எனது முதல் சந்திப்பு - 16

அச்சமயம் மட்டப்பாறை நூல் நூற்றுக் கொண்டு இருந்தார். நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தேன். கணபதி தாறுமாறாகப் பேசுவது நிற்கவில்லை.
எனது முதல் சந்திப்பு - 16

சென்ற இதழ் தொடச்சி


அச்சமயம் மட்டப்பாறை நூல் நூற்றுக் கொண்டு இருந்தார். நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தேன். கணபதி தாறுமாறாகப் பேசுவது நிற்கவில்லை. ஆகையால், அடுத்த தடவை அவர் பேசும்போது அவருக்குப் பாடம் கற்பிப்பது என்று நானும் மட்டப்பாறையும் தீர்மானம் செய்திருந்தோம். அதற்காக நண்பர்களிடம் சொல்லிவைத்துக் கணபதி கலாட்டா செய்யும்போது, எங்களிடம் வந்து சொல்லும்படி ஏற்பாடு செய்திருந்தோம். அதன்படி ஒரு நண்பர் வந்து,"" அண்ணாமலைப் பிள்ளையைக் கணபதி திட்டிக் கொண்டிருக்கிறார்'' என்று சொன்னார். உடனே நாங்கள் இருவரும் போனோம். அங்கே கணபதி நின்றுகொண்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தார். நான் அவர் பக்கத்தில் போய் தட்டிக் கொடுத்தேன். பக்கத்தில் மட்டப்பாறை நின்று கொண்டு இருந்ததால் கணபதி எதிர்க்கவில்லை. பூர்ண அஹிம்சையைக் கைக்கொண்டார். "" இனிமேல் இம்மாதிரி பேசினால், ஜாக்கிரதை'' என்று சொல்லிவிட்டுத் திரும்பினோம்.

இதற்குள் மாலை 6 மணியாய் விட்டது. சாப்பிடுகிற நேரம். ஜெயிலில் ஒரே பரபரப்பு. சூப்பரின்டென்டென்டிடம் கணபதி போய்ப் புகார் செய்தார். மறுநாள் காலையில் ராஜாஜியையும், பிரகாசத்தையும் சூப்பரின்டென்டென்ட் தமது காரியாலயத்திற்கு அழைத்து விசாரணை செய்தார். அவர் ஒரு பிரிட்டிஷ்
காரர். பின்னால் என்னையும் அழைத்து விசாரித்தார். "கணபதி சொல்லுவது உண்மை என்பதை நிரூபிக்கும்படி சாட்சியம் விடட்டும்.' என்று நான் கேட்டேன். கணபதி சில பெயர்களைக் குறிப்பிட்டார். அவர்கள் எல்லாரும் ஆந்திரர்கள். அவர்கள் சாட்சியம் சொல்லும்போது கணபதி சொல்லும் சம்பவத்தைத் தாங்கள் பார்க்கவில்லை என்று கூறினார்கள். ஆகவே, பொய் புகார் கொடுத்ததற்காகக் கணபதி மீது நடவடிக்கை எடுப்பதா அல்லது அவர் புகாரை வாபஸ் வாங்கிக் கொள்ளுகிறாரா என்ற நிலைமை ஏற்பட்டது. புகார் செய்த கணபதி தமது புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார். அன்றே அவரைச் சென்னை ஜெயிலுக்கு மாற்றிவிட்டார்கள். அப்புறம் அவர் நாங்கள் இருந்த தனி ஜெயிலுக்கு வரவே இல்லை.

விளக்கெண்ணெய் சமாச்சாரமே அய்யருக்குப் பிடிக்காது. எதிலும், வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். ஆனால், ஒரே விஷயத்தில் மட்டும் இம்மாதிரி அவரால் இருக்க முடிந்ததில்லை. காங்கிரசுக்குள் ராஜாஜி கோஷ்டி, சத்தியமூர்த்தி கோஷ்டி என்று இரண்டு இருந்து வந்தன.

ராஜாஜிக்கு எதிராக அய்யர் எக்காலமும் போகக்கூடியவர் அல்ல. என்றாலும், சத்தியமூர்த்தியிடமும் அவருக்கு மிகுந்த பிரியமுண்டு. இதனால் ராஜாஜிக்கும், சத்தியமூர்த்திக்கும் போட்டி ஏற்பட்டு, நெருக்கடியான கட்டங்கள் வரும்போது அய்யர் தர்மசங்கடத்தில் அகப்பட்டு விழிப்பார்.

ஓர் உதாரணம் சொல்லுகிறேன். 1940 -ஆம் வருஷம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேர்தல் நடந்தது. ராஜாஜி கோஷ்டி சி.பி.சுப்பையாவையும், சத்தியமூர்த்தி கோஷ்டி காமராஜரையும் ஆதரித்தார்கள். இதில் யாரை ஆதரிப்பதென்று முடிவு செய்யக் கூடாமல் அய்யர் திகைத்தார். பெயர்களைப் பிரேரித்தபோது காமராஜ் பெயரைச் சத்தியமூர்த்தி பிரேரித்தார். ஆனால், சி.பி.சுப்பையா பெயரை ராஜாஜி தாமே பிரேரிக்கவில்லை. வேறு ஒருவரைக் கொண்டு பிரேரிக்கச் சொன்னார். இதில் அய்யருக்கு ஒரு பிடி அகப்பட்டது. ராஜாஜி தாமே பிரேரிக்காதவருக்குத் தாம் ஓட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தம்முடைய மனத்தைத் தேற்றிக் கொண்டார். சத்தியமூர்த்தி பிரேரித்த காமராஜுக்கு ஓட்டுக் கொடுத்தார். அந்தத் தேர்தலில் ஒரு ஓட்டு மெஜாரிட்டியில்தான் காமராஜ் வெற்றி பெற்றார்.

மற்றோர் உதாரணம் சொல்லுகிறேன். ராஜாஜி முதல் மந்திரியாக இருந்தபோது அய்யர் சட்ட சபையில் அங்கத்தினராய் இருந்தார். மாகாண சுயாட்சி ஏற்பட்டும் கூட, காங்கிரஸ்காரர்கள் சர்க்காரை நடத்தி வந்தும் கூட, மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு அய்யர் மீதுள்ள பழைய கோபம் போகவில்லை. ஒரு வெள்ளைக்காரர், ஜில்லா சூப்பரின்டென்டென்டாய் இருந்தார். அவருக்கும் அய்யருக்கும் பிடிக்கவே பிடிக்காது. அவர் துணிந்து அய்யர் மீது ஒரு வழக்குப் போட்டார். அந்த வழக்கில் அய்யர்மீது கொலை, கொள்ளை, தீ வைத்தல் இவ்வளவு குற்றங்களையும் சுமத்தினார். வழக்கு, பொய் வழக்கு என்பதை ராஜாஜி அறிவார். என்றாலும், தம்மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று அய்யர் கேட்டபோது ராஜாஜி மறுத்துவிட்டார். கோர்ட்டில் விசாரணை நடந்தால் அய்யர் மீதுள்ள வழக்கு வெறும் பொய் என்று நிரூபணமாகி அய்யர் விடுவிக்கப்படுவார் என்றும், அப்படி விடுதலை அடைவதுதான் நல்லது என்றும் சொல்லிவிட்டார். வழக்கை வாபஸ் வாங்கினால் காங்கிரஸ் ஆட்சிக்குக் கெட்ட பெயர் வரும் என்பது ராஜாஜியின் கருத்து. கடைசியில் வழக்கு நடந்து அய்யரும் விடுதலை ஆனார். ஆனால், ஒரு கொலை வழக்கை நடத்துவது என்றால் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் இருக்கின்றன. அவ்வளவையும் அய்யர் அனுபவித்தார். என்றாலும், ராஜாஜி மீது அவருக்கு இருந்த மதிப்பும் பிரியமும் மட்டும் குறையவில்லை. அதே மாதிரி ராஜாஜிக்கும் அய்யர் மீதிருந்த அன்பும் நம்பிக்கையும் குறையவில்லை.

பழங்காலத்துப் பெருங்குணம், மரியாதை, சொன்ன சொல்லைக் காப்பாற்றல், இம்மாதிரியான உயரிய குணங்களைக் கொண்டவர் அய்யர். நண்பர் என்றால் உயிரைக் கொடுப்பார். யார் போய் அவருடைய உதவியைக் கோரினாலும் இல்லை என்று சொல்லமாட்டார். அதனால் ஒருவருக்கு ஒரு காரியத்தைச் செய்து கொடுப்பதற்காகத் தம் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிப் போகும்போது அதைவிட அவசரமான காரியமாக மற்றொருவர் வந்து வழியில் பிடித்துக் கொண்டால் அவரோடு போய்விடுவார். அக்காலங்களில் அய்யர் வீட்டை விட்டுப் புறப்பட்டால் அவர் எங்கே போனார்? எங்கே இருப்பார் என்பதை யாராலுமே அறிந்து கொள்ள முடியாது.

ஜெயில் வாழ்க்கையில் ஒரு விநாடி கூட அவரால் சும்மா இருக்க முடியாது. அவர் உடம்பில் உள்ள உணர்ச்சியும் வேகமும் அவரைச் சும்மா இருக்கவிடுவதில்லை. பெரும்பான்மையான நேரங்களில் அவர் நூல் நூற்றுக் கொண்டே இருப்பார். ரொம்ப மெல்லிய நூலாய் நூற்பார். அதைக்கொண்டே தமக்கு வேண்டிய துணிகளைத் தயார் செய்து கொள்ளுவார். ஏதோ சில நாட்களில் சீட்டாடுவார். சீட்டாட்டத்திலும் கெட்டிக்காரர். ரொம்பக் குஷி வந்துவிட்டால் அவருக்குப் பிடித்தமான மீனாட்சி அம்மன் மீது பாடியுள்ள சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி அர்த்தஞ் சொல்லுவார். பெரிய கலா ரசிகர். நூற்பதில் அவருக்கு எவ்வளவு பிரியம் உண்டோ, அவ்வளவு பிரியம் சங்கீதத்திலும் உண்டு. காரைக்குடி சாம்பசிவ ஐயர் வீணைக் கச்சேரி என்றால், எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு லயித்து விடுவார்.

நவீன நாகரிக நடையுடைகள் அவருக்குப் பிடிப்பதில்லை. அதற்குக் காரணம் அவருடைய பழமையான பண்பாடே தான். மறைந்துவரும் பழைய பண்பாட்டின் உருவகமாய் அய்யர் விளங்குகிறார். சுயராஜ்யப் போராட்டத்தில் அவருக்கு இருந்த அடக்கமுடியாத ஆவலினால் அவர் மதுரை ஜில்லாவில் செய்த காரியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சுயராஜ்யத்திற்காக மதுரை ஜில்லாவில் அரும்பெரும் தியாகங்கள் செய்த அய்யர், சுயராஜ்யம் கிடைத்த பின்பு முன்னணி ராஜீய வேலையிலிருந்து விலகிக்கொண்டார். என்றாலும், மதுரை ஜில்லாவின் சுயராஜ்யப் போராட்ட சரித்திரத்தில் அய்யரின் பெயர்தான் முதல் இடத்தை நிச்சயமாய்ப் பெறும்.

(நிறைவு பெற்றது)

படம் உதவி : ஜே.எஸ்.ராமசாமி, தென்காசி.
வெளியீடு: ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை-600 004.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com