ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுக்கடுப்பு... குடலில் உளைச்சல்!

வீட்டினுள் மழைநீர் புகுந்ததாலோ, கிடைத்த உணவைச் சாப்பிட்டதாலோ என்னவோ தெரியவில்லை, எனக்கு வயிற்றிலும் ஆசன வாயிலும் கடுப்பு வலியுடன் அடிக்கடிகொஞ்சம் கொஞ்சமாய் மலம் வெளியேறுகிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுக்கடுப்பு... குடலில் உளைச்சல்!


வீட்டினுள் மழைநீர் புகுந்ததாலோ, கிடைத்த உணவைச் சாப்பிட்டதாலோ என்னவோ தெரியவில்லை, எனக்கு வயிற்றிலும் ஆசன வாயிலும் கடுப்பு வலியுடன் அடிக்கடிகொஞ்சம் கொஞ்சமாய் மலம் வெளியேறுகிறது. குடலில் பொறுக்க முடியாத உளைச்சல். திருகு வலியுடன், முக்கல் முனகலுடன் ஒவ்வொரு தடவையும் சிறிதளவே மலம் வருகிறது. இதை எப்படிக் குணப்படுத்துவது?

கணபதி, மேற்குமாம்பலம்,
சென்னை.

குடிநீரும் உணவும் சுத்தமில்லாதநிலையில் குடிப்பதற்கும் உண்பதற்கும் பயன்படுத்தப்பட்டால் நீங்கள் குறிப்பிடும் வகையில் வயிற்றுக்கடுப்பு அல்லது சீத பேதி ஏற்படும். விஷக் கிருமிகளால் உண்டாகும் இந்த உபாதை பசியின் தன்மையை திடப்படுத்துவதாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாலும் கிருமிகளை அழித்து வெளியேற்றிக் குணப்படுத்தலாம். இவ்விரு விஷயங்களையும் ஒன்றாகச் செய்யக் கூடிய வில்வவேர், துளசி, புங்கைப்பழம் ஆகியவற்றுடன் மேலும் மூலிகைகளைக் கலந்து ஆட்டின் சிறுநீரில் அரைத்து எடுக்கக் கூடிய ஆயுர்வேத குளிகை மருந்து மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த உபாதைக்கு ஆரோரூட் மாவுக்கஞ்சி, புழுங்கலரிசிக் கஞ்சி, இனிப்பு மாதுளம் பழ ஜூஸ், மோர் கஞ்சி போன்றவை நல்லது. உபாதை நன்றாகக் குறையும் வரை இவற்றைச் சாப்பிட வேண்டும். பிறகு புழுங்கலரிசி சாதம், மோர், கோதுமை ரொட்டி, புளியாரைக் கீரை, கொத்துமல்லி, கறிவேப்பிலை, சோம்பு, சீரகம், வெற்றிலை இவற்றாலான துவையல், புளிக்காத மோர் சாதம் என்ற வகையில் வரிசைக் கிரமமாய்ச் சாப்பிட வேண்டும். உப்பு, புளி, காரங்களை சிலநாள்கள் வரை ஒதுக்க வேண்டும். எண்ணெய், நெய் பண்டங்களும் கூடாது. உபாதை அடங்கி பசி வந்த பின்பு புது வெண்ணெய் மூன்று - நான்கு டீ ஸ்பூன், நல்ல தேன் மூன்று - நான்கு டீ ஸ்பூன் இரண்டையும் குழைத்து உணவுடன் சாப்பிடுவது குடல் உடல் புஷ்டிக்கு உயர்ந்ததாகும்.

கடுப்பு வலி உளைச்சலை அடிவயிற்றில் ஏற்படுத்தும் அபான வாயுவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி வெந்நீரில் நனைத்துப் பிழிந்து துணியினால் சூடுபடும்படி ஒத்தடம் கொடுக்கலாம். ஆரம்பநிலையில் உள்ளே புகுந்துள்ள சத்துருவான விஷ வஸ்துவை வெளியில் விரட்டுவதற்காக உடலே செய்யக் கூடிய மலக்கழிவை, மருந்துகள் மூலம் உள்ளடக்குவதால், விபரீதம் விளையும். கொஞ்சம் சீக்கிரமே குடலில் கஷ்டப்படுத்தாமல் விஷத்தை வெளிப்படுத்த, மிருதுவான நெய்ப்புள்ள மலமிளக்கியே இங்கு நல்லது. நோயாளியின் வயது, குடல் தன்மைக்கேற்றபடி மூன்று நான்கு தடவை பேதியாகும்படி ஆமணக்கெண்ணெய்யும் ஆவின் பாலும் கொஞ்சம் சுக்கு, வெந்நீருடன் கலந்து கடுப்பு நோய் கண்டதும் குடிப்பது மிகவும் நல்லது. கடுக்காய் கஷாயமும் நல்லது.

ஸப்ஜா விதை, இஸ்கோல் விதை, சோம்பு, சீரகம், சதகுப்பை சம அளவில் சேர்த்துத் தூள் செய்து 5-6 டீ ஸ்பூன் (ஒரு டீ ஸ்பூன் 5 கிராம்) தூளை அரை லிட்டர் ஆறிய வெந்நீரில் 3-4 மணி நேரம் ஊற வைத்து, இதன் மேல் தெளிந்த நீரை சுமார் ஐம்பது மில்லி லிட்டர் அளவு அடிக்கடி பருகுவது மிக நன்று. பஞ்ச பீஜபானியம் என்று புகழப்படும் இந்தக் குடிநீர் வயிற்றுக் கடுப்பு, எரிச்சல், நீர்பருகும் ஆவல் அழற்சிகளை அகற்றும். மலம் - சிறுநீர் கட்டுப்படாமல் பிரிக்கும்.

பஞ்சாமிருத பர்ப்படீ, ஸப்தாமிருத பர்ப்படீ, ரஸ பர்ப்படீ, தாம்பிர பர்ப்படீ போன்ற ஆயுர்வேத மருந்துகளைத் தகுந்த பத்தியம், மூலிகைக் குடிநீருடன் மருத்துவர் உபதேசப்படி உபயோகித்தால், கடுமையான நாள்பட்ட கிருமிக் கடுப்பு உபாதையும் நிவர்த்தியாகிவிடும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com