ஆஸ்கர் வரலாற்றில் ஆங்கிலமல்லாத படம் சிறந்த படமாகத் தேர்வு!

பணக்கார சுகபோக வாழ்க்கை, ஏழைகளின் அவலநிலை, ஒதுக்கப்பட்ட மக்களின் இழிநிலை ஆகிய மூன்றும் பிரச்சார நெடி
ஆஸ்கர் வரலாற்றில் ஆங்கிலமல்லாத படம் சிறந்த படமாகத் தேர்வு!


"பேரசைட்'-    ஆஸ்காரில் நான்கு முக்கிய விருதுகளைப் பெற்றது. இப்படம் 2019 - டிசம்பரில் நடைபெற்ற சென்னை உலகத் திரைப்பட விழாவில் தொடக்கபடமாக திரையிடப்பட்டது.

கொரிய திரைப்படமான இது, சிறந்த திரைப்படம் என்ற விருது பெற்ற முதல் அயல்நாட்டுப் படமாகும். மேலும், சிறந்த இயக்குநர் போன் ஜூங் ஹோ, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த சர்வதேச திரைப்படம் ஆகிய நான்கு விருதுகளையும் பெற்றுள்ளது. 

இப்படத்தின் கதையில் பணக்கார சுகபோக வாழ்க்கை, ஏழைகளின் அவலநிலை, ஒதுக்கப்பட்ட மக்களின் இழிநிலை ஆகிய மூன்றும் பிரச்சார நெடி இல்லாமல் இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளது. கிம் என்ற ஏழை குடும்பத்துக்கும் பார்க் என்ற பணக்கார குடும்பத்துக்கும் இடையில் ஏற்படும் ஒட்டும் உறவுமே படத்தின் மையக் கதை.

கீ-டீக் என்ற குடும்பத் தலைவர். அவரது மனைவி சுங்-சூக், மகன் கீ-வூ, மகள் கீ-ஜியோங் ஆகியோருடன் குறைந்த கூலி கிடைக்கும் வேலைகளைச் செய்து கொண்டு ஒரு சிறிய வீட்டில் வாழ்க்கை நடத்துகிறார்கள். மகன் கீ-வூவின் நண்பன் மின்-ஹியூக் என்ற பல்கலைக்கழக மாணவன், தான் வெளிநாடு செல்வதால் டியூஷன் சொல்லித்தரும் பார்க் என்ற பணக்கார குடும்பத்து பெண்ணான மின்-ஹியூக்கு தனக்குப் பதிலாக கி-வூ பாடம் சொல்லித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். கி-வூ பட்டப்படிப்பு படிக்கவில்லை என்றாலும் போலியான சான்றிதழ் பெற்று டியூஷன் மாஸ்டர் வேலையில் சேர்கிறான். 

கி-வூவின் நண்பன் மின்-ஹியூ வெளிநாடு செல்லும் முன்பு ஓர்  அதிர்ஷ்டக்கல் ஒன்றை நண்பனுக்கு கொடுத்து அந்த கல்லை வைத்திருப்பவருக்கு செல்வம் சேரும் என்றும் சொல்லிவிட்டுப் போகிறான். ராக் குடும்பத்தில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தவுடன் கி-வூ தன் குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவரையும் அவர்களிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதாகச் சொல்லி அந்த குடும்பத்தில் வேலையில் சேர்த்து விடுகிறான். இரண்டு குடும்பங்களும் ஒன்றாகச் சேர்ந்தபின், ஏழை கி-வூக்கும், பணக்கார ராக் குடும்பத்தில் பாடம் கற்றுக் கொள்ளும் டா-ஹியூவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. 

பணக்கார ராக் குடும்பத்தில் ஏற்கெனவே நீண்ட காலமாக வேலைக்காரியாக இருந்த பெண்மணிக்கு அடிக்கடி வரும் இருமலைக் காரணம் காட்டி அவருக்கு காசநோய் இருக்கிறது என்று அவரை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறது கிம் குடும்பம். பார்க் குடும்பத்து இளைஞன் டா-சாங் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக பல நாட்கள் தங்கியிருக்கும் திட்டத்தோடு அவர்கள் வெளியூருக்குச் சென்று விடுகின்றனர். அவர்கள் போன பின் வேலைக்காக வந்த கிம் குடும்பத்தினர் அந்த வீட்டின் வசதிகளை அனுபவித்து சுகபோகத்தில் திளைக்கின்றனர். 

கதையில் முக்கிய திருப்பமாக வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டு வீட்டை விட்டே அனுப்பப்பட்ட பழைய வேலைக்காரி இந்த வீட்டில் எதையோ விட்டு விட்டேன் என்று திரும்ப வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு  இங்கே வேலைக்காரியாக இருந்த மூன்-குவாங்கின் கணவர் குவான்-சே கந்துவட்டிக்கு கடன் வாங்கி திருப்பிக் கொடுக்க முடியாமல் இந்த வீட்டின் நிலவறையில் உள்ள ஓர்  இரகசிய அறையில் தங்கி இருப்பதால் அவரை கவனிக்கவே தான் மீண்டும் திரும்பி வந்ததாக மூன்-குவாங் சொல்லி விட்டு நிலவறை விவகாரம் முதலாளிகளான பார்க் குடும்பத்துக்கு தெரியாமல் இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று புதிதாக குடியேறிய கிம் குடும்பத்துக்கு சொல்லி வைக்கிறார். 

அடுத்த திருப்பமாக திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே வெளியூருக்கு கொண்டாட்டத்துக்கு சென்ற முதலாளி பார்க் குடும்பம் திரும்பி வந்து விடுகிறது. அவர்களுக்கு தெரியக்கூடாது என்று இரகசிய அறை விவகாரத்தை மறைக்க படாதபாடு பாடுகிறார்கள் இரண்டு குடும்பங்களும். ஒருநாள் மதிய உணவு வேளையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் ஒரு பேய் ஏதோ ஓர் அறையில் நடமாடியதை தான் பார்த்ததாக திருமதி. பார்க் சொல்கிறார். இதற்கிடையில் ஒருநாள் பெருமழை கொட்டியதால் கிம் குடும்பம் தங்கியிருந்த சிறிய வீடு முழுவதும் வெள்ளம் புகுந்து விடுகிறது. அவர்கள் அநாதைகளைப்போல் பொது காப்பகத்தில் தங்குகின்றனர். 

அப்போது நிலவறையில் தங்கியிருந்த பழைய வேலைக்காரி வெள்ளத்தில் மூழ்கி இறங்கிவிட அதிர்ஷ்டக்கல்லுடன் அங்கே சென்ற டியூஷன் மாஸ்டர் கி-வூவை தாக்கிவிட்டு கல்லை எடுத்துக்கொண்டு தப்பித்து விடுகிறார், நிலவறையில் நீண்ட காலம் இருந்த வேலைக்காரியின் கணவன் குவான் -சே. 
வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அமர்க்களமாக நடக்கின்றன. காயத்துடன் வெளியே வந்த கி-வூ தன்னை தாக்கிய குவான்-சே வை சிறிய பேனாக்கத்தி எடுத்து குத்தி விடுகிறான். இருவருக்கும் இடையில் நடக்கும் சண்டையில் தலையிட்ட  கி-வூ வின் தாயார் தன் மகனை தாக்கிய வரை கொன்று விடுகிறார். இந்த அமளி நடந்து கொண்டிருக்கும்போதே பிறந்த நாள் கொண்டாட வேண்டிய இளைஞன் டா-சாங்குக்கு ஏதோ காரணத்தால் காயம் ஏற்படுகிறது. உடனே அவனை மருத்துவமனைக்கு காரில் கொண்டு போ என்று கீ-டீக்கை கேவலமாகத் திட்டுகிறார் முதலாளி ராக். 

இங்கே வேலைக்காக வந்திருந்தாலும் தன் மனைவியும், மகனும் சிக்கலில் இருக்கும்போது தன்னை காரோட்டச் சொல்லி அவமானப்படுத்திய முதலாளி ராக்கை கத்தியால் குத்திக் கொன்று விட்டு தப்பித்து விடுகிறார் கீ-டீக். 
சில வாரங்களுக்குப் பிறகு கி-வூ கோமாவிலிருந்து எழுந்து, காயங்களில் இருந்தும் மீண்டு பிழைத்து விடுகிறான். அவருடைய அப்பா கீ-டீக் எங்கே போனார் என்பதே தெரியவில்லை. அந்த வீட்டின் முதலாளி ராக் இறந்து விட்டதால் அந்த வீட்டை ஒரு ஜெர்மானியருக்கு விற்று விட்டு அங்கிருந்து வெளியேறி விடுகிறது ராக் குடும்பம். 

கி-வூ மட்டும் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போகிறான். புதிய முதலாளிக்குத் தெரியாமல் ஒருநாள் நிலவறை நோக்கி கி}வூ செல்லும்போது மோர்ஸ் தந்தி சங்கேத மொழியில் உள்ளிருந்து விளக்கொளி மாறி மாறி வருகிறது. கிம் குடும்பத் தலைவரான கி-டீக் இப்போது கொலைக் குற்றத்துக்கு அஞ்சி அதே நிலவறையில் பதுங்கி இருக்கிறார் என்பது தெரிகிறது. இறுதிக் காட்சியில் மகன் கி-வூ அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். "ஒருநாள் நான் நிறைய சம்பாதித்து இந்த வீட்டை விலைக்கு வாங்கி உங்களை மீட்பேன் அப்பா!'
அத்துடன் படம் நிறைவடைகிறது. 

பங்கர் எனப்படும் பதுங்கு குழியில் உள்ளே சென்று தங்குவதையும், வெளியே யாராவது வந்தால் அதை மறைக்க படாதபாடு படுவதையும், பெருவெள்ளம், மழைநீரில் ஏழைகள் படும்பாடு ஆகியவற்றையும் தத்ரூபமாக கதையில் கொண்டு வந்திருந்திருக்கிறார் கதாசிரியரும் இயக்குநருமான போன் ஜூங் ஹா. காட்சிகளும், கதைப்போக்கும் நம்மை ஓய்வெடுக்க அனுமதிக்காமல் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யும்போதே இந்த படம்தான் விருது பெறும் என்று பரவலாகப் பேசப்பட்டது உண்மையாகி விட்டது.

- இரத்தினம் ராமசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com