செங்கல்பட்டு ரங்குடு! 

பி.எஸ். ரங்கநாதன், "அகஸ்தியன்', "கடுகு' ஆகிய புனைபெயர்களில் எழுதும் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். அவர் கடைசியாக எழுதிய ஒரு நகைச்சுவை கதை "தினமணி கதிரி' ல் வெளி வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.
செங்கல்பட்டு ரங்குடு! 

பி.எஸ். ரங்கநாதன், "அகஸ்தியன்', "கடுகு' ஆகிய புனைபெயர்களில் எழுதும் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். அவர் கடைசியாக எழுதிய ஒரு நகைச்சுவை கதை "தினமணி கதிரி' ல் வெளி வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. சமீபத்தில் அவர் அமெரிக்காவில் காலமானார். சென்னையில் அவரின் உற்ற தோழனாய் இருந்தவர் சித்ராலயா கோபு. தன் ஆருயிர் நண்பரை பற்றி கோபுவிடம் கேட்டபோது அவர் கூறியது:

""பி.எஸ். ரங்கநாதன் என்கிற அகஸ்தியனை நான் "ரங்குடு' என்று அழைப்பேன்.

நானும் ரங்குடுவும், ஸ்ரீதரும் செங்கல்பட்டில் இருந்த புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். அங்கு நாங்கள் ஒன்று சேர்ந்து பல மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் அளித்திருக்கிறோம். எங்களை ஊக்குவித்து, நிகழ்ச்சிகள் செய்ய வைத்தது நடிகரும் இயக்குநருமான சோவின் தந்தை ஸ்ரீனிவாச ஐயர்தான். "சேவா சங்கம்' என்று ஓர் அமைப்பை நடத்திக் கொண்டு வந்தார். அப்பொழுதெல்லாம் செங்கல்பட்டில் ஸ்ரீனிவாச ஐயர் வீட்டிற்கு அருகே ஒரு காலி இடம் இருக்கும். அங்கு பெரிய ஜமக்காளத்தை விரித்து, கட்டி ஒரு மேடையைப் போல் அமைத்து, அங்கு நாங்கள் இருவரும் நாடகங்கள் போட்டிருக்கிறோம். இந்த மேடை அமைக்க ரூபாய் 25 தான் ஆகும். அதையும் அவரே கொடுத்து விடுவார். நான் எழுதிய "மிஸ்.மாலதி', "லதா' என்ற பெயரில் சில நாடங்களைப் போட்டிருக்கிறோம். அந்த சமயத்தில் இயக்குநர் ஸ்ரீதர் "ரத்த பாசம்' என்று ஒரு கதையை நாடகமாகப் போட்டார். பின்னர் அதை ஜுபிடர் பிக்சர்ஸ் சினிமாவாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீதர் சொல்ல நாங்கள் இருவரும் மகிழ்ச்சியோடு அவரை வாழ்த்தினோம்.

இதற்குள் இயக்குநர் ஸ்ரீதர் வீனஸ் பிக்சர்ஸ் மூலம், "அமரதீபம்', "உத்தம புத்திரன்' ஆகிய படங்களை எழுதி, இணை தயாரிப்பாளராகவும் மாறி விட்டார். ஸ்ரீதர் சினிமாவில் ரொம்ப பிசியாகி விட்டார். நானும் ரங்குடுவும் தான் எங்கள் நட்பைத் தொடர்ந்தோம்.

நானும் ரங்குடுவும் செங்கல்பட்டில் நகைச்சுவை எழுத்தாளர்களாக இருந்தாலும் எங்களுக்குள் போட்டி, பொறாமை என்பது துளியும் கிடையாது.

ரங்குடுவுக்கு அரசாங்க வேலை கிடைத்தது. எனக்கும் தெரிந்த குடும்ப நண்பர் அரசாங்க வேலை தருவதாகச் சொன்னார். அவர் சொன்ன ஒரே கண்டிஷன் நான் குடுமி வைத்து கொள்ள வேண்டும் என்பது தான். நான் அரசாங்க வேலைக்காக குடுமி வைத்து கொள்ள மாட்டேன் என்று மறுத்து விட்டேன்.

பிறகு சில வருடங்களுக்கு பின் நான் சினிமாவில் இயக்குநர் ஸ்ரீதருடன் சேர்ந்து விட்டேன் என்று அவருக்குத் தெரிந்தவுடன் என் ஆருயிர் நண்பர் ரங்குடு என்ன சொன்னார் தெரியுமா? ""நல்லவேளை உன் குடுமி அந்த அரசாங்க வேலை வாங்கித் தருவதாகச் சொன்ன பெரியவரிடம் சிக்கவில்லை.. சிக்கியிருந்தால் மன்னார் அண்ட் கம்பெனி பைரவன், காதலிக்க நேரமில்லை செல்லப்பா இவங்களை எல்லாம் நாங்க பார்த்து இருக்கவே முடியாது'' என்று தமாஷாக கூறினார். அவருக்கு புதுதில்லிக்கு மாற்றல் வந்தவுடன், அங்கு சென்றார்.

அவர் தில்லியிருந்து எப்போது சென்னைக்கு வந்தாலும் நான், அவர் மற்றும் இயக்குநர் ஸ்ரீதர் மூன்று பேரும் சந்தித்து பழைய செங்கல்பட்டு கதைகளைப் பற்றி பேசுவோம். நாங்கள் கிட்டத்தட்ட ஒரு 10-12 வயது சிறுவர்களாக அப்பொழுது மாறி விடுவோம்.

அவர் புதுதில்லியில் இருந்தபோது தான் "காதலிக்க நேரமில்லை' படம் வெளியானது. அதில் கதை வசனம் ஸ்ரீதர் - கோபு என்று இருப்பதைப் பார்த்து விட்டு என்னைத் தொலைபேசியில் அழைத்து ரொம்பவும் பாராட்டினார். சென்னைக்கு வரும் போதெல்லாம் என்னைச் சந்திக்காமல் போகமாட்டார்.

நான் அப்பொழுது சென்னை அடையாற்றில் ஒரு ஃப்ளாட்டில் குடியிருந்தேன். அவரும் அங்கு ஒரு ஃப்ளாட்டை வாங்கி அதில் வந்து தங்க ஆரம்பித்தார். ஒருமுறை என் மனைவி "நாலாயிரம் திவ்ய பிரபந்தம்' சொல்வதைக் கேட்டு, அவரது மனைவிக்கும் கற்றுக்கொள்ள ஆசை வந்தது. குரு தட்சிணை கொடுத்து, அதை அவர் மனைவி கற்றுக் கொண்டார். நண்பர்களுக்குள் இது தேவையா என்று நான் சொன்னாலும் கேட்காமல் அதைச் செய்தார் என் நண்பர் கடுகு. அமெரிக்காவில் வட கரோலினாவில் உள்ள அவர் மகள் ஆனந்தி வீட்டிலிருந்து எனக்கு போன் வந்தது. அவரது மனைவி கமலா ""உங்கள் நண்பருக்கு உடல் நலம் சரியில்லை'' என்று கூறி ரங்குடுவிடம் போன் கொடுத்தார். ரங்குடு என்னிடம், "" உன் புரோகிராம் எல்லாம் நெட்டில் பார்க்கிறேன்'' என்று கூறினார். நான் அவரிடம், கலகலப்பு என்பது நம் இருவருக்கும் கூடப் பிறந்தது. உற்சாகமாக மனதை வைத்து கொள்'' என்று கூறினேன்.

அடுத்த இரண்டு நாளுக்கு பிறகு அவர் மறைந்த செய்தி வந்தது. என் உயிர் நண்பர்களின் பட்டியல் முடிவுக்கு வந்து விட்டது. இப்போது நான் தனி மரம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com