ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை வைத்திய முறைகள்!

ஒருவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்கு முன் சில கை வைத்திய முறைகளை வீட்டிலேயே செய்து கொள்வதால், உபாதைகளின் தாக்கம் நிதானப்படும் என்று அறிகிறேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை வைத்திய முறைகள்!


ஒருவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்கு முன் சில கை வைத்திய முறைகளை வீட்டிலேயே செய்து கொள்வதால், உபாதைகளின் தாக்கம் நிதானப்படும் என்று அறிகிறேன். ஒரு சில பிரச்னைகளைக் குறைக்கும் விதத்தில் கூற முடியுமா?

சுந்தரி,
சென்னை.

1. மூக்கிலிருந்து ரத்தம் வருவதை நிறுத்த: வெங்காயத்தைக் கசக்கி முகரவும். உடன் ரத்தப் பெருக்கு குறையும். தொடர்ந்து வெங்காயம், தயிர் ஆடையுடன் சேர்த்து உபயோகித்து வந்தால், இந்த உபாதையை அறவே நீக்கிவிடலாம்.

2. வயிற்று உப்புசம், அஜீரண ஏப்பம், வயிற்றுவலி, வாந்தி, அடிக்கடி மலம் அஜீரணத்துடன் செல்லுதல் குணமாக: 

எலுமிச்சம் பழத்தோலில் காற்றில் சீக்கிரம் பறந்து செல்லும் எண்ணெய் போன்ற திரவ பதார்த்தம் கிடைக்கிறது. இத்தைலத்தைச் சர்க்கரையுடன் ஒன்றிலிருந்து மூன்று சொட்டுகள் வரை கலந்து கொடுக்கவும்.

3. தும்மலை அடக்கியதால் ஏற்படும் கழுத்துவலி, பிடறி வலி, தலைவலி, புலன் துர்பலம் நீங்க: சூரிய ஒளி மூக்குத் துவாரத்தில் படும்படியாக சூரியனைப் பார்த்தால், உடன் தும்மலுண்டாகி குணம்கிடைக்கும்.

4.பகுமூத்திரம் என்ற நீரிழிவு நோயில் சிறுநீர் அதிகம் போவதைக் குறைக்க: நல்லெண்ணெய் பத்து மில்லி லிட்டர் அளவில் காலை, மாலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன் சாப்பிடவும்.

5. கொதிப்பு ஏற்பட்டு தலையிலும் மார்பிலும் வலியுடன் மயக்கம் தலைசுற்றுதல் உடனே குறைய : நெல்லிக்காயை அரைத்து நெற்றியில் பட்டு இடவும்.

6. பித்தத்தின் சகஜ நிலை மாற்றத்தால் தோன்றும் மயக்கம், எரிச்சல், தண்ணீர் தாகம், உதடு, நாக்கு, வாய் இவற்றில் ஏற்படும் புண்ணும் வெடிப்பும் உடன் குணமாக: இரண்டு அத்திப்பழங்களைக் கற்கண்டுடன் சாப்பிடவும்.

7. வறட்டு இருமல் உடனே குணமாக: சிறிது அளவு அதிமதுரத்தை வாயிலிட்டு ஊற வைத்து மென்று சாப்பிடவும்.

8. சொறி சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு உடனே குறைய: தேவையான அளவு அருகம்புல் சேகரித்து, சிறிதளவு பசுமையான மஞ்சள் சேர்த்து, பசையாக அரைத்து, உடலில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்கவும்.

9. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி குணமாக : இரண்டு கிராம் இலவங்கப் பொடியை சமஅளவு பனை வெல்லத்துடன் கலந்து சாப்பிடவும்.

10. வயிற்றுப் புழுக்களை ஏற்படுத்தும் ஆசனத் தினவு குறைய : மூன்று துளி எருக்கின் இலைச்சாறு, 10 துளி தேன் விட்டு உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்.

11. வாய்ப்புண் குணமாக: தேங்காய் துருவலுடன் கசகசாவைக் கலந்து வாயில் இட்டு மெல்லவும்.

12. ரத்தக் கழிச்சல், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி குணமாக: 10 கிராம் கொத்துமல்லி விதையை (தனியா) நன்கு நசுக்கி, அரை லிட்டர் நீரிலிட்டு, 200 மி.லி, ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை கலந்து குடிக்கவும்.

13. காது வலி குறைய: பூண்டின் ஒரு பருப்பை ஊசியில் குத்தி நல்லெண்ணெய்யில் நனைத்து அனலில் வாட்டி இளஞ்சூடாக உள்ளபோதே காதில் அதை அழுத்திப் பிழிய எண்ணெய் கலந்த இதன் சாறு விழும். உடன் காது வலி குறையும்.

இப்படி எண்ணற்ற குறிப்புகளை ஆயுர்வேதம் கூறுகிறது. அவற்றின் சில துளிகளே இவை. பயன்படுத்தி குணம் பெறுங்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com