நிறுத்தம்

நாகம்மா நேர்முகத் தேர்வு  நடக்கும் அலுவலகக் கட்டடத்துக்கு  வந்த போது மணி பதினொன்று அடிக்க ஐந்து நிமிஷம் இருந்தது. பதினொன்றரை மணிக்குத்தான் நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லியிருந்தார்கள். 
நிறுத்தம்


நாகம்மா நேர்முகத் தேர்வு நடக்கும் அலுவலகக் கட்டடத்துக்கு வந்த போது மணி பதினொன்று அடிக்க ஐந்து நிமிஷம் இருந்தது. பதினொன்றரை மணிக்குத்தான் நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லியிருந்தார்கள்.

அவள் தான் நின்றிருந்த இடத்திலிருந்து சுற்றுமுற்றும் பார்த்தாள். இடது பக்கம், வலது பக்கம் எதிர்பக்கம் என்று எல்லா இடங்களிலும் பெரும்பான்மையாகக் கடைகள் காணப்பட்டன. ஷகர் ஏரியா. ஆனால் அவளை ஆச்சரியப்படுத்துவதற்கென்றே எழுந்தாற் போல எதிர்சாரியில் சற்று இடப்புறமாக ஒரு பார்க் காணப்பட்டது. அடர்த்தியான மரங்களும், செடிகொடிகளும் அது நிஜமாகவே இயற்கை அள்ளித் தந்தபூங்காதான் என்று உறுதி செய்தன.

அவள் கவனமாக சாலையைக் கடந்து பார்க்கின் உள்ளே நுழைந்தாள். வெளியே அடித்து வீசிய வெயிலுக்கு இந்த இடம் குளுமையில் வருவோரைக் குளிப்பாட்டத் தீர்மானித்தது போல அவளை வரவேற்றது. அவள் இந்த ஊருக்கு வந்த சமயத்துக்கும், இப்போதைக்கும் ஊர் வெகுவாக மாறி விட்டது. வெயிலுக்கு சென்னையையும், மழைக்கு மும்பையையும் குளிருக்குத் தில்லியையும் சவாலுக்கு இழுக்கும் நிலைமைக்கு வந்து விட்டது.

அவளுக்கு வயது நாற்பதைத் தாண்டி விட்டது என்று வேலையிலிருந்து வீட்டுக்குப் போகச் சொல்லி விட்டார்கள். இருபது வருஷத்துக்கு மேலாக அவள் உடல் உழைப்பையும் மன ஈடுபாட்டையும் வாங்கிக் கொண்ட நிறுவனத்துக்குத் திடீரென்று அவளது வயது ஞாபகம் வந்து விட்டது. ஆனால் உண்மையில் அவளை வீட்டுக்கு அனுப்பியது அவளை எடுத்து வளர்த்தவர்கள் அல்லர். அவள் வேலை பார்த்த கம்பெனியை இப்போது எடுத்துக் கொண்ட புதிய நிர்வாகம் டீ ஷர்ட் அல்லது மிடி அணிந்திருந்த யுவதிகளின் திறமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டு விட்டது.

நடுத்தர வயதை அடைந்த ஒருத்தி பெண்ணாக இல்லை; மறைந்து விடுகிறாள் என்று நாகம்மாவுக்குத் தோன்றிற்று. அவள் மீது விழும் அலட்சியம்தான் அவளது சாவுமணி. நாகம்மா வேலையில் இருந்த போது கம்பெனி கொடுத்த கார் இருந்தது. பெங்களூர் கிளப்பில் கம்பெனியின் உறுப்பினராக இருந்தாள். அலுவலகத்தில் அவள் அறைக்கு வெளியே எப்போதும் ஏழெட்டுப் பேர். திடீரென்று அவ்வளவிற்கும் ஒரே நாளில் முற்றுப் புள்ளி விழுந்து விட்டது. எதிரில் வருவோர் போவோர், அக்கம் பக்கம் என்று தெரிந்த பழக்கமான மனிதர்கள் அவளைப் பார்த்ததும் ஒரு புன்னகையைச் செலவழித்து விட்டு உடனே நகர்பவர்களாகி விட்டார்கள்.

இன்று அவள் மூன்றாவது நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கிறாள். அவளுக்கு முன்னால் இருவரிடமும் அவளது வயது போய் நின்று விட்டது. இன்றும் அவள் அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்து போகத் தயாராயில்லாமல்தான் வந்திருந்தாள். அவளது பழைய கம்பெனியில் உடன் வேலை பார்த்துப் பின் தானாகவே ஒரு தொழிலை ஆரம்பித்து விட்ட அவளது தோழி வசுந்தரா சொன்னாள் என்று அவள் விண்ணப்பித்தாள். வசுந்தராவின் அலுவலகமும் இதே சாலையில் கொஞ்ச தூரம் தள்ளி இருந்தது.

வெளியாரைச் சொல்லி என்ன பயன்? அவள் வீட்டிலேயே இந்த நிராகரிப்பு நடந்து கொண்டுதானே இருக்கிறது ! நான்கு நாட்களுக்கு முன் இன்டர்வியூ பற்றிக் கடிதம் வந்த தினம் மாலையில் வீட்டுக்குத் திரும்பின பெண்ணிடமும் கணவரிடமும் சொன்னாள். வழக்கம் போலக் காலில் ஏதோ வெந்நீரைக் கொட்டிக் கொண்டவனாக அன்று ஏழரைக்கே அவள் கணவன் முத்துச்சாமி ஆபீசுக்குக் கிளம்பிப்போய் விட்டான். அவன் போகாவிட்டால் அவன் ஆபீஸ் உத்திரம் கீழே விழுந்து தரைமட்டமாகி விடும் என்ற நினைப்பு அவனுக்கு. திரியும் எண்ணெய்யும் விளக்குப் பாத்திரமும் இல்லாமல் ஏதோ தானாகவே அந்தரத்தில் ஒளியை எழுப்பி எழுந்து நிற்பது போல சுடர் பூரிப்படைந்தால் என்னதான் செய்ய முடியும்?

அன்று தேன்மொழிக்கு எட்டு மணிக்கே ஸ்பெஷல் கிளாசாம். அதற்காக நாகம்மா அன்று இன்டர்வியூவுக்குப் போவதை அவள் எப்படி மறக்கலாம்? ஒரு வயதுக்கு மேல் சொந்தக் குழந்தைகளும் அந்நியர்களாக மாறிவிடுவது என்பது என்ன ஓர்அநியாயம் !

அப்போது அவளது கைபேசி ஒலித்தது. கைப்பையிலிருந்து அதை எடுத்து யார் என்று பார்த்தாள். அவள் இன்டர்வியூ செல்லும் அலுவலகம்.

""ஹலோ, நாகம்மா ஹியர்''

""மேடம். நான் இன்டர்வியூ சம்பந்தமாகக் கூப்பிடுகிறேன். உங்களுக்குச் சிரமம் கொடுப்பதற்கு வருந்துகிறோம். நீங்கள் ஒன்றரை மணிக்கு வரமுடியும் அல்லவா?'' என்று ஒரு பெண் பேசினாள்.

""அதற்கென்ன? வருகிறேன்'' என்றாள் நாகம்மா.

கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது அது பதினொன்றே கால் என்றது. இப்போது என்ன செய்வது? இப்போது அவளருகில் இருப்பது வசுந்தராதான். நாகம்மா பார்க்கை விட்டு வெளியே வந்தாள். சாலையில் அரை மணிக்கு முன்பு பார்த்ததை விட வாகனங்களின் புகையும் இரைச்சலும் அதிகமாகி இருந்தன. சீக்கிரம் செத்துப் போய்விட வேண்டும் என்று மனிதர்கள் தீர்மானித்து விட்டார்களா என்று இருந்தது.

பிளாட்பார்மில் இருந்த கடைகள் கால்களாகப் பரவிக் கிடந்தன. நகரத்தின் சுத்தம் மீதான அலட்சியத்தைக் காண்பித்து மனிதர்கள் செயல்படுவது போலிருந்தது. "இந்த ஊரைப் பாரடைஸ் என்று சொன்னவன் இப்போது பார்த்தால் தற்கொலை செய்து கொண்டு விடுவான்' என்று நாகம்மா நினைத்தாள்.

பதினைந்து நிமிஷத்தில் வசுந்தராவின் அலுவலகமிருந்த கட்டிடம் வந்து விட்டது. அவளைப் பார்த்ததும் வசுந்தரா ஆச்சரியத்துடன் கண்களை அகல விரித்து ""என்ன, அதுக்குள்ளேயும் இன்டெர்வியூ முடிஞ்சிருச்சா?'' என்று கேட்டாள்.

நாகம்மா அவள் எதிரே உட்கார்ந்து கொண்டு சற்றுமுன் வந்த செய்தியைச் சொன்னாள். ""வரப்ப ஹால்லே பாத்தேன். முன்னே இருந்த டேபிள் சேரெல்லாம் குறைஞ்சு போயிருக்கே'' என்றாள் நாகம்மா.

"" கோவிட் எஃபெக்ட்'' என்றாள் வசுந்தரா.

""ஆமா. தெருவிலே போனா பாதி கட்டடத்திலே "வீடு வாடகைக்கு விடப்படும்' போர்டு தொங்குது. ரோட்லே ஆட்டோ சத்தம் கேட்டு மாசக் கணக்காயிருச்சு. காய்கறி மார்க்கெட்லே கடை வச்சிருந்தவங்க இப்ப வண்டிலே காய் எடுத்துட்டு வந்து தெருவிலே விக்கிறாங்க. அதையும் தினமும் அவங்களால் செய்ய முடியலே. "வீட்டுலே இருந்து வேலை பாரு, பாதி சம்பளம்தான் கொடுக்க முடியும்'னு ஆபீஸ், பேக்டரி வாசலையெல்லாம் இழுத்து மூடிட்டாங்க'' என்றாள் நாகம்மா.

""இல்லாட்டா உன்னை மாதிரி ஒரு கெட்டிக்காரிக்கு, நேர்மையா வேலை பாக்கிறவளுக்கு இன்னொரு வேலை கிடைக்க இவ்வளவு கஷ்டம் வருமா என்ன?''

நாகம்மா சற்று நேரம் பேசாமலிருந்தாள். பிறகு ""எனக்கு எதிரி இந்தத் தொற்று நோயை விட என் வயசுதான்'' என்றாள்.""போன வாரம் நான் யஷ்வந்த்பூர் மார்க்கெட்லே ராகவேந்திராவைப் பாத்தேன்....''

வசுந்தரா அவளை இடைமறித்து, ""யாரு நம்ம ஐ மீன் ராகவேந்திராவா?'' என்று சிரித்தாள்.

நாகம்மாவும் சிரித்தபடி ""ஆமாம். இப்பவும் அது மாறலே. என்னைப் பாத்தப்போ நா வணக்கம் சொன்னேன். எப்படி இருக்கீங்கன்னு கேட்டுட்டு ஐ மீன் செளக்கியமான்னுது'' என்றாள்.

""ரெண்டு பை நிறைய காய்கறி வாங்கி கைக்கு ஒண்ணா தூக்க முடியாம தூக்கிட்டு மெயின் ரோடுக்கு வந்தேன். அரை மணி நேரமா நின்னப்போ ரெண்டு ஆட்டோ வந்தது. ரொம்ப தூரம் சவாரி இல்லேன்னு தெரிஞ்சு வரமாட்டேன்னுட்டாங்க. அப்பப் பாத்து இந்த ஐ மீன் வந்தது காரை ஓட்டிக்கிட்டு. "எங்கே இந்தப்பக்கம்? வீட்டிலே எல்லாரும் சௌக்கியமா? பொண்ணு என்ன பண்ணுது?' ன்னு எல்லாம் கேட்டுட்டு, "சரி நான் வரட்டா, அர்ஜன்ட்டா ஒரு வேலைக்குப் போயிட்டு இருக்கேன்'னு காரைக் கிளப்பிட்டுப்போயிருச்சு''

""ஓ, மை காட் ! இந்த ஆளுதானே நாம ரெண்டு பேரும் வேலை பாத்துக்கிட்டிருந்த கம்பெனிக்குக் கம்ப்யூட்டர் ஸ்டேஷனரி, உதிரி பாகம், அது இதுன்னு சப்ளை பண்ணிக்கிட்டு இருந்தது ! அப்ப ஒரு நா நீ பஸ் ஸ்டாப்பிலே நின்னுட்டு இருந்தப்போ, எதிர்ப் பக்கத்து ரோடுலேந்து உன்னைப் பாத்துட்டு கிராஸ் பண்ணி உன் கிட்டே வந்து அதுவாதானே லிப்ட் கொடுத்துச்சு? நம்ம ஆபீசோ தும்கூர் ரோடு, அந்த ஆள் போய்ட்டு இருந்ததோ பெல்லாரி ரோடு. பதினஞ்சும் பதினஞ்சும் முப்பது கிலோ மீட்டர் லிப்ட் கொடுத்துட்டுப் போனாரு'' என்று ஆச்சரியப் பட்டாள் வசுந்தரா.

தொடர்ந்து ""ஐ மீனுக்கு அப்ப நம்ம கம்பெனி தயவும் வேண்டியிருந்துச்சில்லே'' என்றாள் வசுந்தரா.

""ஆமா. ஆனா அப்ப எனக்கு வயசு இருபத்தொண்ணு'' என்றாள் நாகம்மா.

வசுந்தரா மேஜை மேலிருந்த நாகம்மாவின் இரு கைகளையும் தன் கரங்களால் பரிவுடன் பற்றிக் கொண்டாள்.

நாகம்மாள் கிளம்பிய போது சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று வசுந்தரா வற்புறுத்தி ஸ்விக்கியில் சொல்லி எம்டிஆரிலிருந்து லஞ்ச் வரவழைத்தாள்.

சரியாக ஒன்றரை மணிக்கு நாகம்மாள் இன்டர்வியூ நடக்கும் இடத்தில் இருந்தாள். இன்டர்வியூ செய்தவன் இளைஞனாக இருந்தான். அந்த டைரக்டர் சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்துக்கு வந்து விட்டான்.

""மிஸஸ் நாகம்மா! என் பேர் நாகரத்தினா. உங்களை செலெக்ட் பண்ண உங்க ப்ரோஃபைலும் மிஸஸ் வசுந்தராவோட ரெக்கமன்டேஷனும் எங்களுக்குப் போதும். இந்த இன்டெர்வியூலே நாங்க முடிவு செய்ய வேண்டிய ஒரே விஷயம் உங்களுடைய சம்பளம்தான். எவ்வளவு நீங்க எதிர்பார்க்கிறீங்க?'' என்றான் நாகரத்தினா.

""என் பயோடேட்டாலே கடைசியா வாங்கின சம்பளம் எவ்வளவுன்னு சொல்லியிருக்கே'' என்றாள் அவள்.

அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து கொண்டான்.

""அந்த சம்பளத்துக்கு அனுபவம் இல்லாதவங்கன்னு குறைஞ்சது எட்டு பேரை எடுப்பேன். அப்படீன்னா ஏன் உங்களைக் கூப்பிட்டேன்னு நீங்க கேப்பீங்க. உங்க அனுபவத்தை நீங்க எங்க கிட்டேஇருக்கிறவங்களுக்கு கத்துக் கொடுக்கறதுக்குத்தான்''

""சரி, உங்களாலே எவ்வளவு தர முடியும்?''

""நீங்க கடைசியா வாங்கின சம்பளத்திலே இருபது பர்சென்ட்?''

நாகம்மா வாய் விட்டுச் சிரித்தாள்.

""இது என்னோட பழைய கம்பெனியிலே நான் சேர்ந்து ரெண்டாவது வருஷம் கிடைச்ச சம்பளம்.''

அவன் புன்னகை செய்தான். ""அது கம்ப்யூட்டர் புரட்சி ஆரம்பிச்ச சமயம். ஒரு பியூன் கூட ஃபோர் ஃபிகர் சம்பளம் வாங்கின நாள்கள். இல்லியா?''

நாகம்மா சற்று யோசித்து விட்டு ""என் கடைசி சம்பளத்தில் பாதியாவது தர வேண்டும்'' என்றாள்.

""சரி, நான் கடைசியா சொல்றேன். முப்பது பெர்சென்ட். ஓகேவா?''

அவள் அவனிடம், ""உண்மையைச் சொல்லட்டுமா? இந்த மாதிரி பேரம் பேசுவது எனக்கு வெட்கமாக இருக்கிறது'' என்றாள் நாகரத்தினா.

"" எனக்கும் உங்க வேலைக்கான மதிப்பை உங்களுக்குக் கொடுக்கணும்ங்கிறதிலே ரெண்டாவது அபிப்பிராயம் கிடையாது. ஆனா டைம்ஸ் ஆர் ப்ரெட்டி பேட். உங்களுக்கு சம்பளமா நான் முப்பத்தஞ்சு பெர்சென்ட் தரேன். உங்க ஆபீஸ் டைம் நைன் டு ஒன். காலேலே மட்டும்தான். அஞ்சு நாள்தான் வாரத்திலே வேலை. மார்னிங் உங்களைக் கம்பெனி கார் பிக்கப் பண்ணிட்டு மத்தியானம் கொண்டு போய் டிராப் பண்ணிடும்'' என்று சிரித்தான்.

""எப்போ ஜாயின் பண்ணனும்?''

""வெல் டன். ஒரு வாரத்துக்குள்ளே?''

""சரி, நாளையிலிருந்து வரேன். உங்க கிட்டே என் வீட்டு அட்ரஸ் இருக்குல'' என்றாள்.

நாகம்மா அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டுக் குளிரூட்டப்பட்ட அந்தக் கட்டடத்திலிருந்து வெளியே வந்தாள். திடீரென்று வானை மேகம் காதலுடன் இறுக அணைத்துக் கொண்டதில் ஊர் குளிர்ச்சியில் பரவியிருந்தது. அவள் மெட்ரோ ஸ்டேஷனை நோக்கி நடந்தாள். நடந்ததை எல்லாம் மனது புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. மேலே செல்லவொட்டாமல் மட்டுமின்றி திரும்பப் பின்னே நோக்கிப் போகின்ற பாதையை முன்னிறுத்தும் வாழ்க்கையின் அலட்சியம் பொறுக்க முடியாமல்தான் இருந்தது !

கடைசி நிறுத்தத்துக்கு அப்பால் ரயில்கள் செல்ல முடிவதில்லை என்று கசப்புடன் நினைத்தாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com