தற்கொலையைத் தடுத்ததால் உயிர் தப்பினேன்! 

இசையின் மீது ஆர்வம் கொண்டு, இசைக் கல்லூரியில் சேர்ந்து படித்து கான பூஷன் படிப்பை முடித்தவருக்கு இசை மீதுதானே ஆர்வம்இருக்கும்?
தற்கொலையைத் தடுத்ததால் உயிர் தப்பினேன்! 


இசையின் மீது ஆர்வம் கொண்டு, இசைக் கல்லூரியில் சேர்ந்து படித்து கான பூஷன் படிப்பை முடித்தவருக்கு இசை மீதுதானே ஆர்வம்இருக்கும்? அவரது மனதில் ஏழு சுவரங்கள்தானே ரீங்காரமிடும்? அப்படிப்பட்ட ஒருவருக்கு காவல்துறையில் வேலை கிடைத்தால், அவரால் எப்படி வேலை செய்ய முடியும்? 

வேலைக்குச் சேர்ந்த ஒரே வருடத்தில் காவல்துறை வேலைக்கு கும்பிடு போட்டுவிட்டு, வனத்துறைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விட்டார். அங்கே இருந்து கொண்டு "ஜாம்... ஜாம்' என்று தன்மிருதங்க, தபலா வாசிப்பைத் தொடர்ந்தார். இதுதான் மிருதங்க வித்வான் ஸ்ரீனிவாசனின் கதை. இப்போது சென்னையில் வசிக்கும் 73 வயது வித்வான் ஸ்ரீனிவாசன் தன்கதையை அசைபோடுகிறார்:

""எனக்கு இளம் வயதில் இருந்தே இசையில் ஆர்வம் அதிகம். திருவனந்தபுரம் மகாராஜா ஸ்வாதி திருநாள் இசைக்கல்லூரியில் கானபூஷன் படிப்பில் சேர்ந்து மிருதங்கம் பயின்றேன். அதன் பிறகு தபலாவும் கற்றுக் கொண்டேன். ஏதாவது அரசாங்க வேலை கிடைத்தால் வாழ்க்கை கஷ்டமில்லாமல் இருக்குமே என நினைத்து, முயற்சி செய்தேன். 

பல வருட முயற்சிக்குப் பின் கேரளா காவல்துறையில் போலீஸ்காரராக வேலை கிடைத்தது. ஆனால் திருவனந்தபுரத்திலிருந்து நூறு கி.மீ. தள்ளி கொல்லம் மாவட்டத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் வேலை. வேலைக்குச் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே, இது எனக்கான வேலை இல்லை என்று புரிந்துவிட்டது. பல வருட முயற்சிகளுக்குப் பின் கிடைத்த அரசாங்க வேலை என்பதால் வேலையை விடவும் மனசில்லை. 

என் பிரச்னையைப் புரிந்துகொண்ட என் அதிகாரி ஒருவர் எனக்கு உதவ முன்வந்தார்.அவர் உதவியினால் நான் வனத்துறைக்கு மாற்றல் ஆனேன். 

ஆரம்பத்தில், வனக்காவலராக, காட்டுக்குள் ரோந்துப் பணியில் இருந்தாலும், சில ஆண்டுகளில் குளத்துப் புழையில் இருக்கும் ஐயப்பன் கோயிலை அடுத்த அரசாங்க மத்திய நர்சரிக்கு என்னை மாற்றினார்கள். தரமான விதைகளை வாங்கி வருவது, நாற்று விடுவது, அவற்றைப் பராமரிப்பது, வளர்ந்த பின், விற்பனை செய்வது, மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்று அந்த பசுமையோடு இணைந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கூடவே, குளத்துப் புழை கோயிலில் மிருதங்கம் வாசிக்கும் வாய்ப்பும் கிடைக்கவே மனசுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்தது. 

ஒரு நாள், வனத்துறை ஜீப்பில், சாலக்குடி பகுதியில் அலுவலக விஷயமாக போய்க் கொண்டிருந்தபோது, ஒரு வயதான ஆணும், பெண்ணும் பதட்டத்துடன், அழுதபடி ரோட்டு ஓரத்தில்நின்று கொண்டிருந்தார்கள். விசாரித்தபோது, அவர்களின் மகள் யாரையோ காதலிக்க, பெற்றோர் எதிர்க்க, அன்று வீட்டில் ஒரே சண்டை. மகள் புறப்பட்டுப் போய்விட்டாள். அவள் தற்கொலை செய்து கொள்ளத்தான் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டாள் என்று பெற்றோர்களுக்குப் பதற்றம். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களையும் என் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு, ஜீப்பை வேகமாக ஓட்ட உத்தரவிட்டேன்.

ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாண்டியபோது, அந்தப் பெண் ரோட்டில் வேகமாக போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார்கள் அவளுடைய பெற்றோர்.

நான் மட்டும் ஜீப்பில் இருந்து இறங்கி, அவளிடம் யார்? எங்கே போகிறாய்? எதற்காக? என்று விசாரித்து அவளுக்கு புத்திமதி சொன்னேன். அதன் பின் அவளையும், அவளுடைய பெற்றோர்களையும் எதிர்திசையில் வந்த லாரி ஒன்றில் ஏற்றி பத்திரமாக வீட்டுக்குஅனுப்பி வைத்துவிட்டு என் அலுவலக டியூட்டி பயணத்தைத் தொடர்ந்தேன். 

2003- இல் வனத்துறை பணியில் இருந்து டெபுடி ரேஞ்சராக ஓய்வுபெற்று, அதன் பின் சென்னைக்கு இடம் பெயர்ந்தோம். இங்கே அம்பத்தூரில் தனியாகவும், பள்ளிக்கூடங்களிலும் மிருதங்கம், தபலா வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கச்சேரிகளுக்கும் பக்க வாத்தியம் வாசிப்பதுடன், குச்சிப்புடி, பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் வாசிக்கிறேன். 

2010- ஆம் ஆண்டில்வேலூரில் ஒரு நிகழ்ச்சிக்காக காரில் போய்க்கோண்டிருந்த சமயம் ஒருசாலை விபத்தில் சிக்கிக் கொண்டேன். ஆனால், தெய்வாதீனமாக நான் தப்பித்துக் கொண்டேன். அன்று என் மனைவி, ""பல வருடங்களுக்கு முன்னால், சாலக்குடி பகுதியில் தற்கொலை செய்துகொள்ள இருந்த பெண்ணை நீங்கள் காப்பாறியதால்தான், இன்று கடவுள் உங்களைக் காப்பாறி இருக்கிறார்!'' என்று கூறினாள். நான் இறைவனுக்கு நன்றி சொன்னேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com