இப்படியும் ஒரு மனிதநேயம்!

விநாயகர் கோவில் அருகில் இருந்த இருசக்கர வாகனத்தை மெதுவாக எடுத்துக் கொண்டிருந்த இளைஞரிடம் பெரியவர் சுப்பையா
இப்படியும் ஒரு மனிதநேயம்!

விநாயகர் கோவில் அருகில் இருந்த இருசக்கர வாகனத்தை மெதுவாக எடுத்துக் கொண்டிருந்த இளைஞரிடம் பெரியவர் சுப்பையா,  தன்னுடைய இடுப்பு வேட்டியில் மடித்து வைத்திருந்த காகிதத்தை எடுத்து, ""தம்பி இந்த விலாசம் உள்ள வீடு எங்கு இருக்குன்னு சொல்ல முடியுமா?''” என்று மெதுவாகக் கேட்டார். அந்த இளைஞர் காகிதத்தில் உள்ள முகவரியைப் படித்து பார்த்துவிட்டு, அவருக்கு அந்த முகவரிக்குச் செல்லும் வழியை பொறுமையாக 
விளக்கிக் கூறினான்.  

அந்த இளைஞன் கூறியபடி பாலமுருகன் தெருவில் உள்ள ஐந்தாம் எண்ணுள்ள வீட்டை பெரியவர் சுப்பையா தேடிக் கண்டுபிடித்தார். அவர் அந்த வீட்டுக்கு முன்புறமுள்ள கிரில்கேட் முன்பாக நின்றார். 

"கிரில்கேட்டைத் திறந்துகொண்டு  உள்ளே செல்லலாமா அல்லது யாரும் வெளியே வந்தால்  விவரம் கேட்டு, அதன்பின் உள்ளே செல்லலாமா'என்று யோசித்துக் கொண்டே "என்ன செய்யலாம்' என்று அவர் அப்பாவியாக விழித்துக் கொண்டு நின்றார். அப்போது அந்த வீட்டுக்குள் இருந்து பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் ஓடி வந்தான். 

சுப்பையா அந்த சிறுவனை தடுத்து நிறுத்தி, ""தம்பி சிதம்பரம் அய்யா வீடு இதுதானா?'' என்று கேட்டார்.

சிறுவன், ""ஆமா...  தாத்தா இது எங்க வீடுதான்'' என்று கூறிவிட்டு ஓடி விடாமல், அவன் வீட்டு வாசலை நோக்கி, ""அப்பா உங்களைத் தேடி ஒரு தாத்தா வந்திருக்கார்'' என்று குரல் கொடுத்துக்கொண்டே வெளியே ஓடி விட்டான். 

சிதம்பரம்  தன் மகனோட குரல் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தான். தன்னோட வீட்டுக் கிரில்கேட் அருகில் நிற்கும் சுப்பையாவை ஏற இறங்கப் பார்த்தான். பெரியவருக்கு எழுபது வயதைக் காட்டும் முகச்சுருக்கங்கள், குழிவிழுந்த கண்கள், இலவம் பஞ்சுபோல் பரந்து காணப்படும் வெண்மையான தலைமுடி, ஸ்ரீராமகிருஷ்ணரைப் போன்று சிறுதாடியுடன் காணப்பட்டார். அவர் வலது கையில் "தங்கள் வருகைக்கு நன்றி' என்று அறிவிக்கும் சாயம்போன ஒரு திருமண தாம்பூல மஞ்சள்கலர் துணிப்பை  வைத்திருந்தார். 

சுப்பையா, ""சிதம்பரம் அய்யா வீடு இதுதானா?'' என்று குரல் கேட்டவுடன் தன் நிலைக்கு வந்தான் சிதம்பரம்.

""ஆமா... என்னோட வீடுதான் பெரியவரே. வாங்க வீட்டுக்குள்ளே'' என்று வரவேற்று சிதம்பரம் அந்த பெரியவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். அவன் வீட்டிற்குள் வந்தவுடன் அவரை சோபாவில் அமர வைத்தான். 

""பெரியவரே என்ன விஷயம்? நீங்க எங்கேயிருந்து வர்றீங்க?'' என்று புன்னகையுடன் கேட்டான். 

சிதம்பரம் கேட்டதற்கு பெரியவர் சுப்பையா பதில் ஏதும் பேசாமல் தன்னுடைய மடியின்மேல் வைத்திருந்த அந்த சாயம் போன மஞ்சள் பையிலிருந்து, ஒரு நீண்ட கவரை எடுத்து, அவனிடம் கொடுத்துவிட்டு, ""அய்யா எனக்கு மதுரை புதுசு. நான் கன்னித்தேவன்பட்டி ஊரிலிருந்து வர்றேன். மத்த எல்லா விவரமும் இந்தக் கடிதாசியிலே எழுதிருக்கும்னு நெனைக்கிறேன் ஐயா'' என்று மரியாதையுடன் கூறினார். 

பெரியவர் சுப்பையா கொடுத்த கவரின்மேல் தன்னுடைய  வீட்டு முகவரி தெளிவாக எழுதப்பட்டிருந்ததை சிதம்பரம் படித்து விட்டு, கவருக்குள் இருந்த நீண்ட கடிதத்தினைப் பிரித்து படித்தான். அவன் அக்கடிதத்தினை படித்து விட்டு மனம் குழம்பினான்.  அப்பாவியாக இருக்கும் அந்தப் பெரியவர் சுப்பையாவை வீணாக அலைய வைப்பதற்கு, அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அக்கடிதத்தில் எழுதியுள்ளவற்றைப் பற்றி நினைத்து, சிறிதுநேரம் ஆழ்ந்து யோசித்தான். அவன் தன் எதிரே சோபாவில் அப்பாவியாக  உட்கார்ந்துகொண்டிருந்த பெரியவர் சுப்பையாவைப் பார்த்தான். அவர் சோபாவில் உட்கார்ந்து கொண்டு சோகமுடன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட சிதம்பரம் ஒரு முடிவுக்கு வந்தான்.

""பெரியவரே நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. இந்த லெட்டரில் நீங்க சொன்னபடி எல்லா விவரமும் எழுதியிருக்கு. மதுரையில் அலைந்து திரிந்து, இந்த லெட்டரிலே  எழுதியிருக்கிற சர்டிபிகேட்டெல்லாம்  ஒண்ணும் உங்களாலே வாங்க முடியாது. நானே சம்பந்தப்பட்ட ஆபிஸ்களுக்கு  போய் உங்களுக்கு வேண்டிய சர்டிபிகேட்டெல்லாம் வாங்கித் தந்திடுதேன். பெரியவரே அதுபற்றி ஒண்ணும் நீங்க கவலைப்படாதீங்க''  என்றான். 

""ஆமா ஐயா...  எனக்கு இந்த ஆபிஸ் விவரமெல்லாம் ஒண்ணும் எனக்குத் தெரியாது.  அய்யா நீங்கதான் எனக்கு எல்லாம் செஞ்சு கொடுக்கணும். ஐயா இந்த கிழவனுக்குத் தெரிஞ்சதெல்லாம் உழுவது, நெல்லுக்கு தண்ணீ பாய்ச்சுவது, களையெடுப்பது, நாத்து நடுவது இதான் எனக்குத் தெரியும் மற்றதெல்லாம் ஒண்ணும் தெரியாது ஐயா. வெளிநாட்டிலே இருந்த என்னோட மகன் இப்படி திடீர்னு செத்துப் போவான்னு நான் நெனைச்சுக் கூடப் பார்க்கலே'' என்று கூறும்போது அவர் கண்கள் அவரையும் அறியாமல் கலங்கியது. 

""பெரியவரே நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். நீங்க கொண்டு வந்த இந்தக் கடிதத்தில் இறந்த உங்கள் மகனோட "பிரண்ட்' சிவராமன், எல்லா விவரமும் தெளிவாக எனக்கு எழுதி இருக்காரு. நீங்க அதுபற்றி ஒண்ணும் எனக்குச் சொல்ல வேண்டாம். பெரியவரே, நீங்க எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே தங்கிக் கொள்ளுங்க. நான் எவ்வளவு சீக்கிரம் இந்த சர்டிபிகேட்டெல்லாம் வாங்க முடியுமோ, வாங்கி உங்களிடம் கொடுத்துடறேன்.பெரியவரே உங்க சொந்த வீடுபோல் நெனச்சு இங்க தங்கிக்கோங்க'' என்று சுப்பையாவுக்கு நம்பிக்கை  ஏற்படும்படி கூறினான்.  

பெரியவர் சுப்பையாவின் மகன் ஸ்ரீகாந்த் வெளிநாட்டில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். சுப்பையா கன்னித்தேவன்பட்டி கிராமத்தில் தனக்குச் சொந்தமான குறைந்த பரப்பளவுள்ள நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அவர் மகன் ஸ்ரீகாந்த் மாதாமாதம் அனுப்பும் பணத்தை வைத்துக் கொண்டு,

நிம்மதியாக அக்கிராமத்தில் வாழ்ந்து வந்தார். ஸ்ரீகாந்த் பணம் அனுப்பினாலும், சுப்பையா வீட்டில் வேலையில்லாமல் சோம்பேறியாக இருப்பதற்கு விரும்பவில்லை. "ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பது போல் உழைத்துக் கொண்டே இருக்கும் சுப்பையாவுக்கு உழைத்துதான் உண்ண வேண்டும் என்று உயர்ந்த கொள்கை உடையவர்.  

ஸ்ரீகாந்த் வெளிநாட்டுக்குச் சென்ற இரண்டு வருடங்களில் சுப்பையாவின் மனைவி திடீரென்று இறந்து விட்டார். எனவே ஸ்ரீகாந்த்தின் தந்தையை கிராமத்தில் தனியாக விட்டுவிட்டுச் செல்வதற்கு விருப்பப்படாமல், தன்னோடு வெளிநாட்டுக்கு வந்துவிடும்படி தந்தை சுப்பையாவை வற்புறுத்தி அழைத்தான். அந்தக் கிராமத்தில் உள்ள தன்னோட சொந்த வீட்டினை விட்டு வருவதற்கு அவர் சம்மதிக்கவில்லை.  அவர் தன் சொந்தக் கிராமத்தை விட்டுச் செல்வதற்கும், மகனோட செல்வதற்கும் விரும்பவில்லை. சுப்பையா மகனிடம் தன்னோட மனநிலை பற்றி  விளக்கியவுடன்,  ஸ்ரீகாந்த் அவர் விருப்பத்துக்கு மாறாக அவரை வற்புறுத்தி தன்னுடன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு விரும்பாமல் அவன் மட்டும் வெளிநாடு சென்று விட்டான்.

ஸ்ரீகாந்த் வெளிநாடு சென்ற ஆறுமாதங்களிலே, அவன் வாழ்வில் விதி விளையாடி விட்டது. எதிர்பாராதவிதமாக அவன் வேலை பார்த்த  கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்து விட்டான். அவனோடு தங்கியிருந்த அவனுடைய நெருங்கிய நண்பன் சிவராமன் மூலம் மகன் இறந்த தகவல் அறிந்து சுப்பையா கண்ணீர் விட்டுக் கதறினார். சுப்பையா தன் மகன் ஸ்ரீகாந்த்தை அழைத்தபோது அவன் கூட வெளிநாடு  செல்லாமல் போய்விட்டோமே என்று காலம் கடந்து  நினைத்து வருத்தப்பட்டார். 

ஸ்ரீகாந்த் தீ விபத்தில் இறந்து விட்டதால், அவனுக்கு கம்பெனியில்  தரும்  இழப்பீடு பெறுவதற்கு அவன் நெருங்கிய நண்பன் சிவராமன் முயற்சி செய்தான். கிராமத்தில் குடியிருக்கும் பெரியவர் சுப்பையா எழுதப் படிக்கத் தெரியாத அப்பாவி என்பதை அவன் நன்கு தெரிந்து வைத்திருந்தான்.  ஸ்ரீகாந்த்துக்கு கிடைக்க  வேண்டிய இழப்பீடு தொகையைப் பெறுவதற்கு, தான் கோரும் சர்டிபிகேட்களைஆவணங்களை அவரால் வாங்கி அனுப்ப இயலாது என்பதை அறிந்தவன், அதற்கு என்ன செய்வது என்று சிவராமன் சிந்தித்துப் பார்த்தபோது மதுரையில் குடியிருக்கும் தனது  நண்பன் சிதம்பரம் ஞாபகம் வந்தது. உடனே அவன் இறந்த ஸ்ரீகாந்துக்குரிய  இழப்பீடு தொகையைப் பெறுவதற்குத் தேவையான சான்றுகளை அனுப்பி வைக்கும்படி மதுரையில் குடியிருக்கும் தன்னுடைய நெருங்கிய நண்பன் சிதம்பரத்துக்கு நீண்ட கடிதம் எழுதினான்.  

அக்கடிதத்தில்,  தன்னுடன் அறையில் தங்கியிருந்த நண்பன் ஸ்ரீகாந்த் எதிர்பாராதவிதமாக தீ விபத்தில் இறந்த விவரத்தையும், இழப்பீடு தொகை பெறுவதற்குத் தேவையான சான்றுகளைப் பெற்று,  தனக்கு அனுப்பி வைக்கும்படி  எழுதியிருந்தான். மேலும் அக்கடிதத்தில் ஸ்ரீகாந்த்தின் அப்பாவித் தந்தை சிதம்பரம்பற்றி கடிதத்தில் விரிவாக எழுதி அந்தக் கடிதத்தினை சுப்பையாவின் முகவரிக்கு எழுதி  அனுப்பி வைத்தான். பெரியவர் சுப்பையா அந்தக் கவரை எடுத்துக் கொண்டு மதுரையில் குடியிருக்கும் தன்னுடைய நண்பர் சிதம்பரத்தை சந்திக்கும்படியும், அவர் சான்றுகளைப் பெறுவதற்கு உதவி செய்வார் என்ற விவரத்தையும் சிவராமன் அக்கடிதத்தில் எழுதியிருந்தான்.  

சிதம்பரம் அலைந்து திரிந்து சிவராமன் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகளை, சம்பந்தபட்ட அலுவலத்திலிருந்து ஒரு வாரத்திற்குள் வாங்கி விட்டான். அந்த சான்றுகளின் நகல்களை எடுத்து அவற்றை பெரியவர் சுப்பையாவிடம் பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தான். பெரியவர் சுப்பையா தன்னை சந்தித்த விவரத்தையும்,  அசல் சான்றுகள் மற்றும் ஆவணங்களையெல்லாம் சிவராமனுக்கு கடிதத்துடன் இணைத்து சிதம்பரம் அனுப்பி வைத்தான்.  

மேலும் அக்கடிதத்தில், "அன்புள்ள சிவராமன் அவர்களுக்கு,  உங்கள் கடிதம் பெரியவர் சுப்பையா என்பவர் மூலம் கிடைத்தது. நீங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட உங்கள் நண்பர் சிதம்பரம்  பணி நிமித்தமாக ஒரு வாரத்திற்கு முன்பே டில்லி சென்று விட்டார். அவர் வாடகைக்கு குடியிருந்த  மதுரை மேல ஆவணிமூல வீதியில் உள்ள  வீட்டில்தான் நான் தற்போது குடியிருந்து வருகிறேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால், என்னுடைய பெயரும் சிதம்பரம்தான். 

தயவுசெய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். பெரியவர் சுப்பையா என்னைச் சந்தித்தபோது,  தன் மகனை இழந்து தவிக்கும் அந்தப் பெரியவரிடம் அவர் தேடி வந்த சிதம்பரம் நான் இல்லை என்றும், அவர் தேடி வந்த சிவராமனின் நண்பர் சிதம்பரம் டில்லிக்கு மாறுதலில் சென்று விட்டார் என்றும் கூறி அவரது மனதை, மேலும் கஷ்டபடுத்துவதற்கு எனக்கு மனம்  வரவில்லை.  

அதனால் அந்தப் பெரியவரை வீணாக அலைய விடவும், எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.  மதுரையில் இருந்து,பெரியவர் சுப்பையாவுக்கு என்னென்ன உதவி செய்யவேண்டும் என்று நீங்கள் கடிதத்தில் கோரியிருந்தீர்களோ, அதன்படி நான் உரிய அலுவலங்களுக்குச் சென்று நீங்கள் கடிதம் மூலம் கோரப்பட்ட அனைத்து சான்றுகளையும் பெற்று உங்களுக்கு இத்துடன் அனுப்பி இருக்கிறேன். 

உங்கள் எதிர்பாராத நண்பன், சிதம்பரம்.என்று கடிதத்தை முடித்திருந்தான் சிதம்பரத்தின் நீண்ட கடிதத்தைப் படித்த சிவராமன், தனக்கு அறிமுகமே இல்லாத பெரியவர் சுப்பையாவை தனக்குத் தெரியாது  என்று சிதம்பரம் திருப்பி அனுப்பாமல்,  அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்த சிதம்பரத்தின் செயலை நினைத்து  இப்படியும் ஒரு மனிதநேயமிக்க மனிதரா "மை டியர் சிதம்பரம்... யூ ஆர் வெரி கிரேட்' என்று மனதுக்குள் வாழ்த்தினான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com