'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 44

சுதந்திர இந்திய அரசியலில் பல அவிழ்க்கப்படாத முடிச்சுகள் உள்ளன. ஏன் அப்படி நடந்தது,
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 44

சுதந்திர இந்திய அரசியலில் பல அவிழ்க்கப்படாத முடிச்சுகள் உள்ளன. ஏன் அப்படி நடந்தது, அதன் பின்னணி என்ன, யார் அதற்குக் காரணம் போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாத புதிர்கள் அவை. அவை குறித்து அவரவர் தங்களுக்குத் தோன்றியதுபோல, அல்லது அரசல் புரசலாகக் கேட்ட செய்திகளின் அடிப்படையில் யூகங்களைப் பதிலாக்குகிறார்களே தவிர, நிஜம் மெளனமாகவே இருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்கிற ராஜாஜி. இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டபோது, அவர்தானே இந்தியக் குடியரசின் முதலாவது குடியரசுத் தலைவராக்கப்பட்டிருக்க வேண்டும்? ஆனால், அவருக்குப் பதிலாக அரசியல் சாசன சபையின் தலைவராக இருந்த பாபு ராஜேந்திர பிரசாத் முதலாவது குடியரசுத் தலைவரானார். இடையில் என்ன நடந்தது?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பிரிவினையால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தின் ஆளுநராக இருந்தார் ராஜாஜி.  1948 ஜூன் மாதம் மெளண்ட்பேட்டன் பிரபு தனது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து திரும்ப இருந்தார். தனக்குப் பிறகு அந்தப் பதவியை வகிக்க மெளண்ட்பேட்டன் பிரபு தேர்ந்தெடுத்தது சர்தார் வல்லபபாய் படேலைத்தான். அதைப் பண்டித நேரு மட்டுமல்ல, சர்தார் படேலும் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கவர்னர் ஜெனரலிடம் என்பதுதான் சட்டப்பூர்வ நிலைமை. கவர்னர் ஜெனரலாகப் பதவி வகிக்கத் தனக்கு விருப்பமில்லை என்று சர்தார் படேல் தீர்மானமாகக் கூறிவிட்டார். மெளண்ட்பேட்டன்  பிரபு விடுப்பில் லண்டன் போயிருந்தபோது இடைக்கால பொறுப்பை வகித்திருந்த ராஜாஜிக்கும், அந்தப் பதவியில் விருப்பம் இருக்கவில்லை. பிரதமர் நேரு அப்போது ராஜாஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

""நீங்கள் எங்களுக்கு ஏமாற்றம் தரமாட்டீர்கள் என்று நம்புகிறோம். தேசம் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் இந்த வேளையில், எங்களுக்கு வழிகாட்டவும், உதவவும் நீங்கள், தேவைப்படுகிறீர்கள். எங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிலான சுமைகளை நாங்கள் எங்கள் தோள்களில் சுமந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், கவர்னர் ஜெனரலாக நீங்கள் இருந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்'' என்று பண்டித நேரு எழுதிய கடிதம் ராஜாஜியின் பிடிவாதத்தைத் தளர்த்தியது.

1948 ஜூன் மாதம் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது கவர்னர் ஜெனரலாக ராஜாஜி பதவி ஏற்றுக் கொண்டார். அந்தப் பதவியை வகித்த முதலாவது இந்தியரும் அவர்தான். கடைசி இந்தியரும் அவர்தான். 

""மக்களுக்கும் தான் பிறந்த நாட்டுக்கும் சேவை செய்ய முன் வருபவர் குறிப்பாகச் சில நற்குணங்கள் பெற்றிருக்க வேண்டும். களங்கமற்ற மனதும், வெகு பரிசுத்தமான வாழ்க்கையும் மிக அவசியம். நான் கண்ட தேசியத் தலைவர்களில் தம்முடைய சொந்த வாழ்க்கையில் பரிசுத்தமாக இருந்தவர்களில் ஒரு சிலரைத்தான் நான் கண்டிருக்கிறேன். அவர்களில் மூன்று பெயர்களை மட்டும் கூறுவதாயின் மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத், ராஜகோபாலாச்சாரியார் என்று சொல்வேன்.

சொந்த வாழ்க்கையில் சுத்தமில்லாதவர் உலகத்தை ஏமாற்றிவிடலாம். ஆனால், உண்மையில் உயர்ந்தவராக முடியாது. சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் உண்மையில் பெரியவர். பரிசுத்தமான வாழ்க்கையைக் கடைப்பிடித்தவர். ஆச்சாரி யாரை அண்டிப் பிழைக்கும் வெறும் ஆட்களைக் கொண்டு ஆச்சாரியாரை மதிப்பிடக் கூடாது.

பாழான தென்னாட்டிலே, பழமையான, பொருளற்ற இனம், ஜாதி என்ற பூசலினால் ஆச்சாரியாரின் உயர்வைத் தென்னாட்டு மக்கள் அறியத் தவறிவிட்டார்கள். ஆச்சாரியாரை எதிர்த்துப் பலமாகக் கிளர்ச்சிகளை நானும் நடத்தி இருக்கிறேன். ஆனால், அவருடைய ஒழுக்கம், தேசபக்தி, தியாகம் ஆகிய குணங்களைக் குறித்து ஒரு நாளாவது அந்தரங்கமாகவோ, பகிரங்கமாகவோ நான் குற்றம் சொன்னதில்லை. ஆச்சாரியாரைப் போன்ற ஒரு தலைவர் நமது சேலத்தாராக இருக்கிறாரே என்று நான் பெரிதும் பெருமை அடைகிறேன்.

சேலம் முனிசிபல் சேர்மேனாயிருந்தவர், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகியது அரசியல் சூழ்ச்சியால் அல்ல; காங்கிரஸ் தலைவர்களின் தயவினால் அல்ல; அவருக்கு அமைந்திருக்கும் யோக்கியதையினாலேயே ஆச்சாரியார் கவர்னர் ஜெனரலானார் என்பதே எனது தெளிவான அபிப்பிராயமாகும்.

ஆச்சாரியாரின் அறிவின் தெளிவும், அரசியல் ஞானமும், நிர்வாகத் திறமையும், பாரபட்சமற்ற தன்மையும் யாவரும் அறிந்தவையாகும். பட்டம் பதவிகளுக்குப் போட்டியிடும் ஒரு சிலரைத் தவிர, நாட்டில் நலம் கோரும் மற்றெவரும் ஆச்சாரியாரிடத்தில் குற்றங்காண முடியாது.

திறமையில் அவருக்கு ஈடாக வடநாட்டுத் தலைவர்களில் நான் ஒருவரையும் எடுத்துக்காட்ட முடியவில்லை. மக்கள் யாவரும் சமம், ஒரு குலம் என்றாலும், ஆற்றலும், அறிவும், தெளிவும், தோற்றமும் பெற்றவர்கள் லட்சத்தில் ஒருவர்கூட இல்லை. அவ்வாறு பொறுக்கி எடுத்த உலகத்துப் பெரியோர்களில் நமது ஆச்சாரியாரும் ஒருவராவார்.

தென்னாட்டு மக்கள் அவரைப் பரிபூர்ணமாக அறிந்து கொள்ளவில்லை. நான் கண்ட ஆச்சாரியாருக்குப் பணத்தின் மீது ஆசையில்லை. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருநாளும் களங்கம் நான் காணவில்லை. தனக்கென்று வாழாது, நாட்டுக்கென்றே வாழ்வதே ஈசன் வழிபாடு என்று எண்ணமுள்ள ஆச்சாரியார் போன்றவர்களே இந்நாட்டுக்கு இப்போது தேவையாகும்.''

ராஜாஜி கவர்னர் ஜெனரலானபோது இப்படிக் கருத்துத் தெரிவித்தவர் யாரென்று தெரிந்தால் பலரும் வியப்பில் சமைவார்கள். திராவிட இயக்கத்தினரால் ஈவெரா பெரியாரின் நண்பர் என்று கருதப்படும் காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் பதிவு இது. இந்தத் தொடருக்குத் தொடர்பில்லாததுதான் என்றாலும்கூட இதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

1948 ஜூன் மாதம் முதல் 1950 ஜனவரி மாதம் வரை ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைந்த அரசியல் சாசன சபையில், பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரால் இந்தியக் குடியரசின் அரசியல் சட்டம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

1949 இறுதியிலேயே, இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவராக யார் இருக்கப்போவது என்பது குறித்த பேச்சு எழுந்தது. கவர்னர் ஜெனரலாக இருக்கும் ராஜாஜி, குடியரசின் தலைவராக்கப்படுவார் என்பதுதான் பரவலான எதிர்பார்ப்பாக இருந்தது. பிரதமர் நேருவும், துணைப் பிரதமர் சர்தார் வல்லபபாய் படேலும், அரசியல் சாசன சபையின் தலைவராக இருந்த பாபு ராஜேந்திர பிரசாத்தும்கூட ராஜாஜிதான் குடியரசுத் தலைவராகத் தொடர வேண்டும் என்று விரும்பினார்கள்.

பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் விருப்பத்தையும் மீறி, இடையில் என்ன நடந்தது? ஏன் ராஜாஜி இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவில்லை. "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொள்ளாதது காரணமாக இருக்க முடியாது. மேற்கு வங்க ஆளுநராகவும், கவர்னர் ஜெனரலாகவும் அவர் இருக்க முடியுமானால், குடியரசுத் தலைவராவதற்கு அது தடையாக இருந்திருக்க முடியாது.

பிரதமர் நேருவின் விருப்பத்துக்கு விரோதமாகத்தான், அடுத்த தேர்வாக பாபு ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவரானார். பண்டித நேரு, இலாகா இல்லாத கேபினட் அமைச்சராகத் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, சர்தார் படேலின் மறைவைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சராகத் தனக்கு அடுத்த இடத்தில் ராஜாஜியை வைத்துக் கொண்டார் என்பது வரலாற்று உண்மை.

அதெல்லாம் இருக்கட்டும். கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி ஏன் குடியரசுத் தலைவராகத் தொடரவில்லை என்பதற்கான உண்மையான காரணம் இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை. எல்லா பதிவுகளுமே யூகங்கள்தான். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதமர் நேரு, சர்தார் படேல், ராஜாஜி, பாபு ராஜேந்திர பிரசாத் ஆகிய நால்வருமே உண்மையான காரணத்தைத் தெளிவு படுத்தவில்லை.

ராஜாஜி குடியரசுத்  தலைவராகாதது போல, சுதந்திர இந்திய வரலாற்றில் பல அவிழ்க்க முடியாத சந்தேக முடிச்சுகள் இருக்கின்றன. அதில் ஒன்றாகத் தொடர்கிறது, 1991-இல் பி.வி. நரசிம்ம ராவ் தனது அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜியை சேர்த்துக் கொள்ளாதது.

கீதா முகர்ஜி தன்னிடம் கூறியதாக, பார்வர்டு பிளாக் கட்சித்  தலைவர் சித்தா பாசு என்னிடம் தெரிவித்ததை, பிரணாப் முகர்ஜிக்கு நெருக்கமான வேறு பலரும்கூடப் பின்னாளில் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். பிரணாப் முகர்ஜியேகூட அது குறித்துப் பதிவு செய்திருக்கிறார். நடந்ததாகக் கூறப்படுவது இதுதான் - ஒருநாள் இரவு, பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் நரசிம்ம ராவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்த நாள் அவரது 9, மோதிலால் நேரு மார்க் வீட்டுக்கு வந்து சந்திக்கும்படி பிரதமரே அழைத்தும்கூட பிரணாப் முகர்ஜி ஏதோ காரணம் கூறி மழுப்பினாரே தவிர, அவரைச் சென்று சந்திக்கவில்லை. தொடர்ந்து நண்பர்கள் மூலம் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தார் பிரதமர் ராவ். பிரணாப் ஒருநாள் அவரைச் சந்தித்தார்.

""திட்டக் கமிஷன் துணைத் தலைவராக நீங்கள் பதவி ஏற்கிறீர்கள்'' - இது பிரதமர் நரசிம்ம ராவ்.

""யோசிக்க அவகாசம் கொடுங்கள். சிந்தித்துச் சொல்கிறேன்.''

""நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சிந்தித்துக் கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் அந்தப் பதவியை ஏற்கிறீர்கள். அதற்கான அறிவிப்பை வெளியிடச் சொல்லிவிட்டேன். நாம் கலந்துபேசி ஏனைய உறுப்பினர்களின் பெயரை முடிவு செய்வோம்.''

அதற்கு மேலும், தனது நீண்ட நாள் நண்பரான பிரதமர் பி.வி. நரசிம்மராவின் வேண்டுகோளை பிரணாப் முகர்ஜியால் நிராகரிக்க முடியவில்லை. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், அடுத்த நாள் திட்டக் கமிஷன் துணைத் தலைவராகப் பதவி ஏற்றுக் கொண்டார் அவர்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, செளத் பிளாக்கிலுள்ள பிரதமர் அலுவலகத்தில், திட்டக் கமிஷனின் ஏனைய உறுப்பினர்களை அடையாளம் காணும் கூட்டம் நடந்தது . கூட்டம் முடிந்து, அனைவரும் கிளம்பும் வேளையில், பிரதமர் நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜியை சற்று நேரம் காத்திருக்கச் சொன்னார். மற்றவர்கள் வெளியேறி விட்டனர். அவர்கள் இருவர் மட்டும் தனியாகப் பிரதமர் அறையில் 
அமர்ந்திருந்தனர். மெளனம் நிலவியது.

அவர்கள் இருவருக்குமே அந்த மெளனத்தின் காரணம் தெரியும். பிரணாப் முகர்ஜி எதுவும் கேட்கவில்லை. பிரதமர் நரசிம்ம ராவ் மெளனத்தைக் கலைத்தார்.

""பிரணாப், நான் ஏன் உங்களை எனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவில்லை என்கிற காரணத்தை இப்போது உங்களிடம் என்னால் தெரிவிக்க முடியாது. அதற்கான நேரம் ஒருநாள் வரும். அப்போது சொல்கிறேன். இப்போது வேண்டாம்.''

அதற்கும் பிரணாப் முகர்ஜி எதுவும் சொல்லவில்லை. விடைபெற்றுச் சென்று விட்டார். அவர்களது நட்பு தொடர்ந்தது. அது குறித்துப் பின்னாளில் பிரணாப்தா தனது கைப்படச் செய்திருக்கும் பதிவு இது -

""ஒரு நாள் வரும், அப்போது சொல்கிறேன் என்று நரசிம்மராவ் சொன்ன அந்த நாள் வரவே இல்லை. அவர் 2004 டிசம்பர் 23-ஆம் தேதி மறைந்தது வரை, நாங்கள் நெருங்கிய நண்பர்களாகத் தொடர்பில் இருந்தோம். 1991-இல் என்னை ஏன் தனது அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளவில்லை என்று அவர் சொல்லவே இல்லை. அவராகச் சொல்லட்டும் என்றுதான் நானும் காத்திருந்தேன். அவர் சொல்லவில்லை. இன்றுவரை அது எனக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.''

பிரணாப்தாவுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலில் தொடரும் பல புதிர்களில் இதுவும்கூட ஒன்று. ஆனாலும், அந்தப் புதிருக்கு விடை தெரிந்தவர்கள் இன்னும்கூட இருக்கிறார்கள்...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com