எனது முதல் சந்திப்பு - டி.எஸ்.சொக்கலிங்கம்

எனது முதல் சந்திப்பு - டி.எஸ்.சொக்கலிங்கம்

காங்கிரஸ்காரர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தங்களால் காங்கிரசுக்குப் பெருமையைக் கொடுப்பது. மற்றொன்று, காங்கிரஸின் பெருமையால் தாங்கள் பெருமையடைவது.

ஸ்ரீ ராமசாமி ரெட்டியார்

காங்கிரஸ்காரர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தங்களால் காங்கிரசுக்குப் பெருமையைக் கொடுப்பது. மற்றொன்று, காங்கிரஸின் பெருமையால் தாங்கள் பெருமையடைவது. இந்த இரண்டில் ஸ்ரீ ஓ.பி.ராமசாமி ரெட்டியார் முதல் வகுப்பைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் பலம் பெற்று வளர்ந்ததற்கு அவர் ஒரு காரணம். 1952 - ஆம் வருஷத்துப் பொதுத் தேர்தல் சமயத்தில் காங்கிரசுக்குப் பெரிய சோதனை ஏற்பட்டது. பழைய காங்கிரஸ் தலைவர்கள் சிலர் காங்கிரசை விட்டுப் பிரிந்து, சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்கள். இதனால் ஆந்திராவிலும் கேரளத்திலும் காங்கிரஸ் பலவீனம் அடைந்தது. அநேக ஸ்தானங்களைத் தேர்தலில் இழந்தது. தமிழ்நாட்டில் அத்தகைய துர்ப்பாக்கியம் ஏற்படாமல் இருந்ததற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது பழைய காங்கிரஸ் காரர்களில், செல்வாக்குள்ளவர்களில், ஒருவராவது காங்கிரசைவிட்டு விலகி சோஷலிஸ்ட் கட்சியில் சேரவில்லை.

1951-ஆம் வருஷத்தில், தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்த சமயத்தில், சோஷலிஸ்ட் கட்சி தீவிரமாக - காங்கிரசுக்கு விரோதமாக வேலை செய்து வந்த காலத்தில், ஸ்ரீ ரெட்டியாருக்கும் காங்கிரஸ் ஆட்சி மீது பெரிய மனக்குறை இருக்கத்தான் செய்தது. பல வருஷங்களாக மழை இல்லாமல் பஞ்சமும், பட்டினியுமாக இருந்த மக்களுக்குச் சர்க்கார் தங்கள் கடமையைச் செய்யவில்லை என்பது ரெட்டியாரின் புகார். ரெட்டியாரைத் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கிருபளானி உள்படப் பலர் முயற்சி செய்தார்கள். ரெட்டியார் சோஷலிஸ்ட் கட்சியில் சேருவதாய் இருந்தால், வேறு காங்கிரஸ்காரர்களும் சேரத் தயாராய் இருந்தார்கள். ஆனால், ரெட்டியார் மட்டும் ஒரே பிடிவாதமாய்ச் சேர மறுத்துவிட்டார்.

1951-ஆம் வருஷத்தில் ரெட்டியாரையும் சேர்த்துத் தேர்தல் கமிட்டியை அமைக்க வேண்டுமென்று நான் உள்பட, பலர் விரும்பினோம். பஞ்சத்தினால் வெறுப்புற்று இருக்கிற மக்களின் ஓட்டுகளை மெஜாரிட்டியாகப் பெற வேண்டுமானால், ரெட்டியாரின் ஒத்துழைப்பு அவசியமென்று நான் நினைத்தேன். காமராஜும் ஒப்புக் கொண்டார். இந்த வேலையைச் செய்வதற்காகத் தமிழ் ஜில்லாக்களிலிருந்து ஜில்லாவுக்கு ஒருவர் வீதம் முக்கியமானவர்கள் சேர்ந்து கொண்டு ரெட்டியாரைப் பார்த்தோம். அவருடைய ஒத்துழைப்புக்கு அவர் இரண்டு காரியங்களைச் சொன்னார். ஒன்று, தீய்ந்த நிலங்களுக்கு வரி தள்ளுபடி செய்வது, மற்றொன்று, பஞ்சப் பிரதேசங்களில் உடனே கஞ்சித் தொட்டிகளை அமைப்பது.

இந்த இரண்டையும் செய்யாத வரையில், எந்தத்தேர்தலிலும் தமக்குச் சிரத்தை இல்லையென்று தெளிவாய்ச் சொன்னார். அவருடைய விருப்பப்படி அச்சமயம் இருந்த சர்க்கார் முன் வந்து செய்யாதபடியால், அவரும் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. அவர் சொல்லியபடி செய்து இருந்தால், அந்தத் தேர்தலில் இன்னும் அதிகமான ஸ்தானங்களைக் காங்கிரஸ் பெற்றிருக்க முடியும். அதைவிட முக்கியமான விஷயம், அச்சமயம் கிடைத்த அந்த ஸ்தானங்கள் கூட குறைந்து போகாமல் இருந்ததற்கும் ரெட்டியாரே காரணம். எவ்வளவோ வற்புறுத்தியும், அவர் காங்கிரசுக்கு எதிராகப் போக முடியாது என்று சொன்னதே அதற்குக் காரணம். அதற்கு அவர் சொல்லிய காரணம் அற்புதமானது; அவருடைய காங்கிரஸ் பக்தியைச் காட்டச் சிறந்த அத்தாட்சியானது.

அவர் சொன்னதாவது, ""காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ குறைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். என்றாலும் நானே வளர்த்த காங்கிரசுக்கு நானே கெடுதல் செய்ய எப்படி என் மனம் ஒப்ப முடியும்''.

இந்த காரணத்தினால் 1952- ஆம் வருஷம் காங்கிரசுக்கு ஏற்பட்ட சோதனையில் தமிழ்நாட்டில் ஸ்ரீரெட்டியார் காங்கிரசைக் காப்பாற்றினார். மற்ற ராஜ்யங்களில் காங்கிரசில் பிளவுகள் ஏற்பட்டும் தமிழ்நாட்டில் மட்டும் அந்தத் துர்பாக்கியம் ஏற்படவில்லை.

ஸ்ரீ ரெட்டியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராய் இருந்தபோதுதான் அவருடன் அதிகமாய்ப் பழகக் கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. சென்னை கார்ப்பரேஷன் ஊழலைப் பற்றி அச்சமயம் நான் தினமணியில் கிளர்ச்சி செய்து கொண்டிருந்தேன். அந்த ஊழலை விசாரிக்க அவர் ஒரு விசாரணைக் கமிட்டியை நியமித்தார். எதற்கும் பயப்படாமல் நேர்மையாக நடக்கக் கூடிய ரெட்டியாரின் தைரியத்தில் எப்பொழுதுமே எனக்கு மதிப்புண்டு. இச்சமயம் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. ரெட்டியார் முதல் மந்திரியாய் இருந்த சமயத்தில் பிரான்சிலிருந்து கலோனியல் உதவி மந்திரி புதுச்சேரிக்கு வந்திருந்தார். அவர் சென்னைக்கு வந்தபோது ராஜதந்திர சம்பிரதாயத்தை ஒட்டி முதல் மந்திரி ரெட்டியாரை அவர் பார்த்துப் பேசினார்.

இரண்டு அயல் நாட்டுச் சர்க்கார் மந்திரிகள் ஒருவரை ஒருவர் மரியாதைக்காகச் சந்திக்கும்போது கூடியவரையில் தகராறான விஷயங்களைப் பற்றிப் பேசமாட்டார்கள். அம்மாதிரி ரெட்டியார் இருக்கவில்லை. புதுச்சேரியை, பிரான்ஸ் சீக்கிரம் காலி செய்து விடுவதுதான் நல்லதென்றும், இல்லாவிடில் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற வேண்டியிருக்குமென்றும் காரமாகப் பேசினாராம். அதை, அந்த உதவி மந்திரி பிரெஞ்சு சர்க்காருக்குத் தெரிவிக்க, அவர்கள் இந்திய சர்க்காருக்குத் தெரிவித்தார்கள். பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அச்சமயம் பாரிஸில் இருந்தார். அவருக்கு இந்த அறிக்கை பற்றிச் சொன்னது ரெட்டியாரின் குணத்தை அப்படியே சித்திரிப்பதாய் இருந்தது. அவர் சொன்னார்: "" ரெட்டியாரா, பேஷாய்ச் சொல்லியிருப்பார். அவர் சாணை பிடிக்காத வைரம்'' உண்மையில் ரெட்டியார் வைரத்தைப் போன்ற குணமும் மேன்மையும் உள்ளவர். ஆனால், சாணை பிடிக்காத வைரம். நாஸூக்காகப் பேசத் தெரியாதவர். ஆளைப் பார்த்தால் பட்டிக்காட்டு ஆளைப்போல இருப்பார். ஆனால் சிறுமைப் பித்து என்பது கடுகளவும் இல்லாதவர். முதல் மந்திரியாக அவர் வந்தவுடன் அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்தவர்கள், ராஜாங்க விஷயங்களில் அவர் காட்டிய திறமையைப் பார்த்து அயர்ந்து போனார்கள்.

ரெட்டியார் முதல் மந்திரியாக வந்ததே ஓர் அதிசயமான விஷயம். பிரகாசத்தை முதல் மந்திரி பதவியிலிருந்து இறக்கிவிட வேண்டுமென்று ராஜாஜியும் காமராஜும் தீர்மானித்த பின்பு பிரகாசத்திற்குப் பதிலாக யாரைப் போடுவது என்ற பிரச்னை வந்தது. இருவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஆளாய் ஒருவர் வேண்டும். அப்படி யோசனை செய்த காலத்தில் ரெட்டியார் பெயரை ராஜாஜி சொன்னார். அந்த யோசனையைக் கேள்வியுற்ற ரெட்டியார் வெட்கப்பட்டுக் கொண்டு மறுக்கவில்லை. முதல் மந்திரி பதவியைத் தேடிக்கொண்டு அவர் எப்படிப் போகவில்லையோ அதே மாதிரி அந்தப் பதவி அவரைத் தேடிக் கொண்டு வந்தபோது அவர் மறுக்கவும் இல்லை.

ரெட்டியாரைத் தலைவராய்த் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசி முடிவு செய்வதற்காக நண்பர்கள் ஒரு சமயம் கூடியபோது ரெட்டியாரைச் சிலர் எதிர்த்தார்கள். அவருக்கு என்ன தெரியும் என்று கூடக் கேட்டார்கள். அந்தப் பேச்சுகளைக் கேட்டு ரெட்டியார் கோபம் கொள்ளவில்லை. ""என்னைத் தலைவராய் இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நான் இருக்கிறேன். அந்தப் பதவியில் இருக்கிறவரையில் நான் உண்மையாய்ச் சேவை செய்வேன். நான் சொல்லக் கூடியது அவ்வளவுதான்'' என்று அந்தக் கூட்டத்தில் பதில் சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டார்.

கடைசியில் ஸ்ரீரெட்டியார் சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்குக் காரணமாய் இருந்த பலர் ஒரு விஷயத்தில் அவரிடம் ஏமாந்து பேனார்கள். ரெட்டியாரைத் தலைவராய்த் தேர்ந்தெடுத்தால் அவர் தலைவராய் மட்டும் இருந்துகொண்டு முதல் மந்திரி பதவிக்கு ஆங்கிலப் பட்டம் பெற்ற ஒருவரை நியமிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அவ்விஷயமாக ஒருவரும் அவரைக் கேட்கவும் இல்லை; அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால், பலர் அம்மாதிரி எதிர்பார்த்தார்கள். ஆங்கிலப் பட்டம் பெற்றவர்கள்தான் முதல் மந்திரியாய் இருக்க முடியும் என்ற தவறான அபிப்பிராயம்தான் அம்மாதிரி எதிர்பார்த்தற்குக் காரணம். ரெட்டியாரிடம் தான் சிறுமைப் பித்துக் கடுகளவும் கிடையாதே! அதே மாதிரி தன்னம்பிக்கையும் அவரிடம் ஏராளமாய் உண்டு. அதனால் வேறு யாரையும் முதல் மந்திரி பதவியில் போடவில்லை. தாமே முதல் மந்திரி பதவியை ஏற்றுக் கொண்டார். அவர் தைரியமாக அம்மாதிரி செய்ததால் தான் பின்னால் குமாரசாமி ராஜாவும், காமராஜும் முதல்மந்திரி பதவிக்கு வருவது சுலபமாய் இருந்தது.

(தொடரும்)

வெளியீடு: ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com