வழியில் சில போதிமரங்கள்

வழியில் சில போதிமரங்கள்

""உங்களை யாரு என்னை பெத்துக்கச் சொன்னா, நானா சொன்னேன், ரெண்டு பிள்ளைங்களோட நிறுத்திக்க வேண்டியதுதானே? உங்க ஆசைக்கு நீங்க பெத்துட்டு இப்ப அதைச் செய்யலியா இதைச் செய்யலியான்னு என்னை கஷ்டப்படுத்திறீங்க. நான் செஞ்ச பெரிய பாவம் உங்க பிள்ளையாப் பிறந்ததுதான்''

மகன் இப்படியொரு அஸ்திரத்தை வீசுவான் என்று எதிர்பார்த்திராத சிவஞானம் ஆடிப்போனார். இவ்வளவு நேரமாக மகனை கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டு திணறடித்துக் கொண்டிருந்த சிவஞானம் மகனிடமிருந்து அக்னி துண்டுகளாக வந்து விழுந்த வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போனார். அதற்கு மேல் பேச பிடிக்காமல் அங்கிருந்து அகன்று சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து வேதனையுடன் கண்களை மூடிக் கொண்டார். அவரின் அந்த நிலையைக் காணப் பொறுக்காமல் சரசுவதி தன் பங்கிற்கு கத்தினாள்.

""டேய் என்ன பேசறே, அதுவும் அப்பாவைப் பார்த்து புள்ளை பேசற பேச்சா இது? உன்னை மார்லேயும் தோள்லேயும் போட்டு வளர்த்தவர். உனக்காக உழைச்சு உழைச்சு ஓடா தேஞ்சவர். மூணு பிள்ளைங்களில் அவர் சம்பாத்யத்தை அதிகமா செலவிட்டது உனக்குத்தான்டா... வைத்திய செலவு ஒருபக்கம்னா என்ஜினியரிங்தான் படிப்பேன்னு அவரை படாதபாடு படுத்தினே. இதையெல்லாம் மறந்துட்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசறே''
அம்மாவின் வார்த்தை சாரதியை மேலும் கோபப்படுத்த மறுபடியும் இறைந்தான்.

""புருஷனுக்கு வக்காலத்து வாங்குறியாக்கும். அவரு என்ன பேசறாரு. ஒவ்வொரு வேலைக்கும் போய் சம்பளம் இல்லே... நிரந்தரம் இல்லேன்னு வீடு திரும்பினது அவருக்கும் உனக்கும் தெரியாதா? வேலைக்கு போகாதது என் குற்றமா? சரி வேற புதுசா ஏதாவது வேலை தேடலாம்னு போனா நூத்தியெட்டு கண்டிஷன் போடறானுங்க. அவனுங்களோட அல்லாடி வீட்டுக்கு வந்தா இவரு வேலை தேடினியான்னு கேள்வி மேல் கேள்வி கேட்டு ரணப்படுத்தறாரு. கொஞ்சமாவது நாசுக்கா பேசத் தெரிய வேண்டாம். தோளுக்கு உயர்ந்தவனை தோழனா டிரீட் பண்ணாட்டாலும் பரவாயில்லை... அட்லீஸ்ட் ஒரு மனுஷனாவாவது நினைக்க வேண்டாமா? என்னோட ப்ரெண்ட்ஸ்களோட பேரண்ட்ûஸப் பாருங்க... எத்தனை அன்பும் அணுசரணையுமா இருக்காங்கன்னு'' அவன் சொல்லி முடிக்க சரசுவதி பேசினாள்:

""என்ஜினியரிங் படிப்புக்கு மதிப்பு குறைஞ்சுடுத்து. காலேஜ்படி. அப்படியே கம்ப்யூட்டர்கோர்ஸ் மூலமா எதுனா கத்துகிட்டு பிழைப்புக்கு வழி தேடுன்னாரு. இப்படி சொல்லித்தான் அண்ணனை மளிகைக் கடையிலே உட்கார வெச்சீங்க, தம்பியை மெக்கானிக்கா அனுப்புனீங்கன்னு வியாக்கியானம் பேசி வீணாப் போனே. மளிகைக்கடை வெச்சவன் இப்போ பக்கத்திலே பால் கடையும் ஐஸ்கிரீம் கடையும் திறந்து பொண்டாட்டியை உட்காரவெச்சு கூடுதலா மாசம் இருபதாயிரம் சம்பாதிக்கிறான். மெக்கானிக் வெளிநாடு போய் எண்பதாயிரம் சம்பாதிக்கிறான். நீ படிச்சு முடிச்சு மூன்றரை வருஷமாயிட்டுது. நீ என்ன சம்பாதிச்சிருக்கேன்னு சொல்லு பார்ப்போம். அதைத்தான் அவரு கேட்டாரு. அதுக்குப் போய் அவரை வாய்க்கு வந்தபடி பேசறே. போய் அவருகிட்டே மன்னிப்புக் கேளு'' அம்மாவின் வார்த்தை மேலும் கோபப்படுத்த திரும்பி ஒரு முறை முறைத்தான். பின்பு எதுவும் பேசாமல் சட்டையைப் போட்டுக் கொண்டு புறப்பட்டான்.

""எங்கே போற, சாப்பிட்டுப் போடா''

""எனக்கு சாப்பாடு வேணாம்... ஒண்ணும் வேணாம்''

அம்மா பின்னாலேயே ஓடி வர அவளைப் புறக்கணித்து வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

அவனது கோபம் போலவே வண்டி தடதடவென்ற சப்தத்துடன் புறப்பட்டது. சற்று நேரத்தில் வீட்டிற்கும் அவனுக்குமான தொடர்பு அறுந்தது.

வெய்யில் மண்டையைப் பிளந்தது. எங்கே போவது என்ற இலக்கின்றி புறப்பட்டதால் மனம் போனபடி வண்டியைச் செலுத்தினான். கீழவீதி, வடக்குவீதி சுற்றி வடக்கு மெயின்ரோடு வழியாக பைபாஸ் ரோட்டை அடைந்தவனுக்கு, எங்காவது உட்கார வேண்டும் போலத் தோன்றியது. முட்லூர் சாலையில் பாசிமுத்தான் ஓடையை ஒட்டிய அடர்ந்த மரநிழலில் வண்டியை நிறுத்திவிட்டு அமர்ந்தான். ஓடையில் தண்ணீர் தேக்கப்பட்டிருந்ததால் காற்று சில்லென்று வந்து மோதியது. நான்கைந்து சிறுவர்கள் அதில் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த சிறுவர்களைப் போல வாழ்ந்தது ஒரு காலகட்டம். இன்று அது முற்றிலுமாக மாறிவிட்டது. வாழ்க்கைத் தேடல், வாழ்வதற்கான பொருள் தேடுதல் இரண்டும் சிந்தனை செயல் யாவிலும் ஊடுருவி மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. என்ஜினியரிங் படித்து அரசு வேலைக்குப் போய் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்ற நினைப்புடன் படிக்கப் போனதற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வேலைவாய்ப்புக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது புரிய வந்தாலும், நம்பிக்கையுடன் சில இடங்களுக்குச் சென்று வேலைபார்த்தும் மனநிறைவும் ஏற்படவில்லை. நிரந்தரமும் இல்லை. மூணு கம்பெனிகள். முதல் கம்பெனிக்காரன் மூணுமாசம் கழிச்சு முதல் மாச சம்பளத்தைத் தந்து மத்த ரெண்டு மாச சம்பளத்தையும் பேங்க் அக்கவுண்டுக்கு அனுப்பி வைக்கிறேன்னு போய்ட்டுவான்னு சொல்லி அனுப்பி வைத்து விட்டான். இதுவரை அவன் பணம் அனுப்பி வைக்கவில்லை. அடுத்த கம்பெனிக்காரன் பத்தாயிரம் சம்பளம்னு சொல்லிட்டு எட்டாயிரமே கொடுத்தான். அதுவும் ரெண்டு மாசம் வரைக்கும் அப்புறம் வேலை வராததாலே கம்பெனி லாஸ்ல போய்கிட்டுருக்கு. வேலை வரும்போது கூப்பிடறோம்னு சொல்லி அனுப்பி வைத்துவிட்டான். அவன் கொடுத்த எட்டாயிரம் ரூபாய்லே மெட்ராஸ்ல ரூம் ரெண்ட் தந்து சாப்பிடக் கூட முடியலே. லோக்கல்லே ஒரு கட்டுமானக் கம்பெனி ஐந்தாயிரம் சம்பளத்துக்கு வருமாறு அழைத்தது. வீட்டிலே உட்கார்ந்திருக்கிறதை விட போனா அனுபவம் கிடைக்கும் இல்லே, வேற காண்டாக்டாவது கிடைக்கும்னு போனா அங்கேயும் பிரச்னை. நாள் முழுக்க வெயிலில் அலைஞ்சு உடம்பு கெட்டுப் போனதுதான் மிச்சம். வெளிநாடு போகலாம்னா ஐந்து லட்சம் கொடு பத்துலட்சம் கொடுன்னு பகல் கொள்ளை அடிக்கிறான். வேலை தேடி அலுத்துப் போவது ஒரு பக்கம் என்றால் அவ்வப்போது அப்பாவுக்கு பதில் சொல்வதற்குள் ஏற்படும் டென்ஷன் அதை விட பெரிய வலியைத் தரும். இந்த வலி நாளுக்குநாள் அதிகரித்து பனிப்போராகி இன்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இது நிரந்தர முடிவா அல்லது தற்காலிக முடிவா என்பது போகப் போகத்தான் தெரியும். வயிறு பசிக்க, பாக்கெட்டைத் தடவினான். போன்மட்டுமே தட்டியது. மற்றபடி எதுவுமில்லை.

சற்று நேரத்தில் அவன் இருந்த இடத்திற்கு அருகே ஒரு லாரி வந்து நின்றது. நிமிர்ந்தவன் லாரி ஓட்டி வந்தவன் சிறிய வயதினனாய் இருக்க ஆச்சரியப்பட்டான். ஒருவித பதற்றத்துடன் எழுந்து வண்டியைத் தள்ளி நிறுத்த, லாரியிலிருந்து கீழே குதித்தவன் சிரித்தான்.

""என்னண்ணா மேலே ஏத்திடுவேன்னு பயமா? ''

ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்லும் மனநிலையில் சாரதி இருக்கவில்லை.

""பயப்படாதீங்க... நல்லாவே ஓட்டுவேன். லாரியை கழுவணும். அதுக்குத்தான வந்திருக்கேன்''

சகஜமாக பேசிய அவனை நட்புடன் பார்த்துச்
சிரித்தான்.
""உனக்கு என்ன வயசு, என்ன படிச்சிருக்கே, எத்தனை வருஷமா லாரி ஒட்டறே? ''
""அது பெரிய கதைண்ணா. பன்னிரண்டாம் வகுப்பு படிச்சேன். அப்புறம் படிக்க விருப்பமில்லே, படிச்சாலும் வேலை கிடைக்கப் போறதில்லே. படிக்காட்டாலும் வாழ்ந்துதானே ஆகணும். அதுக்கு ஒரு பொழப்பு வேணுமில்லையா. அதான் லாரிக்கு வந்தேன். இங்கே வந்து மூணு வருஷமாகுது. படிச்சா இத்தனை காலத்திலே டிகிரி முடிச்சிருப்பேன்''
வண்டியை நிறுத்திவிட்டு சுற்றி வந்தான். பின்னர் சட்டையைக் கழற்றிவிட்டு டிராயருடன் நின்று வாலியில் தண்ணீரை எடுத்து லாரி மீது அடித்தான்.
எல்லோரது வாழ்விலும் ஏதாவதொரு ரூபத்தில் போராட்டம் இருக்கவே செய்கிறது.
""லாரி நல்லா ஓட்டுவியா? ''
""கொடுத்தா ஓட்டுவேன். எப்பவாவதுதான் கொடுப்பாரு''
""அப்ப நீ டிரைவர் இல்லியா? ''
""நான் க்ளீனர் அண்ணே, ஓனர்தான் டிரைவர்''
""நீ டிரைவிங் ஸ்கூல் போய் கத்துகிட்டியோ? ''
""டிரைவிங் ஸ்கூலில் பேசிக்காத்தான சொல்லித் தருவாங்க. அனுபவரீதியா கத்துக்க வண்டியிலேதான் கத்துக்கணும்''
""ரொம்ப சீக்கிரம் கத்துகிட்டேன்னு சொல்லு''
""கத்துக்கறது ஒருநாளில் கத்துக்கலாம்... ஆனா ஒருநாளானாலும் ரெண்டு வருஷமானாலும் அதுக்கான விலையைக் கொடுக்காம கத்துக்க முடியாது''
""புரியலேயே''
""நான் பன்னிரண்டாவது படிச்சுட்டு வண்டிக்கு வந்தேன்னு சொன்னேன், ஆனா எங்க ஓனரு வெறும் எட்டாங்கிளாஸ் படிச்ச ஆளு. ஆனா அவரு என்ன அடிச்ச அடியிருக்கே அதைச் சொல்லி மாளாது. வண்டி ரிப்பேராகி நடு வழியிலே நின்னுடும். வேலை செய்யறப்போ ஸ்பானர் எடுத்து வரச்சொல்வாரு. எடுத்துட்டுப் போனா இதையா எடுத்துட்டு வரச்சொன்னேன்னு ஸ்பானராலே அடிப்பாரு. டயர் பஞ்ச்ராயிடும். குனிஞ்சு டயரை கழற்றிக்கிட்டு இருப்பேன். நின்னுகிட்டிருக்கிற இவரு திடீர்னு காலை தூக்கி கழுத்திலே உதைப்பாரு. இப்படி கொஞ்சம் நஞ்சம் உதை வாங்கலே. இப்போ வண்டி ஓட்டறப்பவும் என்னை நம்பி வண்டியை கொடுக்கும்போதும் அவரு அடிச்சது என்னை உருவாக்கத்தான்னு புரிய வந்துச்சு''
""உனக்கு நல்லா லாரி ஓட்ட வருமா? ''
""ஓட்டுவேன்... ஆனா முதலாளி கொடுக்க மாட்டாரு. நான் முழுசா கத்துகிட்டேன்னா அப்புறம் வேலைக்கு வரமாட்டேன் பாருங்க. ஆனா சீக்கிரமா கொடுப்பாருன்னு நினைக்கிறேன்''
செல்போன் அழைக்க எடுத்தான். எதிர்முனையில் சேஷாத்ரி.
""எங்க இருக்க?''
""ராகவேந்திரா காலேஜ்கிட்டே உட்கார்ந்திருக்கேன்''
""வேலையை விட்டுட்டு வீட்டிலே சண்டை போட்டுட்டு வந்து அங்கே என்ன பண்ணிட்டிருக்கே ? சாப்பிட்டியா?''
""ஆமாண்டா எவ்வளவு வேலை செஞ்சாலும் அவன் குறை சொல்லிகிட்டே இருக்கான். அவன்கிட்டே இனிமேல் வேலை செய்ய முடியாது. வீட்டிலே சண்டை போட்டுகிட்டு வந்ததும், சாப்பிடாததும் உனக்கு எப்படி தெரியும்? ''
""அம்மா சொன்னாங்க. நீ உடனே மண்டபத்துக்குப் போ, வாட்ச்மேன் சாப்பாடு வாங்கிட்டு வருவாரு. சாப்பிடு. நான் மயிலாடுதுறை வரைக்கும் வந்திருக்கேன் ஈவினிங் வந்துடுவேன்''
சேஷாத்திரி, வேல்முருகன், கிறிஸ்டோபர் மூவருடனும் ஆறாம் வகுப்பில் ஒரு கிளாசில் படிக்கும்போது ஏற்பட்ட நட்பு, அது பள்ளியைத்தாண்டி என்ஜினியரிங் காலேஜ் வரை நீடித்து இன்று வரை தொடர்கின்றது. நால்வரில் சேஷாத்ரி மட்டுமே சொஞ்சம் வசதியானவன், அவன் அப்பா உயிருடன் இல்லை. சித்தப்பாவே அவனைப் படிக்க வைத்தார். அவரும் திரு
மணம் செய்து கொள்ளாமல் வெளிநாட்டுக் கம்பெனி ஒன்றின் அக்கவுண்டண்டாக வேலை பார்ப்பதால் அவர் சம்பாதித்தது உட்பட அனைத்துக்குமே சேஷாத்ரி
தான் வாரிசு. அதனால் அவன் வேலை தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படவில்லை. குடும்ப சொத்துக்களை நிர்வகிக்கவே அவனுக்கு நேரம் போதவில்லை. தன் நிலையையும் வேலையில்லா நண்பர்களது நிலையையும் உணர்ந்தவன் இன்றுவரை அனைவருக்கும் ஆபத்பாந்தவனாய் இருக்கின்றான். பெரும்பாலும் நண்பர்கள் சந்திப்பு அவனது சித்தப்பா கட்டிய திருமண மண்டபத்தில்தான் நிகழும்.
""என்னன்னா புறப்படுறீங்களா?''
""ஆமாம், உன்னோட கொஞ்சம் பேசிட்டு போறேன். உன் பேரு என்ன? உன் குடும்பம் எப்படி? உன் எதிர்கால திட்டம் என்ன? ''
கேட்டு முடித்த பிறகே ஏன் இப்படியொரு கேள்வியை அவனிடம் கேட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு வேளை தன்னைப்போலவே அவனுக்கும் பிரச்னை இருக்கக் கூடாது என்பதாலா அல்லது அவன் மூலம் தனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்பதாலா?
""என் பேரு பாலமுருகன். எல்லோரும் என்னை பாலுன்னு கூப்பிடுவாங்க. அப்பா, அம்மா, நான், என் தங்கச்சி நாலுபேரோட நாலு மாடும் இரண்டு ஆடும் ஒரு நாயும்தான் எங்க குடும்பம். சொந்தமா ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கு. எல்லோரும் அதிலே உழைப்போம். இதுதவிர, அம்மா வீட்டிலே இருந்தபடி வத்தல் வடகம்னு போடுவாங்க. அதை கடைக்கு கொண்டுபோய் போடறது அப்பா வேலை. எல்லோரும் வெளியே வந்துட்டா வீட்டையும் மாட்டையும் நாய்தான் பார்த்துக்கும். சொந்த இடத்திலே கவர்மெண்ட் புண்ணியத்திலே சின்னதா ஒரு வீடு கட்டியிருக்கோம். என்னோட தங்கச்சி இப்பத்தான் காலேஜ் சேர்ந்திருக்கு. அப்படியே கம்ப்யூட்டர் கிளாசுக்கும் போகுது. அதை படிக்க வெக்கணும். நல்ல இடமாப் பார்த்து கல்யாணம் பண்ணணும். அதுக்குப் பிறகு எப்படியாவது ஒரு லாரி வாங்கணும். வீட்டைப் பெரிசா கட்டணும். அதுக்குப் பிறகு நம்ம நிலைக்கு ஏத்தாப்பல ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணணும். கடைசி காலம் வரை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சாப்பாடு போட்டு அவுங்களை கூடவே வெச்சிருக்கணும். இதுக்கு நடுவே தங்கச்சி தபால் மூலமா டிகிரி படிக்கச் சொல்லுது. வர்ற ஆகஸ்ட்லே அப்ளிகேஷன் போடலாம்னு இருக்கேன்''
தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் பால
முருகன் அறிமுகப்படுத்திய விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. இப்படிப் பேசுவதற்கு வாழ்க்கை மீதும் தன்னை சார்ந்தவர்கள் மீதும் ஒரு ஈர்ப்பும் விருப்பமும் இருக்க வேண்டும் என பட்டது. அடுத்த நிமிடமே தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட நிகழ்வு நினைவுக்கு வர ஒருவேளை அவனைப்போல தானில்லையோ அல்லது அவனது குடும்பம் போல தனக்கில்லையோ என்ற கேள்வி பிறந்தது. தொடர்ந்து அவனிடம் பேச விருப்பம் இருந்தாலும் பசியால் தொடர முடியாமல் போனது.
""ஓகே பாலு... நீ நினைச்ச மாதிரி எல்லாம் கை கூடிவர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இப்ப நான் அவசரமாக் கிளம்புறேன். இன்னொரு நாளைக்கு சந்திப்போம் உன் நெம்பரைச் சொல்லு, என்னைப்பத்தி அப்புறம் சொல்றேன்''
பாலமுருகன் சொல்ல போனில் அடித்து மிஸ்டு கால் கொடுத்து கடைசி நெம்பரையும் தன் பெயரையும் சொல்லிவிட்டு புறப்பட்டான்.
மன்னார்குடி ரோட்டிலிருந்து அந்த மண்டபத்தை அடைந்தபோது வாட்ச்மேன் வடிவேல் வரவேற்றார்.
""வாங்க தம்பி, வந்து ஆபிசிலே உட்காருங்க, நான்போய் சாப்பாடு வாங்கிட்டு வந்துடறேன். தயிர் வாங்கிட்டு வர்ரேன். நல்லா சாப்பிட்டுட்டு ஒரு தூக்கம் போடுங்க. உடம்பும் மனசும் அமைதியாயிடும்''
கேரியரை எடுத்துக் கொண்டு சைக்கிளில் அவர் புறப்பட இவன் டிவியை ஓடவிட்டான். ஆனால் எதிலும் மனம் லயிக்கவில்லை.
சாப்பாடு கிடைத்தது, அவனுக்கு சற்றே நிம்மதி அளித்தது. ஒவ்வொரு மனிதனுக்கு உணவும் தூக்கமும் மிக மிக அவசியம். உடல் இயக்கத்திற்கு உணவும், சோர்வு தட்டும்போது உறக்கமும் இல்லாதபோது அவன் மனிதனாக இருக்கமாட்டான். பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது எத்தனை பொருத்த
மானது.
சற்று நேரத்தில் சாப்பாட்டுடன் வந்தவர் அனைத்தையும் டேபிள்மீது வைத்துவிட்டு தண்ணீர் எடுத்து வைத்தார்.
""சாரதி தம்பி நீங்க நல்லாவே சோர்ந்து போயிருக்கீங்க. மிச்சம் வைக்காம சாப்பிட்டுடுங்க. வீட்டிலே ஏதோ சண்டை போட்டுட்டு கிளம்பிட்டீங்கன்னு தம்பி போன்ல சொன்னாங்க. வீட்டுக்கு வீடு வாசல்படி இருக்கிற மாதிரி சண்டையும் இருக்கத்தான் செய்யும். அதுக்காக பட்டினி கிடக்கக் கூடாது. சாப்பாடு
கடவுள் மாதிரி. என்னை பார்க்கணும்னு அவசியமில்லே. நீ சாப்பிடற சாப்பாடா என்னை நினைச்சுக்கோன்னு கடவுள் சொல்லாம சொல்லி அனுப்பிவச்சது. அதை வீணாக்கக் கூடாது. அது மேல கோபத்தையும் காட்டக் கூடாது. ஒவ்வொரு அரிசியிலும் அதற்கானவன் பெயர் எழுதி வெச்சிருக்குன்னு நம்ப கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருக்கார். அது
எத்தனை சரின்னு இன்னைக்குத்தான் புரிஞ்சுகிட்டேன். கடையிலே நான் வாங்கினதோடு சாப்பாடு முடிஞ்சுபோச்சு. கொஞ்சம் லேட்டா போயிருந்தாலும் கிடைச்சிருக்காது. இப்ப நினைச்சுப் பாருங்க கவிஞர் வார்த்தை எத்தனை பொருத்தமானது தெரியும்''
ஒவ்வொன்றாய் எடுத்து பரிமாறிக் கொண்டே அவர் சொல்ல அவன் யோசித்தான்.
சாப்பிட்டு முடித்து வெளியே வந்தவன் நல்ல காற்று வீச அங்கேயே அமர்ந்தான்.
""கொஞ்நேரம் தூங்கலாமே தம்பி''
""வேணாம். இப்படி காத்தாட உட்கார்ந்திருந்தா போதும்''
""சரி உட்கார்ந்திருங்க.பேப்பர் புக் தரேன் படிங்க. யாராச்சும் மண்டபம் கேட்டு போன் பண்ணினா எல்லா தேதியும் புக் ஆயிடுச்சுன்னு சொல்லிடுங்க. நான் மண்டபத்துக்கு பின்பக்கம் ஒரு வேலையிருக்கு... முடிச்சுட்டு வந்துடறேன்''
சொல்லிவிட்டு அரிவாளுடன் புறப்பட இவன் செய்தித்தாளைப் புரட்டினான். அப்படியே கண் அயர்ந்தான். ஒரு மணிநேரத்திற்கு பின் அவன் விழித்தபோது மண்டபத்தின் கேட் திறக்கப்பட்டு அதன் அருகில் ஆறேழு பூசணிக்காய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான். அவனுக்குப் புரிந்து போயிற்று. மண்டபத்தின் பின்பக்கம் முளைவிட்ட ஒரு பூசணிக்கொடியில் காய்த்திருந்த காய்களல்லவா இவை? மண்டபத்தை புக் செய்பவர்களில் யாரோ ஒருவர் தன் வீட்டு விழாவுக்காக வாங்கிவந்த காய்களில் ஒரு பூசணிக்காயிலிருந்து விழுந்த விதையிலிருந்து முளைத்த கொடியில் காய்த்தவை. இந்த கொடி முளைவிட்டபோது அங்கு மேய வந்த கிடைமாடுகளின் காலில் அடிக்கடி மிதிபட்டு நசுங்கியது. அதன் பின்னர் கடும்வறட்சி காரணமாக பல நாட்கள் தண்ணீரின்றி தவித்தது என்றாலும் அது மடிந்துவிடவில்லை. உயிரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சிறிது சிறிதாக வளர்ந்தது. அதனுடைய நேரமோ என்னவோ ஒருநாள் இரவுமுழுவதும் மழை கொட்ட அது பிழைத்துக் கொண்டதுடன் தன் வேர்களை பூமியின் ஆழத்திற்கு அனுப்பி தனக்குத் தேவையான நீரை பெற்று இலைவிட்டு கிளைவைத்து பூத்து பிஞ்சும் வைத்தது. ஒன்றல்ல, இரண்டல்ல பத்துக்கும் மேற்பட்ட பிஞ்சுகள் தெரிய, அதுவரை அதை கவனிக்காமல் இருந்தவர்கள் அதை நோக்கி வர வாட்ச்மேன்தான் அனைவரையும் தடுத்துப் பாதுகாத்தார். இன்று அவற்றை அறுவடை செய்துள்ளார்.
வாட்ச்மேன் கைகால்களை கழுவிக் கொண்டு வரவும் ஒரு காவி வேட்டி கட்டியவன் ஸ்கூட்டரில் அங்கே வரவும் சரியாயிருந்தது. சைக்கிளை நிறுத்திவிட்டு காய்களை தட்டிப்பார்த்தான்.
""என்ன பெரிசு காய் விக்கறதா? ''
""ஆமாம்''
""என்ன விலை சொல்லுங்க? ''
""நீ என்ன விலை தருவீங்க? ''
""என்னய்யா பொருள் உங்களது... நீங்கதானே விலை சொல்லணும்? ''
""பொருள் என்னுதில்லே... இறைவனால் படைக்கப்பட்டது. வாழ்ந்து காட்டமுடியுங்கற தைரியத்தை
விடாத ஒரு பூசணிக்கொடிக்கு இறைவன் தந்த வெகுமதி. அதைக் கொண்டாந்து விக்கறதை மட்டும்தான் எனக்குத் தரப்பட்ட பணி. அதுக்கு விலை சொல்ல எனக்குத் தெரியாது. இதை வித்து வர்ற காசும் எனக்கில்லே. அதோ அந்த குடிசைவீட்டிலே மாற்று உடைகள் இல்லாம இருக்கிற ஒரு ஏழைவீட்டு பொண்ணுக்கு டிரஸ் வாங்கித் தர நினைச்சிருந்தேன். அதுக்கு கட்டுப்படியாகிற மாதிரி கொடுத்தா போதும்''
வாட்ச்மேன் பேச்சு விலை கேட்டவனை மட்டுமின்றி சாரதியையும் ஈர்த்தது.

(அடுத்த இதழில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com