ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரோனா... குணமடைந்த பின் கடும் அசதி!

என் வயது 32. ஒரு மாதத்திற்கு முன் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக் குணமாகிவிட்டேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரோனா... குணமடைந்த பின் கடும் அசதி!

என் வயது 32. ஒரு மாதத்திற்கு முன் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக் குணமாகிவிட்டேன். ஆனால் எனக்கு கடும் அசதியும், பசியின்மையும், மாடிப்படி ஏறினால் ஆயாசமாகவும் உள்ளது. கறிகாய் சூப், மட்டன் சூப், பழ ஜூஸ், திட உணவு என்று எது சாப்பிட்டாலும் சுறுசுறுப்பில்லாமல், உடல் மந்தமாகவே உள்ளது. இது எதனால்? எப்படிக் குணப்படுத்துவது?

ராமகிருஷ்ணன், சென்னை.

புயல் அடித்து ஓய்ந்த பிறகு, ஊரே நிலைகுலைந்து கிடப்பதைப் போல, இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு குணமாகிப் போனவர் பலருக்கும் இந்த நிலை ஏற்படுகிறது. உடல் உட்புற தாதுக்களின் மந்தமான செயல்பாடுகளுக்குக் காரணமாக, பசியைத் தூண்டி, உணவைச் செரிமானம் செய்யும் திரவங்களின் சுரப்பு சரிவர ஆகாமல் இருப்பதையே இதற்குக் காரணமாகக் குறிப்பிடலாம். செரிமான கேந்திரம் மறுபடியும் சுறுசுறுப்பாக இயங்கவும், திரவங்களின் சுரப்பை சீராகப் பெறுவதற்கும் நீங்கள் கீழ்காணும் வகையில் வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிட முயற்சி செய்யவும்.

1. தேவையானவை:

தோல் நீக்கிய இஞ்சித் துண்டு -400 கிராம்
சீரகம் -200 கிராம்
தனியா -200 கிராம்
இந்துப்பு -சிறிது
எலுமிச்சம் பழச்சாறு -900 மி.லி.

செய்முறை:
ஒரு பீங்கான் பாத்திரத்தில் எலுமிச்சம் பழச்சாறுடன் இந்துப்பை நன்கு கரைக்கவும். இஞ்சித் துண்டு, சீரகம், தனிய ô ஆகியவற்றைப் பழச்சாறில் போடவும். 1- 2 நாட்களுக்கு ஊற விடவும். லேசாகக் கிளறிவிடவும். அதன் பிறகு வெயிலில் காய வைக்கவும். நன்றாகப் பொடித்து, துணியால் சலித்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். காலை, மதியம் மாலை என மூன்று வேளை உணவிற்கு அரை மணி நேரம் முன்பாக, சுமார் ஐந்து கிராம் சாப்பிட்டு, மேலே வெந்நீரோ, மோரோ நூறு மி.லி.கலந்து அருந்தவும். மூன்று வாரம் சாப்பிடலாம்.

நன்மைகள்: சீரண திரவங்கள் குடல் சவ்வுப் பகுதிகளில் இருந்து நன்கு ஊறி வெளிப்படும். கல்லீரல் சுறுசுறுப்படையும். உணவின் மீதுள்ள வெறுப்பை அகற்றி, விருப்பத்தை ஏற்படுத்தும். அசீரணம் ஏற்படுவதைத் தடுக்கும். வயிறு உப்புசம், குடல் வாயு ஆகியவற்றை நீக்கும். எண்ணெய் - நெய்ப் பொருட்களால் ஏற்படும் செரிமானக் குறைவு, வாந்தி, பிரட்டல் ஆகியவற்றைத் தவிர்க்கும்.

2. தேவையானவை:

தனியா, கடலைப் பருப்பு, மிளகாய்,
பெருங்காயத் தூள், உப்பு.

செய்முறை:
வாணலியில் தனியாவை எண்ணெய் விடாமல் வறுக்க வேண்டும். தனியாக கடலைப் பருப்பையும் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். காய்ந்த சிவப்பு மிளகாயை வறுத்துக் கொள்ளவும். சிறிதளவு பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
சாப்பிடும் முறை: சூடான சாதத்தில் சிறிது தூளைக் கலந்து, நல்லெண்ணெய் விட்டுப் பிசறி முதல் உணவாக காலை அல்லது மதியம் சாப்பிடவும்.

நன்மைகள்: செரிமானக் கோளாறுகள், வயிற்றில் வாயுத் தொல்லை, பேதி
நீங்கும்.

பசி ஏற்படத் தொடங்கிவிட்டால்

3. தேவையானவை:

பச்சரிசி 4 பங்கு, உளுந்து 2 பங்கு, கறுப்பு எள்ளு 1 பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ரவை அளவு பொடித்து கஞ்சி போலக் காய்ச்சி, சிறிது பால், கல்கண்டுத்தூள் கலந்து காலை உணவாக ஏற்க, உடல் அசதி, ஆயாசம் நீங்கும். தொடர்ந்து சுறுசுறுப்பு நன்கு ஏற்படும் வரை சாப்பிடலாம். உடல் உட்புற உறுப்புகளுக்குத் தேவையான எண்ணெய்ப் பசையை அளித்து உற்சாகத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் முன்பு கிராமங்களில் பழக்கத்திலிருந்த இதுபோன்ற சுறுசுறுப்பைத் தரும் உணவு வழக்கங்கள், நகரவாசிகளுக்குத் தெரியாமல் போனதால், பழ ஜூஸையும், கறிகாய், மட்டன் சூப்பையும் மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com