கெங்கம்மாக்களின் உலகம்

"டமால்'ன்னு ஒரு சத்தம். சோறு வடிக்கப் போன கெங்கம்மா பதறி எந்திரிச்சி வெளில ஓடிவந்து பாக்குறா. அடுத்த தெருவுல யாரோ வெடி வச்சிருப்பாங்க போலிருக்கு. அதான் வித்தியாசமான சத்தத்துல வெடிச்சிருக்கு.
கெங்கம்மாக்களின் உலகம்

"டமால்'ன்னு ஒரு சத்தம். சோறு வடிக்கப் போன கெங்கம்மா பதறி எந்திரிச்சி வெளில ஓடிவந்து பாக்குறா. அடுத்த தெருவுல யாரோ வெடி வச்சிருப்பாங்க போலிருக்கு. அதான் வித்தியாசமான சத்தத்துல வெடிச்சிருக்கு.
""அட கெரகமே....''ன்னு திட்டிகிட்டே மறுபடியும் உள்ளாற போனவ ஒருவழியா சோறாக்கி முடிச்சா. நாலுநாளா மனசுக்குள்ள பயப்பூச்சி ஊர்ந்துகிட்டே இருக்கு.
பரிச்சை எழுதப்போற புள்ளைங்களுக்கு வயித்துக்குள்ள "சொரேர், சொரேர்'ங்குமே, அப்புடியும் இருக்கு. காய்ச்சல் கண்ட கோழி கணக்கா கெங்கம்மா வெடவெடத்து கெடக்குறா.
தீவாளி வந்தாலே அவளுக்கு இப்புடித்தான் ஒருமாதிரி ஆயிப்போயிடுது.
""என்னா ரோசன பண்ற... சோத்தப் போடு பசிக்கிது''ன்னு மாமியார்க்காரி பூங்காவனம் சொல்லவுந்தான் அவளுக்கு சொரணையே வந்துச்சி.
தட்டுல சோத்தப் போட்டு மேல புளிக்கொழம்ப ஊத்தி பூங்காவனத்து பக்கம் நகத்துனவ, தொட்டுக்க வறுத்த கத்திரிக்காய ஒரு சில்லுல வச்சி தர்றா.
""கத்திரிக்கா மருந்து வாசமடிக்கி. எனக்கு வேணாம்''
பூங்காவனம் கத்திரிக்காய நவுத்தி வுட்டுட்டு வெங்காயம் உறிச்சிப் போட சொல்லுறா.
""தாராளமா பாமாயில மொண்டு ஊத்தி வறுத்தாலும் பாவிப் பயலுவோ பூச்சி மருந்தடிச்சி கத்திரிக்காய கெடுத்து வச்சிருக்குறதால வறுத்த காயில மருந்து வாசமடிச்சி தொலையிது''ன்னு பயிரு பண்ணுனவுங்களுக்கு நாலு திட்டுவுட்டுகிட்டே கெங்கம்மா ஒரு துண்டு கத்திரிக்காய எடுத்து வாயில போட்டு பாக்குறா. மொகம் அஷ்டகோணாலாயிப் போச்சி. ஆனா மாரிமுத்துக்கு மனசு கேக்கல. பரவாயில்லன்னு தின்னு வச்சான். காசு குடுத்து வாங்குனத தூக்கி எறிய அவனுக்கு மனசு வரலியாம்.
""நாளன்னிக்கி தீவாளி. ஊரே ரெண்டுபடும்''
கெங்கம்மா சொல்லிகிட்டே சோத்த உருட்டி முழுங்குறா. தொண்டக்குழிக்குள்ள எறங்குன சோத்த திமுசுக்கட்ட போட்டுதான் எறக்கணும் போலிருக்கு.
தீவாளின்னா கெங்கம்மாவுக்கு கிலி புடிச்சிரும். ஊரே வெடி வெடிச்சி தூசும், மாசுமா நெறஞ்சி கெடக்கும். தெருபூரா வெடிய வெடிச்சி குப்பைய சேத்து வச்சிருப்பாங்க. பேப்பரெல்லாம் தூள், தூளா செதறிக் கெடக்கும். அதுல வெடிக்காத வெடியும் கலந்து கெடக்கும். அதோட மாமிசக்கழிவும் குப்பையில கெடந்து நாத்தமடிக்கும்.
தீவாளிக்கி கறி பிரியாணி செய்யிறவங்க மிச்சம், மீதி கறிக்கழிவ குப்பையில வீசிடுவாங்க. அதையெல்லாம் சுத்தம் செய்யிறதுக்குள்ள உசிரு போயிரும். முன்னாடியெல்லாம் தீவாளியன்னிக்கி மழை ஊத்தும். குப்பையெல்லாம் நாறிப்போயி கெடக்கும். அத அள்ளி சுத்தம் செய்யிறப்ப கெங்கம்மாவுக்கு ஒடம்பே கூசிப் போவும். இப்ப அவ்வளவா மழை பெய்யாததுனால ஓரளவு சகிச்சிக்க முடியிது.
ஆனா இந்தமொறை மழை பெய்யுமுன்னு கோட்டு, சூட்டு போட்ட ஆம்பளைங்களும், ஒதட்டுச்சாயம் பூசுன பொம்பளைங்களும் வானிலை அறிக்கை வாசிச்சாங்க. அத நெனச்சி கெங்கம்மா பயப்படுறா.
சாதாரணமாவே குப்பைய அள்ளுறப்ப அந்த நாளைக்கி உபயோகிச்ச பஞ்சு சேந்து வரும்போது கெங்கம்மா தன் பொறப்ப ஒரு சாபக்கேடா நெனச்சிக்குவா. மழைநாள்ன்னா கேக்கவே வேணாம்.
""நம்மவேலைய நாமதான செஞ்சாவணும். அதுக்கு பயந்தா ஆச்சா''ங்குறான் மாரிமுத்து. அவனுக்கும் குப்பை அள்ளுற வேலதான். அள்ளி, அள்ளி
மனசும் குப்பையாகிப் போனதுதான் மிச்சமுன்னு கெங்கம்மா நெனச்சிக்குறா.
தீவாளிக்கு துணிமணிங்க எடுத்தாச்சி. மதுரையில இருக்க மவ வனிதாவுக்கு சீரு செஞ்சாச்சி. பூங்காவனம் பொடவ வேணாம்னுட்டா. போவப் போற கட்டைக்கி புதுப்பொடவ எதுக்குங்குற அங்கலாய்ப்பு அவளுக்கு.
ஒரு வழியா சாப்பாட்டுக்கடைய முடிச்சிப்புட்டு வாசல்பக்கம் வந்து ஒக்காந்த கெங்கம்மா கையக்குழிச்சி மண்ணெண்ணைய ஊத்தி ரெண்டு கால்லயும்
தேச்சிக்குறா. கொஞ்சநாளாவே கால்வலி புடுங்கி எடுக்குது அவளுக்கு.
சத்து கொறைவா இருக்குன்னு சொல்லி டாக்டரம்மா மளிகைக்கடை ரோக்கா கணக்கா ஒரு லிஸ்ட்டு எழுதி குடுத்துச்சி. ஒருமாசம் வாங்கித் தின்னவ காசு ஏகத்துக்கு செலவாவுதுன்னு அத்தோட நிப்பாட்டிக்கிட்டா.
""ஆறுமாசம் திங்க சொன்னா நீ ஒரு மாசத்தோட நிப்பாட்டிக்கிட்ட. பொறவு நோய் எப்புடி கொணமாவும்''ன்னு மாரிமுத்து சீறுறான்.
"டமால், டமாலு'ன்னு எங்க பாத்தாலும் ஒரே சத்தம். கலர், கலரா பூத்தூவுன மாதிரி அப்பப்ப வானத்துல வெடி வெடிச்சி செதறுறத கெங்கம்மா ஆச்சரியமா பாக்குறா. காச இப்புடி கரியாக்குறாங்களேன்னு ஒருபக்கம் ஆத்திரமா வருது. அவுங்க சந்தோசத்துக்கு அவுங்க வெடிக்கிறாங்க. அதப்பத்தி ஒனக்கென்னான்னு மனசு வையிது. யாரும் வெடி வெடிக்கலைன்னா சிவகாசி சனங்க என்னமா பொழப்பாங்கன்னு ஒரு கேள்வி உள்ளாற ஓடுது. ஒரு தடவ சிவகாசியில வெடி தயாரிக்கிறத கவருமெண்டு டிவியில காட்டுனாங்க. நெறைய பொம்பளைங்க வட்டமா குந்திக்கிட்டு செவப்பு மொளவாயாட்டம் இருக்குற வெடிய ஒண்ணா இணைச்சி சர வெடியாக்குறாங்க. இன்னொரு பக்கம் ஆம்பளைங்க மருந்த வெடியில நெரப்புறாங்க. அவுங்க மேலு முழுக்க கன்னங்கரேல்ன்னு வெடி மருந்து அப்பிக் கெடக்கு, பார்த்த மனசு பதறிப் போச்சி.
""காசுள்ளவங்க கொண்டாடுறதுக்கு காசில்லாதவங்க உசிர பணயம் வச்சி ஒழைக்க வேண்டியிருக்கு'' ன்னு பூங்காவனம் அன்னிக்குப் பூரா பொறுக்க மாட்டாம பொலம்புறா. எண்பது வயசுக்காரி. ஒடம்பு தெடமா இருந்த வரைக்கும் சலிக்காம ஒழச்சவ அவளுக்கும் நகராச்சியில குப்பையள்ளுற வேலதான். அதுபோவ வீடுகள்ல கக்கூஸ் கழுவிடுற வேலயும் பாப்பா. ஏதோ அவ காலம் ஓடிடுச்சி.
"" அரசாங்கம் தர்ற வெதவ பென்சன் பணம் வயித்துக்கும் பத்த மாட்டேங்குது. வாயிக்கும் பத்த மாட்டேங்குது'' ன்னு அவ அடிக்கடி முணுமுணுக்குறது அந்தத் தெருவுக்கே தெரியும்.
கெங்கம்மா கவலையோட குந்தியிருக்கா. தீவாளியன்னிக்கி மறுநா வேலக்கிப் போனா பெண்டு நிமிந்திடுமேன்னு இருக்கு.
""என்னக்கா ரோசனை?''ன்னு கேட்டுக்கிட்டே எதுத்த வூட்டு கனகு வந்து ஒக்காருறா. அவ கவருமெண்டு ஆசுபத்திரியிலே வேல பாக்குறா.
"" என்னாடி தீவாளி துணி எடுத்தாச்சா?'' ன்னு கெங்கம்மா பேச்ச ஆரம்பிக்கிறா.
"" புள்ளைங்களுக்கு எடுத்தாச்சி. அவரும் ஒரு கைலிய எடுத்துக்கிட்டாரு. எனக்கு ஒண்ணும் வேணாம்னு இருந்துட்டேன்''ன்னு கனகு சொல்லவும் கெங்கம்மாவுக்கு ஆச்சரியம் தாங்கல.
சின்ன வயசுக்காரிக்கி பொடவ மேல ஆசயில்லாம இருக்குமா. அதக்கேட்டா கனகு பெருமூச்சி வுடுறா.
"" தெனம் தெனம் மலத்தப் பாத்து, பாத்து ஒடம்பே மலமா போனமாரி இருக்குக்கா...ஒண்ணும் புடிக்கல''
இதச் சொல்லிட்டு கனகு கண்ணத் தொடச்சிக்கவும் கெங்காமாவுக்கு ஒரு மாரியாயிடுச்சி. ஒண்ணும் பேசாம அவளையே வெறிக்குறா.
""சனம் கக்கூச நாறடிச்சி வச்சிருக்கு. சுத்தம் பண்றவளும் மனுசிதானேங்குற நெனப்பு இருந்தா இப்புடிப் பண்ணத்தோணுமா?'' ன்னு கேக்குறப்பவே கனகு கண்ணு தண்ணி பொங்குது.
கெங்கம்மாவுக்கு ஆத்திரமா வருது. அவ தாத்தா, அப்பா எல்லாரும் இதேவேலைதான்.
ஒண்ணு ரெண்டு தடவ கெங்கம்மாவும் அப்பா கூடப் போயிருக்கா. அப்பா செய்யிற வேலையப் பார்க்கும்போது கொமட்டிக்கிட்டு வரும்.
""ஏம்ப்பா இந்த வேலையப் பாக்குற?''ன்னு ஒரு தடவ கேட்டேபுட்டா.
"" நா இந்த வேல பாக்கலன்னா நம்மூட்டுல அடுப்பெரியாதும்மா'' ன்னு அப்பா சொல்லவும் கெங்கம்மா விக்கிச்சிப் போயி நின்னுட்டா. கடசீல அவளும் அதே வேலக்கி வந்ததுதான் கொடுமை.
கனகு இருமவும் கெங்கம்மாவுக்கு நெனவு கலஞ்சி போச்சி. கனகு எதாயிருந்தாலும் கெங்கம்மாட்டாதான் சொல்லுவா. அவ, இவள தன்னோட அக்காவ நெனச்சிக்கிட்டிருக்கா. அதனாலதான் இப்பவும் வந்து பொலம்பிக்கிட்டிருக்கா.
""வுட்றீ... தான் மட்டும் சுத்தபத்தமா இருந்துக்கணும். தன் வூடு அசிங்கமா இருக்கக் கூடாது. குப்பை சேரக் கூடாதுன்னு நெனக்கிற மனுச செம்மங்களுக்கு நம்ம மேல அக்கற இருக்கவா போவுது. இதெல்லாம் நம்ம தலவிதி.
நாம இந்த மாதரி ஆளுங்கன்னு தெரிஞ்சா பொது எடத்துல கூட யாரும் நம்ம பக்கத்துல வர்றதில்லை. நரகலைப் பாத்தமாதிரி ஒதுங்கிப் போறாங்க. காலங்காலமா இதுதான் நடக்குது. இத மாத்தவே முடியாது. அப்படியிருக்கப்ப இத நெனச்சி வருத்தப்பட்டு என்னாவப் போவுது''
கெங்கம்மா அவளுக்கு ஆறுதலு சொல்லி அனுப்பி வச்சிட்டு உள்ளாற வந்து சுருண்டு படுத்துக்கிட்டா. ரொம்ப நேரத்துக்கு தூக்கமே வரலை. எதிர்காலத்த நெனைச்சி பயமாயிருக்கு.
நாள் முச்சூடும் குப்பையோட கெடக்குறதுனால நோய்கள் வர சாஸ்தி வாய்ப்பிருக்குன்னு டாக்டரம்மா சொன்னாங்க. அப்படியேதும் நோய் வந்தா யாரு கவனிப்பாங்கன்னு அவளுக்கு ரொம்ப கவலையா இருக்கு.
வனிதாவுக்காவது நல்ல வாழ்க்கை அமையணுமுன்னு அவ வேண்டாத தெய்வமில்ல. ஆனா அவளுக்கும் மாரி முத்து மாதிரி ஒரு ஆளுதான் வாச்சான். இந்த மாப்ள வேணாமுன்னு கெங்கம்மா மாரிமுத்துட்ட கெஞ்சுனா. ஆனா அவன் கேக்கல.
""இவன வுட்டா வேற ஆளு கெடக்கிறது கஸ்டம்'' ன்னு சொல்லி மாரிமுத்து, மவள அவனுக்கு கட்டி வச்சிட்டான். கடசீல புருசன் சொல்லுறதும் வாஸ்தவந்தான்னு கெங்கம்மாவுக்கு தோணிப்போச்சி. பேசாம வாயடச்சி கெடந்துட்டா.
""தூக்கம் வரலியா... பொரண்டு, பொரண்டு படுக்கிற ?''
மாரிமுத்து கேக்கவும் கெங்கம்மா பொத்தாம்பொதுவா தலையசைச்சி வச்சா.
படிப்பறிவு அதிகமில்லாட்டியும் அவளுக்கும் கொஞ்சம் யோசிக்கத் தெரியும்.
"நமக்கு ஏன் இந்த நாறப்பொழப்பு வாச்சிது'
ன்னு அவ யோசிச்சி, யோசிச்சி மருகுறா. தன் நெலம மவளுக்கு வரக்கூடாதுன்னுதான் அவளப் படிக்கவச்சா. அந்தப்புள்ளைக்கு படிப்பு ஏறவேயில்ல. பத்தாங்கிளாசு பெயிலாகிப் போச்சி. பாசாயிருந்தா எப்பாடுபட்டாவுது காலேசு வரைக்கும் படிக்க வச்சிருப்பா.
""கூட்டல், கழித்தல் கூட தெரியல. இதையெல்லாம் பள்ளிகூடத்துக்கு அனுப்பி எங்க உசிர ஏம்மா எடுக்குற?'' ஒருநா டீச்சரம்மா திட்டவும் கெங்கம்மாவுக்கு பொசுக்குன்னு அழுவ வந்துருச்சி.
""மண்டையில களிமண்ணா இருக்கு. ஒழுங்கா படிச்சி தொலச்சா என்ன'' ன்னு மவ தலையில நறுக்கு, நறுக்குன்னு குட்டிபுட்டா.
"படிப்பு ஏறலைன்னா வுட்டுத்தொலய வேண்டியதுதான. எதுக்கு அந்தப்புள்ளைய இம்சப்படுத்துற''
- மாரிமுத்து. அவனுக்கு மவள்ன்னா உசிரு. கெங்கம்மா குட்டவும் தாங்கமுடியாம கத்திப்புட்டான். அந்த வருசத்தோட வனிதா படிப்ப மூட்ட கட்டி வச்சிப்புட்டா. நாலஞ்சி வருசம் வூட்டோட கெடந்தவளுக்கு ஒருத்தன கட்டிவச்சி இதோ ஒரு வருசமாச்சி.
பொழுது பளபளன்னு விடிஞ்சிருச்சி. ராத்திரி ரொம்பநேரம் தூக்கம் வராம கெடந்தவ எப்ப தூங்குனான்னு அவளுக்கே தெரியாது.
""கெங்கம்மா....எந்திரிடி''ன்னு பூங்காவனம் சத்தம் கொடுக்கவும் வாரிச் சுருட்டிக்கிட்டு எந்திரிச்சவளுக்கு தலவலி மண்டையப் பொளக்குது. அதோட தெருமொனை டீக்கடைக்குப் போயி டீ வாங்கியாந்து குடிச்சிப்புட்டு வேலைக்கி கௌம்பிட்டா. குப்பை வண்டியில ஏறிகிட்டு போயி வூடு வூடா குப்பையச் சேகரிக்கணும். மக்குற குப்பை, மக்காத குப்பைய தனித்தனியா போடுங்கன்னு நகராச்சி தலப்பாடா அடிச்சிக்கிது. செல பேரு கேக்குறாங்க. முக்காவாசிப்பேரு எல்லாத்தையும் ஒண்ணாத்தான் போடுறாங்க. பாலு கவரு, தேங்கா மூடி, பிளாஸ்டிக்கு பொருளெல்லாம் மக்காத குப்பைங்க. காய்கறி கழிவெல்லாம் மக்குற குப்பைங்க. மக்குற குப்பைய சேகரிச்சி நகராச்சியே ஒரம் தயாரிக்கிது. நல்ல விசயந்தான். அதுக்கு சனமும் ஒத்தாச பண்ணணுமில்ல. குப்பைய தொட்டிக்குள்ள போடுறதோட நம்ம கடமை முடிஞ்சிருச்சின்னு தூக்கி வீசிடுறாங்க. அத தனித்தனியா தரம் பிரிக்கிறதுக்குள்ள ஆளுங்களுக்கு தாவு தீந்துடுது.
ஒரு மொறை மாரிமுத்தோட தம்பி செல்வராசு காய்கறிக்கழிவுல கலந்து கெடந்த பால் கவருங்கள தனியா எடுத்துப் போட்ருக்கான். அப்ப சரேல்ன்னு வெரல எதுவோ கிழிக்க, என்னான்னு பார்த்தா பிளேடு. வெரல்லேருந்து ரத்தமா கொட்டுது. அவனுக்கு ஏற்கெனவே சர்க்கரை வியாதி. ரொம்பநாளா அந்தப்புண்ணு ஆறாம சீழ் வச்சி தொந்தரவு குடுத்துகிட்டேயிருந்துச்சி. இதையெல்லாம் சனங்ககிட்ட யாரு சொல்லுறது.
கையில்லாத ஆம்பள சட்ட மாரி நீல உடுப்பு. பின்னாடிபக்கம் ஊரு பேரு போட்டு நகராச்சின்னு எழுதியிருக்கும். கெங்கம்மா அந்த உடுப்ப அணிஞ்சிக்கிட்டா. கை உறையையும் போட்டுக்கிட்டா. அவளோட சேர்ந்து நாலு பொம்பளைங்க வேன்ல ஏறிக்கிட்டாங்க. வேன் பொறப்பட்டுடுச்சி. வேன்ல பொம்பளைங்க நிக்க எடமில்லாம இடுப்பொயர டப்புங்க நாலஞ்சி நிக்கிது. அதுலதான் குப்பைய சேகரிக்கணும்.
""யக்கா, தீவாளி காசு எவ்ளோ தேறுச்சி ?''
ஒருத்தி கேக்குறா.
""பத்து ரூவா, இருவத்தஞ்சி ரூவான்னு ஒவ்வொரு வூட்டுலேயும் கையில கெடச்சத குடுத்தாங்க. எல்லாம் சேத்தா ஐநூறு ரூவா தேறும்''
என்னவோ கோடீஸ்வரியானாப்ல இன்னொருத்தி கத சொல்லுறா. முன்னாடியெல்லாம் கெங்கம்மாவும் காசுக்காவ அலஞ்சவதான்.
""இந்தாடி வச்சிக்க''ன்னு வூடுகள்ல காச தூக்கி கையில போடுறப்ப வளஞ்சி, குனிஞ்சி வாங்குனவதான். இப்பதான் மனசு வெறுத்துப் போச்சி.
வேன் அந்தத் தெருவுல நின்னுச்சி. பொம்பளைங்க எறங்கி வூடு, வூடாப்போயி குப்பைய எடுத்துக்கிட்டு வந்து டப்புல போட்டாங்க. கெங்கம்மா வேன்ல நின்னுகிட்டு குப்பைய பிரிச்சி தனித்தனி டப்புல போட்டா. அப்ப பிசு, பிசுன்னு கையில ஏதோ ஒட்டுச்சி. கை ஒறையையும் மீறி ஈரம் கையில படவும் கெங்கம்மா அருவருப்போட அது என்னான்னு பாத்தா.
கொழந்தைங்க ஒண்ணுக்கு, ரெண்டுக்கு கண்ட எடத்துல போவாம இருக்க இடுப்புல கட்டுவாங்களே, அந்தமாரி ஆனா பெருசா இருந்துச்சி. கொழந்தைங்க அசிங்கம்னா கெங்கம்மா மொகம் சுளிக்கமாட்டா. அவ அந்தளவு மோசமானவயில்ல.
கொழந்தையும், தெய்வமும் ஒண்ணுன்னு நெனக்கிறவ அவ. ஆனா இது கொழந்தையோடது மாரியில்லாம நாத்தம் கொடல புடுங்குச்சி.
""என்னாடி இது?''
கெங்கம்மா அத தூக்கி காட்டவும் ஒருத்தி சிரிச்சா.
""யக்கா, இது படுக்கையில கெடக்குற பெரியவங்களுக்கு போடுறது.''அப்படின்னு அவ சொல்லவும், அந்தப் பாவமும் நம்ம தலயிலதான் விடியணுமான்னு கெங்கம்மாவுக்கு ஒரு நிமிசம் தோணிப் போச்சி.
ஒரு வழியா தீவாளி முடிஞ்சிருச்சி. சனமும் வெடிச்சி கலைச்சிப் போச்சி. ஊரே குப்பைக்காடா கெடக்கு. தீவாளியன்னிக்கி அடுத்த நாள் காலம்பற ஆளுங்கெல்லாம் தெருவ சுத்தம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. எப்பவும் கெங்கம்மாவோட சேர்ந்து வர்ற சிநேகிதி சரோசா வேலக்கி வரல. அவ அக்கா மவன் பாதாள சாக்கடைய சுத்தம் பண்ணிக்கிட்டிருந்தப்ப வெசவாயு தாக்கி செத்துப் போயிட்டான். சேதி கேட்டு சரோசா அலறியடிச்சிகிட்டு சென்னைக்கி ஓடியிருக்கா. கெங்கம்மாவும் அந்தப்புள்ளைய பாத்துருக்கா. அவனுக்கு இருவத்தெட்டு வயசாவுது. நல்லா வாட்ட சாட்டமா இருப்பான். கலியாணம் முடிவாயி பரிசமும் போட்டாச்சி.
"கலியாணத்துக்கு நீ வந்தே ஆவணும்'னு சரோசா கெங்கம்மாட்ட கண்டிசனா சொல்லியிருந்தா. பொங்க கழிச்சி கலியாணம் நடக்குறதா இருந்துச்சி. அதுக்குள்ளாற இந்தமாரி ஆயிப்போச்சி. பாதாளசாக்கடைக்குள்ள சமாதியாயிப் போன புள்ளைய நெனச்சி ஆத்தாக்காரி புத்தி பேதலிச்சி போயிருப்பான்னு கெங்கம்மாவுக்கு தோணுச்சி. விசயத்த கேள்விப்பட்ட அன்னிக்கு அவ கதறி, கதறி அழுவுறா. பூங்காவனமும் ஒப்பாரி பாட்டு பாடி அழுவுறா.
"நல்ல புள்ள, செல்லப்புள்ள ... நாசமாப் போயிட்டானே...
மணவறையில ஒக்காற வேண்டிய புள்ள... மயானத்துக்கு போயிட்டானே'.
பூங்காவனம் ஒப்பாரி வைக்க, வைக்க கெங்கம்மாவும் ரொம்ப அழுவுறா. ஏழை, பாழையா இருந்தாலும் அதுங்ககிட்ட பாசத்துக்கு பஞ்சமில்லேங்குறது உண்மையாப் போச்சி.
கெங்கம்மா, சரோசா அக்கா மவன நெனச்சி சேல முந்தானையில கண்ணத் தொடச்சிக்கிறா. வேன் கௌம்ப போறப்ப அந்த மாடிவூட்டு அம்மா சத்தம் போட்டு கூப்புடுறாங்க.
""யக்கா, அந்தம்மா ஒன்னைய கூப்புடுறாங்க பாரு''
பக்கத்துல நின்னவ சொல்லவுந்தான் கெங்கம்மா நிதானத்துக்கு வந்து திரும்பிப் பாத்தா.
""ஒரு நிமிசம் வந்துட்டுப் போடி''
அந்தம்மா கையக் காட்டுறாங்க. கெங்கம்மா வேனை நிப்பாட்ட சொல்லிட்டு எறங்கிப் போறா. அவுங்கள இவளுக்கு ரொம்ப வருசமாத் தெரியும். இப்ப கொஞ்சநாளாத்தான் குனிஞ்சி, நிமுந்து வேலபாக்க முடியாம இடுப்புவலி கொடஞ்செடுக்குது.
""கூப்புட்டீங்களாம்மா ?''
கெங்கம்மா கேட்டாண்ட நின்னு கேக்குறா.
""ஆமாடி. அடுத்தவாரம் பாப்பாவுக்கு கல்யாணம். ரெண்டுநாள்ல ஒறவு சனமெல்லாம் வந்துரும். அதுக்குள்ளாற நீ வந்து பாத்ரூமையெல்லாம் கழுவி வுட்டுட்டு போடி''ங்குறாங்க அவுங்க. கெங்கம்மாவுக்கு தயக்கமா இருக்கு. அவுங்க வூட்டுல கீழ ரெண்டு மேல ரெண்டுன்னு மொத்தம் நாலு பாத்ரூம், கக்கூஸூங்க. அம்புட்டையும் ஆசிட் போட்டு கழுவணும்பாங்க. மூக்குல துணியக் கட்டிக்கிட்டு, பொடவைய ஏத்தி சொருகிக்கிட்டு ஆசிட்ட ஊத்தி சொவரு, தர, பீங்கான்னு ஒரு எடம் வுடாம தேச்சி கழுவணும். சிலசமயம் ஆசிட் காலப்பொத்துரும். மூக்குல ஏறி உச்சி மயிரப் புடிச்சி இழுத்தாப்ல எரிச்சல உண்டாக்கும். அதையெல்லாம் யோசிச்சிகிட்டே கெங்கம்மா நிக்கிறா.
""எப்ப வர்றடி ?''
அந்தம்மா அதட்டலா கேக்குறாங்க.
வரமுடியுமான்னு கேக்காம எப்ப வர்றன்னு கேக்குறாங்களே. நாம என்ன இவுங்க வச்ச ஆளான்னு கெங்கம்மாவுக்கு தோணுது. அத மனசுக்குள்ளாற பொதச்சிக்கிட்டு,
""எங்க தெருவுல ஊருவசின்னு ஒருத்தி இருக்கா. அவள வரசொல்லட்டுமா?''ன்னு கேக்குறா. அந்த ஊருவசி எளவயசுக்காரி. அசராம வேல செய்வா. அதனால அவளக் கைகாட்டி வுட்றலாமுன்னு கெங்கம்மாவுக்கு நெனப்பு. ஆனா அந்தம்மா அதுக்கு ஒத்துக்கல.
""புதுசா யாரும் வர வேணாம். நீயின்னா ரொம்ப வருசப் பழக்கம்''அப்புடிங்குது அந்தம்மா.
"இடுப்புவலி கொடையிதும்மா. என்னால செய்யமுடியாது'ன்னு சொல்லணும்போல இருக்கு கெங்கம்மாவுக்கு. சொன்னா அவ்ளோதான்.
அரசாங்க உத்தியோகம் பாக்குற திமுரான்னு ஏசும். ஏசி ரூமுல ஒக்காந்துகிட்டு கையெழுத்து போடுற வேலையாப் பாக்குறா அவ. நாள் முச்சூடும் வெயில்ல அலஞ்சி, திரிஞ்சி நாத்தம் புடிச்ச குப்பையப் பொறுக்குற வேலையில்ல பாக்குறா.
கெங்கம்மா தெருவுல ஒரு பய இருக்கான். முத்து ராசுன்னு பேரு. அந்த தெருவுலயே அவந்தான் அதிகம் படிச்சவன். அவன் ஒருநா சொன்னான்,
காந்தியடிகள் கடைசிவரைக்கும் அவரு ஒபயோகிச்ச கக்கூஸ அவரே கழுவுனாருன்னு. கேட்டவுங்க எல்லாருக்கும் ஆச்சரியமா போச்சி.
""நெசமாவா சொல்லுற?''ன்னு கெங்கம்மா அதிசயமா கேட்டா. அம்புட்டு பெரிய மனுசன் கக்கூஸ் கழுவுனத யாராலயும் நம்பமுடியல. அத இப்ப கெங்கம்மா நெனச்சிக்குறா.
""யக்கா, சீக்கிரம் வாக்கா...''ன்னு வேன் டிரைவரு கத்தவும் கெங்கம்மாவுக்கு தூக்கிவாரிப்போட்டுச்சி.
""இதோ வந்துட்டேன்''ன்னு சொல்லிட்டு அவ அந்த வூட்டுக்காரம்மாவப் பாக்குறா.
""கேட்ட காச தர்றேன். வந்து செஞ்சிட்டுப்போ''
அந்தம்மா கட்டவெரல சுண்டி காமிக்குது. அதுக்குமேல ஒரு வார்த்த பேச முடியுமா?
வாய்க்கு பூட்டுப் போட்டுக்கிட்டாச்சி. சாவிய தூக்கி வீசியாச்சி. இனிமே அவளே முயற்சி செஞ்சாலும் வாயத் தொறக்க முடியாது. இந்த உண்மை சுருக்குன்னு ஒறைக்குது. ஒடனே நிமிர்ந்து,
"ஏம்மா, எப்ப வரட்டும்?''ன்னு கேட்டைப் புடிச்சிக்கிட்டு அந்தம்மாவப் பாத்து கேக்குறா கெங்கம்மா.


தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெறும் சிறுகதை 'கெங்கம்மாக்களின் உலகம்'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com