தாத்தாவின் பேரப் பருவம்

நாராயணமூர்த்திக்குப் பேரன் கண்ணனின் ஞாபமாகவே இருந்தது. "ஒரு வாரந்தானே... ஓடி விடும்' என்று எண்ணியவருக்கு நாள்கள் நகர மறுத்தன.
தாத்தாவின் பேரப் பருவம்

நாராயணமூர்த்திக்குப் பேரன் கண்ணனின் ஞாபமாகவே இருந்தது. "ஒரு வாரந்தானே... ஓடி விடும்' என்று எண்ணியவருக்கு நாள்கள் நகர மறுத்தன.

""அப்பா சகுந்தலாவையும் கண்ணனையும் அவங்க அம்மா வீட்டுல விட்டுட்டு வர்றேன். ஒரு வாரம் இருக்கட்டும். அப்பறம் நாம எல்லாரும் போய்... அங்க குலசாமி கோயில்ல கண்ணனுக்கு மொட்டை போட்டு காது குத்திட்டு கூட்டிட்டு வந்திடலாம்''

மகன் ரங்கராஜன், நாராயணமூர்த்தியிடம் தெரிவித்தான்.

நாராயணமூர்த்தியைப் பொருத்தவரையில் அவர் ஒரு யதார்த்தவாதி. "பிள்ளையைப் பெற்றவர், பெண்ணைக் கொடுத்தவரைக் காட்டிலும் ஒரு படி மேலானவர்... பெண்ணைக் கொடுத்த சம்பந்தி, உயர் அதிகாரிக்கு கீழதிகாரி காட்டும் மரியாதையை மாப்பிள்ளையைப் பெற்றவருக்குத் தர வேண்டும்' போன்ற தன்மைகளை வெறுப்பவர். மகளை மணம் முடித்த மருமகன், மகனுக்கு மனைவியான மருமகள் இரண்டு பேர்களுமே சமநிலை உடையவர்கள் எனக் கருதுபவர். எனவே மகன் சொன்னவுடன், ""சரிப்பா... கொண்டு போய் விட்டுட்டு வா... கரோனாவால யாருமே ஊருக்குப் போக முடியலையில்ல.. இப்பத்தான் ஓரளவு போக்குவரத்துத் தொடங்கிடுச்சே''

சிறிது கூட யோசிக்காமல் அடுத்த நொடியே ஆமோதித்தார் நாராயணமூர்த்தி.
பேரன் கண்ணன் பிறந்து ஒரு வருஷமும் இரண்டு மாதங்களும் ஆகின்றன. ஓராண்டு முடிந்தவுடன் முதல் பிறந்த தினம் கொண்டாடிய மறுவாரத்திற்குள் குழந்தைக்கு மொட்டை போட்டு காது குத்த வேண்டும். இது, காலம் காலமாய் கடைப்பிடித்து வருகிற சம்பிரதாயம். கரோனா தந்த தடங்கலில் காதணி விழா நடத்த முடியாமல் சற்று தாமதப்பட்டுப் போயிற்று.

தற்பொழுது மற்ற மாவட்டங்கள் போக "இ' பாஸ் வாங்கத் தேவை இல்லையென்று அறிவித்துள்ளதால் குலசாமி கோயிலில் முடி இறக்கி காது குத்துகிற நாளை கூடிப் பேசி முடிவு செய்தனர். குலதெய்வ ஆலயம் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கிறது. அதனால் விசேஷத்திற்குப் பத்து நாள்களுக்கு முன் தாய் வீட்டில் தங்க விரும்பிய சகுந்தலாவின் விருப்பத்தை ஏகமனதாக ஏற்றனர்.

ஒரே ஒரு வாரந்தானே... என்று ஒரு மனதாய் அனுப்பியோருக்கு முதல் நாளே கண்ணனின் நினைவுகள் முற்றுகை இட்டன. பொதுவாக பேரப்பிள்ளைகள் தாத்தா, ஆச்சியிடம் பிரியமாக இருப்பார்கள். கண்ணனைப் பொறுத்த அளவில் தாத்தாவிடம் சற்றுக் கூடுதலாக ஒட்டிக் கொண்டான். முகம் பார்த்துச் சிரிக்கத் தொடங்கிய நாள் முதலே தாத்தாவை சிக்கெனப் பிடித்துக் கொண்டான். எனவே அவன் ஊருக்குப் போன மறுவிநாடி முதல் அவனது ஞாபகம் நாராயண மூர்த்தியைப் பாடாய்ப்படுத்திற்று. ஒரு வாரம் எப்போது ஓடும் என்று நாள்களை எண்ணத் தொடங்கி விட்டார்.

கண்ணன் இல்லாத வீடு வெறிச்சோடிக் கிடந்தது. ஒவ்வொரு நாளும் மிக மெதுவாக ஊர்வதாகத் தோன்றியது. பேரனின் மழலை சேஷ்டைகள் மனதை விட்டு அகல மறுத்தன.

ஒரு வழியாக நாள்கள் கடந்து விட்டன. பிடித்து தள்ளி விட்டாற்போல் போய் விட்டன. நாளைக் காலையில் திருநெல்வேலி கிளம்புகிறார்கள். நாளை இதே வேளையில் பேரனிடம் கொஞ்சி மகிழலாம். இரவில் படுத்தவருக்கு சின்னப் பையன் மாதிரி ஊருக்கு போகப் போகிற சந்தோஷத்தில் உறக்கம் வராமல் முரண்டு பிடித்தது. தூக்கம் வராத அந்த ராத்திரியில் ஏதேதோ ஞாபகங்கள்... திடீரென்று நாராயண மூர்த்திக்கு அவரது தாத்தா பற்றிய நினைவுகள் மனதினுள் வலம் வரத் தொடங்கின.

நாராயண மூர்த்திக்கு தனது தந்தை வழித் தாத்தா பற்றித் தெரியாது. அவர் கருப்பா? சிகப்பா? குட்டையா? நெட்டையா? ஒல்லியானவரா? தடித்தவரா? எதுவும் தெரியாது. நாராயண மூர்த்தி பிறப்பதற்கு முன்பே அவர் போய்ச் சேர்ந்து விட்டார். நாராயணமூர்த்திக்கு "தாத்தா' என்றால் அவரின் தாய்வழித் தாத்தா வேலாயுதம் தான் தெரியும். அவர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி கிராமத்துப் பிள்ளைகளுக்கு எழுத்தறிவித்தவர்.

நாராயணமூர்த்தி ஐம்பதுகளின் நடுப்பகுதியில் பிறந்திருந்தாலும், அறுபதுகளின் முற்பகுதி முதல் தாத்தா வேலாயுதம் நினைவில் நிற்கிறார். கண்டிப்பு, கட்டுப்பாடு, கறார், கோபம் முதலிய தன்மைகளுக்குச் சொந்தக்காராக இருந்தாலும், இவர் போன்று பேரன் வளர்ச்சியில் அக்கறை நிறைந்த தாத்தா யாருக்கும் இருக்க முடியாது.

வெகுநேரம் தூக்கம் வராவிட்டாலும், அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து, ஆறரை மணிக்குள் தயாராகி விட்டார் நாராயணமூர்த்தி. ஏழே கால் மணி வாக்கில் மனைவியுடன் காரில் ஏறினார். காரை மகன் ரங்கராஜன் சீரான வேகத்தில் ஓட்டினான். நாராயணமூர்த்திக்கு ராத்திரி மனதினுள் படர்ந்த தாத்தா குறித்த சின்ன வயது நினைவுகள் தொடர்ந்தன. நகரைக் கடந்ததும் காரை வேகப் படுத்தினான். கார் முன்னோக்கிப் போக நாராயணமூர்த்தியின் ஞாபகங்கள் பின்னோக்கிப்பயணப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் பழையூர் என்கிற சிற்றூர். அங்குதான் ஐம்பதுகளின் நடுப்பகுதியில் வேலாயுதத்துக்கு மகள் வழிப் பேரன் பிறந்தான். அவனுக்கு "நாராயண மூத்தி' என்கிற பெயரை வைத்தார் வேலாயுதம் நாராயணமூர்த்தியின் தந்தை வெளியூரில் வேலை செய்து வந்தார். நாராயண மூர்த்தியும் அவனது தாயாரும் வேலாயுதம் தாத்தாவின் வீட்டிலேயே இருந்தார்கள். அவனை நண்பர்கள் "நாணா' என்று கூப்பிட்டார்கள். உற்றார் உறவுகளால் "மூர்த்தி' என்று அழைக்கப்பட்டான். வேலைக்குப் போன பிறகு அலுவலக்தில் "என்எம்' போன்ற பாணியில் சுருக்கப் பெயரினைப் பயன்படுத்தினார்கள். அவனைக் கடைசி வரையில் "நாராயண மூர்த்தி' என்று வாய் நிறைய முழுப்பெயரால் விளித்தவர் வேலாயுதம் தாத்தா ஒருவர் மட்டுமே!

பேரனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென்கிற ஆவலில் ஓராண்டு முன் பிறந்தததாக வயதைக் கூட்டி உள்ளூர் ஆரம்பப் பள்ளியில் சேர்த்தார். பள்ளிக்கூடம் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. அடம் பிடிக்காமல் அவன் பள்ளிக்கூடம் போனான். பள்ளிக்கூடம் விட்டு வந்த பிற்பாடு வாய்ப்பாடு, கூட்டல், கழித்தல் இத்தியாதி விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்.

நாராயண மூர்த்தி வளர... வளர... அவனை வெளியில் அழைத்துப் போனார். தினந்தோறும் காலை வேளையில் வயற்காட்டுக்குப் போய் அங்குள்ள கிணற்றில் இறங்கி... குளித்து, அவனையும் குளிப்பாட்டி... டவுசர் சட்டைகளைத் துவைத்துக் கொடுத்து கூட்டி வருவார். சனிக்கிழமை மட்டும் கிணற்றுக் குளியல் கிடையாது. அன்று எண்ணெய் குளியல்... உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து...

சுடுதண்ணீரில் குளிக்க வைப்பார். சீயக்காய்த்தூள் போட்டு உடம்பை அழுந்தத் தேய்த்து, குளிப்பாட்டுவார்.

மழையானாலும் வெயிலானாலும் இந்தப் பழக்கங்கள் அநேகமாக மாறாது. கிணற்று நீரில் இரு கைகளில் பேரனைத் தாங்கியபடி நீச்சல் கற்றுக் கொடுத்தார்.

நாராயணமூர்த்தி நான்காவது படித்துக் கொண்டிருக்கும் போது அவனது அப்பா அகால மரணமடைந்தார். அதன் பிறகு நாராயணமூர்த்தியை-அவனது அன்னையைப் பராமரிக்கும் முழுப் பொறுப்பும் தாத்தாவிற்கு தானாய் வந்து சேர்ந்தது.

உள்ளுர் ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிப்பு முடிந்தது. அப்புறம் அருகில் உள்ள ஊரான சாப்டூரில் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் நாராயண மூர்த்தியைச் சேர்த்தார் தாத்தா. தினமும் முக்கால் கிலோ மீட்டர் நடந்து போய் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தான் நாராயண மூர்த்தி. காலையில் எட்டரை மணிக்கு தூக்குச் சட்டியில் தயிர் சாதத்துடன் பள்ளிக்கூடம் போய் மாலை நாலரைக்கு வீடு திரும்புவான். ஆறு மணி வாக்கில் தாத்தாவின் கண்காணிப்பில் வீட்டுப் பாடம், வீட்டுப் படிப்பு இத்தியாதிகளைத் தொடர வேண்டும். வயதொத்த பையன்களுடன் விளையாட அனுமதி கிடையாது. விசேஷ விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறை... காலாண்டு பரீட்சை, அரையாண்டு பரீட்சை விடுமுறைகள்... இப்படி எல்லா விடுமுறைகளிலும் ஒரு மணி நேரமாவது படித்தாக வேண்டும். வருஷத்தில் பாடப் புத்தகத்தை நாராயண மூர்த்தி வாசிக்காத நாள் ஒன்று உண்டெனில் அது சரஸ்வதி பூஜை தினந்தான். அன்று ஏடடுக்கி சாமி கும்பிடுவதால் அந்த ஒரு நாள் மட்டும் படிப்பில் இருந்து அவனுக்கு விடுதலை கிடைக்கும். மற்றபடி முழு ஆண்டுத் தேர்வு முடிந்த விடுமுறையில் கூட எழுத்து அழகாக வர வேண்டும் என்பதற்காக இரண்டு மூன்று பக்கங்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுத்துப் பயிற்சி செய்ய வேண்டும்.

ஒன்பது, பத்து உயர் வகுப்புக்குப் போன பிறகு பேரனை இங்கு அங்கு நகர விட வில்லை. எமக்குத் தொழில் கவிதை என்பது போன்று... எனது தினசரி வேலை படிப்பு என்று பேரனை மாற்றி விட்டார். அவர் சொன்னபடி கேட்கா விட்டால் பிரம்படிகள், தலையில் கொட்டுகள் முதலியனவற்றை தாங்கியாக வேண்டும். எஸ்.எஸ்.எல்.ஸி. வந்த பிறகு, நிமிஷ நேரம் கூட கவனம் சிதற விடவில்லை. பாடங்களை அவரும் கூடவே படித்து, மனப்பாடம் செய்ய வைத்து, பேரனை 417 மதிப்பெண்கள் பெற்ற எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வில் வெற்றியடைய வைத்தார். எஸ்.எஸ்.எல்.ஸி. பரீட்சை முடிவு வந்த போது அவர் அடைந்த ஆனந்தம் அளவிடற்கரியது. அன்று நாராயண மூர்த்தியைக் காட்டிலும் அதிகமாய்ச் சந்தோஷப்பட்டது தாத்தா என்பதை யாரும் மறுக்க முடியாது.

காலச்சக்கரம் தனது கடமைகளைச் செய்தவாறு இருந்தது. நாராயணமூர்த்தி கல்லூரியில் காலடி எடுத்து வைத்து, கல்லூரி முடித்த பின்பு பற்பல தற்காலிக வேலைகளுக்குப் போய்.. அதன் பிறகு நிரந்தரமான அரசு உத்யோகத்தில் அமர்ந்து... கல்யாணம் முடித்து... அவனுக்கு மகன் பிறந்த மூன்றாவது வருடத்தில் தனது 94-ஆவது வயதில் தாத்தா காலமானார்.

நாராயணமூர்த்திக்கு தாத்தாவிடம் வாங்கிய அடிகளும் கொட்டுகளும் இன்று கொஞ்சம் கூட நினைவிற்கு ஏனோ வருவதில்லை. ஆனால் மற்ற சொந்த, பந்தங்கள் வீசிய சொல்லடிகளை இன்றளவும் அவனால் மறக்க முடியவில்லை. இது இப்போது நினைவுகளில் நிழலாடுகிற வேளையில் நாராயணமூர்த்தியின் கண்களில் பெருகுகிற கண்ணீரை தடுக்க இயலவில்லை. கண்கள் கலங்கிய தருணத்தில் கார் சம்பந்தி வீட்டு வாசலில் வந்து நின்றது. பழைய நினைவுகளில் மூழ்கி வந்த நாராயண மூர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

தாத்தாவைப் பார்த்த பேரன் கண்ணன் அவரிடம் தாவினான். கண்களில் கண்ணீரைக் கண்ட சம்பந்தி வீட்டார் பேரனைப் பிரிந்திருந்து... இன்று பார்க்கும்போது நாராயணமூர்த்திக்கு ஆனந்தக் கண்ணீர் வந்து விட்டது என்று கருதினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com