'பிரணாப்தா' என்கிற  மந்திரச் சொல்! - 4

திடீரென்று ஒருநாள் தல்கத்தோரா சாலையிலுள்ள பிரணாப்தாவின் வீடு பரபரப்பானது. சந்திக்க வருபவர்கள் தவிர்க்கப்பட்டனர்.
'பிரணாப்தா' என்கிற  மந்திரச் சொல்! - 4

திடீரென்று ஒருநாள் தல்கத்தோரா சாலையிலுள்ள பிரணாப்தாவின் வீடு பரபரப்பானது. சந்திக்க வருபவர்கள் தவிர்க்கப்பட்டனர். அவரும் மிகுந்த அழுத்தத்துடன் காணப்பட்டார். வீட்டுக்கு வருவதும், அடுத்த சில நிமிஷங்களில் வெளியே செல்வதுமாக இருந்தார். ஏதோ அரசியல் மாற்றம் நிகழ இருக்கிறது என்பது மட்டும் தெரிந்தது.

அடுத்த நாள் இரவு நான் சென்னை வழியாக கேரளம் கிளம்புவதாக இருந்தேன். பிரணாப்தாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப வேண்டும் என்பதற்காகச் சென்றிருந்தேன். வரவேற்பறையில் யாரும் இல்லை. அவரது உதவியாளர் எம்.கே. முகர்ஜியைத் தவிர ஏனைய உதவியாளர்கள் யாருமே இருக்கவில்லை. நான் வந்தது கூட எம்.கே. முகர்ஜிக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரது முகம் காட்டியது.

""வேறொன்றுமில்லை, பிரணாப்தாவிடம் விடைபெற்றுக் கொள்ளலாம் என்றுதான் வந்தேன்'' என்று சொன்னபோது, ""நீங்கள் காத்திருப்பதில் பயனில்லை. நான் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் கிளம்புங்கள்'' என்று என்னை விரட்டுவதில் குறியாக இருந்தார் அவர். நானும் கிளம்பிவிட்டேன்.
வரவேற்பறையிலிருந்து வெளியே வந்த வுடன் திகைத்துப்போய் நின்று விட்டேன். காரிலிருந்து சஞ்சய் காந்தியும், ஹெச்.கே.எல். பகத்தும் இறங்கிக் கொண்டிருந்தனர். தனது அறையிலிருந்து வெளியே வந்த பிரணாப்தா, அவர்களை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குள் சென்றுவிட்டார். என்னை அவர் கவனித்தாரா என்று தெரியவில்லை.

அடுத்த நாள் இரவு நான் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கிப் புறப்பட்டேன். பொழுது விடிந்தபோது ரயில் போபால் ரயில் நிலையத்தை அடைந்திருந்தது. "தி ஹித்தவாதா' என்கிற ஆங்கில நாளிதழின் தலைப்புச் செய்தியைப் பார்த்ததும் நான் திகைத்தேன். பிரணாப்தா வீட்டில் முந்தைய நாள் காணப்பட்ட பரபரப்பின் காரணம் புரிந்தது!

சரண்சிங் தலைமையிலான சிறுபான்மை அரசுக்கு வழங்கி வந்த ஆதரவைக் காங்கிரஸ் திரும்பப் பெற்ற நிலையில், பிரதமர் சரண்சிங் பதவி விலகி இருந்தார். ரயிலில் பயணிப்பவர்கள் மத்தியில் தில்லியில் நடைபெறும் அரசியல்மாற்றங்கள் குறித்த பேச்சுதான். பத்திரிகை யாளரான எனக்கு ஒரே பரபரப்பு. தலைநகரில் இப்படியொரு மாற்றம் ஏற்படும் நிலையில் தொடர்ந்து ரயிலில் சென்னை நோக்கிப் பயணிப்பதா, இல்லை வண்டியிலிருந்து இறங்கி, அடுத்த ரயிலில் தில்லிக்கே திரும்பி விடுவதா என்கிற குழப்பம்.

கைவசமிருக்கும் பணத்தை எண்ணிப் பார்த்தேன். தில்லிக்குத் திரும்பினால் செலவுக்குக் கையில் பணமில்லை என்கிற உண்மை உரைத்தது. ஆர்வத்தை அடக்கிக் கொண்டு எனது பயணத்தைத் தொடர்ந்தேன். சரண்சிங் அமைச்சரவை கவிழ்ந்து, தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், உடனடியாக தில்லிக்குச் செல்வதில் அர்த்தமில்லை என்று பட்டது.

ஒருநாள் திருச்சூர் ராமநிலையம் அரசு விருந்தினர் இல்லத்தில் கே. கருணாகரன் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஒவ்வொரு மலையாள மாதப் பிறப்பன்றும் கே. கருணாகரன் குருவாயூர் கோயிலில் அதிகாலை நிர்மால்ய தரிசனத்துக்குச் செல்வதைத் தனது வாழ்நாள் முழுவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அடுத்த நாள் மாதப் பிறப்பு என்பதால், குருவாயூர் செல்வதற்காக அவர் திருச்சூர் வந்திருந்தார்.

மாலை சுமார் ஆறு மணிக்கு திருச்சூர் ராமநிலையத்தில் அவரைச் சந்திக்க நான் சென்றபோது, கருணாகரன் குருவாயூர் செல்வதற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். என்னை அங்கே பார்த்ததில் அவருக்கு ஒரே வியப்பு. என்னையும் குருவாயூருக்கு வரும்படி அவர் சொன்னதும், வாய்ப்பை நழுவ விடாமல் அவரது காரில் தொற்றிக் கொண்டேன்.

அந்தப் பயணத்தின்போதுதான் ஒரு மிக ஆச்சரியமான தகவல் எனக்குக் கிடைத்தது. இப்போது காங்கிரஸின் அடையாளமாக இருக்கும் "கை' சின்னம், கருணாகரனின் பங்களிப்பு என்பது அவர் சொல்லித்தான் நான் தெரிந்து கொண்டேன்.

ஜனதா ஆட்சிக் காலத்தில் பதவியில் இல்லாமல் இருந்த இந்திரா காந்தியைப் பாலக்காட்டிலுள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கருணாகரன். அந்தக் கோயிலில் பகவதியின் விக்கிரகம் "கை' அடையாளமாக இருந்ததைப் பார்த்தபோது, கருணாகரனுக்கு அதையே ஏன் கட்சியின் சின்னமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றியிருக்கிறது. இந்திரா காந்தியிடம் அதைத் தெரிவித்தபோது, அவருக்கும் அது பிடித்திருந்தது. காங்கிரஸýக்கு "கை' சின்னம் கிடைத்த வரலாறு இதுதான்.

குருவாயூரில் அதிகாலை தரிசனம் முடிந்ததும், ஒரு பெரிய தட்டில் மாலை, சந்தனம் உள்ளிட்ட பிரசாதங்கள் தரப்பட்டன. கோயிலின் அருகிலுள்ள தேவஸ்தான விடுதிக்கு வந்தோம். தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், திருவனந்தபுரம் புறப்பட்டார் கருணாகரன். இரண்டு தனித்தனி பிரசாதப் பைகள் என்னிடம் தரப்பட்டன. ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

""இதில் ஒரு பை பிரணாப்தாவுக்கு. இன்னொருபை இந்திரா காந்தி மேடத்துக்கு. நான் அடுத்த வாரம்தான் தில்லி வருகிறேன். நீங்கள் கொண்டுபோய்க் கொடுத்து விடுங்கள்'' என்றார் கருணாகரன்.

என்னால் என் காதுகளை நம்ப முடியவில்லை. தில்லிக்குப் போவதற்குப் போதுமான பணமில்லை என்பது அடுத்த பிரச்னை. நான் தில்லி செல்லும் திட்டமே இல்லையே, அதை எப்படி அவரிடம் சொல்வது?

கருணாகரனை காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, கேரளாவிலுள்ள எல்லா கட்சியினரும் "லீடர்' என்றுதான் அழைப்பார்கள். கேரள அரசியலில் "லீடர்' என்றால் அது கருணாகரன் மட்டும்தான். அவர் ஏன் "லீடர்' என்று அழைக்கப்
படுகிறார் என்பதை அவரது அடுத்த செயல்பாடு எனக்கு உணர்த்தியது.

""நீங்கள் தில்லிக்குப் போவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் இவர் செய்து தருவார்'' என்று ஒருவரை அறிமுகப்படுத்திவிட்டுக் கிளம்பினார் கருணாகரன். மலைத்துப்போய் நின்றிருந்த என்னைத் தோளில் தட்டி உணர்த்தி, தன்னுடன் கொச்சிக்கு அழைத்துப்போய், ராஜ உபசாரத்துடன் அவர் என்னை தில்லி ரயிலில் ஏற்றி விட்டார்.

தில்லியில் இரண்டு பிரசாதப் பைகளையும் எடுத்துக் கொண்டு 13 தல்கத்தோரா சாலையிலுள்ள பிரணாப்தாவின் வீட்டை அடைந்தேன். தகவல் அனுப்பிய சில நிமிடங்களில், நான் அழைக்கப்பட்டேன்.

""குருவாயூர் பிரசாதத்துடன் வந்திருக்கிறாயா?'' என்று கேட்டபோது, எல்லா விவரங்களையும் கருணாகரன் தெரிவித்திருக்கிறார் என்பது புரிந்தது. பக்தி சிரத்தையாகப் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு ஒரு பையைக் காரில் வைக்கச் சொல்லி உதவியாளருக்கு உத்தரவிட்டார்.

என்னை நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு, பிரணாப்தா என்னிடம் கேட்ட கேள்வி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com