என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும்

சிறுகதைகள் எழுதி வந்த ராமசாமி புதுக்கவிதை எழுத ஆரம்பித்தார். அவர் சிறுகதை எழுத்தாளர் என்று அங்கீகாரம் பெற்றிருந்தார்.
என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும்

சென்ற இதழ் தொடர்ச்சி...

சிறுகதைகள் எழுதி வந்த ராமசாமி புதுக்கவிதை எழுத ஆரம்பித்தார். அவர் சிறுகதை எழுத்தாளர் என்று அங்கீகாரம் பெற்றிருந்தார். 1959 -ஆம் ஆண்டில் "எழுத்து'சிற்றிதழ் ஆசிரியருக்கு “"உன் கை நகம்'” என்ற புதுக்கவிதையை "பகவய்யா' என்ற புனைப்பெயரில் அனுப்பி வைத்தார். அதோடு அது ராமசாமி எழுதியது என்று யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஏனெனில் தன் புதுக்கவிதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதைஅறிய புது ஆளாகவே இருக்க ஆசைப்பட்டார்.

உன் கை நகம்

நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
அகிலமே சொந்தம் அழுக்குக்கு
நககண்ணும் எதற்கு அழுக்குக்கு
பிறான்டலாம் பிடுங்கலாம்
குத்தலாம் கிழிக்கலாம்
ஆரத் தழுவியஅருமை கண்ணாளின்
இடது தோளில்ரத்தம் கசியும்
வலது கை நகத்தை வெட்டியெறி - அல்லது
தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு
தூக்கி சுமக்கும்அருமை குழந்தையின்
பிஞ்சு துடைகளில்ரத்தம் கசியும்
இடது கை நகத்தை வெட்டியெறி - அல்லது
குழந்தை சுமப்பதை விட்டுவிடு
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
குறும்பை தோண்டலாமே - காதில்
குறும்பை தோண்டலாமே
குறும்பைக்கு குடியிருப்பு
குடலுக்கு குடி மாற்றம்
குருதியிலும் கலந்து போம் - உன்
குருதியிலும் கலந்து போம்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்

"புதுக்கவிதை என்பது இலக்கணம் இல்லாதது மட்டும் இல்லை. அதில் சொல்லப்படும் கருத்தும் புதுமையாக இருக்கவேண்டும்; சொற்களும் வழக்கமாகப் பயன்பாட்டில் உள்ளனவாகப் பெரும்பாலும் இருக்கக் கூடாது'என்று க.நா.சுப்பிரமணியம் சொல்லி வந்தது ராமசாமிக்கு ஏற்புடையதாகவே இருந்தது. அதனை அவரின் முதல் புதுக்கவிதையான "உன் கை நகம்' என்பதன் வழியாகவே தெரிந்தது.

"உன் கை நகம்' எழுத்தில் வெளி வந்ததும் கவனம் பெற்றது.ஆனால் அது ஓர் புதுக் கவிஞர் புதுக் கவிதை இல்லை; தேர்ந்த எழுத்தாளர் எழுதியது என்று அனுமானிக்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கவிதைக்காகவே கவனிக்கப்பட்டது. அது அவருக்கு உற்சாகம் அளித்தது. சமூகம், வாழ்க்கை என்பன பற்றி மிகவும் தீவிரமாக விமர்சனம் செய்யும் புதுக்கவிதைகளையும் எழுதி வந்தார்.

1964 -ஆம் ஆண்டில் சுந்தர ராமசாமியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான "பிரசாதம்' வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பான "அக்கரைச் சீமையிலே' தொகுப்பில்இருந்து முற்றிலும் மாறான ஒரு சிறுகதைத் தொகுப்பு. கருத்தும், மொழியும் மாறி விட்டிருந்தது. "பிரசாதம்' தொகுப்பில் இடம்பெற்றபல கதைகள் விஜயபாஸ்கரனின்,"சரஸ்வதி'யில் வெளிவந்தவையாகும். அது முற்போக்கு இதழ்தான். ஆனால் விஜயபாஸ்கரன் பலவிதமான சிந்தனைப் போக்குகளுக்கும் இடம் கொடுப்பவராக இருந்தார். தொ.மு.சி. ரகுநாதன், க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா, ஜெயகாந்தன், வல்லிக் கண்ணன், சுந்தர ராமசாமி எல்லாம் "சரஸ்வதி'யில் எழுதினார்கள்.

1957-58-ஆம் ஆண்டுகளில் சுந்தர ராமசாமி மொழி பெயர்த்த தகழியின் "தோட்டியின் மகன்' நாவல் தொடராக வெளிவந்தது. அவர் "சரஸ்வதி'யில் சிறுகதைகள் எழுதி வந்தார். எனவே ஒரு மாறுதலுக்காக என்.எஸ்.ஆர். என்ற புதுப் பெயரில் மொழிப் பெயர்ப்பாளர் குறிப்பிடப்பட்டிருந்தார். என்.எஸ்.ஆர் என்பது நாகர்கோவில் சுந்தரம் ஐயர் ராமசாமி என்பதுதான்.

2000-ஆம் ஆண்டில் "தோட்டியின் மகன்'நூலாக வெளிவந்தது. நாவல் மொழி பெயர்க்கப்பட்டு ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் நூலாக வந்தது. முன்னுரையில் எழுதினார். "மலையாளத்தில் "தோட்டியின் மகன்'வெளிவந்த காலத்தில் இருந்து தொடர்ந்து பேசப்பட்டு வரும் நாவல். மேடையிலும் எழுத்திலும் அங்கு நடந்த விவாதங்கள் என நினைவில் இருக்கின்றன. ஆனால் "சரஸ்வதி'யில் இந்நாவல் தொடர்கதையாக வந்தபோது வாசகர் கவனத்தை இந்த தொடர் பெற்றதற்கான எந்த அடையாளமும் என்னிடம் வந்து சேரவில்லை. யாரும் இந்த நாவலைப் பற்றி இன்று வரையிலும் எழுத்திலோ, பேச்சிலோ, குறிப்பிட்ட நினைவும் இல்லை.'

சுந்தர ராமசாமி எழுத்தாளராக இருந்தது போலவே படிக்கக் கூடியவராகவும், படித்ததைப் பற்றிச் சொல்லக் கூடியவராகவும் இருந்தார். ஒரு முறைதான் படிப்புப் பற்றி பின் வருமாறு குறிப்பிட்டார்:

""இந்த நூற்றாண்டில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் பலருடைய நூல்களையும் நான் படித்திருக்கிறேன். முக்கியமாகச் சிறுகதைகள், நாவல்கள், சமூக விமர்சனங்கள், இலக்கிய விமர்சனங்கள், சமயம் சார்ந்த புத்தகங்கள், மொழி பெயர்ப்புகள், சமயத்துக்கெதிரான புத்தகங்கள், ஆன்மிகத்தைப் பற்றி விளக்கும் புத்தகங்கள் என்று பல. குறைந்தது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் மீதாவது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். உங்கள் முன் அந்த ஆசிரியர்களுடைய பெயர்களையெல்லாம் நான் வரிசைப்படுத்திக்கொண்டு போவது என் உணர்ச்சிகளை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய ஒருவிஷயம்.

நான் வாசிப்பில் நம்பிக்கைகொண்டவனே ஒழிய, என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

எனக்கு மூன்று தகுதிகள் இருக்கின்றன. அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள். நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு மேற்பட்ட எந்தத் தகுதியையும் நான் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. புலவர் என்றோ அறிவாளி என்றோ, சிந்தனையாளர் என்றோ ஒருவர் என்னை அழைத்தால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அழைப்பது அவர் சுதந்திரம். ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது என் சுதந்திரம். அத்துடன் நான் சீரான படைப்பாளியும் அல்ல. ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்து அந்த விஷயத்தை சார்ந்த புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் என்னிடம் கிடையாது. ஒரு பொருள் சார்ந்த தேர்ச்சியைப் புத்தகங்களின் மூலம் உருவாக்கிக் கொள்ளும் பழக்கம் என்னிடம் கிடையாது. ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கும், ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்கும், ஓர் ஆசிரியரிடமிருந்து மற்றொரு ஆசிரியருக்கும், என் விருப்புகள் சார்ந்து என் மனோநிலை சார்ந்து தாவிக் கொண்டே இருப்பேன். எனக்குச் சில அக்கறைகள் இருக்கின்றன. இடங்கள் சார்ந்த அக்கதைகள், காலங்கள் சார்ந்த அக்கறைகள், மனித உறவுகள் சார்ந்த அக்கறைகள், கடவுள் சார்ந்த அக்கறைகள், கடவுள் மறுப்பு சார்ந்த அக்கறைகள், தத்துவம் சார்ந்த அக்கறைகள், மனிதர்கள் சார்ந்த அக்கறைகள், மனித உறவுகள் சார்ந்த அக்கறைகள் இவையெல்லாம் இருக்கின்றன. இந்த அக்கறைகள் மனதில் சில ஆவல்களை உருவாக்குகின்றன. இந்த ஆவல்களைத் தீர்க்க நான் புத்தகங்களைப் படிக்கிறேன்.''

""1948ஆம் அண்டி வாக்கில் க.நா. சுப்பிரமணியம் முதல் நாவலான "சர்மாவின் உயில்' படித்தேன். என்னைக் கவரவில்லை'' என்கிறார்.

க.நா.சுப்பிரமணியம் வீட்டில் ஆர்.சண்முகசுந்தரம், கம்பதாசனையும் சந்தித்தது பற்றி எழுதியுள்ளார். அவர்கள் ""என்னிடம் பேசியது இல்லை. க.நா. சுப்பிரமணியத்திடம் பேச வருவார்கள். இரண்டு மணிநேரம் போல காத்திருந்ததுகூட ஏதாவது பேசி விட்டுப் போவார்கள்'' என்று பதிவு செய்திருக்கிறார்.

ஆர்.சண்முகசுந்தரம் க.நா.சுப்பிரமணியம் பாதிப்பால்தான் "நாகம்மாள்' எழுதினார் என்பதை விமர்சனமாகச் சொல்கிறார். அவர் இலக்கியத்தை முன்னெடுத்துச் சொல்ல இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார். 1988-ஆம் ஆண்டில் "காலச்சுவடு' ஆரம்பித்தார். சில இதழ்கள் கொண்டு வந்தார். அதில் இடர்ப்பாடுகள் ஏற்பட்டதால் நிறுத்தி விட்டார்.

சுந்தர ராமசாமி இன்னொருவர் பேசுவதை கவனமாகக் கேட்கக் கூடியவராக இருந்தார். அதோடு அவர் இரண்டு மூன்று பேர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது குறுக்கில் புகுந்து தன் கருத்துக்களைச் சொன்னது கிடையாது. கூட்டத்தில் பேசப்படும் ஒவ்வொரு சொல்லையும் உன்னிப்பாக செவி மடுப்பவராகவே இருந்தார்.

"நான் அவரை சென்னையிலும், டில்லியிலும் பல முறைகள் சந்தித்திருக்கிறேன். அவர் பேச்சைக்கேட்கும் தோரணை, "இன்னும் கொஞ்சம் பேசுங்கள்' என்று கேட்கக் கூடியதாகவே இருக்கும். அவர்கள் க.நா.சுப்பிரமணியத்திடம் எவ்வளவு தெளிவாகக் கேட்டுக் கொண்டாரோ அப்படியே மற்றவர்களிடமும் கேட்டுக் கொண்டார். ஆனால் எழுதும் அவர் அப்படி இல்லை. தீர்மான முடிவுகள் அடிப்படையில் எழுதினார். "கொஞ்சம் குரலை உயர்த்தி கூடுதலாகவே எழுதினார்' என்று அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்.

ஒரு முறை "ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் எம்' என்று அறியப்படும் "மகேந்திர குமார் டைரி' குறிப்புகளைப் படிக்கச் சொன்னார். மேலும், ""தமிழில்வேண்டாம். ஆங்கிலத்தில் படியுங்கள். அதுவும் வங்க மொழியின் மொழி பெயர்ப்புதான். ஆனால் படிக்க வசீகரமாகவும், எளிதில் புரியக்கூடியதாகவும் இருக்கிறது'' என்றார்.

“""என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?''” என்று கேட்டபோது, “""வங்கமொழி எழுத்தாளர் தாராசங்கர் பானர்ஜியின்"ஆரோக்கிய நிகேதன்' படித்துக்கொண்டு இருக்கிறேன். கிராம வாழ்க்கையைச் சொல்லும் சிறப்பான நாவல். சாகித்திய அகாதெமி வெளியிட்டு இருக்கிறது''” என்றார். பிறகு “""தமிழில் மொழி பெயர்ப்பு வந்திருக்கிறதா?''” என்று கேட்டார்.

“""அநேகமாக இல்லை''”

“""விரைவில் வெளிவந்துவிடும். அவசியம் படியுங்கள். உங்களுக்குப் பிடிக்கும்''” என்றார்.

த.நா.குமாரசாமியின் தமிழ் மொழி பெயர்ப்பில் வெளிவந்தது. அவர் வீட்டுப் பக்கத்தில்தான் நான் குடியிருந்தேன். ஒருநாள் என்னை அழைத்து அற்புதமான நாவல் என்று சொல்லி கையெழுத்து இட்டுக் கொடுத்தார். படித்தேன். அது அசலான இந்திய நாவல்தான்.

சுந்தர ராமசாமி புத்திசாலியான படைப்பு எழுத்தாளர். நுணுக்கமாகவும், ஆழமாகவும் எதைப் பற்றியும் சொல்லக் கூடியவர்.

சுந்தர ராமசாமியின் மாமா நாராயணன் சென்னையில் தியாகராய நகரில் வசித்து வந்தார். அவர் சினிமாவில் என்னென்னவோவேலைகள் செய்து கொண்டிருந்தார். சிறிது காலம் "துக்ளக்' பத்திரிகையில் "பரந்தாமன்' என்ற பெயரில் எழுதி வந்தார். அவருக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது அபரிதமான ஈடுபாடு. எனவே கலைவாணர் கிருஷ்ணன் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். பல சினிமாக்காரர்கள், எழுத்தாளர்களை எல்லாம் அழைத்து பேச வைத்துக் கொண்டிருந்தார். நானும் பரந்தாமனும் நந்தனம், தியாகராயர் நகர் பகுதிகளில் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். அவரிடம் பேச நிறைய அரசியல், இலக்கியம், சினிமா சம்பந்தப்பட்ட அம்சங்கள் இருந்தன.

சுந்தர ராமசாமி, நாராயணன் என்ற பரந்தாமன் பற்றி மனம் நெகிழும் விதமாக சிறிது எழுதியிருக்கிறார்.

தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபாவில் நடைபெற்ற மகாத்மா காந்தி பற்றிய கூட்டத்தில் அவரைச் சந்தித்தேன். அவர் வீடு அருகில் இருந்தது. வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் காபி கொடுத்து உபசரித்தார். வீடு நிறைய கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை, நாடகம், சினிமா பற்றிய தகவல்கள் கொண்ட காகிதங்களை கட்டி வைத்திருந்தார். ""கலைவாணர் பற்றி ஒரு சரியான வாழ்க்கைச் சரித்திரம் எழுதப் போகிறேன். அந்த வேலையாகத்தான் அலைந்து கொண்டு இருக்கிறேன்'' என்றார். அவர் ஆர்வம் உண்மையானது. ஆனால் அது சாத்தியப்படாமல் போய்விட்டது.

நாராயணன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ""ராமசாமியைப்பார்த்தீர்களா?'' என்று கேட்பார். நான் அவரைப் பார்க்கும் போதெல்லாம், ""ராமசாமி சென்னைக்கு வந்திருக்கிறாரா'' என்று கேட்பேன்.

ஒருமுறை நானும், என் நண்பருமான நா.கிருஷ்ணமூர்த்தியும், சென்னை கோபாலபுரத்தில் சுந்தர ராமசாமியைச் சந்தித்திருந்தோம். அவர் சோர்ந்து போய் இருந்தார். என்னவென்று விசாரித்தோம். மூத்த மகள் செளந்தராவிற்கு உடல்நிலை சரியில்லை என்றார். நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு விடை பெற்றுக் கொண்டோம்.

1991 -ஆம் ஆண்டில் அவரை தியாகராய நகரில் சந்தித்தேன். இரண்டு பேரும் நல்லி ஜவுளி கடைக்கு அருகில் இருந்த பார்க்லேண்ட் ஓட்டலுக்கு வந்து காபி சாப்பிட்டோம். பிறகு பனகல் பூங்காவிற்கு வந்தோம். சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு உலக இலக்கியம், தமிழ் இலக்கியம், இலக்கியப் பரிசுகள், வெகுமதிகள், விமர்சனங்கள் பற்றி பேசி கொண்டிருந்தோம். இரண்டு மணிநேரம் சென்று விட்டது. பின்னர் எழுந்தோம்.

""மகள் எப்படி இருக்கிறார். உடம்பு சரியாகி விட்டதா?'' என்று கேட்டேன்

“""இல்லை. அவள் போய்விட்டாள்''” என்றார்.

நான் அவரையே பார்த்தபடி இருந்தேன்.

“""கேன்சர். ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள்''” என்றார்.

கீதா தர்மராஜன் என்ற தமிழகப் பெண்மணி கதா என்ற அமைப்பை டில்லியில் ஏற்படுத்தி தமிழ்ச் சிறுகதைகள், நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். கதா 2003 -ஆம் ஆண்டு "கதா சூடாமணி' என்ற வெகுமதியை சுந்தர ராமசாமிக்கு வழங்கியது. அதற்கான விழா கோலாகலமாக டில்லியில் உள்ள இந்தியா இண்டர்நேஷனலில் நடபெற்றது. டிசம்பரில் நல்ல குளிர்காலத்தில் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற விழாவில் கம்பளி உடை, தலைக்குல்லாய் அணிந்து, அனல் காய்ந்து கொண்டு அவர் ஏற்புரையை வழங்கினார். தமிழில்தான் பேசினார். அவர் நிதானமாக தீர்மானமான தொனியில் பேசினார். விழா முடிந்ததும், பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

அவர் மேடையை விட்டு இறங்கி வந்ததும் முன்னே சென்று வாழ்த்துத் தெரிவித்தேன். அவர் என் கையைப் பற்றிக் கொண்டு, “""நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறீர்களா?''” என்று வினவினார்.

“""இல்லை. ஆனால் வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது''” என்றேன்.

“""அவசியம் வாருங்கள். என் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருக்கலாம். நான் மூன்று மாதங்கள் நாகர்கோவிலில்தான் இருக்கிறேன். பிறகு அமெரிக்கா போகப் போகிறேன்''” என்றார்.

அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தார். நான் நாகர்கோவில் செல்ல முடியாமல் போய்விட்டது.

2005 - ஆம் ஆண்டில் சுந்தர ராமசாமி தன் எழுபத்து நான்காவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

அவர் தனித்துவம் மிக்கத் தமிழ் எழுத்தாளர். மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதியவர். எழுத்துக்கு இலக்கியப் பூர்வமாகப் பலனுண்டு என்று எழுதியவர். அதோடு எழுத்தாளன் படைப்பு சுதந்திரம் பற்றித் தன்னளவில் அறிந்து கொண்டிருந்தார். அதன் அடிப்படையிலேயேஎழுதினார். எழுத எழுத அவர் எழுத்துகளில் வீரியம் கூடியது. அவர் சிறுகதைகளில் "தண்ணீர்', "பிரசாதம்', "வாழ்வும்வசந்தமும்', "விசாகம்'மிகவும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய சிறுகதைகள். நாவல்களில் "ஒரு புளிய மரத்தின் கதை' குறிப்பிடப்படவேண்டியது. நவீன தமிழ் இலக்கியத்தில் அவர் படைப்புகள் அசலான படைப்புகள் என்ற வகையில் இடம் பெறுகின்றன.

சுந்தர ராமசாமி 1988 -ஆம் ஆண்டில் கேரளாவில் உள்ள "குமாரன் ஆசான் விருதை' கவிதைக்காகப் பெற்றார்.

2001 -ஆம் ஆண்டுகனடா நாட்டில் டொரண்டோவில் வழங்கப்படும் "இயல்' விருது பெற்றார். 2003 - ஆம் ஆண்டில் அவருக்கு கீதா தர்மராஜன் கதா அறக்கட்டளை, "கதா சூடாமணி' விருது வழங்கியது.

சுந்தர ராமசாமி தமிழ் எழுத்தாளர். அவர் தன் படைப்புக்களைத் தாய்மொழியான தமிழில்தான் எழுதினார். ஆனால் அவர் படைப்புகள் மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஹீப்ரு, ஜெர்மன் என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

1966 -ஆம் ஆண்டில், தன் முப்பத்தைந்தாவது வயதில் சுந்தர ராமசாமி, "நானும் என் எழுத்தும்'கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்.

"வாழ்வின் அந்திமத தசையில் இவ்வாறு கூறிக்கொள்ள முடிந்தாலே போதும். என்னுடைய கலைத்திறன் மிகச் சொற்பமானதுதான். எனினும் அந்தச் சொற்பமான கலை உணர்வையும் நான் பேணிச் சீராட்டி வளர்த்தேன். எனது அந்தரங்கத்துக்கு உவப்பான விஷயத்தையே நான் அளித்தேன். மூன்று வார்த்தைகளில் சொல்லக் கூடியதை நாலு வார்த்தைகளில் சொல்லலாகாது என்ற விதியைக் கடைசி வரையிலும் நான் காப்பாற்ற முயன்றேன். எனக்குக் கிடைத்த மொழியை மலினப் படுத்தாமல் மறு சந்ததிக்கு அளிக்க நானும் என்னால் ஆன முயற்சி எடுத்துக் கொண்டேன். இவ்வளவு போதும் எனக்கு.' சொல்லப்பட்டதற்கு அப்பால் சொல்லப்படாததையும்,சொல்லப்படாததின் வழியாக அறியத்தக்கதையும் சொல்வதுதான் இலக்கியம்.

சுந்தர ராமசாமி அதனையே கூர்ந்து எழுதி வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

(21.11.2019 சென்னை சாகித்திய அகாதெமி அரங்கில் ஆற்றிய உரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com