வரலாறு  படைத்தவர்!

உத்ரகண்ட் மாநிலத்தின் முதல்பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக பணிபுரிந்தவர் காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா.
வரலாறு  படைத்தவர்!

உத்ரகண்ட் மாநிலத்தின் முதல்பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக பணிபுரிந்தவர் காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா.
காஞ்சன் சௌத்ரி சிறுவயதாக இருந்தபோது அவர் கண் எதிரே ஒரு சம்பவம் நடந்தது. சொத்து தகராறு காரணமாக நடந்த பிரச்னையில் அவரது தந்தையை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது.
இதுபற்றி போலீசில் புகார் செய்தபோது, அவர்கள் அதை பதிவு செய்ய மறுத்ததோடு, அவரது தந்தையை அடித்த கும்பலுக்கு சாதகமாக போலீஸ் நடந்து கொண்டுள்ளது.
இந்த நிகழ்வு காஞ்சனின் மனதில் அழியாத பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தக் கணமே, காஞ்சன் மனதில் தான் வளர்ந்து படித்து முடித்து போலீஸ் அதிகாரியாக பணிபுரிய வேண்டும். மேலும், அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்று எண்ணினார்.
அமிர்தசரஸ் நகரில் பள்ளிப் படிப்பை முடித்த காஞ்சன் சௌத்ரி, கல்லூரி படிப்பையும் அங்கேயே முடித்தார்.
பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் ஆஸ்திரேலியா சென்று எம்.பி.ஏ படித்தார். பின்னர் இந்தியா திரும்பிய அவர் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதி, 1973- ஆம் ஆண்டு ஐ.பிஎஸ். அதிகாரியாக தேர்வுபெற்றார்.
நாட்டிலேயே முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றவர் கிரண்பேடி. அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெண் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரி என்ற பெருமை காஞ்சன் சௌத்ரிக்கு கிடைத்தது. இவர், உத்திர பிரதேச மாநில ஒதுக்கீட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி பதவி ஏற்ற முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எஸ். அதிகாரியாக பதவி ஏற்றது குறித்து காஞ்சன் சௌத்ரி கூறும்போது, ""மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நான் போலீஸ் அதிகாரி ஆனேன். எனது தந்தைக்கு நேர்ந்தது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாகவும் இருந்தேன்.
மேலும் ஆண்களுக்கு நிகராகவோ அல்லது அதைவிட மேம்பட்ட முறையிலோ என்னால் பணிபுரிய முடியும் என்ற நம்பிக்கை நிறைய இருந்தது. அதுதான் எனது ஓய்வுக்காலம் வரை என்னை வழிநடத்திச் சென்றது.
நான் பணியில் சேர்ந்தபோது, பெண்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் காவல் துறையில் இருந்தனர். அந்தக் காலகட்டத்தில், பெண்கள் ஆண்களுக்கு இணையாக நடத்தப்படவில்லை. பணிபுரிந்த பெண்களும் பாரபட்சமாக நடத்தப்படுவதை நான் உணர்ந்தேன். இதை நான் கடுமையாக எதிர்த்தேன்; சரியான பலனும் கிடைத்தது.
இப்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் காவல் துறையில் அதிகரித்துள்ளனர். இருந்தாலும் காவல் துறையில் இன்னும் அதிகளவில் பெண்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. ஏனென்றால், இறுக்கம் நிறைந்த காவல் துறையில் புன்னகை மலரும் முகங்கள் தேவைப்படுகிறது. அதனால், காவல் துறையைப் பொருத்தவரை பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது.
அதுபோன்று பொதுவாக பெண்கள் எந்த துறையில் பணிபுரிந்தாலும் ஆரம்பத்தில், சில தடைகள், தயக்கங்கள், பயம் இருக்கலாம். அதை நாம் வெற்றிகரமாக கடந்து விட்டால் நாம் நினைத்தபடி வெற்றிகளைப் பெறலாம்' என்றார்.
லக்ளெனவில் கலவரம் நடந்த போது அதை அடக்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பணியில் காஞ்சன் சௌத்ரி திறமையாக செயல்பட்டார். அப்போது அவர் லக்னௌ நகர உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்தார்.
காஞ்சன் 2007- ஆம் ஆண்டு போலீஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
பின்னர், காஞ்சன் சௌத்ரி பெண்களுக்கான தேசிய கமிஷன் அமைப்பில் உறுப்பினராக பணிபுரிந்தார். 2014- ஆம் ஆண்டு ஹரித்துவார் பாராளுமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகவும் அவர் போட்டியிட்டார். கவிதை எழுதுவதிலும் நாடகத்துறையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார் காஞ்சன்.
காஞ்சன் சௌத்ரியின் வாழ்க்கை வரலாறு "உதான்' என்ற பெயரில் தொலைக்காட்சியில் 1989 முதல் 1991 -ஆம் ஆண்டு வரை தூர்தர்ஷன் சேனலில் ஒளிப்பரப்பானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com