வீழ்வேனென்று நினைத்தாயோ?

திருவானைக்காவலில் இருந்து ஸ்ரீரங்கம் போகும் காவேரி  வடகரை மாம்பழச்சாலையில், உச்சிவேளை சுட்டெரிக்கும் வெயிலில் வாத்தியார் கலியபெருமாள்  நாடிசோதிடம் பார்த்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.
வீழ்வேனென்று நினைத்தாயோ?

திருவானைக்காவலில் இருந்து ஸ்ரீரங்கம் போகும் காவேரி வடகரை மாம்பழச்சாலையில், உச்சிவேளை சுட்டெரிக்கும் வெயிலில் கணக்கு வாத்தியார் கலியபெருமாள் நாடிசோதிடம் பார்த்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.

ஆற்றுக்கும் சாலைக்கும் இடையில் இருந்தபண்ணையில் பெரிய கத்தரிக்கோல் கொண்டு கொடிமுந்திரிக்குக் கவாத்து வெட்டிக் கொண்டிருந்த ஐயாரப்பன் அவரைப் பார்த்துவிட்டு வெளியே ஓடிவந்து கும்பிட்டு, ""ஐயா... நான் உங்க மாணவன் ஐயாரப்பன், தஞ்சாவூரில் உங்களிடம் படிச்சேன்'' என்றான்.

காக்கி அரைக்கால் டவுசர், முண்டாப் பனியனுடன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு விவசாயக் கூலியாள் போன்று தோற்றமளித்த அவனைப் பார்த்தவுடன் அவருக்கு சட்டென்று பழைய நினைவுகளெல்லாம் வந்தன.

அவன் ப்ளஸ் டூ படித்தபோது அரையாண்டுத் தேர்வில் கணக்கில் பூஜ்யம் வாங்கியிருந்தான். தேர்வுத்தாள் விநியோகத்தின்போது வகுப்பில் அவனை நிற்க வைத்து, ""எப்படிச் சொல்லித் தந்தாலும் உனக்குக் கணக்கு வரலே. கணக்கிலே பூஜ்யம் வாங்கீட்டுக் கேவலமா நிக்கிறே. உன்னோட நிலமையை நெனச்சா உனக்கே வெட்கமா இல்லையா? என்கிட்டக் கணக்குப் படிச்ச என்னோட மாணவர்கள் எல்லோரும் கம்ப்யூட்டர் இஞ்சினீயர்களாக உலகமெங்கும் சீரும் சிறப்புமா இருக்கிறாங்க. கணக்கு வராத நீ எதிர்காலத்தில உருப்படுறது சந்தேகம்தான்'' என்று அவனைக் கோபத்தோடு திட்டியது நினைவுக்கு வந்தது.

"நான் சொன்னது அப்படியே பலித்துவிட்டது. இன்னைக்கு இவன் ஒரு விவசாயக் கூலியா இருக்கிற நிலைமைக்கு ஆளாகிட்டான்' என்று நினைத்தார்.
முண்டாசை அவிழ்த்துக் கொண்டு, ""ஐயா, உள்ளே வாங்க'' என்று மரியாதையாக அழைத்தான். அவனைத் தொடர்ந்து பின்னால் போனார்.

உள்ளே மாமரங்களுக்கு இடையே இருந்த செம்மண் சாலையில் அழைத்துக் கொண்டு போனான். சாலையின் இறுதியில் காவேரி ஆற்றின் அருகில் வேப்பமரத்தின் அடியில் ஒரு சதுரமான சிமெண்ட் மேடை இருந்தது. அதன்மேல் தென்னோலைக் கிடுகுகள் வேய்ந்த கொட்டகை இருந்தது.

கொட்டகைக்குக் கீழே, சிமெண்ட் மேடையில் மரத்தாலான ஈ.சி சேரும், சில மர நாற்காலிகளும் , ஒரு மரடீப்பாயும் கிடந்தன. அவன் அவரை உட்காரச்
சொன்னான்.

அவர் படிகளில் ஏறி மேலே போய் ஈ.சி. சேரில் அமர்ந்தார். பக்கத்தில் இருபது அடிகளில் கரையைத் தாண்டி காவிரியில் நீர் நுங்கும் நுரையுமாக இருகரைகள் தொட்டுப் போனது.

தூரத்தில் அடுத்த கரையில் திருச்சி நகரம், மலைக்கோட்டை, மலைக்கோட்டையில் தாயுமானவசாமி கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் தெரிந்தன. இரண்டு கரைகளையும் இணைக்கும் பழைய, புதிய பாலங்கள் தெரிந்தன. புதிய பாலத்தில் வாகனங்கள் செல்வதும் தெரிந்தது. நீர்ப்பரப்பில் தவழ்ந்து வந்த சிலுசிலுவென்ற குளிர் காற்று அவரைத் தழுவிக் குளிர்வித்தது. பக்கத்தில், இலைகள் அடர்ந்த மஞ்சனத்தி மரத்தில் மறைந்திருந்த செம்பூத்து "குக்...குக்... குக்...' என்று விட்டுவிட்டுக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.

ஐயாரப்பன் அவரைப் பார்த்து, ""ஐயா இருங்க, இதோ வருகிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கூரையில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு, காலில் தடை போட்டுக் கொண்டு, பக்கத்தில் வரிசையாக இருந்த பனைமரம் ஒன்றில் சரசரவென்று ஏறி, பனங்குலை ஒன்றை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு மரத்திலிருந்து இறங்கினான். அடுத்து காலில் தடை அணிந்துகொண்டு அருகிலிருந்த தென்னை மரத்தில் ஏறி செவ்விளநீர்க்குலை ஒன்றை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு இறங்கினான்.

இளநீர் சீவி ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றினான். அதில் இளம் வழுக்கைகளைச் சீவி மிதக்கவிட்டு அவர்முன்னாலிருந்த மரடீப்பாயின் மீது வைத்துவிட்டு, அருகில் புங்கைமரத்தின் கீழே, வெட்டிவேர் தட்டிகளால் வேயப்பட்டிருந்த குடிசைக்குள்போய், நன்கு கனிந்த ஹிமாம்பசந்த், அல்போன்சா மாம்பழங்களை எடுத்துவந்து நன்றாகக் கழுவித் தோல்சீவி அறுத்து, ஒரு பீங்கான் தட்டில் வைத்து அவர் முன்னால் கொண்டுவந்து வைத்து, ""ஐயா, சாப்பிடுங்க'' என்றான்.

மாம்பழத்துண்டுகளை எடுத்துச் சுவைத்துச் சாப்பிட்டார். வெயிலில் வியர்க்க வியர்க்க, விறுவிறுத்துப் பசியோடு வந்தவருக்கு அந்த அத்துவான, ஆள்நடமாட்டமில்லாத சாலையில் எதிர்பாராமல் கிடைத்த விருந்து அது. அந்தத் தோல் சீவிய மாம்பழத்துண்டுகள் ஐஸ்கிரீம் கரைவது மாதிரி அவருடைய வாயில் கரைந்து இனித்தது. இதற்கு முன்னால் இப்படி ஒரு சுவையான மாம்பழத்தை அவர் சாப்பிட்டதில்லை. என்றாலும், "முன்பு ஒருமுறை மாயவரத்தில் நண்பர் ஒருவருடைய வீட்டில் சாப்பிட்ட பாதிரி மாம்பழம் இந்த மாம்பழங்களின் சுவையை ஒட்டி இருந்ததாக' நினைத்துக் கொண்டார். அடுத்து வழுக்கைத் துண்டுகள் மிதக்கும் இளநீரைச் சுவைத்துப் பருகினார். அதன் அலாதியான சுவையும், இனிப்பு எதுவும் சேர்க்காமலேயே அது தித்தித்து இனித்ததும் அவருக்கு மிகவும் பிடித்தது. அவர் அதைப்பருகி முடித்தவுடன் ""ஐயா, இன்னும் கொஞ்சம் இளநீர் குடிங்க'' என்று மீண்டும் இளநீரை ஊற்றினான். மறுப்பு ஏதும் சொல்லாமல் அதையும் குடித்து முடித்தார்.
அவன், மேடையில் ஒரு மூலையில் மணல் பரப்பி அதன் மேல் வைக்கப்பட்டிருந்த மண்பானையிலிருந்து குளிர்ந்த நீரை இன்னொரு சொம்பில் மோந்து கொண்டு வந்து வைத்தான். அதை எடுத்துக் கொண்டு எழுந்து சென்று கைகழுவிக் கொண்டு, மீதமிருந்த நீரைக் குடித்துவிட்டு கைகளைக் கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டே வந்து அமர்ந்து, ""எந்தத் தண்ணியோட ருசியும் நம்ம காவிரித் தண்ணியோட ருசிக்கு ஈடாகாது'' என்று பெருமையோடு சொன்னார்.

அடுத்து சில நிமிடங்கள் தலைகுனிந்து அமைதியாக இருந்துவிட்டு கலியபெருமாள், ஒரு பெருமூச்சுடன் அவனை ஏறிட்டுப்பார்த்து, "" உனக்குக் கணக்கு சரியாக வராததனாலே நீ இப்படிக் கடும்வெயிலில் கடுமையாகக் கஷ்டப்பட்டு உழைத்து வாழவேண்டியதாப் போயிருச்சு. அதனாலதான் நீ படிக்கும்போது கணக்குப் பாடத்தைக் கவனிச்சு நல்லாப் படீன்னு சொன்னேன். நல்லாப் படிச்சிருந்தா கணக்கில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிச் சாஃப்ட்வேர் இஞ்சினீயராகி எங்கோ வெளிநாட்டில ஏ.சி. ரூம்ல உட்கார்ந்து லட்சம் லட்சமாச் சம்பளம் வாங்கிக்கிட்டு ஜாலியா சந்தோஷமா இருந்திருக்கலாம். உன் வாழ்க்கை இப்படி ஆகியிருச்சேன்னு ரொம்ப வருத்தப்படுறேன். இப்படி உட்கார்'' என்றார்.

""இல்லைங்க ஐயா, நிற்கிறேன்'' என்று சொல்லிவிட்டு, உட்காராமல் சற்றுநேரம் அமைதியாக இருந்தான்.
அதைப் பார்த்த கலியபெருமாள் அவனுக்குத் தன் முன்னால் உட்காரக் கூடத் தைரியம் இல்லாமலும், தன்னம்பிக்கை இல்லாமலும் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு, ""உன்னோட சம்பளம் உனக்குப் போதுமானதா இருக்குதா?'' என்றார்.
அதற்கு அவன், "" ஐயா, இந்தப் பண்ணையே என்னோடதுதான். நான் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத்தில தோட்டக்கலைத்துறைக் கல்லூரியில் படித்து, பி.எச்டி ஹார்ட்டிக்கல்ச்சர் பட்டம் வாங்கி இருக்கிறேன். நான் பிளஸ் டூ படிச்சப்ப ஆர்வமில்லாமலும், கவனக்குறைவாகவும் படிச்சதுனாலே கணக்குப் பாடத்திலே பூஜ்யம் வாங்கி எல்லோர்கிட்டேயும் கெட்ட பேர் வாங்கினேன்'' சொல்லிவிட்டு சற்று நிறுத்தினான்.
கலியபெருமாள் சற்றும் எதிர்பாராத அவனுடைய பதிலால் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தார். அவன் தொடர்ந்து பேசினான்: ""அதற்குப் பின்னால் முயற்சிசெஞ்சு கொஞ்சம் கடுமையாக உழைச்சுப் படிச்சேன். ப்ளஸ் டூ இறுதித்தேர்வில், கணக்கில் அறுபது சதவீத மார்க்குகள் வாங்கினேன். விஞ்ஞானப்பாடங்களில் அதிக மார்க்குகள் வாங்கியிருந்தேன். அதை வச்சு, பி.எஸ் சி ஹார்ட்டிகல்ச்சர் கோர்ஸில் சேர்ந்து படிச்சுப் பட்டம் வாங்கினேன். அதைத்தொடர்ந்து அங்கேயே எம்.எஸ் சி ஹார்ட்டிகல்ச்சர், அப்புறம் ஹார்ட்டிக்கல்ச்சர் டாக்டரேட் வாங்கி, அங்கேயே அஸிஸ்டண்ட் புரஃபஸரா வேலை பார்த்தேன். ஒருமுறை கோயமுத்தூருக்கு வந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரைச் சந்திச்சேன். அவரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரியில பி. எஸ் சி வேளாண்மை படிச்சவர்தான்.
அவர், "நம்ம விவசாய நிலங்களிலே ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்கிட்டோம். பூச்சிமருந்துகளையடிச்சு அதில் விளையிற தானியங்கள், காய்கறிகள் , பழங்கள் எல்லாத்தையும் நஞ்சாக்கி அதைச்சாப்பிடுற மனுசங்களை நோயாளிகளாக்கீட்டோம். அதை மாத்தியமைக்க ரசாயன உரங்களையும், ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் ஒதுக்கிவிட்டு, இயற்கை விவசாயம்கிற ஆர்கானிக் விவசாயம் பண்ணனும். அதைச் செய்யிற முன்னோடியா நம்ம மாதிரி படிச்சவங்க இருக்கணும். அப்படி நடந்தா நம்மைத் தொடர்ந்து மத்தவங்களும் இயற்கை விவசாயிகளாக மாறுவாங்க' என்றார். அதுதவிர, "விவசாயக் கல்வி படிச்ச நம்மலாலே, நம்ம நாட்டுக்கும், நம்ம நாட்டு மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில பிரயோசனமோ இல்லை ... நன்மையோ இருக்கணும்' என்று சொன்னார் .
அவர் சொன்னதைக் கேட்டபின்னால அவரோட பேச்சில இருந்த நியாயத்தை உணர்ந்தேன்.

(அடுத்த இதழில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com