எப்போதும்...  சானிடைசர்?

கரோனா தொற்று ஏற்படாமலிருக்க கைகளை நன்றாக  அடிக்கடி  கழுவ வேண்டும் என்கிறார்கள்.
எப்போதும்...  சானிடைசர்?

கரோனா தொற்று ஏற்படாமலிருக்க கைகளை நன்றாக  அடிக்கடி  கழுவ வேண்டும் என்கிறார்கள்.  கைகளைக் கழுவ தண்ணீர், சோப் இல்லாத இடங்களில் என்ன செய்வது? என்று கேட்டால், "அதற்குத்தான் சானிடைசர் இருக்கிறதே' என்று எல்லாரும் சொல்வார்கள்.  செல்லுமிடங்களில் எல்லாம் பயன்படுத்துவதற்காக தங்களுடன்  சானிடைசரை கையோடு எடுத்துச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.  

இந்த சானிடைசர் எந்த அளவுக்குக் கிருமிகளை அழிக்கும்? எந்த அளவுக்குப் பாதுகாப்பானது? எந்த அளவுக்குத் தீங்கு இல்லாதது? சானிடைசரைக் கொண்டு மட்டும் கைகளைத் தூய்மைப்படுத்தினால் போதுமா? - இவ்வாறான கேள்விகள் நிறையப் பேருக்கு எழுவதே இல்லை. 

அமெரிக்காவின் "ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ஸ்ட்ரேஷன்'  மெதனால் கலந்த 87 சானிடைசர்களை அடையாளம் காட்டி அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.  
சானிடைசரில் கலந்துள்ள ஆல்கஹால் நச்சுத்தன்மை உள்ளது என்று கூறியுள்ளது. 

இப்போது எல்லாருடைய வீடுகளிலும் சானிடைசர் உள்ளது. குழந்தைகளின் கைக்கு எட்டாத தொலைவில் சானிடைசரை வைக்க வேண்டும் என்கிறார்கள்.  சானிடைசர்களின்  பளிச்சென்ற வண்ணங்களும்,  மூக்கை இழுக்கும் வாசனையும் எல்லாரையும் ஈர்ப்பவை. குறிப்பாக, குழந்தைகளை அதிகம் ஈர்ப்பவை.  அவற்றில் 67 சதவீதம் எத்தில் ஆல்கஹால் கலந்திருக்கிறது.  யாரும் கவனிக்காதபோது குழந்தைகள் சானிடைசரை சிறிதளவு குடித்தாலும் கூட,  பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடும்.  தலைசுற்றல், மயக்கம்,  குழறிய பேச்சு,  தலைவலி, மூளையில் பாதிப்பு... ஏன் மரணமும் கூட நிகழலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  எனவே சானிடைசரை குழந்தைகளின் கண்களில் படாமல் மறைத்து வைப்பது நல்லது. 

"20 விநாடிகள் கைகளை நன்றாகக் கழுவுங்கள்; விரல் இடுக்குகளில், விரல் நகங்களுக்குள் எல்லாம் கரோனா வைரஸ் உட்கார்ந்திருக்கக் கூடும்.  எனவே நன்கு  அழுத்தி தேய்த்துக் கழுவுங்கள்' -  கைகளைக் கழுவுவதற்காக இவ்வாறு எல்லாம் சொல்லப்படுபவைகளால்  சோர்ந்து போன பலர், "அட, போங்கப்பா... நாங்க  சானிடைசரிலேயே சுத்தப்படுத்திக் கொள்கிறோம்' என்று அவ்வப்போது சானிடைசர்களில் கைகளை நனைத்துக் கொள்கின்றனர்.   

ஆனால் சோப்பு போட்டுக் கைகளைக் கழுவாமல் இருப்பதால், கைகள் தூய்மையாவதில்லை.  கைகளில் பதுங்கியிருக்கும் வைரஸ்களும், கிருமிகளும் நோய்த் தொற்று ஏற்பட காரணமாகிவிடுகிறது என்று "மெடிகல் நியூஸ் டுடே' என்ற ஓர் இதழ் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் அடிக்கடி சானிடைசர்களைப் பயன்படுத்துவதால்,  உடலில் பாக்டீரியாக்கள் முதலில் அழிந்துபோனாலும், சிறிது நாளில் சானிடைசர்களை மீறி உருவாகும், உயிர்வாழும் திறனைப் பெற்றுவிடுகின்றன என்று அந்த ஆய்வு கண்டறிந்திருக்கிறது. எனவே கிருமிகளை, வைரஸ்களை அழிக்கும்  திறனுள்ள "எல்லாம் வல்ல'  சானிடைசர்களும் கூட,   ஒரு கட்டத்தில் பயனில்லாமற் போய்விடுகின்றன. 

சில சானிடைசர்களில் ட்ரைகுளோசன் என்ற நச்சு வேதிப் பொருள் உள்ளது. அது கைகளில் பட்டவுடன் தோல்களில் ஊடுருவிச் சென்று நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடுகளைப் பாதிக்கிறது. அதுமட்டுமல்ல, புற்றுநோய்க்கான செல்களை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் தன்மையும் இந்த ட்ரைகுளோசன் என்ற வேதிப் பொருளுக்கு உள்ளது. இந்த வேதிப் பொருளின் தீங்குகளை சிகாகோவில் உள்ள யுனிவர்சிடி ஆஃப் இல்லினாய்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சி செய்து அறிவித்துள்ளது. 

அப்படியானால்,  சானிடைசர்கள் வேண்டவே வேண்டாமா?  

கைகளை உடனே தூய்மைப்படுத்த தண்ணீரும், சோப்பும் இல்லாத இடங்களில் சானிடைசர்கள் அவசியம்.  ஆனால் அவற்றைப் பயன்படுத்தும்விதத்தில், அளவில் கவனமாக இருக்க வேண்டும்.
பெரியவர்கள்  கைகளில் சானிடைசர்களை ஊற்றுவதைப் பார்க்கும் குழந்தைகள், தங்களுடைய கைகளிலும் சானிடைசரை ஊற்றச் சொல்லி அடம்பிடிப்பார்கள். அப்போது சிறிது சானிடைசரை ஊற்றி கைகளில் நன்றாகத் தேய்க்கச் சொல்ல வேண்டும்.  சானிடைசர் முழுவதும் ஆவியாகும் வரை தேய்க்கச் சொல்ல வேண்டும்.  கை இடுக்குகளில், நக இடுக்குகளில் சானிடைசர் தங்கியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும்தான். 

சானிடைசர் பாட்டில்களில் உள்ள "காலாவதி' நாளை சரிபார்க்க வேண்டும். எப்படி அந்த சானிடைசரைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் அதைப் படித்துப் பார்த்து,  "சொன்னபடி'   செய்ய வேண்டும். 

வேறு வழியில்லை என்றால் மட்டும் சானிடைசரைப் பயன்படுத்துங்கள்.  இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கரோனாவை விரட்டும் வழி... முறையாக சோப்பு போட்டு  கைகழுவுவது. கைகழுவுங்கள் கரோனாவை!

- ந.ஜீவா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com