நல் விடியல்

மூச்சை நன்றாக உள்ளிழுத்து விட்டுக் கொண்டேன். சுகமாக இருந்தது. புத்தம் புதிய அதிகாலை நேரத்து காற்றின் தூய்மையும், அதன் மென் இதமும் நெகிழ்ச்சி தந்தது.
நல் விடியல்


மூச்சை நன்றாக உள்ளிழுத்து விட்டுக் கொண்டேன். சுகமாக இருந்தது. புத்தம் புதிய அதிகாலை நேரத்து காற்றின் தூய்மையும், அதன் மென் இதமும் நெகிழ்ச்சி தந்தது. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாது ஆகாயத்தில் பறக்கும் இறகின் மனநிலையில் இருந்தது மனசு .

குழந்தை விடியலில் இருந்தது வானம். அந்த நேரத்து சாலை, "கசகச' சத்தம், போக்குவரத்து இரைச்சல்கள் எதுவும் இன்றி பேரமைதியாக இருக்க. இது இப்படியே நிரந்தரமாக இருந்துவிடக் கூடாதா எனப் பேராசைப் பட்டது மனம். அன்றைய நடைப் பயிற்சி இன்னும் இரண்டு வட்டங்கள் மீதம் இருந்தன. நடையை மிதமாக வேகப்
படுத்தினேன்.

முக்கால் பேண்டுக்குள் இருந்த செல்போன் கூவியது. யாரென்று பார்க்க, வீட்டிலிருந்து மனைவி சரண்யாவின் அழைப்பு!

""ஹலோ. என்னம்மா ஏதாவது தேவையா? கீரை வாங்கிட்டு வரணுமா?''

""இல்லைங்க. எங்கே இருக்கீங்க. வாக்கிங் முடிஞ்சுதா?''

""கடைசி ரவுண்ட். பத்தே நிமிசம்''

""இல்லை. போதும். வீட்டுக்குத் திரும்பி வந்துடுங்க. உங்களைப் பார்க்க சங்கர் சார் வந்திருக்காரு''

""யாரு. நம்ம பழைய ஹவுஸ் ஓனரா? இந்நேரத்துலயா? ஆச்சரியமா இருக்கு ஒரு போன் கூடப் பண்ணலையே''

""ஏதோ பிரச்னைன்னு நினைக்கிறேன். கவலையா, குழப்பத்தோட இருக்காரு. ஒவ்வொன்னையும் ரெண்டு தடவை கேட்டாத் தான் பதிலே சொல்றாரு. கொஞ்சம் வேகமா வர்றீங்களா?''

""சரி உடனே வர்றேன்''

போனை அணைத்தேன். வீட்டை நோக்கி நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
சங்கர் சார் முன்தகவல் தராமல் வந்திருப்பது வியப்பாக இருந்தது.

நாங்கள் இந்த சொந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னால் அவரது வீட்டில் தான் குடியிருந்தோம். அவர், ஒரு தனியார் வங்கியில் மேனேஜர் பதவியில் இருந்தார். நம் வீட்டில் குடியிருக்கிறவர் தானே என்கிற அலட்சியம் காட்டாமல், இளப்பமாக எண்ணாமல், ஈகோ பார்க்காமல் உறவுக்காரர் போல எங்களுடன் அன்பாகப் பழகியவர்.

"சொந்த வீடு கட்ட வேண்டும்' என்ற சரண்யாவின் ஆசை எனக்குத் தெரிய வந்த போது முதலில் மலைப்பாக இருந்தது. ஆனால் சங்கர் சார் தான் உடன் இருந்து, அனைத்து உதவிகளும் செய்து, வழிகள் அமைத்துக் கொடுத்து வங்கியில் கடன் பெற்றுத் தந்தார்.

அவரது மனைவி ராஜாமணிக்கு வாய் பேச வராது. ஆனாலும் இரக்க சுபாவம் அதிகம். மிகுந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஸ்ரீராகவேந்திரரின் அதி தீவிர பக்தை. வாரிசாக இரண்டு மகன்கள். முதலாமவன் ராஜஸ்தானிலோ, ஒரிசாவிலோ ஏர்போர்ட்டில் வேலை பார்க்கிறான். அடுத்தவன் உள்ளூரில் ஒரு தனியார் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக வேலை.

எனக்கு இளையவன் பாலாஜியைத்தான் அதிகம் தெரியும். அவன் நல்ல ஜாலி டைப். கோபமே வராது. "வாழ்க்கை என்பது அந்த நிமிடம் மட்டுமே அனுபவிக்க' என்பான் அடிக்கடி. பணம் சம்பாதிப்பது செலவு செய்யத்தான், சேமிக்க அல்ல என்ற கொள்கைக்காரன். விதம்விதமான ஆடைகளும், ஆறு மாதத்திற்கொருமுறை மாற்றும் ஹேர்ஸ்டைலும் லட்சம் பெறுமானமுள்ள பைக்கும் என ஸ்டைலாக நகரை உலா வருகிறவன் இப்படி எந்தத் தொந்தரவுகளும் இல்லாத அமைதியான வாழ்க்கை சங்கர் சாருடையது! அவர் இந்த அதிகாலை நேரத்தில் என்னைத் தேடி வந்திருப்பது தான் பொருத்தமின்றி உறுத்துகிறது.

வீடு வந்த போது சங்கர் சார் அன்றைய பேப்பரில் இருந்தார். காபி குடித்து விட்டு வைத்த காலி டம்ளர் டேபிளின் மேலிருந்தது. சின்ன சத்தத்தில் டீவி செய்தி ஓடிக் கொண்டிருந்தது

""வாங்க சார் வாங்க. இன்ப அதிர்ச்சியெல்லாம் தர்றீங்க. உங்க திடீர் விஜயம் ஆச்சரியமா இருக்கு!''

அவரது பதில் புன்னகையில் உயிரில்லை.

""ராஜாமணி அம்மா நல்லாயிருக்காங்களா? பாலாஜிக்கு வேலையெல்லாம் எப்படிப் போகுது? நாளைக்கு காமாட்சி அம்மன் கோவிலுக்குப் போயிட்டு அப்படியே நம்ம வீட்டுக்கும் வரலாம்ன்னு திட்டம் போட்டிருந்தோம் சார் பார்த்து நாளாச்சுல்ல!''

""ம்'' என்றார் சுரத்தில்லாமல். அவரை இப்படியெல்லாம் நான் பார்த்ததேயில்லை. அவரது ஷேவிங் செய்யப்படாத முகமும், கண்களின் அடியில் தெரிந்த துயரமும் தளர்ச்சியான உடல்மொழியும் மிகப் பெரிய சுமையுடன் வந்திருப்பவர் போலத் தோன்றியது.

சரண்யா உள்ளேயிருந்து வந்தாள்.

""அப்பா பணியாரம் சுடறேன். இருந்து டிஃபன் பண்ணிட்டுத் தான் போகனும்.''
""சரிம்மா'' என்றவர் டீவியை அணைத்தார்.
""உன்கூட கொஞ்சம் பேசனும் ராகவன். அதான் நேர்ல வந்தேன்.''
""சொல்லுங்க சார். நான் ஏதாவது செய்யணுமா?''
அவர் கண்களை மூடிக் கொண்டார்.
""பாலாஜிக்கு ஒரு விபத்துப்பா'' என்றார் முதல் வாக்கியமாக.
""சார்'' என்றேன் அதிர்ந்து போய்""எப்போ சார் எங்கே?''
கண் திறந்தார். ""அதாச்சு ரெண்டு வாரத்துக்கும் மேலே. ஒரு திருமண நிகழ்ச்சியில கலந்துக்க இவனும், கூட வேலை பார்க்கிற நந்தகோபால் தெரியும்ல்ல? அவனும் பைக்ல போயிருக்காங்க. கோயம்புத்தூர் ரோட்டுல. நைட் நேரம். உனக்குத் தான் தெரியுமே. ரோட்டை அகலப்படுத்தறதுக்காக அங்கங்கே குழிகளை வெட்டிக் குதறி வெச்சிருக்காங்க''
""தெரியும், சார் ரொம்ப ஆபத்தான பயணம். போன வாரம் அந்த வழியாப் போய் நொந்துட்டேன்''
""இவன் தான் பைக் ஓட்டிட்டுப் போயிருக்கான். செல்போன் அடிச்சிருக்கு. இந்த மாதிரியான சுழல்ல நீயோ, நானோ இருந்தா என்ன பண்ணுவோம்? வண்டியை ஓரத்துல நிறுத்திட்டு போன் பேசுவோம். இல்லைன்னா அட்டெண்ட் பண்ணாம அப்புறமாப் பேசுவோம். ஆனா இவன்கிட்டத் தான் இந்த ரெண்டு பழக்கமுமே இல்லையே. போனை எடுத்து கழுத்துக்கும், தோள்பட்டைக்கும் இடையில சொருகி வெச்சுக்கிட்டு வண்டியை ஓட்டிக்கிட்டே போன் பேசியிருக்கான்''
""ம்''
""முள்ளுப்பாடி கேட்டைத் தாண்டினதும் பிரிவு சாலையிலிருந்து, ஜல்லிக் கல்லை சுமந்துக்கிட்டு ஒரு லாரி இடது பக்கத்திலிருந்து வேகமா வந்திருக்கு. இவனுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை முடிவெடுக்க முடியாம திணறி ஒரு நொடி ஒரு நொடி கூட இல்லை அதுல நூத்துல ஒரு பங்கு ரெண்டு வண்டிகளும் எதிரெதிரா பலமா மோதிக்கிடுச்சு''

""அய்யய்யோ. அப்புறம்''

அவரது வர்ணனைகள் படம் பார்க்கும் உணர்வைத் தந்திட அலறிவிட்டேன்.
அவர் கண்களைத் துடைத்துக் கொண்டார். அழுததே அப்போது தான் தெரிந்தது.

""பெரிய விபத்து தான் ராகவன். பாலாஜிக்கு கை, கால்ல ஃப்ராக்சர். முகத்துல, தலையில காயம். இங்கே ஸ்ரீஅரவிந்தன் மெடிகல் சென்ட்டர்ல வெச்சுத் தான் இத்தனை நாள் மருத்துவம் பார்த்தோம்''

""அடடா இவ்வளவு நடந்திருக்கா? யாருமே சொல்லலை சார். தகவல் தெரியலை. இப்போ எப்படியிருக்கான் பாலாஜி?''
""ம்... இருக்கான்.!'' பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
""ரெண்டு நாள் முன்னாடி தான் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் பண்ணினாங்க. ரெஸ்ட்ல இருக்கான்.''
சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு மௌனமானார்.
எனக்கெதுவும் புரியவில்லை. எப்போதோ நடந்து போன, இந்தப் பழைய விபத்து செய்தியை பகிர்ந்து கொள்ளவா இந்நேரத்தில் வீடு தேடி வந்திருக்கிறார்.? இதுவும் ஒரு அதிர்ச்சித் தகவல் தான். மறுப்பதற்கில்லை. ஆனால் ஆனால் வேறு ஏதோ இருக்கிறது. இதை விடவும் பெரிசாக அல்லது கனமாக.
அவரே சொல்லட்டும்.
எதிர்பார்த்தபடியே சிறு இடைவெளிவிட்டு பின் தொடர்ந்தார்.
""அந்த விபத்திலே ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்து போச்சு ராகவன். இத்தனை நேரம் என் மகனைப் பத்தி தானே சொல்லிட்டிருந்தேன். பின்னாடி உட்கார்ந்துட்டு வந்த நந்தகோபால் பத்தி ஒண்ணுமே சொல்லலையே. அதை கவனிக்கலையா? அவன் என்ன ஆனான் தெரியுமா?''
அவரையே பார்த்தேன்.
""சொல்லுங்க சார்''
""செத்துப் போயிட்டான்ப்பா. ஸ்பாட் அவுட்!''
முகத்தை மூடி கொண்டு அழுதார்.
""லாரி மோதின அதிர்ச்சியில தூக்கி வீசப்பட்டு கரண்ட் கம்பத்துல தலை மோதி, அந்த இடத்துலேயே''
நான் எதுவுமே பேச முடியாமல் அதிர்ச்சியுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
தனது மகன் பாலாஜிக்கு விபத்து என்றார் முதலில். அதுவே அதிர்ச்சியாக இருந்தது. இப்போது நந்தகோபால் அந்த விபத்தில் இறந்தே போய் விட்டான் என்கிறார்... கடவுளே இன்னும் என்ன அதிர்ச்சிகளையெல்லாம் கைவசம் வைத்திருக்கிறாரோ இன்றைய காலை இத்தனை கொடூரமாக விடிந்திருக்கிறதே.
""ரொம்பக் கொடுமை ராகவன்! சேதி கேள்விப்பட்டதும் பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிப் போச்சு எனக்கு. யாரை என்ன குத்தம் சொல்லி, எப்படி நோகறது. அரசாங்கம் தலைபாடா அடிச்சுக்குது வண்டி ஓட்டும் போது போன் பேசாதீங்க ஹெல்மேட் போடுங்கன்னு. காது கொடுத்து கேட்கறோமா? அலட்சியப் படுத்தறதோட மோசமான விளைவைப் பார்த்தியாப்பா.''
தலையில் அடித்துக் கொண்டார்.
""சார் இறந்து போன அந்த நந்தகோபாலுக்கு குடும்பம், குழந்தைகன்னு ஏதாவது?''
""ரெண்டு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்குப்பா''
அடக் கடவுளே இப்போது தான் உண்மையாகவே அதிர்ச்சியும், துக்கமும் வந்தது எனக்கு. இனி, அந்தக் குடும்பத்தின், குழந்தையின் எதிர்காலம்?
""மயக்க நிலையில இருந்த பாலாஜிகிட்ட நந்து இறந்த விஷயத்தை ரொம்பவும் தாமதமாகத் தான் சொன்னேன். அதை கேள்விப்பட்டவன் சுக்கு நூறா உடைஞ்சு சின்னாபின்னமாயிட்டான். அவன் சாவுக்கு நான் தானே காரணம், செல்போன் பேசாம இருந்திருந்தா அவனை இழந்திருக்க மாட்டேனே. ஒரு நண்பனை மட்டும் நான் இழக்கலை, ஒரு கணவனை, ஒரு குடும்பத்தலைவனை, ஒரு தகப்பனை இல்லாமப் பண்ணிட்டேனேன்னு அழுது புலம்ப ஆரம்பிச்சான்''
""நியாயம் தானே சார். அந்தக் குற்ற உணர்ச்சி மனசுல உருவாகறது இயல்பு தான்''
ஒத்துக் கொள்வதாகத் தலையாட்டினார்.
இருவரும் சில நிமிடங்கள் யோசனையுடனே கழித்தோம். இவர் இத்தனை மனபாரத்துடன் வந்திருப்பார் என சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை.
வீட்டில் இருக்க முடியாமல், குற்ற உணர்ச்சியில் பரிதவிக்கும் மகனின் மனநிலையைப் பார்க்க சகிக்காமல் வெளியே தப்பித்து ஓடி வந்திருப்பார் எனத் தோன்றியது
என்ன ஆறுதல் சொல்லுவது என வார்த்தைகள் தேடினேன். ஆனால் ஆறுதல் சொல்லுவதாக இருந்தால் இவரை விடவும் அந்த நந்தகோபால் குடும்பத்தினருக்குத் தான் ஆறுதலும், பரிதாபமும் தேவை. ஏனெனில் இழப்பின் அதிக பாதிப்பு அவர்களுக்குத் தான்!
இன்னும் சொல்லப் போனால் பாலாஜியின் மேல் இரக்கம் வருவதற்குப் பதிலாக கோபமும், எரிச்சலும், வெறுப்பும்தான் வந்தது. பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனத்துடன் அவன் நடந்து கொண்ட அலட்சியத்தின் பாதிப்பு தான் சுற்றியுள்ளவர்களையும் இத்தனை மோசமாக்கி விட்டிருக்கிறது!
""என்னங்க டிஃபன் ரெடி... அப்பா வாங்க'' - சரண்யா குரல் தந்தாள்.
அவர் திடீரென நேரம் பார்த்தார்.
""சரி ராகவன் நான் வந்து ரொம்ப நேரமாச்சு, கிளம்பறேன்''
""சார் இருங்க... டிஃபன் பண்ணிட்டுப் போங்க. உங்களைக் கேட்டு தானே சரண்யா செய்தா''என்றேன்.
யோசித்தார். ""தப்பா நினைச்சுக்காதே சரண்யா. நான் மாத்திரை போட்டுட்டுத் தான் சாப்பிடனும். ஒண்ணு பண்ணு. ஒரு பாக்ஸ்ல வேணா பார்சல் பண்ணிக் கொடுத்துடு நாங்க பகிர்ந்து சாப்பிட்டுட்டுக்கிறோம்''
""சரிங்கப்பா... உட்காருங்க ரெண்டே நிமிஷம்'' உட்கார்ந்தார்.
""இப்போ நான் பேங்க் போறதில்லை ராகவன். மனரீதியா இன்னும் தயாராகலை. லாங் லீவுல இருக்கேன். பாலாஜி கூடவே நான் இருந்தாக வேண்டிய கட்டாயம். ஏன்னா ராஜாமணியால தனியா சமாளிக்க முடியறதில்ல''
அவர் எதுவோ சொல்ல வந்து முடியாமல் திணறுவது தெரிந்தது
""சார் நான் ஏதாவது செய்யணுமா?''என்றேன் திரும்பவும்.
காத்திருந்தவர் போல எனது கைகளை பிடித்துக் கொண்டார்.
""நீ வந்து பாலாஜியை ஒருதடவை சந்திச்சுப் பேசனும். அவனுக்கு உண்மைகளைப் புரிய வைக்கனும். என்னால அவன் கூடப் பேச முடியலை. அவனோட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிகிறதில்லை.''திடீரென அழுதார்.
புரியாமல் பார்த்தேன்.
""அவன் எந்நேரமும் மன அழுத்தத்திலேயே இருக்கான் ராகவன். "கொலை பண்ணிட்டேன், கொலை பண்ணிட்டேன்'னு புலம்பறான். நந்தகோபாலோட சாவு ரொம்பவும் பாதிச்சிருக்கு அவனை. அவனோட இறப்புக்கு தானே முழுக்க காரணம்ன்னு நம்பறான். ஆனா செத்தவன் செத்தவன் தானே? திரும்பி வரவா போகிறான். இருக்கிறவங்க நிம்மதியா இருக்க வேண்டாமா ராகவன்?
நானும் எத்தனையோ விதமா சமாதானம் செய்து பார்த்துட்டேன். அவன் அடங்குகிற மாதிரி இல்லை. என் பேச்சு எதுவும் எடுபடலை. நீ தான் கதை, கவிதைன்னு எழுதுகிற ஆளாச்சே. மன உணர்வுகளோட நுட்பம் தெரியுமே. ஒரு பிரச்னையோட அடுக்கடுக்கான கோணங்களை உன்னால யூகிக்க முடியுமே.
நீ வந்து பேசி அவனுக்கு அறிவுரை சொல்லி மனசை சமாதானம் செய்! எதார்த்தத்தை உணர வையுப்பா. புண்ணியமாப் போகும்! அவனைக் காப்பாத்திக் கொடு எனக்கு. இல்லைன்னா'' முடிக்க முடியாது கதறினார்.
""சார் கண்டிப்பா வர்றேன், நாளைக்கே வர்றேன் சார். கலங்காதீங்க. அவனை சரி பண்ணிடலாம்'' என்றேன் வேகமாக.
""என்னங்க இது?''என்றாள் சரண்யா வெறுப்புடன்.
""அந்த பாலாஜியை நினச்சாலே பத்திக்கிட்டு வருதுங்க. ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்திட்டு போன் பேசியிருந்தா ரெண்டு குடும்பத்துக்கும் இத்தனை துன்பம் வந்திருக்குமா. அப்படியென்ன ஆத்திரம், அவசரம் வேண்டிக் கிடக்கு''
""எல்லாம் விதி!'' பெருமூச்சு விட்டேன்.
""இவன் கூட சேர்ந்து போய் அவன் சாகணும்ன்னு இருக்கு பாரு''
""கொழுப்பெடுத்துப் போய் இவன் செஞ்ச தப்புக்கு பாவம் விதி மேல ஏன் பழி போடறீங்க. எனக்குத் தெரியாதா இவனைப் பத்தி. பைக் எடுத்தான்னா ஒரே நொடியில நூறுல பறப்பான். நம்ம தெருவுலேயே எத்தனை பேரை மிரள வெச்சிருக்கான் தெரியுமா. அப்படியென்ன ஒரு த்ரில் அதில. நீங்க போய் எதுவும் பேசாதீங்க அவன்கூட. அப்படியே விட்டுடுங்க. குற்ற உணர்ச்சியிலேயே கிடந்து மென்டல் ஆகிடட்டும்.''
""சேச்சே. பாவம் சரண்யா, அப்படியெல்லாம் சொல்லாதே. ராஜாமணி அம்மாவைக் கொஞ்சம் மனசுல நினைச்சுப் பாரு. அவங்களுக்காகவாவது ஒரு தடவை போயிட்டு வர்றது நல்லது. தவிர, இவ்வளவு தூரம் சங்கர் சார் வந்து பேசிட்டுப்
போயிருக்காரு நல்லாயிருக்காது''
""என்னவோ பண்ணுங்க'' அரைகுறை மனதுடன் தலையாட்டினாள்.
மூன்று மாதங்கள் கழிந்திருக்கலாம்
மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அலுவலகத்தில், சரியான விடை வராத ஒரு கணக்குடன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் பியூனின் அழைப்பு.
""சார் உங்களைப் பார்க்க சங்கர்ன்னு ஒருத்தர் வந்திருக்காரு''
எந்த சங்கர் என்பது புரியாது முன்னே சென்று பார்க்க இவர் தான் பாலாஜியின் அப்பா அமர்ந்திருந்தார்.
""என்ன ராகவன் பிசியான நேரத்துல தொல்லை பண்ணிட்டேனா ?'' சிரித்தார்.
""அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க சார். பாலாஜி நல்லாயிருக்கானா ?''
""ம்... ம்!'' பெரிதாகத் தலையாட்டினார். கையிலிருந்த பேக்கின் ஜிப் திறந்து அதை எடுத்து நீட்டினார். பத்திரிகை.
""பாலாஜிக்குக் கல்யாணம் வெச்சிருக்கேன் ப்பா. அவசியம் வாங்க''
""என்ன சார் சொல்றீங்க?'' திகைத்தவனாக வாங்கினேன்.
என் அதிர்ச்சியை புரிந்து கொண்டவர் சன்னமான குரலில் தொடர்ந்தார்.
""அன்னைக்கு நீ வந்து அத்தனை தூரம் பேசிட்டுப் போனே தானே ராகவன் கொஞ்ச நாள் அவன் அமைதியா இருந்தான். அப்புறம் பழையபடி புலம்ப ஆரம்பிச்சுட்டான். அப்போ தான் எனக்கு உறைக்க ஆரம்பிச்சது இந்தப் பிரச்னைய இனிப் பேசி சரி பண்ண முடியாதுன்னு!''
""ம்''
""கையிலேயே வெச்சிட்டிருக்கியே, பத்திரிகையை பிரிச்சுப் பாரு ராகவன். பாலாஜியை குணப்படுத்தின மருந்து அதுல தான் இருக்கு''சஸ்பென்சுடன் சிரித்தார்.
விரித்துப் பார்க்க "மணமகள்' என்ற இடத்தில் புஷ்பலதா என்றிருந்தது.
""சார் இந்த புஷ்பலதான்றது''
""விபத்துல இறந்து போன நந்தகோபாலோட மனைவி தான்ப்பா. அவளைத் தான் நம்ம பாலாஜிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா இருக்கு''
பிரமிப்புடன் பார்த்தேன்.
""இது எப்படி?''
""சாத்தியமாச்சுன்னு பார்க்கறியா?'' நிமிர்ந்து உட்கார்ந்தார்.
""வாழ்க்கை நம்மால கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு, நம்ப முடியாத அளவுக்கு பல விசித்திரங்களை நடத்திக் காட்டும். அதிலே ஒண்ணு தான் இதுவும். பாலாஜியோட மனக் கஷ்டத்துக்கு முக்கியமான காரணம் என்ன நண்பனோட சாவுக்கு நாம தான் காரணம், அவனோட குடும்பத்தை யார் இனி கவனிச்சுக்குவான்ற கவலை தானே. அந்த அடிப்படைத் துயரத்தை சரி பண்ணறது எப்படின்னு யோசிச்சேன். இந்த வழி பட்டது''
"".... ....''
""முதல்ல புஷ்பலதா கிட்ட பொறுமையாப் பேசி சம்மதம் வாங்கினேன். அப்புறம் அவங்க குடும்பத்தார்கிட்ட. அப்புறம் இறந்து போன நந்துவோட அம்மா, அப்பாகிட்ட. இதுல நல்ல விசயம் என்னன்னா யாருமே இந்த யோசனைக்கு மறுப்போ, வேறுபாடோ சொல்லலை. ஏன்னா பாவம் முப்பது வயசு கூட ஆகாத அந்தப் பெண்ணோட வாழ்க்கை இப்படி சீர் கெட்டு நிக்கிற போது அதைப் பார்க்க யாருக்குத் தான் மனசு வரும்?''
"" ம்''

""கடைசியா என் வீட்டுல பேசினேன். என் திட்டம் கேட்டு அதிர்ச்சியான பாலாஜியை பேசிப் பேசி சரி செய்தேன். உன் மனம் சமாதானம் அடைய இந்த ஒரு வழிதான் இருக்குன்னு நான் உறுதியாச் சொல்ல அவனால எதையும் மறுத்துப் பேச முடியலை!''

""ஓ ராஜாமணி அம்மா?''

""அவ என்ன சொல்வா. ஆனந்தக் கண்ணீர்ல சம்மதம் சொன்னா! இதுல இன்னொரு விஷயமும் நடந்தது ராகவன் அவனுக்கு விபத்து நடந்த சமயத்துல அவன் ஜாதகத்தை எடுத்துக்கிட்டு என் குடும்ப ஜோசியர் கிட்ட காட்டியிருந்தப்போ ஒரு விஷயம் சொல்லியிருந்தாரு''

""என்ன சார் அது?''

""பாலாஜிக்குத் திருமணம்ன்னு ஒண்ணு நடந்தா அது இயல்பான, சாதாரணமான திருமணமா இருக்காதாம். கணவனை இழந்த, குழந்தையோட இருக்கிற பெண் தான் அவனுக்கு மனைவியாக அமையணும்ன்னு கர்மவிதியாம். அன்னைக்கு இருந்த மனக்குழப்பத்தினால நான் இதை சரியா கவனிக்கலை. ஆனா நடக்கிற ஒவ்வொண்ணையும் கண்ணெதிரே பார்க்கிற போது விடைகள் எல்லாம் தானாகவே தேடி வந்து பொருந்துது ராகவன்!''

"".... ....''
""விதி வலியது. அதை மாத்தவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது, நமக்கேத்த மாதிரி லேசா வளைக்க முடிஞ்சாலே அதிர்ஷ்டம் தான். இந்த முடிவால எல்லோருக்கும் மன நிம்மதி கிடைச்சது. அது ஒண்ணு போதுமே. சரண்யா கிட்ட சொல்லிடுப்பா. அவசியம் வாங்க'' சொல்லிக் கொண்டே எழுந்தார்.
எதைப் பற்றியும் சிந்தனைகள் இல்லாதவனாக அயர்ந்து போய் அமர்ந்திருந்தேன். ஆனாலும் மனதில் ஒருவித திருப்தி பரவி சந்தோஷத்தை நிரப்பியதை மட்டும் உணர முடிந்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com