி வண்டியைத் தள்ளலானார்.
”"தக்காளி, தக்காளி, நயம் தக்காளி, ஜம்ஜம் தக்காளி'” இப்படி ஏதாவது வார்த்தைகளைக் கோர்த்தால்தான் வசீகரப்பட்டு, பெண்கள் இறங்கி வருகிறார்கள்.
சாதிக் பிரியாணிக்கடை குறுக்கிட்டது. அந்த இடத்தில் நின்று இரண்டுதரம் கூவினார். கடையிலிருந்து யாரும் எட்டிப்பார்க்கவில்லை. ”
""பாய் ...  மாமி ... அத்தா , ம்ஹூம்'' கடைக்குள் நுழைந்து பேச வேண்டியதுதான். லாபம் குறையும். இருப்பதை மொத்தமாய்த் தள்ளி விடலாம்.
”""அரைக் கிலோ எவ்வளவு ?''
வழிப்போக்கில் வந்த பெண் ஒருத்தி பை 
விரித்தாள். “
""பெறக்கிக்கிட்டு இரும்மா... கடைக்குள்ள போய்ட்டு வந்திர்ரேன்''” 
எண்ணியது போலவே பழம் பூராவும் விலையானது. வீட்டுக்கு எடுத்தது போக, அரைக்கிலோ வழிப்பெண்ணுக்கு. மீதம் பிரியாணிக்கடைக்குப் போனது. பணம் சாயங்காலம் வந்து வாங்க வேண்டும். சாக்கை உதறி மடித்து தராசை தக்காளிப் பெட்டிக்குள் இறக்கி, பெட்டிகளை வண்டியின் கீழ்ப்பக்கம் வைத்து வண்டியைத் தள்ளினார். 
நேரே வீட்டுக்கு எனும் எண்ணத்தை சன்னாசி டீக்கடை மாற்றியது. வேலை முடிந்ததும் அங்கே ஒரு டீ சாப்பிடுவது வழக்கம். கடையைத் தாண்ட முடியவில்லை.  ரெண்டு நிமிசம். செல்போனை எடுத்து கைப்பிடியில் வைத்துக் கொண்டார். அழைத்தால் வந்திட்டேன் எனச் சொல்லவேணும்.
“""தோழர்''”
நலவாரிய சங்கச் செயலாளர் சண்முகம்,. கக்கத்தில் இடுக்கிய ரெக்சின் பையோடு வந்தார்.  
“""வாங்க... வாங்க... ரெண்டு டீ''”
“""தோழருக்கு இன்னிக்கி ஏவாரம் 
கூடுதலோ ?''”
“""அப்பிடியெல்லா இல்ல தோழர். எப்பவும் போலத்தான். வீட்ல அவசரமா கூப்டாங்க. அதனால சீக்கிரமா முடிச்சிட்டு வாரேன். நீங்க என்னா கூட்டத்துக்கு தகவல் சொல்லிட்டு இருக்கீகளோ''  இன்றைக்கு மாலை நடக்கவிருக்கும் இயக்கமொன்றை நினைவுபடுத்தினார்.
“""அது இருக்கு. இன்ன வரைக்கும் நான் உங்க வீட்லதான இருந்தேன்''” 
டீயை வாங்கிக் கொண்டார்.
“""எங்க வீட்லயா ?''” அதிர்ச்சிக்குள்ளான பிச்சையாவுக்கு வீட்டிலிருந்து போன் வந்ததன் காரணம் தெளிவாகியது. 
“""எல்லாத்தியும் வீட்ல சொல்லிட்டீகளா ?''”
“""வேற வழி ? நீங்க எதார்த்தத்த விட்டுட்டுப் பேசறீங்க சரி, வீட்ல சொல்லீடுவோம்னு தோனுச்சு... அவங்க கருத்தையும் கேக்கணும்ல''”
“""இது என்னோட பிரச்னை தோழர். என்னோட கருத்துதான் முக்கியம்''”
முறைசாரா சங்கத்தில் தெருவோர வியாபாரியாக நலவாரியத்தில் தன்னைப் பதிவு செய்திருந்தார் பிச்சையா. அறுபது வயது பூர்த்தியானதும் பென்சன் பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். 
“""எனக்கு பென்சன் வேண்டாம்''” என மறுத்தார் பிச்சையா,  ”""நான் உண்மையிலேயே உடல் வலுவிழந்து ஓய்வு பெறும்போது விண்ணப்பிக்கலாம்''” 
சலுகைகளுக்காக பணத்தைக்கட்டிக் கொண்டு அலையும் காலத்தில், கிடைக்கும் சலுகையை தட்டிவிடும் மனுசனை என்ன சொல்லியும் சம்மதிக்கச் செய்ய முடியவில்லை. 
வீட்டாரிடம் சொல்லி தன்னை சரிக்கட்டவே சண்முகம் வந்திருக்கிறார் என்பது பிச்சையாவிற்கு விளங்கியது. அதனால்தான் வீடு முழுசும் சேர்ந்து தன்னை வேகமாக வீட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
“""நாந்தே தெளிவாச் சொல்லிட்டேன்ல தோழர். வீட்ல என்ன சொன்னீக?'' 
“""என்ன சொல்ல ? நீங்க ஒரு லாஜிக்ல பென்சன் வேணாம்ணுட்டீக. வீட்ல உமக்கு கிறுக்குப் பிடிச்சுக்கிருச்சுன்னு சர்ட்டிபிகேட் குடுக்குறாக. ரெண்டுக்கும் மத்தியில நா எஸ்கேப் ஆகி வந்திட்டேன்''”
“""இல்ல தோழர். ஓய்வு ஊதியம்ங்கறது, நிஜமாவே உழைக்க முடியாம ஓய்வு எடுக்குற மக்களுக்குத் தர வேண்டியது. நாந்தே இன்னமும் தைரியமா ஊரச் சுத்திக்கிட்டுருக்கேனே?''
“""ஏங்க, உங்களுக்கு தகுதி இருக்கதனாலதான வாங்கச் சொல்றம். வயசு ஆயிருச்சு, நலவாரியத்துல கரண்டா பதிவுலயும் இருக்கீங்க... வேற இல் லீகலா வாங்கச் சொல்லலியே''”
“""தகுதிங்கறது வெறும் நம்பர வச்சு கணக்குப்போடக்கூடாது தோழர். சக்திக் கேற்ற உழைப்புன்னு சொல்றத நான் அப்பிடித்தான் புரிஞ்சிருக்கேன்''”
“”""ஒங்க புரிதல் சரிதான். ஆனா, இன்னொருபக்கம் ஒரு பெரிய வரலாறையே நீங்க புறங்கைல தள்ளிவிடுறீங்க''” என்ற சண்முகம், ”""பென்சனுக்காக எத்தனை தியாகம் போராட்டம் நடத்தியிருக்கோம்னும் தெரியும்ல ?''”
“""உண்மைதான் தோழர். ஆனா, இனாமா ஒரு காச வாங்க மனசு ஒத்துக்கலியே''
""இந்தச் சலுகையெல்லாம் இனாம் இல்ல. நம்மோட மறைமுகமான சேமிப்பு” வரியாக அரசுக்கு ஒவ்வொருவரும் செலுத்தும் பணம்'' - சொன்னார்.
”""விட்ருங்க தோழா, வேற யாருக்காச்சும் பயன்படட்டும்'' பேச்சை துண்டிப்பது 
தெரிந்தது.
”""தெளிவாச் சொன்னா நம்ம சங்கத்தோட கொள்கையவே நீங்க மறுதலிக்கிறீங்க''” என வகுப்பெடுக்கலானார். 
“""மறுக்கல தோழர். மெஜாரிட்டிக்கி கட்டுப்படுறேன். ஆனா, எனக்குன்னு ஒரு கருத்து இருக்கும்ல''” 
இருவருக்கும் இடையில் சிறு மெளனம் தாண்டவாமாடியது.
“""ரைட், சரி நீங்க வீட்டுக்குப் போங்க''  
வாழ்வியல் பாடம் வரலாற்றையே மாற்றும் வல்லமை மிக்கது. அங்கே மாற்றப்படுவார் என சண்முகம் நம்பினார். 
டீக்கு பணம் கொடுத்துவிட்டு, வீட்டை நோக்கி வண்டியைத் தள்ளினார் பிச்சையா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com